நண்பர்களே,
இவர்கள் வாசகர்கள் பகுதியில் ' பங்களா கொட்டா ' அனைத்து தரப்பு வாசகர்களின் கருத்துகளை அப்படியே உங்கள் முன் வைப்பதையே நான் விரும்புகிறேன். புதினம் பற்றி நண்பர் அரசன் அவர்கள் வாசகர் கூடம் தளத்தில் பகிர்ந்துள்ள கருத்துகள் உங்களுக்காக இங்கே.
இதுபோன்ற வாசக நண்பர்களின் தொடர் உற்சாகமே எழுதுபவர்களை உற்சாகப்படுத்தி தொடர்ந்து முன்னேடுத்துச் செல்ல உதவும். அந்த வகையில் அரசனின் நடுநிலையான கருத்துகள் முக்கியத்துவம் பெறுகின்றன. அரசனுக்கு எனது நன்றிகள் பல.
****
இவர்கள் வாசகர்கள் பகுதியில் ' பங்களா கொட்டா ' அனைத்து தரப்பு வாசகர்களின் கருத்துகளை அப்படியே உங்கள் முன் வைப்பதையே நான் விரும்புகிறேன். புதினம் பற்றி நண்பர் அரசன் அவர்கள் வாசகர் கூடம் தளத்தில் பகிர்ந்துள்ள கருத்துகள் உங்களுக்காக இங்கே.
இதுபோன்ற வாசக நண்பர்களின் தொடர் உற்சாகமே எழுதுபவர்களை உற்சாகப்படுத்தி தொடர்ந்து முன்னேடுத்துச் செல்ல உதவும். அந்த வகையில் அரசனின் நடுநிலையான கருத்துகள் முக்கியத்துவம் பெறுகின்றன. அரசனுக்கு எனது நன்றிகள் பல.
மண்ணையும் அதன் சார் மனிதர்களையும் பற்றிய படைப்புகள் என்றால் எத்தனை முறை வாசித்தாலும் சலிப்பு தட்டாது எனக்கு. அந்த மாதிரியான களத்தினை உள்ளடக்கி வெளிவந்துள்ளது இந்த பங்களா கொட்டா நாவல். புகழ் மிகுதி கொண்ட மனிதர்களைத் தான் இந்த உலகம் படைப்பாளிகள் என்று நம்பிக் கொண்டிருக்கிறது. புதிதாய் வருபவர்களை கண்டுகொள்ளாமல் அவர்களது முயற்சிகளுக்கு செவி சாய்க்காமல் வெற்றி பெற்றவனின் பின்னால் ஓடிக்கொண்டிருக்கிற சம காலத்தில், புதிதாய் ஒரு நபர் புத்தகம் வெளியிட்டு அதை சந்தைப் படுத்துவதில் உள்ள சிரமத்தை சமீபத்தில் உணர்ந்தவன் நான்.
பங்களா கொட்டா மூலம் மண்ணை மோதிப் பிளந்து கொண்டு வந்திருக்கும் புதிய விருட்சம் தான் நண்பர் ஆரூர் பாஸ்கர். படைப்பு வெற்றியடைந்து உலகம் கொண்டாடுதோ இல்லையோ? இம்மாதிரியான முயற்சியினை ஆரத்தழுவி வரவேற்க வேண்டியது சக படைப்பாளிகளின் கடமை. அதற்கான சூழல் தமிழிலக்கிய உலகில் சாத்தியமில்லை. சரி வாருங்கள் பங்களா கொட்டா நாவலைப் பற்றி காண்போம்.
ஒரு கிராமத்திற்கு அடையாளமாக இருக்கும் பரந்து விரிந்த பண்ணை, பண்ணையின் பெரியவர், அவரின் மூன்று வாரிசுகள், மற்றும் பண்ணையினை நம்பி பிழைக்கும் அவ்வூர் மக்கள் சிலர். இவர்களின் வாழ்வியலைத்தான் பேசுகிறது பங்களா கொட்டா. மேலோட்டமாக பார்த்தால் எளிமையிலும் மிக எளிமையான புனைவைப் போன்று தான் தெரியும். ஆனால் வாசித்தால் மட்டுமே அதன் அடர்த்தியை உணர முடியும். விவசாயத்தினையும், அதனை செய்யும் மாந்தர்களின் மன நிலைக் கூறுகளையும் முடிந்த வரை பதிவு செய்ய முயன்றிருக்கிறார் நண்பர் ஆரூர் பாஸ்கர்.
