Tuesday, September 1, 2015

வாழும்போது சாகிற நாள் தெரிஞ்சு போச்சுனா - ரஜினி வசனத்துக்கு சவால்

வாழும்போது சாகிற நாள் தெரிஞ்சு போச்சு-னா வாழ்ற நாள் நரகம்," என்று ரஜினியின்  'சிவாஜி' படத்தில் ஒரு வசனம் வரும்.

சிவாஜி படத்துக்கு வசனம் எழுத்தாளர் சுஜதான்னு ஞாபகம். ஆனால்
ரஜினியோட இந்த வசனத்தை சவால் விடும் வகையில் ஓருவர் வாழ்ந்தார் அப்படினா ஆச்சர்யமா இருக்குதுல்ல, மேலே படிங்க..

****
தினமும் அலுவலகத்துக்கு வெகுதூரம் பயணம் செய்யவேண்டியதாக
இருப்பதால் இப்பொழுதேல்லாம் பெரும்பாலும் ஆடியோ புத்தகங்கள்தான் துணை.

அச்சடித்த புத்தகங்கள் போலின்றி இதில் குறைந்த நேரத்தில் அதிகம்
பெற முடிகிறது. எல்லாம் வல்ல மலையாள பகவதி அருளால் பெரும்பாலான நேரம் நல்ல புத்தகங்களாகவே எனக்கு அமையும்.  சமீபத்தில் அப்படி நான் கேட்ட ஆங்கிலப் புத்தகம் மோரியுடனான செவ்வாய்க் கிழமைகள் ('Tuesdays with Morrie').மொத்தமாக மூன்றரை மணி நேரம்தான்.

இது மோரி ஸ்க்வார்ட்ஸ் (Morrie Schwartz) எனும் 78 வயதான சமூகவியல் பேராசிரியரின் தன்நினைவுக் குறிப்பு நூல் (Memoir). இதை எழுதியவர் அவர் மாணவர் மிட்ச் அல்போம் ( Mitch Albom).

வாழ்வின் மிகப்பெரிய படிப்பினைகளை, இறக்கும் தருவாயில் உள்ள பேராசிரியர் மோரி தன் மாணவரிடம் சொல்வதாக இந்தப் புத்தகம் அமைந்துள்ளது.

அதன் சுருக்கம் இங்கே.

பேராசிரியர் மோரி ALS எனும் ஓருவகை நரம்புச்சிதைவு நோயால் பாதிக்கபட்டு சாகக்கிடக்கிறார். Amyotrophic Lateral Sclerosis (ALS) என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த நோய்க்கு சரியான சிகிச்சை என்று எதுவும் இன்றுவரை இல்லை.  இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் படிப்படியாகப் பேசும் சக்தி, விழுங்குதல் மற்றும் சுவாசித்தல் போன்றவற்றை இழந்து இறுதியில் மரணமடைகிறார்கள். கடந்த ஆண்டு  வைரஸ் போல இணையத்தில் பரவிய 'ஐஸ் பக்கெட் சவால்' வழியாக இந்த ALS பற்றி நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பு உள்ளது.

ALSல் பாதிக்கப்பட்ட மோரிக்கு மருத்துவர்கள் சில மாதங்கள் என நாள் குறிக்கிறார்கள். "வாழும்போது சாகிற நாள் தெரிஞ்சு போச்சு-னா வாழ்ற நாள் நரகம்," என்று ரஜினியின்  'சிவாஜி' படத்தில் ஒரு வசனம் வரும். ஆனால் அப்படி தேதி குறிக்கப்பட்ட மற்றவர்கள் போல் இல்லாமல், ஒருவன் எப்படி வாழ வேண்டும் என்பதை தனது மரணம் வழியாக காட்ட இயலும் என தைரியமாக அறிவிக்கிறார். தன்னை மனித புத்தகம் ( Human book) என்றும் அமேரிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தோன்றிப் பேசுகிறார்.

அதை வியப்போடு பார்த்த கோடிக்கணக்கானவர்களில் பேராசிரியரின் முன்னாள் மாணவர் மிட்சும் ஓருவர். அதைப் பார்த்த பிறகு, அதாவது ஏறத்தாழ பதினாறு ஆண்டுகளுக்குப் பிறகு தனது விருப்பத்துக்குகந்த (favourite) பேராசிரியர் மோரியை அவர் வீட்டில் சந்திக்கிறார் மிட்ச். அதுவரை எந்தத் தொடர்புமற்று இருந்தபோதும் மிட்ச்சின் பெயர் சொல்லி அழைக்கிறார் பேராசிரியர்.

அதன் தொடர்ச்சியாக மிட்ச்சிடம் நீண்டகால நண்பராய் பேராசிரியர் உரையாடுகிறார். கல்லூரி நினைவுகளை இருவரும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறார்கள். தனது தனிப்பட்ட வாழ்க்கையில் பல பிரச்சினைகளில் சிக்கித் தவிக்கும் மிட்ச்சுக்கு மோரியின் நட்பு ஆறுதலாய் இருக்கிறது. இங்கிருந்துதான் கதை தொடங்குகிறது.

பேராசிரியரின் அன்பால் ஈர்க்கப்பட்ட மிட்ச் பல நூறு மைல்கள் தாண்டி ஓவ்வோரு வாரமும் செவ்வாய்க்கிழமை அவரை வந்து சந்திக்கிறார்.  அதுவே "Tuesdays with Morrie". மோரி என்பது ஹீப்ருவில் "என் ஆசிரியர்"  என்றும் அர்த்தப்படுவதால், "எனது ஆசிரியருடனான செவ்வாய்க் கிழமைகள்" என்ற பொருளிலும் எடுத்துக் கொள்ளலாம்.

