Saturday, August 29, 2026

ஸ்பெயின் ரசிகையின் மகிழ்ச்சிக் கொண்டாட்டம்

கடந்த 19 ஜூலை 2026 அன்று, அர்ஜென்டினா - ஸ்பெயின் இடையேயான உலகக் கோப்பை கால்பந்தின் இறுதிப் போட்டி அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள நியூ ஜெர்ஸி மைதானத்தில் நடந்தது. அந்தப் போட்டியை பெரிய திரையில் காண நாங்கள் அமெரிக்காவின் ஃபிளாரிடா மாநிலத்தில் உள்ள ஆர்லோண்டா (Orlando) நகருக்கு சென்றிருந்தோம். அதிக மக்கள் கூட்டத்தோடு இந்தப் போட்டியை பார்த்தது உற்சாகமாகவே இருந்தது.

இந்தப் போட்டி தொடங்குவதற்கு முன்பே, இது கடைசி நிமிடம் வரை பரபரப்பாக நீளும் கடும் மோதலாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. அதற்கு ஏற்றாற் போல ஸ்பெயின் ஆக்ரோஷ பாணியில் விளையாடிக் கொண்டிருக்க அர்ஜென்டினாவோ தடுப்பாட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தது.

ஆனால் என்ன, இந்த ஆட்டத்தில் அடிக்கப்பட்ட முதல் மற்றும் ஒரே கோலுக்காக இரசிகர்களாகிய நாம் 105 நிமிடங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில் பெட்ரோ போரோ பந்தை பின்புற கம்பத்தை நோக்கி துல்லியமாக அனுப்பினார். அந்த வாய்ப்பை தவறவிடாத ஃபெர்ரன் டோரஸ், அற்புதமாக ஷாட்டால் அதை கோலாக மாற்றினார். 

பிறகென்ன எங்கும் மகிழ்ச்சி ஆராவராம் தான். மகிழ்ச்சியைக் கொண்டாடும் ஒரு ஸ்பெயின் இரசிகையின் முகத்தைக் கொஞ்சம் கவனியுங்கள்.



தமிழக அரசின் சிறந்த தமிழ் நூல்களுக்கான பரிசு- 2025 (காலநீட்டிப்பு)

 தமிழ் வளர்ச்சித் துறையின் வாயிலாகச் செயற்படுத்தப்படும் சிறந்த நூல்களுக்குப் பரிசு வழங்கும் திட்டத்தில் 2025ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட நூல்களுக்கான நூலாசிரியர்களுக்கும், பதிப்பகத்தார்களுக்கும் கூடுதல் வாய்ப்பு வழங்கும் வகையில் விண்ணப்பங்கள் நிறைவுசெய்து அளிக்கப் பெறும் நாள் 05.10.2026 வரை நீட்டிப்பு செய்யப்பெறுகிறது.





Friday, August 14, 2026

இது உண்மைதானா ? - ஜீரோ டிகிரி ராயல்டி

சில சமயங்களில் நடக்கும் சில நிகழ்வுகள், “இது உண்மைதானா?” என்று நம்மையே நாம் கேள்வி கேட்டுக்கொள்ளும் அளவுக்கு வியப்பை ஏற்படுத்தும். அப்படியான ஒன்று ஜீரோ டிகிரி பதிப்பகத்தில் இருந்து ஆண்டுதோறும் வரும் 'ராயல்டி' எனும் மதிப்பூதியம்.


அமெரிக்காவில் மேற்படிப்பு எனும் காரணத்தால் கடந்த ஓராண்டாக எழுத்தில் இருந்து சற்று விலகி இருந்தபோதும், அவர்களிடம் அச்சில் இருக்கும் எனது நூல்களுக்கான விற்பனையைக் குறிப்பிட்டு, உரிய மதிப்பூதியத்தை நேரடியாக வங்கியில் செலுத்தி விபரத்தை மின்னஞ்சலில் அனுப்புகிறார்கள். இது பாராட்டத்தகுந்த ஒன்று. இதுபோல, கணக்கு வழக்குகளில் மேற்கு நாடுகளைத் தொடும் தமிழ்நாட்டு பதிப்பகங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அதில் ஜீரோ டிகிரியும் ஒன்று. நன்றி !!

