Showing posts with label #கிரிப்டோகிராஃபி. Show all posts
Showing posts with label #கிரிப்டோகிராஃபி. Show all posts

Wednesday, October 17, 2018

பிரிக்க முடியாதது - காதலும் .... ?

முன்பெல்லாம் காதலர்கள் ரகசியமாக கடிதங்களைப் பரிமாறிக்கொள்ள
வேண்டியிருந்தது. மற்றவர்களைக் குழப்பவேண்டும் என்பதற்காக  "காதலிக்கிறேன்" என்பதை "ன்றேகிக்லிதகா"  என்றெல்லாம் பின்புறமாக  எழுதி நம்மைத் தலைசொறிய வைத்தார்கள்.

ஆனால், இப்போது  பிரிக்க முடியாதது காதலும் ரகசியமும் என்றிருந்த காலமெல்லாம் கடல் ஏறிப் போய்விட்டது. இமெயிலும், கைதொலைபேசியும் தாராளமாகப் புழக்கத்தில் இருப்பதால் காதலர்கள்  ரகசியமாகச் செய்திகளை அனுப்ப ரொம்ப அலட்டிக் கொள்ளவேண்டியதில்லை.

ஆனால், இன்றும்  கிரிப்டோகிராஃபி எனும் ரகசிய எழுத்துக்கலை
ராணுவத்தில் கண்டிப்பாகத் தேவைப்படுகிறது. அதுவும் போர் நடக்கும் சமயங்களில் எதிரிகளின் கண்களில் மண்ணைத் தூவி விட்டு ரகசியமாக செய்தி பரிமாறுவது அதி முக்கியம். அதுவே போரின் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கக் கூடியது. சமீப காலமாக  இந்தத் துறை உலகம் முழுவதும் கணினிகளின் கைகளுக்குப் போய்விட்டது. அதனால் ரகசிய செய்திகளை வழிமறித்தாலும் குறியீடுகளை உடைப்பது முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு  மிகச் சவாலாகியிருக்கிறது. அப்படியும் கூட  விக்கிலீக்ஸ் புகழ் ஜூலியன் அசானாஜ் போன்ற ஹேக்கர்கள் வென்று கொண்டுதானிருக்கிறார்கள்.

இதுதொடர்பான ஒரு புத்தகத்தை வாசித்துக் கொண்டிருக்கிறேன்.
முதன்முதலாக ரகசியச் செய்திகளை ஸ்பார்டன்கள் எனும் கிரேக்கர்கள் தான் மறையாக்கம் (Encryption) செய்தார்களாம். மறையாக்கம் என்பதை மலையாக்கம் எனப் படித்தால் அதற்குக் கம்பெனி பொறுப்பல்ல. அதாவது சாதரணமான  மூலச்செய்தியை ரகசிய குறியீட்டு உதவியால் மற்றவர்களுக்கு எளிதில் புரியாத வகையில் மாற்றுவதை மறையாக்கம்
என்கிறார்கள். அப்படிப் பரிமாறிக்கொண்ட செய்தியை மீண்டும்
அசலான செய்தியாக மாற்றிப் புரிந்துகொள்வதை மறைவிலக்கம் (Decryption) என்கிறார்கள். எளிதாகச் சொல்வதென்றால் "ஐ லவ் யூ" என்பதை "143" எனச் சுருக்கமாக சொல்வதைப் புரிந்து கொள்வதுகூட ஒருவித ரகசியச் செய்தி பரிமாற்றம் தான்.

பழங்காலத்தில் ரகசியச்செய்தி பரிமாற்றத்திற்குப் பெரிதாகச் சிரமப்பட்டது போலத் தெரியவில்லை. எளிதாகதான் இருந்திருக்கிறது. ரோமானிய மன்னர் சீசரின் காலத்தில் கூட DOG எனும் சொல்லை ITL என மறையாக்கம் செய்திருக்கிறார்கள். அதாவது Dயில் இருந்து ஐந்தாவது எழுத்து  I, Oவில் இருந்து ஐந்தாவது  T எனப் போகிறது. இந்த 5 எனும் எண்ணை அடுத்தநாள் 9 என மாற்றியிருந்தாலும் இதெல்லாம் வெறும் ஜூஜூபி சமாச்சாரங்கள்.

