Showing posts with label #tnvisit2022. Show all posts
Showing posts with label #tnvisit2022. Show all posts

Friday, February 17, 2023

எஸ்டர்டே மருமகனே !!

பிடிக்கிறதோ இல்லையோ வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வருபவர்கள் செய்ய வேண்டிய முதல் வேலை,  தண்டோரா போதுவது போல போஃன் செய்து சொந்தங்களுக்கு தங்கள் வருகையை அறிவித்து நலம் விசாரிப்பது. அப்படியான ஒரு உரையாடலில் தாய் மாமா..

'மருமகனே ! மீனாட்சி தம்பி பையன் அமெரிக்காவில் என்ன படிக்கான் ?

'ஒன்பதாவது மாமா

'எல! அத நயன்த்து (9th)னு சொல்ல வேண்டியதுதானே. மாமாவுக்கு இங்லீசு தெரியாதுனு நினைச்சியோ 

'அப்படியெல்லாம் இல்ல மாமா ..நான் அவசரமாக மறுத்தேன். 

'பின்ன... மாமாவுக்கு உங்க அமெரிக்கன் இங்கிலீசு தெரியாட்டியும் கொஞ்சம் இந்த ஊரு இங்கலீசெல்லாம் தெரியுமாக்கும்..

நான் யோசித்து முன் எச்சரிக்கையோடு 'சரி..நீங்க எப்ப ஹார்ட் செக்கப்புக்கு திருநவேலி போறீங்க ?

'எஸ்டர்டே மருமகனே’, என்றபோது எனக்கு ஒரு நொடி இதயம் நின்றது போலிருந்தது.

Friday, August 26, 2022

"ஜிபே" Google Pay

'லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாக வருவேன்' என்பது போல புதிய தொழில்நுட்பங்களை விரைவாக கைகொள்வதில் இந்தியாவை அடித்துக்கொள்ள வேறு ஆட்களே இல்லை என்றே நினைக்கிறேன். அந்த விதத்தில் நான் இந்தமுறை கவனித்த விசயம் "ஜிபே(Google Pay)" . 



ஜிபே-ஐ தமிழ்நாடு என்றில்லை ஒட்டுமொத்த இந்தியாவே  தத்து எடுத்திருக்கிறது போல. சாலையோர பழக்கடையில் இருந்து ஐந்து நட்சத்திர ஒட்டல் வரை எல்லோரும் எந்த தயக்கமும் இன்றி ஏற்றுக் கொள்கிறார்கள். நாம் முன்புபோல  பணத்துக்காக ஏடிஎம்களைத் தேடி ஓடவேண்டிதில்லை.

ஆனால் என்ன, கிரிடிக் கார்ட், பே பால் (PayPal) என இப்படி எவ்வளவுதான்  புதிதாக வந்தாலும் எனக்கு பணத்தைக் கண்ணால் பார்த்து, கைகளில் தொட்டு செலவு செய்தால்தான்  திருப்தி. அப்போதுதான் செலவு என் கட்டுக்குள் ஒழுங்காக இருக்கும் என சிலர் சொல்வதும் லேசாக காதில் விழுந்தது. 

Saturday, August 13, 2022

ஓலா(Ola cabs)- பயண அனுபவங்கள்

ஓலா-வில் ஓடிபி (OTP) எண் சொல்வதில் தாமதம். அதனால், பயணம் செய்தவர் ஓலா கார் டிரைவரால்  அடித்துக் கொலை என்றொரு செய்தியைச் சமீபத்தில்  பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.  எதற்கெல்லாம் கோபப்படுவது,  கொலை வரை போவது என்ற வரைமுறையெல்லாம் போய்விட்டது.

நானும் ஊரில்  ஓலா (Ola cabs) பயன்படுத்தி இருக்கிறேன். அதுவும் இந்தமுறை ஒருநாளைக்கு இரண்டு மூன்று முறை என்ற அளவில் அதிகமாக பயன்படுத்தினேன்.  இதில் ஒவ்வொருவருக்கும் ஒரு அனுபவம். நண்பர் சுரேஷ் கண்ணன் கூட தான் நீண்ட காலமாக ஷோ்ஆட்டோவில் பயணிப்பவன் எனச் சொல்லி தன்னுடைய அனுபவங்களைத் தொடர்ச்சியாக முகநூலில் பதிவிட்டு வருகிறார்.

என்னுடைய ஓலா அனுபவங்கள் ஊரில் கலவையாக இருந்தன. ஒரு ஓட்டுநர் இரவு 11 மணிக்கு  தான் தூங்காமல் இருக்க எனச் சொல்லி தனது சொந்த கதை பேசியபடி ஓட்டி வழியை கோட்டை விட்டுவிட்டார்.  அன்று வழிதவறி  ஊரெல்லாம் சுற்றிவிட்டு வீட்டுக்கு வரும் போது நள்ளிரவாகிவிட்டது. இத்தனைக்கும் உதவிக்கு கூகுள் இருந்தும் இந்த இலட்சணம். நேரமும், பணமும் விரயம்.

சிலர்  வண்டிக்கு பெட்டோல் போடனும்ங்க, சில்லறை மாத்தனும்ங்க என நமது அவசரம் தெரியாமல் வழியில் நிறுத்தி இம்சித்தார்கள். ஒருவர் நான் அவசரமாக ஒன்னுக்கு போகனும்ங்க என வண்டியை ஒரு புதரோரம் ஓரங்கட்டி நிறுத்தி விட்டு  என்னை அம்போ விட்டுவிட்டு போய்விட்டார்.

ஒரு நண்பரிடம் ஓலா ஆட்டோ 3 பேருக்குதான். நான்காவதாக சுண்டெலி போல ஒரு பிள்ளை ஏறினாலும் கூடுதல் கட்டணம் 50 ரூபாய் என கராராக வசூலித்து விட்டார் என என்னிடம் வந்து புலம்பினார்.

(குறிப்பு - எல்லா ஓலா ஓட்டுநர்களையும் குற்றம் சொல்வது இந்தப் பதிவின் நோக்கம் அல்ல)

Saturday, July 30, 2022

வெளிநாட்டு பாஸ்போர்ட்(கடவுச்சீட்டு) வைத்திருப்பவர்களுக்கு

இந்தியாவில் வெளிநாட்டு பாஸ்போர்ட்(கடவுச்சீட்டு) வைத்திருப்பவர்களுக்கு விமான நிலையங்களில் தனி வரிசை என்பது தெரிந்ததே. 

சென்னை போன்ற நகரங்களில் முன்பெல்லாம் அந்த வரிசையில் பெரும்பாலும்  ஒன்றிரண்டு வெள்ளை முகங்கள் நின்று கொண்டிருப்பார்கள். 


ஆனால், இந்தமுறை வந்த போது நிலையோ தலைகீழ். வெளிநாட்டு பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களின் வரிசை என்பது உள்நாட்டு பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு குறைவில்லாமல் நீண்டிருந்தது. அவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்தியாவில் பிறந்து, வளர்ந்து  வெளிநாடு சென்று அந்தநாட்டு பாஸ்போர்ட் வாங்கிக் குடியேறியவர்களாக இருந்தார்கள்.(அவருடைய குடும்பத்தினர்)

இந்த நேரத்தில் அமெரிக்கக் குடியுரிமை பெற தங்களுடைய சொந்த நாட்டு குடியுரிமையைத் துறந்தவர்களில் இந்தியர்கள் 2-ஆவது இடத்தில் இருக்கிறார்கள் என்பதை இங்கே நினைவுபடுத்த வேண்டி இருக்கிறது.