ஓ.. சொல்ல மறந்துவிட்டேனே. தனது 10-வது பிறந்தநாளைக் கொண்டாடும் என்னுடைய 'வனநாயன் (மலேசிய நாட்கள்)' நாவலை மறுபதிப்பாக வரும் புத்தகக் காட்சிக்குக் கொண்டுவரலாம் என்றொரு யோசனை இருக்கிறது. காலம் கனிகிறதா பார்ப்போம்.

Saturday, August 1, 2026

பேரவையின் 39-ஆம் ஆண்டு (2026) மலர் - ஒரு பார்வை

கடந்த இரண்டு ஆண்டுகளாக பேரவை விழாவில் கலந்து கொள்ள இயலவில்லை. அதனால், விழா மலரும் கைவரவில்லை.  ஆனால், அந்த வாய்ப்பு இந்த ஆண்டு நியூஜெர்சியில் கிடைத்தது.

பெட்னா பேரவையின் 39-ஆம் ஆண்டு (2026) மலர் இராசேந்திர சோழன் கடாரம் 1000 வெற்றி ஆண்டு; தனித்தமிழ் இயக்கம்- மறைமலை அடிகள் 150 பிறந்தநாள் எனும் கருப்பொருளோடு வந்திருக்கிறது. ஆண்டு மலர் குறித்த எனது பார்வை. 


இந்த ஆண்டு அட்டைப் படம் தொடங்கி பக்கத்துக்கு பக்கம் செயற்கைத் தொழில்நுட்பத்தின் படங்களால் நிரப்பி புதுமை செய்திருக்கிறார்கள்.  மற்றபடி, ஆழமான சிந்தனையைத் தூண்டும் விதமான கட்டுரைகள் ஒன்றரண்டு மட்டுமே எனது கண்ணல் பட்டன.  பேரவை மலரில் உள்நாட்டினரின் பங்களிப்பு தேவை என்பதை இங்கே புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், அது எந்த அளவுக்குத் தேவை என்பது தீர்மானிக்கப்படவேண்டிய ஒன்று.  ஏனென்றால், பேரவை மலருக்கும் மற்ற தமிழ்சங்க மலர்களுக்கும் உள்ள பெரிய வேறுபாடு அதுதான்.

அதுமட்டுமின்றி, மறைமலை அடிகளாரின் 150-ஆவது பிறந்த ஆண்டை முன்னிட்டு, மலரின் குறிப்புப் பகுதியில் முக்கால் பக்க அளவிலான சுருக்கமான கட்டுரை ஒன்று மட்டுமே இடம்பெற்றுள்ளது. விழா நிகழ்விலும், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி காட்சிப்படுத்தப்பட்ட அடிகளார் குறித்த 2-3 நிமிடக் காணொளியைத் தவிர்த்து,  அடிகளாரின்  சிந்தனைகள் குறித்த புதிய பார்வைகளோ அல்லது தீவிரமான ஆய்வுக் கருத்துகளோ முன்னெடுக்கப்படவில்லை என்பது சற்றே ஏமாற்றமளிக்கிறது. மறைமலை அடிகள் குறித்தும் அவருடைய சிந்தனைகள், செயல்பாடுகள் குறித்தும் தமிழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற ஒருவரிடமோ அல்லது தகைசால் தமிழ் சான்றோர் யாரிடமாவது ஒரு கட்டுரை பெற்று வெளியிட்டிருந்தால்  இன்னமும் செறிவானதாக இருந்திருக்கும். 

இதுபோல,  தமிழின் சிந்தனையாளர்கள், உரத்த சிந்தனையாளர்கள் என பலரிடம்  ஆழமான கட்டுரைகளைத் தேடி பெறவேண்டும் என்ற முயற்சி குறைந்துவிட்டதோ எனத் தோன்றுகிறது. அதே சமயத்தில், எழுத்துப் பிழைகள் பெரும்பான்மையாகக் களையப்பட்டிருப்பதைப் பார்க்கும்போது, ஆசிரியர் குழுவின் உழைப்பு பாராட்டத்தோன்றுகிறது.

