Showing posts with label #JessicaKing. Show all posts
Showing posts with label #JessicaKing. Show all posts

Sunday, September 17, 2023

ஜெஸிகா கிங் - குறித்து (9) -யதார்த்தமாக இருந்தது

 முகநூல் வாசகர் Raji Athappan "ஜெஸி என்கிற ஜெஸிகா கிங்" நாவல் குறித்து பகிர்ந்தது..




பிரதிக்கு :

Zero degree publication 98400 65000
முதல் பதிப்பு ஜனவரி 2023
விலை ரூ 330.

Saturday, July 29, 2023

ஜெஸிகா கிங் - குறித்து (8) -கதை சொல்லி துக்கத்தில் முழுகி விடமாட்டார்

முகநூல் வாசகர் Aarthi Siva, "ஜெஸி என்கிற ஜெஸிகா கிங்" நாவலின் கதைசொல்லி பற்றி பகிர்ந்தது..

//...கதை சொல்லியின் மகளின் வயதை வைத்து கணக்கிடும்போது அவர் தடாலடியாக செயல்படுகிற இளமை வேகம் கடந்தவர்ங்கிறதும், அவரோட  நிதானப்போக்கினை பார்க்கும்போது மிகுந்த யதார்த்தவாதிங்கிறதும் புரியவருது. ᴩꜱyᴄʜᴏ ᴀɴᴀʟyꜱɪꜱ படி சொல்லனும்னா ᴄᴀᴜᴛɪᴏᴜꜱ ᴛyᴩᴇ ᴩᴇʀꜱᴏɴᴀʟɪᴛy. தன் காதலை பத்தியோ, அவளுடனான உறவை பத்தியோ ꜱʜᴀʀᴇ பண்ணிக்கிற அளவுக்கு கூட வேறு நெருக்கமான நட்போ உறவோ இல்லாதவர். தமிழ்நாட்டு பாணில "நல்ல குடும்பத்துப் பையன்" ᴛyᴩᴇ. அவளது (ஜெஸி) இழப்பினால் விளைந்த துக்கத்தை மௌனமாக விழுங்கி ஜீரணிப்பாரே தவிர துக்கத்தில் முழுகிவிடமாட்டார். அதனால அவர் பேர்ல இரக்கம் தோணலன்னு நினைக்கிறேன்.//




பிரதிக்கு :

Zero degree publication 98400 65000
முதல் பதிப்பு ஜனவரி 2023
விலை ரூ 330.


ஜெஸிகா கிங் - குறித்து (9) - மனதில் ஒரு நீலநாரையின் கல்வெட்டு

ஜெஸி (எ) ஜெஸிகா கிங் குறித்த தனது வாசிப்பனுபவத்தை முகநூலில் பகிர்ந்த பிரியா பாஸ்கரன் அவர்களுக்கு நன்றி. நூலின் இறுதியில் வரும் கவிதை அவருடையதே.

//

மனதில் ஒரு நீலநாரையின் சிலாசாசனம் (கல்வெட்டு)

ஒரு நாவலின் பக்கங்களுக்குள் எல்லையற்ற உலகங்கள் உருவாக்கப்படுகின்றன. கனவுகள் உயிர்ப்பிக்கப்படுகின்றன. மனித ஆத்மாவின் யதார்த்த எல்லைக்கு அப்பால் உயர்ந்து, வாசகரின் இதயத்திலும் மனதிலும் ஒரு அழியாத அடையாளத்தை விட்டுச்செல்ல வேண்டும் அந்த நாவல்.
எழுத்து பிரசுரம் மூலம் வெளிவந்துள்ள, நாவலாசிரியர் ஆரூர் பாஸ்கர் எழுதிய ஜெஸி (எ) ஜெஸிகா கிங் என்ற நாவலை வாசித்து முடித்த பொழுதில், Blue Heron பறவையும், ஜெஸிகா என்ற பெண்மணியும் மனதில் கல்வெட்டாய் பதிந்துள்ளனர்.


கதைக்களம் வட அமெரிக்காவின் ஃபிளாரிடா மாகாணம். ஒரு குடியிருப்பு பகுதியில் கொரோனா கால கட்டத்தில் நடந்த ஒரு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு நாவல் நகர்கிறது.
Sub divisionல் வசிக்கும் அண்டை வீட்டினைச் சேர்ந்த டீன் ஏஜ் பெண் கேசியின் அம்மாவான ஜெஸி என்ற பெண்மணிக்கும், அதே சம வயது டீன் ஏஜ் பெண் பிரியாவின் அப்பாவான கதை நாயகனுக்கும் இருக்கும் நட்பையும், திடீரென கொரோனா கால கட்டத்தில், காணாமல் போன ஜெஸியைக் குறித்து கவலை கொள்ளும் கதாநாயகனின் மன நிலையையும், அவளுக்கு என்னவாயிற்றோ எனக் கண்டுபிடிக்க அவன் எடுக்கும் முயற்சிகளே கதையின் போக்காக அமைந்துள்ளது.

இது ஒரு கிரைம் நாவலாக இருப்பதால், அத்தியாயத்திற்கு அத்தியாயம் ஜெஸிக்கு என்ன ஆகியதோ என நம்மையும் தேட வைக்கிறார் ஆசிரியர். கதை வாக்கில் பறவைகள் குறித்தான தகவல்கள் நிறைய உள்ளன. Like..
தெரியும்மா இப்படி பறவைகள் ‘V’ போலப் பறப்பதால் எனஜியைச் சேமிக்குது. அப்புறம் அந்தப் பறவைகளின் எண்ணிக்கை இரட்டைப் படையில் இருக்குப் பாத்தியா?
வட அமெரிக்கா நிலப்பரப்பின் அடையாளங்களை, தனது எழுத்து நடையில் விரிவாக பாஸ்கர் கொண்டு வந்துள்ளதால் எளிதாக என்னால் காட்சிப் படுத்திப் பார்க்கவும், கதை மாந்தருடன் பயணிக்கவும் முடிந்தது. இறுதியில் ஜெஸிகாவுக்கு என்ன ஆயிற்று என்பதின் மர்ம முடிச்சை அவிழ்க்கும் வரைக்கும் அமெரிக்க வாழ் இந்தியர்கள், அமெரிக்கர்கள், மற்ற நாடுகளிலிருந்து புலம் பெயர்ந்தோரின் பழக்க வழக்கங்களை விரிவாகக் கண் முன்னே காட்சிப்படுத்தியுள்ளார் ஆசிரியர்.
ஜெஸியின் கையில் “Blue Heron” பறவையைப் பச்சைகுத்தி இருப்பாள். அதுவே இந்த நூலின் அட்டைப்பட வடிவமைப்பிலும் வந்துள்ளது.
வழிமாறித் திசைமாறிப் பறக்கும்
நீல ஹெரான் பறவையைப்
பார்க்கும் பொழுதெல்லாம்
இணைந்தே பயணிக்கிறோம் நீயும் நானும்
மீளவும் மீளவும்
புலரியில் எழும் அந்திச் சூரியனைப் போல.
- Priya Baskaran பிரியா பாஸ்கரன்
என்ற எனது இந்தக் கவிதை வரிகளுடன் இந்த நாவலை நிறைவு செய்துள்ளார் எழுத்தாளர் ஆரூர் பாஸ்கர்...//


