Showing posts with label #nanowrimo. Show all posts
Showing posts with label #nanowrimo. Show all posts

Saturday, December 1, 2018

நவம்பர் - தேசிய நாவல் எழுதும் மாதம் (NaNoWriMo)

எழுதுவது என்றில்லாமல் பொதுவாக கலை தொடர்பான விசயங்களுக்கு
படைப்பூக்கம் அவசியம். அதுவும் புனைவு எழுதுபவர்களுக்கு அது கூடுதலாக தேவைப்படுவதாகவே நினைக்கிறேன். அந்தப் படைப்பூக்கத்துக்கான தூண்டுகோல் எது ?

பெரும்பாலும் இலக்கியவாதிகளின் எழுத்துக்கள் முற்றிலும் கற்பனையாகப் புனையப்பட்டவை அல்ல. அவை அவர்களின் வாழ்வோடு
ஏதோ ஒருவிதத்தில் தொடர்புடையவை. அவர்கள் வாழ்வில் தன்னைப் பாதித்த, தான் கடந்து வந்த வாழ்வின் மறக்கமுடியாத அனுபவங்களை, தனது உணர்ச்சிப் போராட்டத்தை அல்லது தான் சந்தித்தவர்களின் மறக்கமுடியாத அனுபவங்களை எழுத்தில் நாடகமாக நடத்திக் காட்டுவார்கள்.

அப்படி ஒரு கதையை எழுதுவது என்பது ஒவ்வொருவருக்கும் ஒரு அனுபவம். சிலருக்கு அது ஒரு பயணம் போல. சிலருக்கு அது ஒரு  குறுக்கெழுத்து விளையாட்டு போல. சிலருக்கு எழுத்து இருட்டில் மெழுகுவர்த்தி போல.
சமயங்களில் எழுத்து சிலருக்கு மனக்காயங்களுக்கு மருந்தாகவும், துயரத்துக்கு வடிகாலாகவும் அமைவது உண்டு. அந்த வகையில் நேற்று ஒரு மின்னஞ்சல் வந்திருந்தது.

தற்போது கலிபோர்னியா மாநிலத்தில் பற்றி எரிந்துகொண்டிருக்கும்
காட்டுத்தீ அமெரிக்க வரலாற்றின் மிக மோசமான காட்டுத்தீ. அந்த நெருப்புக்குத் தான் குடிருந்த வீட்டையும் மொத்த கம்யுனிட்டியையும்
இழந்த எழுத்தாளர் மாட் ஃபோர்ப்ஸ். தனது அனுபவத்தை நாவலாக
எழுதத் தொடங்கியிருக்கிறாராம். வாழ்க்கையின் துன்பத்துக்கு  மிகச்சிறந்த பதில் அதன் அழிவுகளில் இருந்து மீண்டுவருவதே. அவர் அந்தத்  துன்பங்களில் இருந்து மீள்வது என்பது தனக்கு எழுதுவது என்கிறார்.

அந்தவகையில் கடந்த ஆண்டு ஃபிளாரிடா மாநிலத்தை உலுக்கிய இர்மா எனும் பெருஞ்சூராவளியை எதிர்கொண்ட எனது அனுபவத்தை ஒரு புனைவாக எழுதிமுடித்திருக்கிறேன். உலகமெங்கிலும் நவம்பரை தேசிய நாவல் எழுதும் மாதமாகக் கொண்டாடுகிறார்கள் (NaNoWriMo). அந்த (30-Nov) நவம்பரில் இதை நண்பர்களிடம் பகிர்வதில் மகிழ்ச்சி.

Sunday, November 8, 2015

நா-நோ-ரை-மோ - அப்படினா என்ன ?

நா-நோ-ரை-மோ - அப்படினா என்ன ? மேலே படிங்க..

நமது அன்றாட வாழ்வில் எவ்வளவோ நிகழ்ச்சிகளையும் சம்பவங்களையும் சாதாரணமாக கடந்து போகிறோம்.