பெரும்பாலான கட்டுரைகள் கல் தோன்றி, முன் தோன்றி வகையராக்கள். 

அறிஞர் அண்ணா 60-ஆண்டுகளுக்கு முன் மதுரை பல்கல்கலைக் கழக உரையில் (1966) பேசியது போல்  "புலிப்பொறித்தான், கயல்பொறித்தான், கடராம் வென்றான் என்றெல்லாம் புல்லரிக்கும் வரலாற்றைப் படிக்கிறோமே .." என்பதன் நீட்சியாகவே இருந்தது.

ஆனால்,  உலகின் அதிநவீன தொழில்நுட்ப முன்னோடி நாடான அமெரிக்காவில் வாழும் தமிழர்களாகிய நாம், அந்த அனுபவத்தையும் தொழில்நுட்ப முன்னேற்றங்களையும் தமிழ்மொழியின் வளர்ச்சிக்காக இன்னும் எந்த வகையில் சிறப்பான பங்களிப்பாக மாற்ற முடியும் ? என்பது குறித்தெல்லாம் யோசிக்கும் இடத்தில் பேரவை இருக்கிறது என்றே நினைக்கிறேன்.

மலரில்  விதிவிலக்காக "எந்திரம் பேசும்- தமிழ் கேட்குமா ?" எனும் தலைப்பில்  அன்பர் செந்தில்முருகன் வேலுச்சாமி எழுதியுள்ள கட்டுரை அந்த வகையைச் சார்ந்தது.

இனியேனும், தொழில்நுட்ப வளர்ச்சியில் தமிழின் இடத்தை உறுதிப்படுத்த அமெரிக்க தமிழர்களாகிய நாம் என்ன செய்தோம் என ஆழ்ந்து சிந்தித்து, ஆக்கப்பூர்வமான முயற்சிகளைச் செய்ய வேண்டும். பேரவை மாநாடு நடக்கும் இந்த அமெரிக்க மண்ணில் இருந்து செயல்படும் உலகின் முன்னணித் தொழில்நுட்ப நிறுவனமான கூகுளின் தலைவர் சுந்தர் பிச்சை ஒரு தமிழர் என்பதை தனியாக நினைவுபடுத்த வேண்டுமா என்ன ?  தமிழ் வளர்ச்சி என்பது பல்கலைக் கழகங்களும், அரசுகளும் மட்டும் செய்யவேண்டிய ஒன்று மட்டுமல்ல என நினைக்கிறேன். 

புலம்பெயர்ந்தோர் மொழியை அகம் சார்ந்து மட்டும் நுகராமல் புறம் சார்ந்து யோசிப்பது நலம். அதாவது, நமது தமிழ்ச் சங்கங்கள் கொண்டாடுகின்ற தமிழர்விழாக்களில் ஏன் அறிவியலுக்கும், தொழில்நுட்பத்துக்கும் இடமிருப்பதில்லை என்பது  யோசிக்க வேண்டிய ஒன்று. ஒரு மொழி வணிக மொழியாக, அதிகார மொழியாக (குறைந்தபட்சம் தமிழகத்தில்) தொடரும் வரை மட்டுமே அதன் மாண்பு தொடர்ச்சி என்பதெல்லாம்.

இங்கே ஃபெட்னா ஆண்டுதோறும்  உலகத் தமிழ்த் தொழில்முனைவோர் இணைப்புக்கு (FiTEN) என தனியாக ஒருநாள் ஒதுக்கித்தருகிறது என்பதை நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது.

Tuesday, July 21, 2026

2026-அமெரிக்க பேரவை இதழில் எனது சிறுகதை

2026-அமெரிக்க பேரவை இதழில் என்னுடைய 'கரை வந்தது சிறுகதை தேர்வாகி இருக்கிறது. தேர்வுக் குழுவினருக்கு மனமார்ந்த நன்றி !!