நூல்: ஜெஸி (எ) ஜெஸிகா ஜிங்
எழுத்தாளர்: ஆரூர் பாஸ்கர்
பதிப்பகம்: எழுத்து பிரசுரம்
விலை: ரூ. 330/-

Sunday, April 23, 2023

ஜெஸிகா கிங் - குறித்து (7) - நீலப் பறவையின் ஒளி அழகாக இனிமையாக மெல்லப் படர்கிறது

ஒரு படைப்பாளியின் மகிழ்ச்சி என்பது தனது படைப்பு பலரைச் சென்று சேர்வது என்பதோடு மட்டும் நின்றுவிடுவதில்லை. மாறாக, அந்தப் படைப்பு அவர்களால் எந்த அளவு புரிந்து கொள்ளப்பட்டது என்பதும் மிக முக்கியமாகும்.

அந்த வகையில் 'ஜெஸி என்கிற ஜெஸிகா கிங்' மிகச்சரியாக உள்வாங்கப்பட்டு ஒரு விரிவான கட்டுரையாக இணையத்தில் வெளியாகியிருக்கிறது.
இந்த அறிமுகக் கட்டுரையை ஊடகவியளாலர் ப.சரவணவன் அவர்கள் Wow தமிழா தளத்தில் (நூலகம் பகுதி) எழுதியிருக்கிறார். சித்திரைத் திருநாள் பரிசாக ஏற்றுக்கொள்கிறேன். நெஞ்சார்ந்த நன்றி சரவணவன் !!
அந்தக் கட்டுரை கீழே...

இந்தியாவில் பிறந்து அமெரிக்காவில் வசிக்கும் ஒருவரின் அமெரிக்க வாழ்க்கை எப்படி இருக்கும்? அமெரிக்கக் கனவு இனியதா கொடியதா? அமெரிக்காவும் இந்தியாவும் எந்தெந்த வகைகளில் வேறுபடுகின்றன, எந்தெந்த வகைகளில் ஒன்றாக இருக்கின்றன? இந்தியப் பெருநகரங்களின் வாழ்க்கை எந்தளவுக்கு அமெரிக்க வாழ்க்கைக்கு நெருக்கமாக இருக்கிறது? இந்த எல்லா கேள்விகளுக்குமான பதில்களை ஒரு நெடுங்கதையின் ஊடாகச் சொல்லும் நாவல், ஆரூர் பாஸ்கர் எழுதிய ஜெஸிகா (எ) ஜெஸிகா கிங் நாவல்.

அமெரிக்காவில் வசிக்கும் புலம்பெயர்ந்த தமிழர் ஒருவருக்கு அமெரிக்க வாழ் பெண்ணுடன் உருவாகும் காதலும் அதை ஒட்டிய நினைவுகளும் இந்தக் கதையின் களம். இதில் அந்தத் தமிழர் அமெரிக்க நிலத்துடன் எப்படி ஒன்றுகிறார், ஒன்ற முடியாமல் தவிக்கிறார், அமெரிக்கப் பெண்ணுடன் அவரது உறவு எப்படி நிகழ்கிறது, அந்த அமெரிக்கப் பெண்ணின் வாழ்க்கையை இவர் எப்படிப் பார்க்கிறார் என்பன போன்ற பரிமாணங்களில் விரிகிறது இந்த நாவல். வழக்கமான ‘Who done it?’ வகை ஒரு கிரைம் த்ரில்லராக ஆகிவிடக்கூடிய கதையை, நிலம், பண்பாட்டுக் கூறுகள், மனிதரின் இயல்புகள் மற்றும் பிறழ்வுகளைக் காட்டும் நெடுங்கதையாக மாற்றி இருக்கிறார் நாவலாசிரியர்.

புலம்பெயர்ந்த நாட்டில் ஒற்றைப் பெற்றோராக (Single Parent) இருக்கும் இந்தியத் தமிழ் ஆண் ஒருவரும் அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்த இன்னொரு ஒற்றைப் பெற்றோரான பெண் ஜெஸிகா கிங்கும் கதையின் முக்கியப் பாத்திரங்கள். இவர்கள் இருவரின் குழந்தைகள், நண்பர்கள் மற்றும் இவர்களுடன் ஒரே குடியிருப்பு வளாகத்தில் வசிப்போர் ஆகியோர் இக்கதையின் பிற கதைமாந்தர்கள். இவர்கள் அனைவரும் சமகாலத்தில் வாழ்பவர்கள் என்பதால், இவற்றில் பல கதைமாந்தர்களை நாம் தமிழ்நாட்டில் குறிப்பாகப் பெருநகரங்களில் நம்முடன் வாழும் பலரோடும் பொருத்திப் பார்க்க முடிவது, நம்மைக் கதையுடன் எளிதில் ஒன்றச் செய்கிறது.

குற்றத்தைப் பின்னணியாகக் கொண்ட கதை என்றாலும், கிரைம் திரில்லர்களைப் போல் கதையின் முடிவை நோக்கிய வெறும் பரபரப்பை உருவாக்குவதாக இந்நாவலின் கதையாடல் இல்லை. கதையில் இருக்கும் கதைமாந்தர் ஒவ்வொருவருக்கும் தனித்துவமான பின்னணி, காரணம் மற்றும் கதைக்கான பங்களிப்பு இருப்பதால், விறுவிறுப்பான வாசிப்போடு, கதைமாந்தரின் பண்புகளையும் வாழ்வையும் பற்றிய புரிதல் கதையோடு சேர்ந்து வளர்கிறது.