சந்திப்பின்போது ஓவ்வொரு வாரமும் அன்பு, திருமணம், குடும்பம், நட்பு, கலாச்சாரம்,மரணம் என மனித வாழ்வின் பல கூறுகளைக் குறித்து அவர்கள் உரையாடுகிறார்கள். உதாரணமாக, மரணத்தை இயற்கையின் ஒரு பகுதியாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என சொல்லும் அவர், நமக்கென குழந்தைகளைப் பெற்றுக்கொள்வது ஒரு சுகானுபவம் என்கிறார். அன்பே பூரணம், அதுவே வாழ்வில் நிரந்தரம், என தனது குடும்பத்தைக் கொண்டு வலியுறுத்துகிறார்.

இதுபோல தனது கடந்த கால அனுபவங்கள், மனதை பாதித்த விடயங்கள் என பலவற்றை பகிர்ந்து கொள்கிறார். உதாரணமாக, தான் கோபித்துக் கொண்டு கடைசிவரை பேசாமல் இருந்த, இறந்த ஓரு நண்பரை நினைத்து மிட்ச்சிடம் கண்ணீர் வடிக்கிறார்.

மிட்ச் தனது அன்பை வெளிப்படுத்தும் விதமாக பேராசிரியருக்குப் பிடித்த உணவுகளை வாங்கிச் செல்கிறார். அவரால் சாப்பிட இயலாத நிலையிலும் அந்த வழக்கத்தை விடமுடியாமல் தவிப்பது உணர்ச்சிபூர்வமானது.

கூடவே  ஓவ்வொரு வாரமும் பேராசிரியர் உடல்நிலையில் படிப்படியாக ஏற்படும் மோசமான மாறுதல்களை உருக்கமாக மிட்ச் விவரிக்கிறார். இடைவிடாமல் 2 மணி நேர இருமல் போல வேறு கொடுமை இல்லை என்கிறார். கடைசியில் நுரையீரல் அடைப்பால் பேராசிரியர் மரணமடைகிறார். பேராசிரியர் இறக்கும்வரை மொத்தமாகப் பதினான்கு செவ்வாய்கள் இந்தச் சந்திப்பு தொடர்கிறது.

இந்தச் சந்திப்புகள் மிட்ச் தனது வாழ்வில் நல்ல அதிர்வுகளை ஏற்படுத்தியதை உணர்கிறார். தன்னைப் போன்ற இளைய தலைமுறையினர் எதிர்கொள்ளும் எல்லா சமகால குழப்பங்களுக்கும் இந்த உரையாடல்கள் விடைதரும் என மிட்ச் நம்புகிறார். இவற்றைத்தொகுத்து புத்தகமாக வெளியிட்டுள்ளார்.

இந்தப் புத்தகத்தின் சாரம் எளிதானது, அதே சமயத்தில் ஆழமானதும்கூட. இயந்திரத்தனமான உலகில் வாழும் நம்மைப் போன்ற எல்லோரும் எளிதாகப் பொருத்திப் பார்க்கக்கூடியதே.

புத்தகத்திலிருந்து என்னைக் கவர்ந்த மேற்கோள்கள் சில.

**அன்பு இல்லாத வாழ்க்கை அர்த்தமற்றது.

**அன்பு செலுத்து அல்லது அழிந்து போ.

**இறப்பு ஒரு வாழ்க்கையை மட்டுமே முடிக்கிறது, ஒர் உறவை அல்ல.

**நீங்கள் இறப்பதற்கு முன் உங்களை மன்னியுங்கள். பின்னர் மற்றவர்களை மன்னிக்கலாம்.

**நீங்கள் இறந்தபிறகும்கூட அன்பால் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்.

அதே சமயத்தில் ஓரு பேராசிரியக்கும் மாணவருக்குமான உறவைத்தாண்டி இரு தலைமுறைக்கான உணர்ச்சிகரமான உறவை  இந்தப் புத்தகம் மிக நெகிழ்ச்சியாக விவரிக்கிறது. வாழ்ந்த தலைமுறை வாழும் தலைமுறைக்கு விட்டுச் செல்லும் மிகப்பெரிய பாடம் அனுபவங்களன்றி வேறேன்ன இருக்க முடியும்?

இந்தப் புத்தகம் உலகம் முழுவதும் நல்ல அங்கீகாரம் பெற்று பல மில்லியன் பிரதிகள் விற்பனையாகியுள்ளது. பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. பல பள்ளி மற்றும் கல்லூரிகளில் பாடப்புத்தகமாகவும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எவரேனும் இந்தப் புத்தகத்தைத் தமிழில்  மொழிபெயர்த்திருக்கிறார்களா என்று தெரியவில்லை.

இது 'Tuesdays with Morrie' எனும் அதே பெயரில் திரைப்படமாகவும் வெளியாகியுள்ளது. படத்தின் YouTube இணைப்பு இங்கே

https://youtu.be/gGCYD_7taKA

பேராசிரியர்  மோரியின் பேட்டி

https://youtu.be/-LOdPzZW_aQ

நேரம் அனுமதித்தால் கண்டிப்பாக இந்தப் புத்தகத்தைப் படித்துவிடுங்கள்.

தலைப்பு :Tuesdays with Morrie
ISBN: 0-385-48451-8
வெளியீட்டாளர்: Doubleday

***

இந்தக் கட்டுரை ஆம்னி பஸ இணைய இதழிலும் வெளியாகியுள்ளது இணைப்பு:

http://omnibus.sasariri.com/2015/08/tuesdays-with-morrie-mitch-albom.html


No comments:

Post a Comment