Wednesday, January 26, 2022

கவிஞர் சிற்பி - வாழ்த்துகள் !!

இயற்கைக் கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியத்துக்கு இன்று உயரிய பத்மஸ்ரீ விருது அறிவித்திருக்கிறார்கள்.கவிஞர் சிற்பியின் தமிழ் கவிதைகளுடனான பயணம் என்பது மிக நீண்டது. 25-30 ஆண்டுகளுக்கு முன்பே அவருடைய பல கவிதைகள் கல்லூரி பாடத்திட்டங்களில் இருந்தன.

"மனிதனே இயற்கையின் ஒரு பகுதி என்பதால் இயற்கைக்கு நேரும் அழிவுகளில் நொந்து போவதும், எல்லா வகை அடக்கு முறைகளிலிருந்தும், சீரழிவுகளிலிருந்தும் மனிதனைக் காக்க முயல்வதும் என் கவிதைகளின் அடித்தளச் செயல்பாடு" எனச் சொன்னவர்.

அவருடைய கவிதைகள் இன்றைய இயற்கை ஆர்வலர்கள் பலரின் நெஞ்சில் அந்த விதையை ஆழ ஊன்றியது என்று கூட சொல்லலாம்.

பத்மஸ்ரீ விருது பெறும் கவிஞர் சிற்பி அவர்களுக்கு அன்பான வாழ்த்துகள் !

Saturday, January 15, 2022

அமெரிக்க எழுத்தாளர் ஸ்டீபன் கிங்

காவில் இருந்து திகில், சஸ்பென்ஸ், அறிவியல் புனைவுகள், கற்பனை கதைகள் என பல நூறு படைப்புகளை எழுதிக் குவித்துக் கொண்டிருப்பவர் ஸ்டீபன் கிங் (Stephen Edwin King) . இவருடைய புத்தகங்கள் இதுவரை  உலகம் முழுவதும் 350 மில்லியனுக்கும் அதிகமான பிரதிகள் விற்று தீர்த்துள்ளன. பல படைப்புகள் நாடகங்களாகவும், தொலைகாட்சித் தொடராகவும், திரைப்படங்களாகவும் வெளியாகி சக்கைபோடு போட்டுள்ளன.


இவ்வளவு வெற்றிகளைப் பெற்ற ஸ்டீபன் கிங்கின் சிறுவயது மிகுந்த சிக்கலான ஒன்றாக இருந்திருக்கிறது. அவருக்கு இரண்டு வயதாக இருந்த போது "இதோ ஒரு சிகரெட் பாக்கெட் வாங்கி வருகிறேன்" என வீட்டை விட்டு வெளியே போன அவருடைய அப்பா திரும்பி வரவேவில்லை.  கணவனால் தனித்து விடப்பட்ட அவருடைய அம்மா பண நெருக்கடியால் ஸ்டீபனோடு ஊர் ஊராக வேலை தேடி திரிந்திருக்கிறார். 

மிக குறைந்த சம்பளத்தில் கிடைத்த வேலைகளை எல்லாம் அவர் செய்திருக்கிறார்.  அப்போது ஸ்டீபனை பராமரிக்க  வீட்டில் ஆட்கள் இல்லாததால் பல நாட்கள் அவரைத் தனியாக வீட்டில் விட்டு செல்ல வேண்டிய சூழல் இருந்திருக்கிறது.  இப்படிப் பிரச்சனைகளோடும், கடுமையான பணநெருக்கடியோடும்  வளர்ந்த ஸ்டீபனிடம் அந்த வயதுக்குரிய இயல்பான குறும்புகளோ, மகிழ்ச்சியோ சுத்தமாக இல்லை. கூடவே, ஸ்டீபனுக்கு சிறுவயதில் இருந்து தீராத காதுவலி வேறு. 

அது மட்டுமல்லாமல், சிறுவயதில் அவருடைய நண்பன் ஒருவன் சரக்கு ரயிலில் அடிபட்டு இறந்ததைத் தன் கண் எதிரிலேயே பார்த்திருக்கிறார். இப்படியான  சிக்கலான சூழலே அவரை ஒரு மாறுபட்ட  எழுத்தாளராக்கி இருக்கிறது.

2014-ல் ஒரு எழுத்தாளராக அவரது பங்களிப்பைச் சிறப்பிக்கும் விதமாக  அமெரிக்க அரசு அமெரிக்காவின் கலைக்கான மிக உயரிய விருதான National Medal of Arts விருதையளித்து ஸ்டீபனைப் பெருமைப்படுத்தி இருக்கிறது. ஸ்டீபன் கிங்கின் பிறந்தநாள் செப்டம்பர் 21 (1947). 
Thursday, January 13, 2022

அறத்துக்கு அப்பால் மீறும் அத்துமீறல்

ஒரு மகிழ்ச்சியான செய்தி !. நம்முடைய சின்ன ஒரு காத்திருப்பு முடிவடைந்து விட்டது. ஆமாம். "அறத்துக்கு அப்பால் மீறும் அத்துமீறல்" எனும் சமூகஊடகங்கள் குறித்த நம்முடைய இரண்டாவது புத்தகம் அச்சாகி விட்டது. காலையில் ராம்ஜி அதை உறுதிப்படுத்தினார்.