ஜெஸிகா கிங்க்கும் கதை சொல்லியாக வரும் தமிழருக்கும் இடையிலான காதல்மிகு கணங்களில் காதல் கதையின் பண்புகள் முழுமையாக இருக்கின்றன. கதையில் நிகழும் குற்றத்தை ஆராயும் இடங்களில் கிரைம் த்ரில்லர் வகைமையில் கதை நகர்கிறது. கதையின் முடிவில் உணர்ச்சிகரமான, எதிர்பாராத சில நிகழ்வுகள் இந்த இரு வகைமையில் இருந்தும் மாறுபட்டு திகில் ஜானருக்கு மாறி வியப்பளிக்கிறது. இது வாசிப்பில் ஆர்வத்தைத் தொடர்ந்து தக்கவைக்க உதவுகிறது.

அமெரிக்க வாழ் புலம்பெயர் தமிழரின் கதை என்றாலும், பல பாத்திரங்கள் அமெரிக்கர்களாக இருப்பதால் அவற்றின் உரையாடல்களை எப்படி எழுதி இருப்பார் என்ற எண்ணம் கதையை வாசிக்கத் தொடங்கியதும் உருவாகிறது. கதை தமிழரின் பார்வையில் நகர்வதால் பல இடங்களில் உரையாடல்களைத் தமிழில் எழுதி இருக்கிறார். சில இடங்களில் ஆங்கில உரையாடல்களைத் தமிழில் அப்படியே எழுதி, அந்த உடையாடலில் அமெரிக்கத் தன்மை கொண்ட விஷயங்கள் குறித்த பொருளை, பின்புலத்தைத் தமிழில் விளக்கி, இந்த மொழிச் சிக்கலை அருமையாகக் கடந்திருக்கிறார் எழுத்தாளர்.


என்னுடைய கடந்தகால கசப்புகளை ஏணிப்படியாக்கி, உன் வீட்டு ஜன்னலை எட்டிப் பார்க்கிறன்னு மட்டும் மட்டும் நீ நினைக்காதே…”, “நிலவொளியில் என் விருட்சத்தில் அமர்ந்து அந்த நீலகண்டப் பறவை விளையாட, இச்சையின் சூட்டில் அன்று இரண்டு வெவ்வேறு நிறங்கள் உருகிப் பொங்கிக் கலந்து வழிந்தோடியது” எனச் சில இடங்களில் கவித்துவம் மிக்க வரிகள் இடம்பெற்று வாசிக்கும் அனுபவத்தை உயர்த்துகின்றன.

பல இடங்களில் காட்சிப் படிமங்கள் நன்றாக விவரிக்கப்பட்டு, அந்தச் சூழலை உணர உதவுகின்றன.

மேலோட்டமாக காதல் கலந்த கிரைம் திரில்லர் போல் தோன்றினாலும் அதையும் தாண்டிப் பல விஷயங்களைப் பேசுகிறது ஜெஸிகா (எ) ஜெஸிகா கிங். மனிதர்களுக்கும் மனிதர்களுக்கும் இடையே இருக்கும் வேறுபாடுகளால் உருவாகும் மோதல்கள், மனிதருக்கும் இயற்கைக்கும் இடையே நிகழும் மோதல்கள், மனிதருக்கும் தொழில்நுட்பத்துக்கும் இடையே எற்படும் மோதல்கள், மனிதருக்கும் அரசின் கொள்கைகளுக்கும் இடையே நிகழும் மோதல்கள் ஆகியவை கதையின் ஊடாக அழகாக சொல்லப்பட்டு இருக்கின்றன.

தொழில்நுட்பங்கள் மற்றும் ஆயுதங்கள் மனித வாழ்வை எப்படி நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கின்றன, இன்றைய பதின்ம வயதினர் தொழில்நுட்பத்தை நுகரும் மற்றும் தொழில்நுட்பத்தால் நுகரப்படும் விதம், மூத்த தலைமுறையினர் அதைப் பற்றி கொண்டிருக்கும் எண்ணங்கள், இந்தத் தொழில்நுட்பங்கள் வாழ்வில் எற்படுத்தும் நல்ல விளைவுகள் மற்றும் கேடுகள் ஆகியவையும் கதையின் ஊடாகப் பேசப்படுகின்றன.

கோவிட் காலத்தில் மானிட இனம் எதிர்கொண்ட பல சிக்கல்களும் நாவலில் விரிவாக பேசப்படுகின்றன.

கதையின் முக்கியக் கதாப்பாத்திரமான ஜெஸிகா, 21ஆம் நூற்றாண்டு பெண்களின் பிரதிநிதியாக இருக்கிறாள். தனது உடல் குறித்து பெருமை கொண்டவளாக இருக்கிறாள். உரிமைகளைக் குறித்து தெளிவு மிக்கவளாக இருக்கிறாள். அவள் எடுக்கும் அரசியல் நிலைப்பாடுகள், அன்றாட வாழ்வின் செயல்களுக்கு முரண்படாமல் இருக்கும் அளவுக்குத் தெளிவானவளாக, மன முதிர்ச்சியும் மன உரமும் கொண்டவளாக இருக்கிறாள். சுற்றுச்சூழலைப் பற்றிய ஆர்வமும் அக்கறையும் அறிவும் கொண்டவளாக இருக்கிறாள். இயற்கை மீதான அவளது அன்பு, நாய் பூனை போன்ற வளர்ப்பு விலங்குகளோடு மட்டுமே குறுகிப் போகாமல், அடுக்கு மாடிகளின் வெளிப்புறக் கண்ணாடிகளில் மோதி இறக்கும் பறவைகள், ஏரியில் காணக்கிடைக்கும் நீர்ப்பறவைகள், சூழலுக்குத் தொடர்பில்லாமல் வேற்று நிலத்தில் இருந்து அழகுக்காக மட்டுமே நட்டு வளர்க்கப்படும் மரங்கள் என்று பரந்த தன்மை கொண்டதாக இருக்கிறது.

ஜெஸிகாவின் சொல்லும் செயலும் நிலைப்படும் ஒரே நேர்க்கோட்டில் தெளிவாக இருக்கின்றன. உறவுகள் குறித்த சில முடிவுகள் தவறாகும்போது அவற்றில் இருந்து விலக அவள் தயங்குவதில்லை. அவளது வாழ்க்கையில் உயர்வும் தாழ்வும் வந்தபோதும் நாம் இப்படிப்பட்ட நபராக இல்லாமல் வேறு ஒருவராக இருந்திருக்கலாம் என்று அவள் வருந்துவதில்லை.

தனது உயிருக்கே ஆபத்தாகும் என்ற போதிலும் கொள்கை சார்ந்த தனது முடிவுகளில் இருந்து அவள் மாறவில்லை. எடுத்துக்காட்டாக உயிருக்கே ஆபத்து நேரும் எனும் நிலை வந்தாலும், அமெரிக்க துப்பாக்கிக் கலாச்சாரத்துக்கு எதிரான நிலைப்பாடு காரணமாக அவள் துப்பாக்கி வைத்துக்கொள்ளாமலே வாழ்கிறாள். ஒவ்வொரு செயல்பாட்டுக்கும் ஆணின் மதிப்பீடுகளை அவள் சார்ந்திருப்பதில்லை.