தலைப்பு-  மேற்கிசை வலசை
வெளியீடு- இலக்கியக்குழு, வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை
ஆண்டு- 2026


Friday, July 10, 2026

அமெரிக்காவில் பரவலாகும் தானியங்கி புல்வெட்டும் இயந்திரம்

புல்வெளியை மனித உதவியின்றி தானாகவே வெட்டும் புத்திசாலி இயந்திரம்தான் "லான் மோவர் ரோபோ" (lawn mower robot) எனும் தானியங்கி புல்வெட்டும் இயந்திரம்.

சென்சார் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியால் தடைகளைத் தவிர்த்து, திட்டமிட்ட பாதையில் துல்லியமாக  இது புல்லை வெட்டுகிறது.



நேரத்தையும் உழைப்பையும் மிச்சப்படுத்தும் இந்த ரோபோக்கள் அமெரிக்க வீடுகளில் கொஞ்சம் கொஞ்சமாக பயன்பாட்டுக்கு வருகின்றன. கடந்த வாரம்
எங்கள் குடியிருப்பில் பார்த்த காட்சி இது.


Tuesday, July 7, 2026

39வது பெட்னா(FETNA) பேரவை விழா - இணை அமர்வு 1

நியூஜெர்சியில் 2026, ஜூலை 2 முதல் 4 வரை பிரம்மாண்டமாக நடைபெற்ற  39-வது பெட்னா(FETNA) பேரவை விழாவில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. நிகழ்வில் பெட்னா இலக்கியகுழு இரண்டு இணை அமர்வுகளுக்கு ஏற்பாடு செய்திருந்தது.

இந்த இணை அமர்வுகளில் கவிஞர் பெருந்தேவி, கவிஞர் சாம்ராஜ், எழுத்தாளர் சரவண கார்த்திகேயன் மற்றும் தமிழ்நதி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர்.

ஜூலை 3-ம் தேதி வெள்ளி அன்று நடந்த அமர்வு சமகாலத் தமிழ் இலக்கியம் - துவக்கமும், திசைகளும், போக்குகளும் என்ற தலைப்பில் அமைந்திருந்தது.

முதலில் கவிஞர் பெருந்தேவி , "புதுமைப்பித்தன்: நவீன இலக்கியத்தின் முகம்" என்ற தலைப்பில், புதுமைப்பித்தனின் படைப்புகளும் நவீனத் தமிழ் இலக்கியத்தில் அவர் ஏற்படுத்திய மாற்றங்களும் குறித்து பேசினார். அடுத்து பேசிய எழுத்தாளர் சரவண கார்த்திகேயன், "நவீனத் தமிழ்ப் புனைவின் பரிணாமம்" என்ற தலைப்பில், நவீனத் தமிழ்ப் புனைவின் வளர்ச்சிப் பாதை, மாற்றங்கள் மற்றும் புதிய போக்குகள் குறித்து தனது கருத்துகளைப் பகிர்ந்தார். அவர் தன்னுடைய பேச்சில் ஓர் எழுத்தாளராக தனது அவதானிப்புகளாக இன்றைய காலகட்டத்தில் ஊடகங்கள், வாசகர்கள், பதிப்பகங்கள்,சமூகம், செயற்கைத் தொழில்நுட்பம் என்பது மாதிரியான பத்து விசயங்களைத் தொட்டு பேசியது இரசிக்கும்படி இருந்தது.
அடுத்து பேசிய எழுத்தாளர் தமிழ்நதி, "புலம்பெயர்ந்தோர் இலக்கியம் – ஒரு பார்வை" என்ற தலைப்பில், புலம்பெயர் வாழ்வியலைப் பிரதிபலிக்கும் தமிழ் இலக்கியத்தின் தனித்துவம், வளர்ச்சி மற்றும் அதன் சமகாலப் பரிமாணங்கள் குறித்து பேசினார். அது ஈழத்தமிழ் எழுத்தாளர்கள் மேல் வைக்கப்படும் பல கேள்விகளுக்கு பதில் சொல்வது போலவும் அமைந்தது. இறுதியாக பேசிய எழுத்தாளர் சாம்ராஜ், "தமிழ்ச் சிறுகதைகளும் பகடியும்" என்ற தலைப்பில் தமிழ்ச் சிறுகதைகளில் பகடி எவ்வாறு கையாளப்பட்டுள்ளது, அதன் இலக்கியப் பங்கு மற்றும் சமூக விமர்சனத் தன்மை குறித்து உரையாற்றினார்.