ஆனால்  எதேனும் ஓரு கருத்தோ அல்லது நிகழ்வோ மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் வருவது இயல்பு.  நாம மனசு குறு குறுன்னு இருக்குதுன்னு சொல்லுவோமில்லயா அதுமாதிரி. ஆங்கிலத்தில் urgeன்னு சொல்வது போன்ற  அந்த உள்ளவெறியானது (?) குறு நாவலாகவோ அல்லது நாவலாகவோ கூட வெளிவரும்.

அப்படி நாவல் எழுத நினைப்பவர்களை உற்சாகபடுத்தவும், ஊக்குவிக்கவும்
ஓவ்வோரு நவம்பர் மாதமும் தேசிய நாவல் எழுதும் மாதம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

ஆங்கிலத்தில் National Novel Writing Month. சுருக்கமாக NaNoWriMo -"நா-நோ-ரை-மோ" என்கிறார்கள் ( இப்ப புரிஞ்சுதா? ).  அதே பெயரில் உள்ள nanowrimo.org எனும் தளம்  வழியாக இது சாத்தியமாகிறது. இதன் முக்கிய நோக்கம்  எப்படியாவது மக்களை எழுதவைப்பதுதான்.

இதில் கலந்து கொள்வதற்கான விதிமுறைகள் கடினமில்லை.
  • இதற்கேன உள்ள பிரத்தியோக தளத்தில் (http://nanowrimo.org/) பதிவு செய்தபின்,  உங்கள் நாவலை எழுதத் தொடங்குங்கள்.

  • பின்பு அன்றைய நாளில் எழுதிய விவரங்களை அவர்களின் வலை தளத்தில் பதிவு செய்து விடுங்கள். 

  • இப்படி மாத இறுதிக்குள் நீங்கள் 50,000 வார்த்தைகளாவது எழுதியிருக்க வேண்டும். இந்த படைப்புகளில் இருந்து பரிசுக்குரிய நாவலைத் தேர்ந்தேடுக்கிறார்கள்.

பின் குறிப்பு:

இந்த தளம் நீங்கள் எழுதும் நாவலின் தரத்தை விட நீளத்தில் கவனம் செலுத்துகிறது. முன்பே சொன்னது போல முக்கிய நோக்கம்  எப்படியாவது மக்களை எழுதவைப்பதாக இருக்கிறது.

அவர்களின்  கணக்குப்படி  ஆசிரியர் எழுதி முடித்தபின் பின்பு விருப்பப்படி நாவலை திருத்தி தரத்தை உயர்த்தலாம் என்கிறார்கள்.  ஏறத்தால இது ஓரு Draft காப்பி எழுதுறது போல.

இது ஓரு சமூக ஊடகம் என்பதால் கலந்து கொள்ளும் அனைவரும் தங்கள் சமீபத்திய நிலையை அல்லது Statusஐ மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். மத்தவங்க எழுதுறத பாத்து நீங்களும் ஆர்வமாக போட்டி போட்டு எழுதுவீங்க தானே ?

அப்புறம், இன்று நேற்றல்ல கடந்த பதினாறு ஆண்டுகளாக  நாவல் எழுதும் மாதம் நடைபெற்று வருகிறது.   2010ல் நடந்த நிகழ்வு மூலம் பங்கு பெற்றவர்கள் எண்ணிக்கை மட்டும் 200,000 பேர், மொத்தம் எழுதிய சொற்கள்   பில்லியன் 2.8. அடேயப்பா..

தமிழ் நாவல்களும் இதில் சாத்தியமான்னு தெரியல. ஆனால், சுமார் இருபது வருடங்களுக்கு முன்பு சுஜாதா குமுதம் பொறுப்பாசிரியராக இருந்த சமயத்தில் இது மாதிரி ஓரு நாவல் மற்றும் சிறுகதை எழுதும் போட்டி நடத்தியது நினைவுக்கு வருகிறது.

பொறுப்பு துறப்பு:

கசலீனா... அப்படின்னு சமீபத்தில் வந்த ரஜினிபட துள்ளல் பாட்டு மாதிரி,  'நா-நோ-ரை-மோ ' ன்னா ஏதோ புதுப்பட பாடல்ன்னு நீங்க நினைச்சிருந்தா அதுக்கு நான் பொறுப்பு இல்லங்க..