அவள் மிகவும் திட்டமிட்டு வாழ்க்கையை வாழத் தேவையானவற்றை மட்டுமே செய்யும் Schemer அல்ல. மனம் போன போக்கில் இலக்கற்று வாழ்பவள். எந்தச் சூழலிலும் தனது பொறுப்பை உணர்ந்து, தன்னை அறிந்து செயல்படுபவளாக அதில் தயக்கமோ பயமோ கூச்சமோ அற்றவளாக இருக்கிறாள். சவாலான சூழல்களைத் துணிவுடன் எதிர்கொள்கிறாள். வெற்றிகளை நிதானதோடு அணுகும் பக்குவமான மனமும் தோல்விகளை அஞ்சாமல் எதிர்கொள்ளும் நெஞ்சுரமும் கொண்டவளாக இருக்கிறாள். அவ்வகையில் ஜெஸிகா, இந்த 21ஆம் நூற்றாண்டு பெண்களின் பிரதிநிதி.

நாவலின் குறிப்பிடத்தக்க இரண்டாவது சிறப்பு, கதை சொல்லிக்கும் ஜெஸிகாவுக்கும் இடையில் முகிழ்க்கும் காதல். எற்கனவே விவாகரத்து பெற்ற ஆணுக்கும் பெண்ணும் இடையில் உருவாகும் இந்தக் காதல், வெறும் உணர்ச்சிப் பொங்கல்களால் ஆனது அல்ல. தனிப் பெற்றோராக (Single parent) இருக்கும் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே தோன்றும் இந்தக் காதல் மிகவும் நளினமானதாக, இயல்பானதாக, மெல்ல நிகழ்வதாக உள்ளது. இந்தக் காதல் ஒருவரை ஒருவர் சுரண்டுவதாக இல்லை, அதனால் சுரண்டலின் பொருட்டு உருவாகும் குற்ற உணர்ச்சிகள் இந்தக் காதலில் இல்லை. வெறும் சொல்லால், எண்ணங்களால், இலக்குகளால், கனவுகளால் ஆனது அல்ல இந்தக் காதல், ஆணும் பெண்ணும் இணைந்து செய்யும் செயல்களால் ஆனது. அவ்வகையில், மிகவும் மனமுதிர்ச்சி பெற்ற இருவரின் காதலாக இந்தக் காதல் இருக்கிறது. அந்தக் காதலை உடல் சார்ந்த, உணர்ச்சி சார்ந்த விவரணைகளால் நிரப்பாமல், காதல் மிகும் கணங்களைக் கவித்துவமாக எழுதிக் காட்டி இருப்பது எழுத்தாளரின் சொல்முறையின் சிறப்பு.

நாவலின் தொடக்கத்தில் பரந்த வெளியில் எங்கோ ஓர் நீலப் புள்ளியாகத் தெரியும் ஜெஸிகா, கதையின் போக்கில் நெருங்கி நெருங்கி நீலப் பறவையாகி பிரம்மாண்டம் கொண்டு, ஒவ்வொரு கதாப்பத்திரத்தின் மீதும் வெளிர் நீல ஒளியாகப் படர்கிறாள். நாவலை வாசிக்கும் நம் மீதும் அந்த நீலப் பறவையின் ஒளி அழகாக இனிமையாக மெல்லப் படர்கிறது.

ஜெசி (எ) ஜெஸிகா கிங்
ஆசிரியர்: ஆரூர் பாஸ்கர்
விலை: ₹330
வெளியீடு: எழுத்து பிரசுரம்

ஆன்லைனில் புத்தகத்தை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

இந்தக் கட்டுரையின் சுட்டி Link

Saturday, March 25, 2023

ஜெஸிகா கிங் - குறித்து (6) - அமெரிக்கச் சித்திரம் அழகாக வந்திருக்கிறது

ஜெஸி (எ) ஜெஸிகா கிங் குறித்து முகநூல் நண்பர் சரவணன் மாணிக்க வாசகம் அவர்களின் பதிவு..

ஆசிரியர் குறிப்பு:
திருவாரூரைச் சேர்ந்த இவர் தற்போது அமெரிக்காவில் ஃபிளாரிடா மாகாணத்தில் மென்பொருள் துறையில் பணிபுரிகிறார்.

தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றை நடத்தும் இவர் கவிஞர், எழுத்தாளர் என பல முகங்கள் கொண்டவர். என் ஜன்னல் வழிப்பார்வையில், பங்களா கொட்டா,வனநாயகன்-மலேசிய நாட்கள், Social media குறித்த இருநூல்கள் முதலியன ஏற்கனவே வெளிவந்த இவரது நூல்கள். இது சமீபத்தில் வெளிவந்த இவரது நாவல்.
பெயர் சொல்லாத கதைசொல்லி, காதலித்தவளை மணக்காமல், தாயார் ஏற்பாடு செய்த பெண்ணை மணந்து, பின் அவளையும் பிரிந்து, பத்து வயதுப் பெண் குழந்தையோடு, பிளோரிடாவின் Posh குடியிருப்பில் வசிக்கையில், பக்கத்தில் வசிக்கும் ஜெஸி என்ற அமெரிக்கப் பெண்ணுடன் காதல் அரும்புகிறது. அது மலர்வதற்குள் ஜெஸி காணாமல் போகிறாள். அவளுக்கு என்ன நேர்ந்தது என்பதே கதை.