இவர்களுடைய அனைத்து உரைகளும் சமீபத்தில் நான் கேட்ட உரைகளில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக செறிவானதாக இருந்தது. குறிப்பாக, புதுமைப்பித்தன் படைப்புகள் குறித்தும் அவருடைய காஞ்சனை சிறுகதை குறித்தும் பேசியது தனது நெடுநாள் கனவு என பெருந்தேவி நேர்பேச்சில் குறிப்பிட்டார். இதில் இருந்து அதற்கான உழைப்பை நம்மால் புரிந்து கொள்ளமுடிகிறது.

சாம்ராஜ் தனது உரை நடிகர் கமலுடைய திரைப்பகடி என்பது மலையாள பட தாக்கதில் வந்தது, தமிழ் திரையில் மதுரைத் தமிழை பகடியாக்கி புதியபாதை கண்டவர் வடிவேலு, பொதுவாக சுயபகடி என்பது தமிழி்ல் குறைவு அதனால்தான் பகடி நிறைந்த எழுத்துகள் வருவதில்லை. இலக்கியம் விடுதலைக்கானது, பகடி அதைத் தரவல்லது என்பது போன்ற பல கூர்மையான அவதானிப்புகளால் நிறைந்திருந்ததும் சிறப்பு.

Sunday, June 28, 2026

தமிழக அரசின் சிறந்த தமிழ் நூல்களுக்கான பரிசு- 2025

தமிழக அரசின் சிறந்த தமிழ் நூல்களுக்கான பரிசுப் போட்டி 2025: விண்ணப்பங்கள் வரவேற்பு!




பார்த்தினியம் - தமிழ்நதி

"...என்னோடு வா வீடு வரைக்கும், என் வீட்டை பார் என்னைப் பிடிக்கும்... !! "
இது கவிஞர் தாமரை எழுதிய ஒரு திரைப்பாடல்.  இந்தப் பாடலை ஒருமுறை மேற்கோள் காட்டி பேசிய கவிஞர் கபிலன் வைரமுத்து இதுபோன்ற வரிகளை ஒரு பெண் கவிஞரால் மட்டுமே எழுத முடியும் என வியந்திருந்தார். அதுபோல பெண்களின் ஆழ்மன ஓட்டத்தை அவர்களால் மட்டுமே மிகச் சிறப்பாக வெளிக் கொணர முடியும் என்பதை சமீபத்தில் எழுத்தாளர் தமிழ்நதியின் பார்த்தினியம் நாவலை (புதினம்) வாசிக்கும் போது உணர்ந்தேன்.

தமிழில் திரைப்படங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் . இங்கே  வாசிப்புக் குறைவு அல்லது அறவே இல்லை எனும் குற்றச்சாட்டு வெகுநாட்களாக முன் வைக்கப்பட்டாலும் தமிழ் எழுத்துலகம் தொடர்ந்து இயங்கிக்கொண்டு இருக்கிறது. பல்வேறு இலக்கிய நடைகளில் சிறப்பான படைப்புகள் எழுதப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன. அந்த வகையில் வரலாற்றைப் புனைவாக்கி படைக்கப்பட்ட தமிழ்நதியின்  "பார்த்தினியம்" குறிப்பிடத்தகுந்த இடத்தைப் பிடிக்கிறது.

