Showing posts with label tamil. Show all posts
Showing posts with label tamil. Show all posts

Sunday, August 16, 2015

ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள்

சாஹித்திய  அகாடமி   விருது பெற்ற அமரர் ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள் நாவலை சமிபத்தில் படித்து முடித்தேன்.

இதுவே எனக்கு ஜெயகாந்தனின்  முதல் வாசிப்பு. இந்த காலகட்டத்தில் (முதல் அச்சு-1970) இது கொஞ்சம் நீண்ண்ண்ண்ட நாவலே.  ஆனாலும் தங்குதடை அற்ற அழகிய நடை போர் அடிக்காமல் நாவலை நகர்த்துகிறது.

இந்த நாவலில் அறியாத வயதில்  கற்பிலந்த பெண்ணாக கங்கா.  ஆண் துணையில்லாத கங்காவுக்கும் அவள் உறவு மற்றும் சமுகத்துக்கும் இடையேயான  முரண்பட்ட  போராட்டமே கதை.

அவளே தனது கதையை சொல்வதாக நாவல் எழுதப்பட்டுள்ளது. மிக அருமையான கதை நகரத்தல். சுய விருப்பம்,வெறுப்பு, மகிழச்சி என
கங்காவின்  மன ஓட்டத்தை மிக அழகாகச் சினிமா படம் போலக் கோர்வையாக அடுக்கிச் செல்கிறார். ஓரு பெண்ணின் இதயத்துக்குள் ஊடுருவிப் பார்க்கும் சக்தியை  ஜெயகாந்தன் எங்கிருந்து பெற்றார்  எனத் தெரியவில்லை.

இந்த நாவலில் சொல்லப்படும் கருத்துக்கள் இப்போது காலாவதியானவை. ஆனால் ஒரு முடிந்து போன காலகட்டத்தின் சுவடாக வரும் தலைமுறையாலும் இந்த நாவல் பேசப்படும் என்பது உறுதி.

நாவலை படித்த கையோடு அதே பெயரில் வெளியான படத்தைப் பார்த்தேன் (1977 ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது).  கங்காவாக லக்ஷ்மி நடித்துள்ளார்.
ஆனால் நாவலின் உயரத்தை படம் தொட வில்லை என்பது என் தாழ்மையான கருத்து.

நாவலின் சாரம் குறையாமல் முழு நிறைவுடைய ஒரு படமாக எடுப்பது எளிதானது அல்ல போல. படத்தின் YouTube இணைப்பு இங்கே.
https://youtu.be/RsijKvLbTQM

இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவராகப் போற்றப்  பெற்றவர் ஜெயகாந்தன்.  அவரது மற்ற புத்தகங்களையும் படிக்க மிகவும் ஆர்வமாக இருக்கிறேன்.

நேரம் அனுமதித்தால் நீங்கள் இந்தப் புத்தகத்தைப் படித்துவிடுங்கள்.



வெளியீட்டாளர்மீனாக்ஷி புத்தக நிலையம்
ஆசிரியர்: ஜெயகாந்தன்
பக்கங்கள்: 447

Thursday, July 23, 2015

கேபிள் சங்கரின் பார்வையில் சினிமா வியாபாரம்

சங்கர் நாராயண் என்கிற கேபிள் சங்கர் எழுதிய
சினிமா வியாபாரம்  புத்தகத்தை சமீபத்தில் வாசித்தேன்.

எவரும் இந்த  புத்தகத்தை  பரிந்துரைக்காவிடிலும், இணையத்தில்
பலர் எழுதிய விமர்சனங்களின் அடிப்படையில் கடந்த மாதம்
இந்தியாவில் இருந்து தருவித்து வாசித்தேன். நான் வாங்கிய நேரம் பாருங்க 90 ரூபாய் இருந்த புத்தகம் இப்போ 125 ரூபாயாம்.   அடக் கடவுளே!

கேபிள் சங்கர் - இணையதள ஏரியாவில் அறிமுகம் தேவையில்லாதவர்.
பல சிறுகதைகள், கட்டுரைகள், திரை விமர்சனஙகள் வழியாக
பரிட்சமானவர்.  மேலும் 'தொட்டால் தொடரும்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர்.

நவீன தமிழகத்தின் வரலாற்றை எழுதுவதேன்றால் சினிமாவை
தவிர்த்துவிட்டு எழுத இயலாது என்பது  நிதர்சனம். அந்தஅளவுக்கு
சினிமா நம்முடைய பிரிக்கமுடியாத ஒன்றாகிவிட்டது.