ஒரு புனைவில் பறவைகள் இவ்வளவு தூரம் இடம்பெறுவதைத் தமிழில் முதன்முறையாக நான் வாசிக்கிறேன். நாவலின் முக்கிய கதாபாத்திரம் ஒன்று, மற்றும் அவளது மாமா இருவரும், Ornithophile ஆக இருப்பதால் பறவைகள் கணிசமான பங்கை இந்த நாவலில் எடுத்துக் கொள்கின்றன. அட்டையில் இருக்கும் நீலநாரை, ஜெஸிக்கான உருவகம் மட்டுமல்ல, கதையின் இறுதியில் முக்கியமானதொரு வேலையைச் செய்யப் போகிறது.
அடுத்ததாக, அமானுஷ்யம் (Paranormal). அமானுஷ்யம் நாவலில் முக்கியபங்கு வகிக்கிறது. பிரியாவின் மூலமாகச் சொல்லப்படும் விஷயங்கள், தெருவில் நாய்களின் சத்தம், பத்துமடங்கு பெரிய நீலப்பறவை என்று அமானுஷ்யம் கதையில் முக்கிய பங்காற்றுகிறது. அதுபோலவே, Black magic. நம்மை விட அமெரிக்கர்கள் இப்போது அதை அதிகம் நம்புகிறார்கள்.
அமெரிக்க வாழ்க்கை என்பது மட்டுமல்லாது அமெரிக்க மனோபாவம் என்பதையும் பாஸ்கர் இதில் நன்றாகக் கொண்டு வந்திருக்கிறார். குறிப்பாக ஜெஸியுடனான ஓரிரவுக்குப் பிறகு அமெரிக்க மனநிலை அமைதியாக எதிர்கொள்வதையும், இந்திய மனநிலை குற்ற உணர்வுடன் கண்களைச் சந்திக்கத் தவிர்ப்பதையும் சொல்லலாம். அந்த ஒரு இடம் மட்டுமல்ல, அங்கேயே பல காலங்கள் இருந்தவர் என்பதால் அதைத் தெளிவாக நாவலில் கொண்டுவர முடிந்திருக்கிறது.
முதல் ஐந்து அத்தியாயங்கள் ஒரு திரில்லர் நாவலின் தொடக்கத்துடன் வந்திருக்கிறது. இடையில் காதல்கதையாக மாறலாமா என்று யோசிக்கிறது. Romantic thriller என்பது வேறு Format. Clare Mackintoshவின் பெரும்பாலான நாவல்கள் இந்த ரகம். இரண்டு Timelineகளில் கதை நகர்கிற பொழுது, ஒரு அத்தியாயம் Past romanceக்கும் , அடுத்தது Present தேடல் வேட்டைக்கும் வைத்திருந்தால் நாவலின் வேகம் அதிகரித்திருக்கும். குடியிருப்பாளர்கள் பிரச்சனைகள், கூட்டங்கள், கூப்பர் எல்லாமே என் கருத்தின்படி Extra luggage.
ஆரூர் பாஸ்கர் அவருக்குத் தெரியாத விஷயங்களில் புகுவதில்லை. அதுவே அவருடைய பலமும் கூட. இந்த நாவலின் கதைக்களமும் அவர் பலவருடங்களாக வசிக்கும் .ஃபிளாரிடா. அமெரிக்காவில் நடப்பதால் மட்டுமல்ல, மேற்சொன்ன பல விஷயங்களாலும் இது வித்தியாசமான நாவல். போதை மருந்து, Gun culture, சிறுவர்கள் வயதுக்கு மீறிநடப்பது, கட்டற்ற சுதந்திரம் என்று அமெரிக்கச் சித்திரம் இந்த நாவலில் அழகாக வந்திருக்கிறது. அதற்காகவே ஆரூர் பாஸ்கரைப் பாராட்ட வேண்டும்.
பிரதிக்கு :
Zero degree publication 98400 65000
முதல் பதிப்பு ஜனவரி 2023
விலை ரூ 330.

Saturday, February 4, 2023

ராயல்டி - நல்ல சகுனம்

காலையில் எழுந்த உடன் யாராவது ஃபோன் செய்து "உங்க வங்கி கணக்குக்கு பணம் அனுப்பி வைத்திருக்கிறேன்" எனச் சொல்வதைவிட வேறு நல்ல சகுனம் என்ன இருக்கமுடியுமா எனத் தெரியவில்லை.  ஜீரோ டிகிரி ராம்ஜி முந்தாநாள் அழைத்து (ராயல்டி) அதைத்தான் செய்தார் (நிதி- கல்வி அறக்கட்டளைக்கு).

கூடவே, கடந்த ஆண்டில் என்னுடைய புத்தகங்களின் விற்பனை வரிசையும் அனுப்பியிருந்தார். அந்தப் பட்டியல்

1. அறத்துக்கு அப்பால் மீளும் அத்துமீறல்

2. சோஷியல் மீடியா -இது நம்ம பேட்டை

3. இர்மா (அந்த ஆறு நாட்கள்)

இப்படி என்னுடைய ஜீரோ டிகிரி புத்தகங்கள் எதுவும் உறங்கி போகாமல் விற்பனையாகிக்கொண்டிருப்பது என்பது மகிழ்ச்சி. மேலும் எழுத உற்சாகம் தருகிறது. 

இந்த ஆண்டு பட்டியலில் கண்டிப்பாக ஜெஸிகா-வுக்கு முதலிடமாக இருக்கும்.


இருக்கட்டும். மகாகவி சொன்னது போலதான் "சாம்பல் நிறத்தொரு குட்டி,  கரும் சாந்தின் நிறம் ஓரு குட்டி என எந்த நிறமிருந்தாலும் அவையாவும் ஒரே தரம் அன்றோ" என்பதுபோல; ஒரு படைப்பாளியின் புனைவு (fiction), அபுனவை (nonfiction) என எதுவாக இருந்தாலும் அதில் அவருடைய ஆன்மா என்பது ஒன்றுதான். எழுத்தோடு பயணிப்போம்  நட்புகளே!!.

கீழே, ஜீரோ டிகிரி வழியாக வெளியான என்னுடைய 4 நூல்களையும் வாங்கும் இணைப்பைக் தருகிறேன். பயன்படுத்திக்கொள்ளுங்கள் ..

Buy-Link

Wednesday, February 1, 2023

ஜெஸி (எ) ஜெஸிகா கிங் - அச்சுப்பிரதியாக இணையத்தில்

நண்பர்களே, 

ஜெஸி (எ) ஜெஸிகா கிங் நாவல் இப்போது ஜீரோடிகிரி தளத்தில் அச்சுப்பிரதியாக (இணையத்தில்) வாங்க கிடைக்கிறது. 



அதற்கான இணைப்பு கிழே பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

இணையத்தில் வாங்க

அன்புடன்,

ஆரூர் பாஸ்கர்


Friday, January 27, 2023

ஜெஸிகா கிங் - சேஸிங்

புத்தகத்தை வாசிப்பது போலவே 'ஜெஸிகா கிங்' அச்சுப் பிரதியைப் பெறுவதும் விறுவிறுப்பான சேஸிங்காக இருந்தது.

கடந்த புதன் கிழமை ஜீரோ டிகிரி ராம்ஜீ புத்தகங்களை கொரியர் செய்து விட்டு  டிராக்கிங் எண் கொடுத்திருந்தார்.  அன்று மதியம் 12 வரைகூட கொரியர் தளத்தில் புத்தகப்பொதி இன்னமும் சென்னையில் இருப்பதாகவே சொன்னது. மதிய குட்டித்தூக்கத்துக்கு பின்  பார்த்தபோது, 3 மணி அளவில் புத்தகம் வந்து சேர்ந்துவிட்டதாக தளம் காட்டியது.


