இந்தச் சூழ்நிலையிலும் கட்டுரைகள், அரசியல், சுய முன்னேற்றம், பொது அறிவு புத்தகங்களைத் தாண்டி தமிழில் கதைகளை வாசிக்க சிறிய கூட்டம் ஓன்று இருக்கத்தான் செய்கிறது.
அந்த வாசகர்களை கருத்தில் கொண்டு வருடம்தோறும் நூற்றுக்கணக்கான படைப்புகள் வெளிவருகின்றன. அவற்றில் பிரபலமான எழுத்தாளர்கள் மற்றும் பதிப்பகங்களின் படைப்புகள் ஏதோ ஓரு வகையில் வாசகர்களின் கவனத்தைப் பெற்றுவிடுகின்றன என்பது சொல்லத் தேவையில்லை. ஆனால் மற்ற படைப்புகளில் தரமானதை அடையாளம் காண வாசகனுக்கு பெரும் வழிகாட்டலாக இருப்பது மூத்த எழுத்தாளர்கள் தான்.
அப்படி எழுத்தாளர் எஸ்.ராமகிருஸ்ணனால் சமீபத்தில் அடையாளம் காட்டப்பட்டது ஏக்நாத்தின் "கெடைகாடு" புதினம் (நாவல்). எஸ். ரா. வால் அடையாளம் காணப்பட்டதும் டிஸ்கவரி புக்பேலஸ் இதன் இரண்டாம் பதிப்பை வெளியிட்டிருக்கிறது. நாவலாசிரியர் ஏக்நாத் எனக்கு அறிமுகம் இல்லாதவர். அவரைப் பற்றிய குறிப்புகளும் இந்தப் புத்தகத்தில் பெரிதாக இல்லை. அதனால் எதிர்பார்ப்புகள் ஏதுமின்றியே இந்த நூலைப் படித்தேன்.
இனி புத்தகத்தைப் பற்றி பார்ப்போம். தமிழில் கிராமத்தை கதைக் களமாகக் கொண்டு பல படைப்புகள் வந்திருந்தாலும் இந்த படைப்பு கொஞ்சம் வித்தியாசமானது அல்லது புதுமையானது என்றுகூட சொல்லலாம் அதற்குக் காரணம் கதை நடப்பது மலையும் மலை சார்ந்த மேய்சல் நிலம். புதுமையான நாவல் என பரவலாக பேசப்பட்ட மேய்சல் நிலத்தைப் பேசும் ஓநாய் குலச்சின்னம் நாவல்கூட சீன மொழிபெயர்ப்புதான்.
கிராமங்களில் கிடை(கெடை) போடுதல் என்பது மாடுகளையோ, ஆடுகளையோ பகல் நேரங்களில் வயலில் மேயவிட்டு இரவில் அங்கேயே படுக்க வைப்பது. ஆடுகளை வைத்து போடப்பட்டால் ஆட்டுக்கிடை இல்லை மாட்டுக்கிடை என்பார்கள். இதை செய்பவர்கள் நாடோடிகள். அவர்கள் வெளியூர்களிலிருந்து பொடிநடையாக தங்களுடன் ஆடுகளையோ மாடுகளையோ மந்தையாக அழைத்து வருவார்கள்.
அவர்கள் ஓரு இரவிற்கு இவ்வளவு எனப் பேசி நெல் அல்லது பணத்தைக் கூலியாக வாங்கிக் கொள்வார்கள். கிராமங்களில் வயலில் வேலையில்லாத கோடைகாலங்களில் பெரும்பாலும் இதைச் செய்வார்கள். மாடுகளின் சாணம் மற்றும் சிறுநீர் வயலுக்கு இயற்கை உரம் என்பதால் இதை விவசாயிகள் இதை பெரிதும் விரும்பவார்கள். விவசாயத்திற்கு ரசாயன உரங்கள் பெரிதாக பயன்படுத்த தொடங்கிய பின் இந்த நடைமுறை கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துவிட்டது என்றே சொல்லாம்.
இந்த நாவலில் அப்படி மாடுகளை மேய்சலுக்காக காட்டுக்கு நண்பர்களுடன் ஓட்டிச் செல்லும் உச்சிமாகாளி எனும் பாத்திரத்தின் வழியாக கதை விரிகிறது.
நாவலில் பெரும்பாலும் பேசப்படுவது காடு, அது சார்ந்த வாழ்க்கை, மாடுகள், அதன் மேய்ச்சல். அது போல கிராமம், அந்த கிராமத்தில் உச்சமகாளிக்கு நேரும் காதல், அவர் நண்பர்களின் காமம் என விரிகிறது.