புத்தகத்தை வாங்கும் இணைப்பு...

https://tinyurl.com/aratthukkuappal

Sunday, January 9, 2022

உலகின் முதல் சுயசேவை அங்காடிகள்

நடுத்தர வருமானம் உள்ள குடும்பங்களில் அந்த நாட்களில் மாதா மாதாம் மளிகைப்பட்டியல் போடும் பழக்கம் இருந்தது  நினைவிருக்கலாம். சூடம், சாம்பிராணி,பத்திகட்டு போன்ற சாமி சாமான்களை முதலில் எழுதி விட்டு பிறகு து.பருப்பு, க.பருப்பு, தே. எண்ணெய் என நீளும் அந்தப் பட்டியலின் இறுதியில் எ.புண்ணாக்கு, க.புண்ணாக்கு எனச் சகலமானதையும் அதில் பார்க்கலாம்.

அந்தப் பட்டியலை ஒரு துணிப் பையோடு சேர்த்து மளிகைகடையில் கொடுத்து வேண்டிய பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தோம். சமீப காலமாக, அதுபோன்ற மளிகை கடைகள் அருகி வாடிக்கையாளர்கள் தங்களுக்கு வேண்டியதைச் சுதந்திரமாகத் தேர்ந்தெடுத்து சூப்பர் மார்கெட்கள் பெருகிவிட்டன.  ஆரம்பத்தில் சென்னை, பெங்களூர் போன்ற பெருநகரங்களில் இருந்த இந்தப் பழக்கம் இன்று சிறு நகரங்களிலும் மக்களிடம் பலத்த வரவேற்ப்பைப் பெற்றிருக்கிறது.

இதுபோன்ற செல்ஃப் சேர்வ் (self-serving store) எனும் இந்த சுய சேவை அங்காடிகளை முதலில் அறிமுகப்படுத்தியது யார் தெரியுமா ?

அமெரிக்கர்கள் தான்.  Piggly Wiggly என்ற அமெரிக்கப் பல்பொருள் அங்காடி நிறுவனம்தான் முதன் முதலில் டென்னசி மாநிலத்தில் உள்ள மெம்பிஸ் (Memphis, TN) நகரில் இதை ஒரு சோதனை முயற்சியாக அறிமுகம் செய்திருக்கிறார்கள். அறிமுகம் செய்த ஆண்டு 1916. அதற்கு வாடிக்கையாளர்களிடம் கிடைத்த பேராதரவைப் பார்த்து மற்ற சில்லறை வியாபாரிகளும் சுயசேவைக்கு மாறினார்கள் என்பது வரலாறு.

இந்த பிக்லி விக்லி(Piggly Wiggly) நிறுவனம் தான் கடையில் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும்  பொருட்களின் மீது விலையைக் குறித்து வைப்பது, வாடிக்கையாளர்களுக்கு ஷாப்பிங் கார்ட் எனும் தள்ளுவண்டி தந்தது போன்ற பல விசயங்களில் முன்னோடியாக இருந்திருக்கிறது. டென்னசி செல்பவர்கள் Piggly Wiggly-யின் வரலாற்றைச் சொல்லும் அருங்காட்சியகத்தைப் பார்க்கத் தவறவிடாதீர்கள்.

Saturday, January 1, 2022

2021-இல் வாசித்த புத்தகங்களின் பட்டியல்

2021-இல் நான்  நிறையப் படித்தேன் எனச் சொல்வதை விட நிறைய எழுதினேன் என்பதே சரியாக இருக்கும். அதுவும், ஒன்றல்ல இரண்டு புத்தகங்கள் எழுதியிருக்கிறேன் என்பது என்னைப் பொறுத்தவரை நம்ப முடியாத செயல்.

வாசித்தவை வழக்கத்துக்குக் குறைவு என்றாலும் அந்தப் பட்டியல் இதோ... (இது கண்டிப்பாக தரவரிசை பட்டியல் இல்லை)


தமிழில்

அல்லிக்கேணி - நரசிம்மன், ராம்ஜீ

வண்ணத்துப்பூச்சிகளின் விடுதி - நக்கீரன்

பரங்கிமலை இரயில் நிலையம் - by Sen Balan

இச்சா -ஷோபா சக்தி

நந்தலாலா - மாலன்

காடோடி - நக்கீரன்

யாருக்கான பூமி - பா சதீஷ் முத்து கோபால் 

கமலி - சி.மோகன்

ஆங்கிலத்தில்

Un Even justice - Raj Rajaratnam

The Shallows (What the Internet is Doing to Our Brains) - Nicholas G. Carr

Solid Air: Invisible Killer- Daniel Klem

The Bird Study Book-Thomas Gilbert Pearson 

Interpreter of Maladies - Jhumpa Lahiri

The Minimalist Home: A Room-by-Room Guide to a Decluttered, Refocused Life - Joshua Becker