சரி வாங்கிவிடலாம் என நேரடியாக  கொரியர் அலுவலகத்துக்கு போய் கேட்டேன். அவர்களும் அதை உறுதி செய்தார்கள். ஆனால், மலை போல குவிந்த கிடந்த பார்சல்களை உருட்டி பிரட்டி விட்டு இறுதியில் கைவிரித்து விட்டார்கள்.

என்ன ஏது என விசாரித்தால், 'இங்கேதான் இருக்குபோல சார்... ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை' என்றார்கள். அப்போது வந்த ஒரு மேலாளர் பெரிய பார்சலாக இருப்பதால் டெலிவரி போயிருக்கும், லைனை பிடியுங்கள் என்றார். அப்படி இப்படி என எங்கங்கோ பேசி ஒருவழியாக ஒருவரைப் போனில் பிடித்தார்கள்.

அவர் தன்னை சிவா என அறிமுகம் செய்துவிட்டு தான் இருக்கும் இடத்தையும் சொன்னார். அது ஒரு அம்மன் கோயில்.

சரி என அங்கே போய் பார்த்தால், இப்பதான் சார் அங்கிருந்து நகர்ந்தேன் என இன்னொரு இடத்தைச் சொன்னார். நான் அந்தக் கோயிலை இடவலமாக சுற்றி அவர் சொன்ன இடத்துக்கு போனால்,  அந்த இடமே எனக்குப் புதிதாக இருந்தது (ஊர் வளர்ந்துவிட்டது !?).  அங்கே நின்று கொண்டிருந்த ஒரு ஆட்டோகாரரை விசாரித்து ஒருவழியாக கொரியர் வேனையும் கண்டுபிடித்துவிட்டேன்.

கையெழுத்து இத்தியாதிகள் முடிந்த பின் நடந்ததுதான் ஹய் லைட், 'பொதி கனக்குதா?' என அவரிடம் கேட்டபோது , 'அப்படி எல்லாம் ஒன்னும் பெரிய வெயிட் இல்ல சார். சும்மா அலேகா தூக்கி அப்படியே டூவிலர்ல வையுங்க பொண்ணு மாதிரி உட்காரும்' என்றார் சிரித்தபடி.

பொண்ணு மாதிரி என்ன பொண்ணுதான். 'வெள்ளை பெண் (white girl)' என நினைத்தபடி மோட்டர் சைக்கிளை உதைத்தேன். 

கதையில் மட்டுமல்ல நிஜத்திலும் சிவனுக்கும் ஜெஸிகாவுக்கும் ஏதோ விட்ட குறை தொட்டகுறை தொடர்பு இருக்கிறதே என்ற எண்ணம் மட்டும் மனதுக்குள் வெகுநேரம் ஓடிக்கொண்டிருந்தது. 

குறிப்பு- நண்பர்கள் சிவனுக்கும் ஜெஸிகா கிங்-க்கும் என்ன தொடர்பு என நாவலை வாசித்து தெரிந்துகொள்ளுங்கள் நண்பர்களே.

Thursday, January 26, 2023

ஜெஸி - நூல் வெளியீட்டு விழா

ஜெஸி நூல் வெளியீட்டு விழா ஜனவரி,16, 2023 (திங்கள்) அன்று சிறப்பாக நடந்து முடிந்தது. சிறப்பு விருந்தினர் கோவை சதாசிவம் அவர்களுடைய தாயார் காலமாகிவிட்டதால் அவரால் நிகழ்வில் கலந்து கொள்ள இயலவில்லை. ஆனால், அந்தக் குறை தெரியாத வகையில் நிகழ்ச்சி நிரலில் கடைசி நிமிட மாற்றங்கள் செய்து நண்பர் தமிழ்மணி  மிகச் சிறப்பாக ஒருங்கிணைத்திருந்தார். கூடவே தமிழ்பரதனும் இணைந்து கொள்ள விழா களைகட்டியது.


முனைவர் சந்தான லட்சுமி நூல் குறித்த விரிவான திறனாய்வை தந்தார். அவருடைய பல கோணங்கள் எனக்கு வியப்பளித்தன. அதுபோல, கலைபாரதி பங்களா கொட்டா நாவல் குறித்து மிகவும் சிலாகித்து பேசினார். அதை எழுதி 6-7 ஆண்டுகள் ஆனதால் எனக்கே மறந்துவிட்ட பலவற்றை அவர் நினைவூட்டி சிறப்பாக பேசினார்.

வழக்கம்போல பேராசிரியர்  ஹாஜா கனி தன் பேச்சால் அரங்கைக் கட்டிப்போட்டார்.


 விழாவுக்கு வந்திருந்த மருத்துவர் திருநாவுக்கரசு அவர்களை எந்த வித முன்னேற்பாடுமின்றி வாழ்த்துரை வழங்க அழைத்தோம். அவரும் இசைந்து சிறப்பானதொரு வாழ்த்துரை வழங்கினார். 


இறுதியில் பாவாணர் நினைவு பேச்சுபோட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளி மாணவர்களோடு, பல முகநூல் நண்பர்களும் கலந்து கொண்ட நிகழ்வு நிறைவாக இருந்தது. 



வேலை நெருக்கடியில் ஓடிக்கொண்டிருப்பதால் நிகழ்வின் எல்லா படங்களையும் காணொளிகளையும் உடனடியாக பகிர முடியவில்லை. இருக்கும் சில படங்களை மட்டும் இப்போது பகிர்கிறேன்.

நிகழ்வில் கலந்துகொண்டவர்களுக்கும், உள்பெட்டியிலும், தொலைபேசியிலும் தொடர்ச்சியாக அழைத்து வாழ்த்து சொன்ன அன்பு உள்ளங்களுக்கு நன்றி !


Friday, December 23, 2022

ஜெஸி (எ) ஜெஸிகா கிங் - இப்போது அச்சு நூலாக

மகிழ்ச்சியான செய்தி !! "ஜெஸி (எ) ஜெஸிகா கிங்"  அச்சுநூலாக வருகிறது.  ஜீரோ டிகிரி பதிப்பகம் இதை ஜனவரி புத்தகத் திருவிழாவுக்கு திட்டமிட்டிருக்கிறது. முகப்பு அட்டைப் படமும் மேம்படுத்தப்பட்டிருக்கிறது. புதிய அட்டைப் படத்தை நெகிழன் வடிவமைத்திருக்கிறார்.