உச்சிமாகாளி காட்டில் இருப்பது ஓரு தளமாகவும் கிராமத்தில் நடக்கும் இன்ன பிற விஷயங்களை இன்னோரு தளமாகவும் எடுத்துக் கொண்டால் என்னைக் கவர்ந்தது முதல் தளம். ஆனாலும் இரு தளங்களையும் ஆசிரியர் கதையில் அருமையாக இணைத்திருக்கிறார். நான் ஓரு நாவலின் படைப்பாளி என்ற முறையில் அதில் உள்ள நடைமுறைச் சிரமங்களை அறிவேன். அதற்காக முதலில் வாழ்த்துக்கள் ஏக்நாத்.
"விடிந்துவிட்டது. மாட்டின் சாணமும் மூத்திரமும் ஓரே இரவுக்குள் மூக்கில் வந்து அடித்தது. இந்த வாடை புதிதில்லை என்றாலும் அந்நியபிரதேசத்தில் இந்த வாசனை புதிதாகத் தெரிந்தது."
இதில் கவித்துவனமான வரிகளில்லை ஆனால் நாவலினூடே இதை படிக்கும் போது மூத்திரவாடை உங்களுக்கு புரியத் தொடங்கும். அது போல ஓரிடத்தில்
தேங்காய் அளவில் கொய்யா பழங்கள் என்றொரு வரி வரும். இப்படி திருகலான வார்த்தை பிரயோகங்கள் இல்லாத எளிதான அனைவருக்கும் புரியும் மொழி நடை. இப்படி முழுக்க முழுக்க கிராமிய மணத்துடன் அந்த வட்டார பேச்சு வழக்கில் கதையை நகர்த்துகிறார்.அதுபோல
காட்டின் உள்ளே நடக்கும் பல விஷயங்கள் நுட்பமாக சிறு சிறு சம்பவங்கள் மூழமாகப் பதிவாகியிருக்கிறது. உதாரணமாக காடுகளில் தேன் எடுப்பது, ரேஜ்சர்கள் எனப்படும் வன அதிகாரிகளின் அத்துமீறல்கள், புலி, மான் போன்ற விலங்குகளைத் திருட்டுதனமாக வேட்டையாடுவது, சந்தன மர திருட்டு, காட்டில் சாமிக்கு நடக்கும் படையல் என இந்தப் பட்டியல் நீள்கிறது.
நாவலில் இந்தபகுதியையே மேலும் செழுமைபடுத்தி, கிராமத்து பஞ்சாயத்துகள், சாராயச் சாவுகள் போன்றவற்றைத் தவிர்திருக்கலாம் என்பது எனது கருத்து. அதுபோலச் சில காட்டு விலங்குகளைப் பற்றிய சிறிய குறிப்புகள் பயனுள்ளதாக இருக்கும். உதாரணமாக "மிளா" என்பது ஓரு வகையான மான் என்பதை பின்னால் தெரிந்து கொண்டேன். அதே சமயத்தில சில வழக்குச் சொற்களுக்கான மாற்றுச் சொல்லை அடைப்புக் குறியில் கொடுத்திருக்கிறார்கள். அந்த வகையில் அட்டளை எனபதற்கு பரண் எனக் குறிப்பிட்டிருந்தது சிறப்பு. மற்றபடி கெடைகாடு ஓரு நல்லதொரு வாசிப்பனுபவம்.
கண்முன்னே நகர்மயமாதலுக்கு நம் கிராமங்களைப் பலிகொடுத்துக் கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில் "கெடைகாடு" போன்றதொரு நாவலின் எழுத்துக்கள் மட்டுமே இழந்த வாழ்க்கையை மீட்டேடுக்க உதவும்.
அதுபோல அடுத்தத் தலைமுறைக்கு இந்தப் படைப்புகள் மட்டுமே அந்த வாழ்க்கைக்கு சாட்சியாக இருக்கும்.
தலைப்பு :கெடைகாடு
எழுத்தாளர்: ஏக்நாத்
பதிப்பகம்: டிஸ்கவரி புக் பேலஸ்
ISBN : 9789384301019
பக்கங்கள்: 200
விலை : ரூ.170
குறிப்பு- இந்த நூல் அறிமுகம் ஆம்னி பஸ் தளத்தில் வெளியாகியிருக்கிறது.
http://omnibus.sasariri.com/2016/03/blog-post.html
ஐயா நன்றி. சிறப்பாக எழுதியிருக்கிறீர்கள்.
ReplyDelete