அப்படிப்பட்ட சினிமா எனும் கலைவடிவம் நடிப்பு, பாடல், நடனம், கதை, தொழில்நுட்பம் எனும் பல கோணஙகளை உடையது.  இந்த புத்தகத்தில் சினிமாவை அதன் வியாபரக் கோணத்தில் அனுகியிருக்கிறார் கேபிள் சங்கர்.

திரைத்துரையில் விநியோகஸ்தர்-சீரியல் ஆக்டர்-வசனகர்த்தா-திரைக்கதை ஆலோசகர் எனும் தனது அனுபவங்களின் மூலம்  எழுதியிருக்கிறார். புத்தக முன்னுரைக்காக அதிகம் மெனக்கெடாமல் ஆசிரியர் சுயஉரையுடன் முடித்துக் கொண்டுள்ளார்.

இது  'லைட் ரீடிங்' எனும் வகையைச் சார்ந்த புத்தகம். எளிய சரளமான நடை.  ஆங்கில வார்த்தைகளை அப்படியே பயன்படுத்தியதால் சாமானியர்கள் தலை சொறியத் தேவையில்லை.

ஒரு படம் தயாரிக்கப்பட்டபின் திரைக்கு வரும் வரை நடக்கும் பல விடயங்ககளை புத்தகம் விரிவாக விளக்குகிறது.

விவசாயத்தில் விவசாயிகளை விட பெரும்பாலும் இடைத்தரகர்கள் அதிகம் பயனடைவது போல, சினிமாவிலும் தயாரிப்பாளர்களை விட இடைத்தரகர்கள் அதிகம் லாபம் அடைவது எப்படி என்பதையும் விளக்குகிறார்.

இதேபோல், சினிமா வியாபாரத்தில் உள்ள பல அடுக்குகள் படிக்கும் வாசகர்களைக் கண்டிப்பாக வியப்பில் ஆழ்த்தும்.

ஹாலிவுட்சினிமாவையும் கூட ஆசிரியர் கொஞ்சம் தொட்டிருக்கிறார்.

சினிமா வியாபாரத்தைப் பற்றி எழுதிய ஆசிரியர் தமிழ் சினிமாவில் காலங்காலமாகப் புழக்கத்தில் இருக்கும் கருப்புப் பணம் பற்றி மூச்சு விடவில்லை.

ஹாலிவுட் தரவுகளை தரும் ஆசிரியர் துரதிருஷ்டவசமாகத்  தமிழ் சினிமா துறை பற்றி விரிவான மற்றும் ஆழமான தரவுகளையும் கொடுக்கவில்லை.

உதாரணமாக. தமிழ் சினிமாவின்  மொத்த வருடாந்த வருவாய் என்ன ? தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தில்  PERCENTAGE என்ன ? வருடாந்த கேளிக்கை வரி  வருவாய் என்ன ?  போன்ற நிறைய  'என்ன' க்கள்.

இது போலவே புள்ளி விவரங்கள் அட்டவணைப்படுத்தப்பட்டிருந்தால்  மேலும் சிறப்பாக இருந்திருக்கும்.

திரைப்படத் துறைக்குப்   புதியவர்கள் அல்லது  திரைத்துறை பற்றி அறிந்து கொள்ள ஆர்வமாக இருப்பவர்கள் வாசிக்க வேண்டிய புத்தகம் இது.


நுால்: சினிமா வியாபாரம்
பிரசுரிப்பவர்: மதி நிலையம்.
கிடைக்கும்: Discovery Book Palace

Tuesday, December 23, 2014

இயக்குனர் சிகரம் பாலச்சந்தர் - ஒரு சாகாப்தம்

 இயக்குனர் சிகரம் பாலசந்தர் காலமான தகவலை நண்பர் "வாட்ஸ் அப்" மூலம் அனுப்பி இருந்தார்.

அந்த தகவலை இணையத்தில் உறுதி செய்தபின்பு இதை எழுதத் தொடங்கினேன். கட்ந்த சில நாட்களாக சில விஷமிகள் தவறான பிரச்சாரம் செய்தது நினைவிருக்கலாம்.

பாலச்சந்தர் என்று ஒருமுறை மனதுக்குள் சொல்லி பார்த்தபடி அவருடய படங்‌களை ஒருமுறை மனத்திரையில் ஓட விட்டேன்.

பாலச்சந்தர் எனக்கு அறிமுகமானது சிந்து பைரவி, உன்னால் முடியும் தம்பி , மனத்தில் உறுதி வேண்டும் போன்ற படங்களின் மூலம் தான்.

அப்போது எனக்கு பத்து பன்னிரெண்டு வயது இருக்கலாம், ஆனாலும், அவை என்னுள் மிகப்பெரிய தாக்கதை ஏற்படுத்தியது என்பது மிகையில்லை.