1983 முதல் 1990 காலகட்டத்தில் இலங்கையில் தான் நேர்முகமாகக் அனுபவித்ததை, கேட்டதை உணர்ந்ததை நாவலாக்கி இருப்பதாக சொல்லும் எழுத்தாளர் தமிழ்நதியின் முன்னுரையுடன் கதை தொடங்குகிறது.

அதாவது ஈழப்போராட்டத்தில் பெருமளவு இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்தில் இணைந்துகொள்ளத் தொடங்கிய 80களில் தொடங்கி இந்திய இராணுவம் ஈழத்தை விட்டு வெளியேறிய காலப்பகுதியை ஒட்டியதாக நிறைவுறுகின்றது. கதை மாந்தர்களான பரணி, வானதி போன்ற சாமானிய மனிதர்களின் மீது திணிக்கப்பட்ட யுத்தம் எப்படி அவர்களின் வாழ்வைச் சிதைத்து சின்னாபின்னமாக்கியது என்பதை நாவல் சித்தரிக்கிறது.  இங்கே படைப்பின் உள்ளடக்கத்தைப் பற்றி விரிவாக பேசுவதைவிட இந்தப் படைப்பின் அற்புதமான மொழி ஆளுமையையும்  உணர்வுப்பூர்வமான மனவெளிப்பாட்டையும் குறிப்பிட்டுச் சொல்லத் தோன்றுகிறது. தமிழ்நதியில் தடையில்லாத அடர்த்தியான மொழி நடையில் பல தருணங்கள் வாசித்த பல மாதங்களுக்கு பின்பும் நம்மை உள்ளெழுச்சிக் கொள்ள செய்கின்றன.

குறிப்பாக மழை பெய்துகொண்டிருக்கும் ஒரு பின்அந்தி நேரத்தில்
நாயகன் பரணி நீண்ட பிரிவுக்கு பிறகு தான் காதலிக்கும் வானதியைச் சந்திக்கும் காட்சி மிக நேர்த்தியானது. நாம் இதுவரைப் பார்த்த திரைப்படங்கள் கூட காட்சிப்படுத்தாத அற்புதமான தருணம் அது.

அதுபோல சங்ககால இலக்கியங்களில் வரும் இயற்கைக்காட்சிகளை
நினைவுபடுத்தும் வகையில் மண் வாசனையோடு மரங்கள், செடி,கொடிகள், பூக்கள் பற்றிய சிறப்பான விவரணைகளுடன் 1980களின் இலங்கை நம்
முன்னே அழகாக விரிகிறது. தெளிவான நீரோட்டமாக செல்லும் இந்த நல்ல கலைபடைப்பில் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய இன்னொன்று இதன்  ஆற்றல் வாய்ந்த கவித்துவமான மொழி ஆசிரியரை நல்ல கவிஞராகவும் அடையாளம் காட்டுகிறது. அதுபோல பார்த்தினியத்தில் தமிழ்சொற்களின் பயன்பாடு என ஆய்வுக்கட்டுரை செய்யும் அளவுக்கு தமிழ்நாட்டில் இன்று புழக்கத்தில் இல்லாத பலநூறு தமிழ்சொற்களைக் கையாண்டிருக்கிறார்.  உலங்குவானவூர்தி (ஹெலிகாப்டர்), மிழற்றல், அடவு, நுளம்பு, ஆதுரம், கனகாலம், பகடிவதை, அருந்தல் என அந்தச் சொற்பட்டியல் நீளுகிறது. இதையெல்லாம் வாசிக்கும்போது சிறுவயதில் டிராக்டர்களை உழவியந்திரம் எனச் சொல்லிக் கேட்ட நாட்களை நினைத்துக்கொள்கிறேன்.

கதைக்களம் ஈழம் என்பதால் இந்தக் கலைப்படைப்பை சிலர் அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு ஒதுக்குவதாக அறிகிறேன். மாறாக
இது உள்நாட்டுப் போரினால் அலைகழிக்கப்பட்ட இளம்காதலர்களின் உணர்ச்சிகரமான காதல் கதை எனும் நோக்கில் வாசித்தாலும் சிறப்பே.