#jessie


Saturday, December 10, 2022

ஜெஸி என்கிற ஜெஸிகா கிங் - குறித்து(5)

வாசக நண்பர்களின் வாசிப்பனுபவம் தொடர்கிறது...

இதைப் பகிர்ந்த ராஜா திருநாவுக்கரசு அவர்களுக்கு நன்றி !

Read Jessi (India)

Read Jessi (USA)

Tuesday, December 6, 2022

ஜெஸி என்கிற ஜெஸிகா கிங் - குறித்து(4)

அமேசான் கிண்டில் வாசகர்களின் வாசிப்பனுபவம் தொடர்கிறது.

Monday, October 31, 2022

ஜெஸி என்கிற ஜெஸிகா கிங் - குறித்து(3)

ஒருவருடைய எழுத்துக்கான அங்கீகாரம் என்பது அதனை வாசிப்பவர்களின் அனுபவத்திலிருந்து வருகிறது. அந்த வாசிப்பனுபவத்தைத் தனிமடலில் அல்லது பொதுவெளியில் பகிர்வதில் சிலருக்குச் சில தயக்கங்கள் இருக்கலாம்.

அந்தத் தயக்கங்களில் இருந்து விடுதலைப் பெற்று எங்கிருந்தாவது வரும் அங்கீகாரமே நம்மைத் தொடர்ந்து இயக்கிக் கொண்டிருக்கின்றது.

அந்த வகையில் என்னுடைய எல்லா நூல்களையும் உடனடியாக வாசித்து கருத்துகளை விரிவாகப் பதிவிடும் வாசக நண்பர்களில் ஃபிளாரிடா சேந்தன் முதன்மையானவர்.  அவருடைய வாசிப்பனுபவம் இங்கே..

//ஆரூர் பாஸ்கர் அவர்களின் புதிய நாவல், வாசிப்பு அனுபவம்:

மார்வெல் யூனிவர்ஸ், விக்ரம் லோகிவெர்ஸ் போன்று ஆரூர் பாஸ்கர் யூனிவர்ஸ் என்று ஒன்றில் நுழைந்ததாகவே தோன்றியது, அவரது முந்தைய நாவலான வனநாயகனில் பத்மாவை திருமணம் முடித்துவிடுவார் என்ற நம்பிக்கையோடு நாவல் நிறைவு பெரும், ஆனால் பத்மாவை மணந்துக்கொள்ளவில்லை என்று கதையின் ஆரம்பமே சற்றும் எதிர்பாராத திருப்பம். நாவலில் வரும் அழகியல் தன்மை ஒவ்வொரு பாத்திரத்தையும், சூழ்நிலையையும் விவரிப்பதில் வெளிப்படுகிறது.
வனநாயகனிலும் சரி, ஜெசி நாவலிலும் சரி, இயற்கையே கதையின் எல்லா இடங்களிலும் இழைந்திருக்கும். இயற்கையின் மீதான ஆரூர் பாஸ்கரின் காதல் அவர் படைப்புகளில் தெரியும். வனநாயகனில் வரும் ஒராங்குட்டானாகட்டும், இர்மா நாவலில் வரும் மேனட்டி ஆகட்டும், ஜெசி கதையில் வரும் கிரேட் ப்ளூ ஹெரான் ஆகட்டும் அந்த இயற்கை குறியீடுகளும், இயற்கை மனிதனின் பேராசையால் அழிக்கப்படும் காட்சிகளும் ஆரூர் பாஸ்கர் அவர்களின் சிக்னேச்சர் (ஹா..ஹா… Sig(nature)-சிக்னேச்சரிலும் கூட நேச்சர் வருகிறது)😅

ஒரு புனைவில் எத்தனை நுட்பமான இயற்கை சார்ந்த தகவல்கள், அதன் பின்னால் இருக்கும் கடும் உழைப்பை பற்றி வியக்காமல் இருக்க முடியவில்லை. திரைபடங்களில் வரும் பின்னனி இசை போல The Great Blue Heron(நீல பறவை) கதை முழுக்க நம் கற்பனைகளில் விரிந்துக்கொண்டே வருகிறது. ஜெசியை பற்றிய வர்ணனைகளை தொடர்ந்து வாசிக்க வாசிக்க, Blue Eyed Blonde பெண்களை கண்டால் ஜெசி கதாபாத்திரம் இப்படி தான் இருப்பாளோ என்று தோன்றிவிடும். கதாநாயகனின் ஜெசி மீதான காதலை சொல்லும் தருணம் மிக subtleலாக அழகாக இருந்தது.
அமெரிக்காவில் வாழும் தமிழர்கள் பலரும் அவர்கள் வாழும் ஊர்களை பற்றி, மக்களை பற்றி, இயற்கையை பற்றி அதிகம் தெரியாமலேயே வாழ்ந்துவிடுவார்கள். யாரோ சொன்ன அல்லது எங்கேயோ கேட்டதை வைத்து தங்கள் அனுமானங்களை அமெரிக்கா பற்றிய புரிதலாக உருவாக்கி வைத்திருப்பர். அவர்கள் பலரும் அமெரிக்க வாழ்க்கையை பற்றி அறியாத ஆனால் அவர்கள் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிற அல்லது கடந்து போகிற பல தகவல்களைக் கதையின் போக்கிலேயே எழுதியிருக்கிறார்.


ஃப்ளோரிடா மாகாணத்தில் வசிக்கும் பலருக்கும் பலமுறை பார்த்தும் கூட தெரியாத ஒரு பறவை அநிஹ்ங்கா(Anhinga) (தன் இறக்கைகளை விரித்து பாம்பு போன்ற கழுத்தை நீட்டி ஏரி கரையோரங்களில் வெயில் காய்ந்துக்கொண்டிருக்கும், மற்ற பறவைகளிலிருந்து பார்த்தவுடனே வித்தியாசமாக இருக்கும், இது வட அமெரிக்காவில் ஃப்ளோரிடா மாகானத்தில் மட்டுமே காணகிடைக்ககூடிய பறவை) பற்றிய குறிப்பு வரும் இடத்தை வாசித்த போது, மனிதர் எவ்வளவு தூரம் ஒரு நாவலை எழுத ஆராய்ச்சி செய்திருக்கிறார் என்று தோன்றியது. எனக்கு பிடித்த இன்னொரு செய்தி குறைந்த வாடகை அப்பார்ட்மென்டுகளை தடுக்கும் வெள்ளையின மனநிலையை விளக்கும் இடம். இவற்றை நம்மவர்களும் சேர்ந்து எதிர்க்கும் பல சமயங்களை நானே பார்த்திருக்கிறேன்.