பண்ணைக்கு மூன்று ஆண் வாரிசுகள். மூத்தவன் நகரத்தில் வழக்கறிஞர் பணி, அவ்வப்போது கிராமத்திற்கு வந்து தலை காட்டிவிட்டு போகும் மனிதர். அடுத்து, ஞானி இவர்தான் தனது படிப்பினை மேலும் தொடர விருப்பமின்றி விவசாயத்தின் மீது தீவிர பற்று கொண்டு, வயசான பண்ணை முதலாளிக்கு துணையாக இருந்துகொண்டு விவசாயம் தடை பட்டு போகாமல் பார்த்துக்கொண்டு வருகிறார். கடைக்குட்டி இராசு அதீத பாசத்தினால் சீர்கெட்டு திரியும் இளம் மைனர். இம்மூவர்களின் நிலப் பங்கீடும், அதன் வழி கிளம்பும் சில சிக்கல்களும், இடையே ஞானியின் காதலும் என்று கலவையான படைப்பு. மற்ற இருவரும் நிலத்தினை பங்கிட்டு காசு பார்க்க துடிக்கையில் ஞானி மட்டும் ஒரு கல்லூரி கட்டி இலவச படிப்பினை வழங்கும் நோக்கில் தனது செயலினை முன்னெடுக்கிறான். கிட்டத்தட்ட ஞானியினை மையப்படுத்தியே கதை நகர்கிறது. விவசாயம் செழித்தோங்கிய மண்ணில் தற்போது நிலவி வரும் வறட்சியில் துவங்கி, வாரிசுகளினால் துண்டாடப்படும் நிலக்கூறுகள் உருவாக்கும் அதிர்வுகள் வரை எளிமையாக பதிவு செய்திருக்கிறார்.
எல்லா இடத்திலும் நல்லார்க்கு உள்ள எதிரிகளைப் போன்று இக்கதையிலும் சில நயவஞ்சக மனிதர்கள் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றி அதன் கதகதப்பில் சுகம் தேட முயன்று தோற்றுப் போகிறார்கள், அவர்களின் வஞ்சகத்தன்மையை அழுத்தமாக சொல்ல முடியாமல் சற்று தடுமாறியிருக்கிறார் நாவலாசிரியர் திரு ஆரூர் பாஸ்கர். கிராமத்திலே பிறந்து வளர்ந்த என்னால் நிலப் பிரச்சினைகளினால் ஏற்படும் சர்ச்சைகளோடு எளிதில் ஒன்றிப் போக முடிந்தது, ஆனால் தற்போதைய இளம் வாசிப்பாளர்களால் இயலுமா என்பது கேள்விக்குறி, அவர்களுக்கும் புரியும் வண்ணம் கொஞ்சம் விலாவாரியாக பதிவு செய்திருக்கலாம்.
எழுத்து என்பது வெறும் நிகழ்வினை கடத்துபவையாக இல்லாமல் அந்நிகழ்வினை மிகுந்த அழுத்தமாக பதிவு செய்யப்பட வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறையுடன் இருப்பவன் நான், இக்கதையினுள் நிறைய விசயங்களை அழுத்தமாக பதிவு செய்ய வாய்ப்புகள் நிறைய இருந்தும் அதை சற்று மேலோட்டமாகவே கடந்து போயிருக்கிறார் என்றே தோன்றுகிறது. ஞானி கல்லூரி எதற்காக கட்ட வேண்டும் என்று துடிக்கிறார் என்பதை அழுத்தமாக பதிவு செய்ய தவறி இருக்கிறார். முக்கிய பாத்திரங்களுக்கு கொடுக்க வேண்டிய உருவ/உடல் விவரிப்பினை கிட்டத்தட்ட நாவலில் வரும் எல்லோருக்கும் கொடுத்திருக்கிறார். சில பக்கங்களே வந்து போகும் சாமியாருக்கு கூட தீர்க்கமான பார்வை, நீளமான முடி என்று விவரணை அந்த இடத்தில் தேவையற்றது என் கருத்து.
இன்னொரு மிக முக்கிய பிரச்சினை நிறைய ஒற்றுப் பிழைகள் இருக்கின்றன. குறிப்பாக "ஒ" விற்கு பதிலாக "ஓ"தான் இருக்கிறது. இப்படியான பிழைகளை கொஞ்சம் தவிர்த்து இருக்க வேண்டும். இன்னொன்று பேச்சு வழக்கில் தொடங்கிய எழுத்து வழக்கில் கரைந்து மீண்டும் பேச்சு வழக்கில் வந்து நிற்கிறது. முதல் படைப்பு அதுவும் வட்டார வழக்கினை மையப்படுத்தி புனையப்பட்டதினால் பெரும் குறையாக தனித்து தெரியவில்லை என்றாலும் மிகுந்த கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. இப்படியான சில குறைகளை கலைந்துவிட்டுப் பார்த்தால் தனக்கான தனித்துவ அடையாளத்தைப் பெறுகிறது இந்த "பங்களா கொட்டா".
அமெரிக்காவில் வசித்தாலும் தனது மண்ணையும், அதனுள் வாழ்ந்து மரித்த/வாழ்ந்து கொண்டிருக்கும் எளிய மனிதர்களையும் நேசித்து அவர்களின் வாழ்வியல் முறையினை எழுத்தில் பதிவு செய்து வரும் திரு. ஆரூர் பாஸ்கர் அவர்களின் முயற்சிக்கு வலு சேர்க்க வேண்டியது அவசியம். மனிதர்கள் மறந்தாலும், என்றாவது உங்கள் படைப்புகளை காலம் நினைவு கூறும் நண்பா, தொடர்ந்து எழுதுங்கள்... பெரு வாழ்த்துக்கள்....
================================================================
ஆசிரியர் வலைதளம் : https://aarurbass.blogspot.in/
பதிப்பகம் : அகநாழிகை
விலை : 130/-
=================================================================
- அரசன்
http://karaiseraaalai.com/
இணைப்பு
http://vasagarkoodam.blogspot.com/2016/08/pangalaakotta.html