அந்த கால கட்டத்தில் அந்த மனித உறவு முறைகளுக்கு இடையிலான சிக்கல்கள், சமூகப் பிரச்சினைகள் போன்ற கருத்துக்களை திரையில் சொல்ல அவருக்கு இருந்த துணிவைக் கண்டு இப்போது வியக்கிறேன்.

பாலசந்தர் என்றால் வித்தியாசம் என்றே மக்கள் உணர்ந்திருந்தனர். மேலும் அவர் படத்தில் எந்த ஒரு காட்சியையும் மனத்தில் அழகாய் பதிய செய்வதில் வித்தகர்.

உதாரணமாக மனத்தில் உறுதி  படத்தில் பின்னணியில் பாரதியின் 'மனத்தில்
உறுதி  வேண்டும்' பாடல் ஒலிக்க நாயகி சுஹாசினி குடும்பத்திற்காக உழைப்பது போல காட்சி வரும். அவை ஆண்டுகள் பல கடந்தாலும் மனதில் நீங்காதவை.

அதுபோலவே 'புதுப்புது அர்த்தங்கள்'  படத்தில்  வயதான தம்பதிகளாக வரும்
பூர்ணம் விஸ்வநாதன், சௌகார் ஜானகி ஜோடி. பின்பு  பூர்ணம் விஸ்வநாதன் இறந்த பின் வரும் சோக காட்சிகள். அவை கண்ணீரை தழும்ப செய்யக் கூடியவை. இப்படி எத்தனையோ பல.

சமீபத்தில் கூட அவருடைய  'வறுமையின் நிறம் சிகப்பு', 'அவள் ஒரு தொடர்கதை', 'தண்ணீர் தண்ணீர்' போன்ற படங்‌களை தேடி பிடித்து மீண்டும் கொண்டிருந்தேன். 'பார்த்தாலே பரவசம்'  நான் பார்த்த அவருடைய மிக சமீபத்திய படம்.

கதை, வசனம், பாத்திர வடிவமைப்பு என எல்லாவரிலும் தனது தனித்தன்மையை பதித்து விடுவார்.

அவருடைய படத்‌தில் பாடல்களுக்கும் எப்போதும் ஒரு தனி இடமுண்டு.
திரைக்கதைக்கு வலுசேர்க்கும் வகையில் பாடல் பெறும் வித்தையை அறிந்தவர்.

தமிழ்த் திரையுலகின் முக்கிய நடிகர்களான கமல்ஹாசன் மற்றும் ரஜினி காந்தை அறிமுகம் செய்தவர். தொலைக்காட்சித் தொடர்களில் முதலில் நுழைந்ததது. என பல 'முதல்'களுக்கு சொந்தக்காரர் அவர்.

தன்னுடைய கடைசி காலம் வரை தமிழ் திரை உலகுக்கு தன் வாழ்வை அர்ப்பணிப்பு செய்தவர் எனறால் மிகையில்லை.

உஙகள் மகன் அல்லது மகளுக்கு இன்னும் கால்நூற்றாண்டு தாண்டியும் நீங்கள் துணிவாக இவர் படங்களை பரிந்துரைக்கலாம்.

என்னுடைய தஞ்சை தந்த தங்கம் பாலச்சந்தர் என்பதில் எனக்கு கர்வமே.

தலைமுறைகள் தாண்டி அவருடைய படைப்புகள் தமிழ் திரையுலகின் ஓரு அடையாளமாய் வாழும்.

Saturday, December 20, 2014

இப்பவே கண்ணைக் கட்டுதே!

சென்னையில்வுள்ள நண்பர்  ஓருவரிடம் சில வாரங்களுக்கு முன் பேசிக் கொண்டிருந்தேன். நண்பர் என்றால் என்னைவிட  ஜூனியர் , இருப்பத்தேழு இருக்கலாம்.  சில வருடங்களாகத்தான் பழக்கம் ஆனால் வெளிப்படையாக பேசும் டைப்.  இன்னும் திருமணம் ஆகவில்லை.

ஐ.டி. துறையில் இருந்த நல்ல வேலையைவிட்டு  தற்போது இசைத்துறையில் முயற்சி செய்து கொண்டிருக்கிறார்.  கொஞ்சம் வசதியானவர். அப்பா மென்பொருள் துறையில் பெரிய பதவியில் இருந்தவர்.  தற்போது கார்ப்பரேட் ட்ரைனிங் சென்டர் நடத்துகிறார்.