தலைப்பு: பார்த்தீனியம்
ஆசிரியர்: தமிழ்நதி
பதிப்பகம்: நற்றிணை
பக்கங்கள்: 512
விலை: ரூ. 450

மேலே உள்ள குறிப்பு 2018-இல் எழுதியது.

Saturday, June 27, 2026

அமெரிக்க மேடையில் பாடகர் மனோ

 பாடகர் மனோ தனது சொந்த பாடலான "மதுர மரிக்கொழுந்து வாசத்தை" (படம்: எங்க ஊரு பாட்டுகாரன்) வளரும் அமெரிக்க இளம் பாடகி பிரார்த்தனா கனகராஜுடன் இணைந்து பாடியிருக்கிறார். அதன் இணைப்பு கீழே.



மேடையில் தயக்கமின்றி தெளிவான உச்சரிப்புடன் நுணுக்கமான சங்கதிகளுடன் பாடும் பிராத்தனா விரைவில் தமிழ் படங்களில் ஒரு வலம் வர வாய்ப்பிருப்பதாக நினைக்கிறேன்.

இங்கே, பிரார்த்தனா 2023-பெட்னா பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சியில் முதல் பரிசு வென்றவர் என்பதைக் குறிப்பிடவேண்டியிருக்கிறது. அன்று நடுவரான ஹமீது அவர்களே விழா மேடையில் 'இங்குதான் பிறந்தாயாமா...' என வாஞ்சையுடன் கேட்டு உறுதி செய்துகொண்டது இன்னமும் நினைவிருக்கிறது.
இப்படி சிறுமியாகவும், சிறுவர்களாகவும் பார்த்த நமது நண்பர்களின் பிள்ளைகளை இன்று சடசட என கண்ணெதிரே வளர்ந்து நிற்பதோடு மேடையில் ஏறி பாராட்டு பெறும் போது மனமுவந்து வாழ்த்தத் தோன்றுகிறது.
பல பெரிய உயரங்களைத் தொட வாழ்த்துகள் பிராத்தனா !!

Saturday, June 20, 2026

சிறகுகள் 2026 - சீரும் சிறப்பும் !!

சிறகுகள் அறக்கட்டளையின் சார்பாக 2026-ஆம் ஆண்டுக்கான  கல்வி உதவித்தொகை வழங்கும் விழா ஜுன் 19-ஆம் தேதி நடந்து முடிந்தது.

அனைவரும் விரும்பும் 100 சதம் தேர்ச்சி எனும் இலக்கை மாங்குடி அரசு மேல்நிலைப்பள்ளி எட்டவில்லை என்றாலும், பள்ளி நிர்வாகம் துடிப்போடு செயல்படுகிறது. அடுத்த ஆண்டு அந்த இலக்கை எட்டும் எனும் நோக்கத்தில் மாங்குடி பள்ளி தேர்தெடுக்கப்பட்டது.

அமெரிக்க குடியுரிமை பெற்று குடும்பத்தோடு  டெக்சாஸ் மாகாணத்தில் வசிக்கும் சீனிவாசன் சண்முகம் தனது குடும்பத்தோடு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவில் உரையாற்றினார். திருவாரூர் அலிவலத்தை சொந்த ஊராக கொண்ட சீனிவாசனின் மனைவி பிரியா அவர்களுடைய உரை கிராமப்புற மாணவர்களை உற்சாகமூட்டி நம்பிக்கை தரும் வகையில் அமைந்தது சிறப்பு.



2012-ல் தொடங்கப்பட்ட சிறகுகள் அமைப்பின் வழியாக ஆண்டுதோறும் பரிசு எனும் நிகழ்ச்சி தொடங்கி 10-ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. அந்த விதத்தில் 2026-இல் நடந்த இந்த நிகழ்வு குறிப்பிடத்தகுந்த ஒன்று.