இவை எல்லாமே நாவலில் நான் வாசிக்க வாசிக்க வியந்த இடங்கள், இதை தாண்டி நாவலின் உச்சம் என்பது கடைசி மூன்று அத்தியாங்கள், சரியான திரில்லர்! ....

அருமையான
வாசிப்பு அனுபவமாக படைத்துக் கொடுத்த ஆரூர் பாஸ்கர் அவர்களின் யுனீவர்ஸ் தொடர
வாழ்த்துக்கள்
!

இந்தப் புத்தகம் கிண்டிலில் கிடைக்கிறது, உலகம் முழுதும் வாழும் தமிழர்களுக்கு எங்களூரில் [ஃப்ளோரிடா] இருந்து எழுத்தாளர் ஆரூர் பாஸ்கரால் படைக்கப்பட்டிருக்கிறது. ஜெஸி (எ) ஜெஸிகா கிங் (Tamil Edition)
//

இதைப் பகிர்ந்த சேந்தன் அவர்களுக்கு நன்றி !! இந்த நூலைக் கிண்டிலில் வாசிக்க, கீழே சொடுக்கவும்.

Saturday, October 22, 2022

ஜெஸி என்கிற ஜெஸிகா கிங் - குறித்து(2)

ஜெஸி(எ)ஜெஸிகா கிங் நாவல் குறித்த கருத்துகள் வரத் தொடங்கியிருக்கின்றன.

//ஜெசிகா கிங் என்கிற தலைப்பைப் பார்த்ததும், இந்தக் கதை ஜெசிகா என்கிற அமெரிக்கப் பெண்ணைப் பற்றிய கதை என்பதை எந்த சஸ்பென்சும் இல்லாமல் உடனே தெரிந்து விடுகிறது. இதில் வரும் தமிழ்க் கதாநாயகன் ஒரு பெண் குழந்தையோடு வசிக்கிறான். அவன் வாழ்வில் நுழைந்த ஜெஸி பற்றிய நெடுங்கதை இது. 



இந்த நாவலைப் படிக்கும் போது ஒவ்வொரு அத்தியாயமும் விறுவிறுப்பாக  தங்கு தடையின்றி வழுக்கிச் செல்கிறது. கதாசிரியர் எழுத்துக் கலையில் பயிற்சி பெற்றவர் என்பதும் எப்படி ஒரு அத்தியாயத்தை வாசிப்பவர்களுக்கு சலிப்பை கொடுக்காமல் சுவாரசியமாக நகர்த்தவேண்டும் என்கிற உத்தி தெரிந்தவர் என்பதும் தெரிகிறது. அத்தியாயங்களை ஆரம்பிப்பது, நகர்த்துவது, முடிப்பது போன்றவை தெளிந்த நீரோட்டம் போல இருக்கிறது. தனித் தனியாக வாசிக்கும் போது ஒவ்வொரு அத்தியாயமும் இனிமை. உதாரணத்திற்கு அவன் பெர்மினா வீட்டிற்குச் சென்று ஆருடம் பார்க்கும் காட்சிகள் மிகுந்த அழகு. 

கதையில் வெவ்வேறு குணாதியங்களைக் கொண்ட கதா பாத்திரங்கள் மிக அழகாக வடிவமைக்கப் பட்டிருக்கின்றன. பறவைகள்,பசுமைப் பாதை, அஷோசியேஷன் சண்டைகள்... இவையெல்லாம் அமெரிக்க வாழ்க்கையை படம் பிடித்துக் காட்டுகின்றன.  அனைவரும் கண்டிப்பாக வாசிக்கவேண்டிய படைப்பு ஜெஸி என்கிற ஜெஸிகா கிங்.

//

இதைப் பகிர்ந்த அந்த நண்பருக்கு நன்றி !! இந்த நூலைக் கிண்டிலில் வாசிக்க, கீழே சொடுக்கவும்

Read Jessi

Sunday, October 9, 2022

ஜெஸி என்கிற ஜெஸிகா கிங் - குறித்து(1)

வந்தியத் தேவன் மூலமாக ஓலை முதலில் தஞ்சைக்கு போய்விட்டு பிறகு பழையாறை செல்வது போல ஜெஸி நாவல் கிண்டிலில்  pen2publish-இல் வெளியாகிவிட்டது. ஆனால், அந்தச் செய்தி இன்னமும் கிண்டில் அன்லிமிடெட் (kindle unlimited) வாசகர்களுக்கு போய் சேரவில்லை போல. அதற்கு சுமார் 1 வாரம் ஆகும் என தெரிந்தவர்கள் சொல்கிறார்கள்.  அதன்பின் பலர் வாசித்து கருத்துகளைப் பகிர்வார்கள் என எதிர்பார்க்கிறேன்.

இதுவரை வாய்வழிச்செய்தியாக கேள்விப்பட்டவர்கள் மட்டும் வாசித்துக் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து வருகிறார்கள். அப்படிச் சமீபத்தில் வந்த ஒரு அமேசான் கருத்து ...


இப்படி எங்கிருந்தெல்லாமோ வரும் உற்சாகம் நம்மைத் தொடர்ந்து இயக்கிக் கொண்டிருக்கிறது. நன்றி நண்பரே !!

Read Jessi

 

கிண்டில் வாங்கித் தர நீ ரெடியா ?

என்னுடைய "ஜெஸி" நாவல் கிண்டிலில் கிடைக்கிறது என்றவுடன் சிங்கப்பூர் நண்பர் ஒருவர் தொடர்பு கொண்டு மானே, தேனே எனச் சொல்லிவிட்டு, "புத்தகம் வாங்கி படிக்க நான் ரெடி.  கிண்டில் வாங்கித் தர நீ  ரெடியா ?" என்கிறார்.  எப்படி இருக்கிறது கதை, பாருங்கள்.


நம்முடைய அன்பு சொந்தகங்களில் பலருக்கு இந்த விசயம்  முன்பே தெரிந்திருக்கலாம். தெரியாதவர்களுக்காக - கிண்டில் நூல்களை வாசிக்க தனியான சாதனம் எதுவும் தேவையில்லை. கிண்டிலின் செயலியை (app) போஃன், டேப்லெட்-களிலும் தரவிறக்கம் செய்து அதில் எங்கும் எப்போதும் வாசிக்கலாம். இல்லையென்றால், எந்தவித சாதனமும் இல்லாமல் கணினி  பிரொளசரிலும் கூட நேரடியாக எளிதாக  படிக்கலாம்.

நேரடியாக பிரொளசரில் படிக்க உதவும் கீழே இணைப்பில் தருகிறேன் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

https://read.amazon.com/kindle-library

Read Jessi