இவர் படித்ததோ இன்ஜினியரிங், சிறு வயதில் பெரிய இசையும் பயிற்சியும் இல்லை. ஆர்வத்தில் கடந்த ஒரு வருடத்தில் பியானோ வில் ஏதோ ஏழு எட்டு லெவல் படித்து விட்டாராம். இப்போது கொடிகட்டி பறந்து கொண்டிருக்கும் இசையமைப்பாளரின் இசைக் கல்லூரியில் வேறு ஏதோ படித்துக் கொண்டிருக்கிறார்.  ஒரு திரைபட இசையமைப்பாளரின் உதவியாளராக
சேர்ந்து பின்பு படிப்படியாக இசையமைப்பாளராவது அவர் கனவு. மேற்க்கத்திய இசையில் ஆர்வம் என சொல்லக் கேட்டிருக்கிறேன்.

தமிழ்நாட்டில் தமிழிசை எந்த திசையில் இருக்கிறது என நீங்கள் கேட்பது என் காதில்விழுகிறது. :)

சில மாதங்களுக்கு முன் நண்பர்களுடன் சேர்ந்து ஏதோ ஆல்பம், படப்பிடிப்பு என இருந்த வேலையும் விட்டுவிட்டு கைக்காசை செலவு செய்து சுத்‌திக் கொண்டிருந்தார். எனக்கு தெரிந்த திரைப்படப் பாடலாசிரியர்களை ஆல்பத்தில் பயன்படுத்துவது  பற்றிக் கூடப் பேசிக்கொண்டிருந்தார்.

அதன் பின்பு சமீபத்தில் தான் பேசினேன்.  ப்ரைவேட் ஆல்பம் நண்பர்கள் கொடுத்த ஐடியாவாம். அந்த பதினைந்து நிமிட ஆல்பத்துக்கு கடந்த மூன்று மாதங்களாக இரவு பகலாக மெனக்கெட்டுருக்கிறார். மெட்டு அமைப்பது, சரியான பாடல் வரிகளை தேர்வு செய்வது அதற்க்கு ஏற்ற இசைக் கோர்வைகள் உருவாக்குவது மேலும் பொருத்தமான வாத்‌தியக் கருவிகளை பயன்படுத்துவது, நல்ல தரமான ஒலிப்பதிவு என வேலை பின்னி எடுத்துத்திருக்கிறது. பாவம் நோகாமல் ஏசி யில் ஐ.டி வேலை  செய்து சம்பளம் வாங்கியவருக்கு  இதெல்லாம் புதிதுதான்.

அது மட்டுமின்றி ரெக்கார்டிங் ஸ்டூடியோ, பாடக, பாடகியர் காஸ்டியூம், வீடீயோ என பணமும்  சில லட்சங்‌கள் வரை காலி.

மேலும் தொழில் நுட்பங்களை புரிந்து கொண்டு தனியாக இயங்க பல  ஆண்டு கடும்உழைப்பு தேவை  என்பதை இந்த ஒரு ஆல்பத்தின் வழியாகவே அனுபவப்பூர்வமாக உணர்ந்துள்ளார். அப்படி நல்ல திறமை உள்ள சிலரும் திரையில் ஜொலிக்க இயலவில்லை என்பதை கண்கூடாக பார்க்கிறார். இசை பிரியம் என்பது வேறு அதையே ஜீவனமாக்கி கொள்வது எவ்வளவு கடினம் என்பதை புரிந்து கொண்டுள்ளார்.

அடுத்தது என்ன? என்றால்,' ஏதோ தெரிந்தோ தெரியாமலோ இதில் குதித்தாகிவிட்டது, இன்னும் ஓரிரு ஆண்டுகள் முயற்சித்து பார்க்கவுள்ளதாக' சொன்னார்.

நினைத்திருத்தால் இவர் வேலையை விடாமல் எப்போதோ திருமணம்,குழந்தை என  செட்டில் ஆகி இருக்கலாம். ஆனால் இவர் வாழ்க்கையில் எதிர் நீச்சல் போட துணிந்து விட்டார். இப்போது சேர வேண்டிய இலக்கு   கண்ணுக்கு தட்டுப்படவில்லை. ஆனால் கை கால்கள் இப்போதே சோர்வடையத் துவங்கி விட்டது.

இவரைப் போல  படைப்பாளியாக  முயற்சித்து தோற்று அல்லது முழுமையாக  முயற்சிக்காமல் பாதியில் விட்டவர்கள் பலர்.

அவர்கள் எங்கோ மேடைக் கச்சேரிகளில் வெற்‌றி பெற்றவர்களின் பாடல்களை பாடிக் கொண்டோ அல்லது இசை அமைத்துக்  கொண்டோ இசையோடு தங்கள் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்களுக்கு நீஙகள் தரும் மிகப்பெரிய வெகுமதி கைத்தட்டலும், பாராட்டுமன்றி வேறில்லை..