இந்தத் துறையில் படிப்படியாக முன்னேறி அமெரிக்காவில் சிவில் வார் எனும் உள்நாட்டுப் போர் நடைபெற்ற சயமயத்தில் சுழலும் தகடுகள் (Rotating Disks) எனும் எந்திரத்தைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். அதில் அகர வரிசையில் எழுத்துகள் பொறிக்கப்பட்ட சிறிதும் பெரிதுமாக இரண்டு வட்டுகள் இருந்தன. வெளிவட்டம் சுழலும் வகையில் இருந்திருக்கிறது. அதன் உதவியால் பயனர் செய்தியை மறையாக்கம் செய்து அனுப்பிவிடுவார்.
சுழலும் தகடுகள்
அதாவது (படம்) உள்வட்டத்தில் இருக்கும் A எனும் எழுத்துக்கு நேராக வெளிவட்டத்தில்  Dஐ பொருத்தி செய்தி அனுப்புவதாக முடிவெடுத்துவிட்டால்
GOD எனும் சொல்லை JRG என மறையாக்கம் செய்திருப்பார். எதிர்முனையில் இருப்பவருக்கு A to D எனும்  இந்தச் சேர்க்கை தெரிந்தால்
இன்னொரு எந்திரத்தின் உதவியால் ரகசியச் செய்தியைப் புரிந்துகொள்ளலாம். நிகழ்தகவின் (Probability theory) எனும் கணிதக்கோட்பாட்டின் உதவியால் இதையெல்லாம் எளிதாகப் பிரித்து மேய்ந்துவிடலாம். இன்று இதைச் சிறுவர்கள் விளையாட்டு பொருளில் சேர்த்துவிட்டார்கள்.

பின்னாள் வந்த நாட்களில் தொலைபேசி, மோர்ஸ் குறியீடு போன்ற விசயங்கள் வந்துவிட்டன. முதன்முதலில் ஜெர்மனிய
எனிக்மா
ராணுவம்  ரகசியச் செய்திகளை அனுப்ப
நவீன இயந்திரங்களைப் பயன்படுத்த தொடங்கினர்.  அவர்கள் இரண்டாம் உலகப்போரின் போது பயன்படுத்திய  எனிக்மா (Enigma) எனும் எந்திரம் புகழ்பெற்றது.


அதனால் ஜெர்மனிய ராணுவத்தின் ரகசியத் தகவல் போக்குவரத்தை முறியடிக்க இங்கிலாந்து படாதபாடு பட்டிருக்கிறது. லண்டன் நகரின் மையத்தில் யாருக்கும் தெரியாமல்
கணித நிபுணர்கள், தேர்ச்சி பெற்ற
புதிர் விர்ப்பணர்கள் என
10,000 நிபுணர்களைப் பிலெல்பி பார்க்
பிலெல்பி பார்க்
பகுதியில் தங்கவைத்து  இரவுபகலாக பல வருடங்கள் போராடி இருக்கிறார்கள் . அவர்கள் சிறுசிறு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு மரக் குடிசைகளில் தங்க வைக்கப்பட்டிருந்தார்களாம். அப்போது மரக்குடிசை எண் 8ல் தங்கியிருந்த அலன் டூரிங் (Alan Turing) , ஒரு செஸ் விளையாட்டு வீரரின் உதவியுடன் பாம்பீ (Bombe) எனும் எந்திரத்தைக் கண்டுபிடிக்கிறார். அது ஜெர்மனியர்களின் எனிக்மாவின் ரகசியசெய்திகளின் சூட்சுமத்தை வெற்றிகரமாக முறியடித்துவிடுகிறது. அதன் பிறகு நடந்தது வரலாறு.

அந்த பாம்பீயைக் கண்டுபிடித்த அலன் டூரிங்கைக் "கணிப்பொறியியலின் தந்தை" என்கிறார்கள். அவருடைய டூரிங் எந்திரத்தைதான் இன்றைய கணினிகளின் முன்னோடி என்கிறார்கள்.

உலகப்போரின் போதும் போர் முடிந்தபின்பும் பிலெல்பி பார்க் விவகாரம்
ரகசியதாகவே இருந்திருக்கிறது. வெளியுலகுக்கு ஏன்அங்கு வேலைசெய்தவர்களின் குடும்பங்களுக்குக் கூட அந்த விசயம் மறைக்கப்பட்டிருக்கிறது. போர் முடிந்த உடன் அப்போதைய இங்கிலாந்தின் பிரதமர் சர்ச்சிலின் உத்தரவின் பேரில் பிலெல்பி பார்க் தொடர்பான எல்லா ஆவணங்களும் அழிக்கப்பட்டிருக்கின்றன. பல ஆண்டுகளுக்குப்பிறகு பிலெல்பி பார்க் விவகாரம் வெளிவுலகுக்குத் தெரியவந்த பின் அனைவரும் ஆச்சர்யப்பட்ட ஒருவிசயம் அங்கே வேலைசெய்த 10,000 பேர்களில் 75% சதவீதத்தினர் பெண்கள் என்பதுதானாம். அதுசரி பெண்களிடம்
ஜெர்மானியர்கள் என்ன, யாரால் தான் ரகசியத்தை மறைக்க முடியும் !?.

படம் - நன்றி இணையம் , https://bletchleypark.org.uk