விழா குறித்து அங்கு ஆசிரியாக உள்ள நண்பர் விமல், 'அறக்கட்டளையின் குடும்ப விழாவாக நடந்தேறியது மகிழ்ச்சி !!'  என வாட்ஸ்-அப் செய்திருந்தார். கூடவே  இந்த விழாவானது சீரும் சிறப்பாக நடைபெறுவதற்கு மிக முக்கிய காரணமாக இருந்த உங்களுக்கு எங்கள் பள்ளியின் சார்பாகவும், என்னுடைய சார்பாகவும் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி அண்ணா என்றிருந்தார்.

உண்மையில், பெரிய வாய்ப்புகள் இல்லாத எளிய பின்புலத்தில் இருந்து வரும் மாணவ மாணவியர் கல்வியால் தங்கள் வாழ்வில் சீரும் சிறப்பும் பெறவேண்டும்  என்பதே எனது பெரு வேட்கை. அதை உறுதிப்படுத்தும் நோக்கில் அவர்களுடைய தோளில் தட்டி உற்சாகப்படுத்தும் ஒரு சிறு முன்னெடுப்பே இது என பதில் எழுதினேன். 

பரிசு பெற்ற மாணவ மாணவிகளுக்கும்,  தேர்வில் வெற்றி பெற்று உயர்நிலைப்பள்ளி நுழையும் அனைவருக்கும் வாழ்த்துகள் !!. 

சீர்-சிறப்பு என்றால் என்ன ? என்பர்களுக்காக-  சீர் means prosperity, glory, or grace. சிறப்பு means excellence, distinction, or special honor.

Friday, June 19, 2026

ஹைக்கூ நூல்களுக்கான பரிசுப்போட்டி

‘ஹைக்கூ முற்றம்’ அமைப்பின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி, ஹைக்கூ நூல்களுக்கான பரிசுப்போட்டி அறிவிக்கப்படுகிறது. 

இந்தப் போட்டிக்கு ஹைக்கூ கவிஞர்கள் 2025-ஆம் ஆண்டில் வெளியான நூல்களை மட்டும்  அனுப்பி வைத்து, சிறப்பித்திடுங்கள். நூல்களை அனுப்பிட கடைசி தேதி: 15 ஜூலை 2026.



Tuesday, June 16, 2026

நடிகர் சந்திரசேகருக்கு மத்திய அரசு விருது

 தமிழ் வளம் கொண்ட ஆளுமை வாகை சந்திரசேகருக்கு தேசிய விருது

மத்திய அரசின் சங்கீத நாடக அகாடமி "யுவ புரோஸ்கர்" தேசிய விருதை நடிகர் வாகை சந்திரசேகர் பெறுகிறார். இந்த விருது இசை, நடனம், நாடகம், பாரம்பரிய /நாட்டுப்புறக் கலைகள் மற்றும் பொம்மலாட்டக் கலைகளுக்கான ஒட்டுமொத்த பங்களிப்பிற்கு வழங்கப்படுவது.



Wednesday, June 10, 2026

தினமலர் சிறுகதை போட்டி -2026 (மொத்தப் பரிசுத்தொகை 1 இலட்சம்)

 தினமலர் நிறுவனர் டி.வி.ஆர் நினைவு சிறுகதை போட்டி -2026

உங்கள் கற்பனைக்கும் படைப்பாற்றலுக்கும் சிறகுகள் தரும் சிறந்த வாய்ப்பு. ஆர்வமுள்ளவர்கள் பங்கேற்று தங்கள் திறமையை வெளிப்படுத்துங்கள். 

மொத்தப் பரிசுத்தொகை ரூ. 1,00,000, மொத்தப் பரிசுகள் 14, போட்டிக் கதைகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் ஜூன் மாதம் 30 ஆம் தேதி
பிற விவரங்கள் கீழே..




Wednesday, June 3, 2026

திருக்கார்த்தியல் விருதுகள் 2026

திருக்கார்த்தியல் வாசக நண்பர்கள் அறிவித்திருக்கும் பரிசுப்போட்டி.

திருக்கார்த்தியல் விருதுகள் 2026

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 30,000
படைப்பாளி 35 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
2025 & 2026 ஆகிய ஆண்டுகளில் வெளியான நூல்களின் முதல் பதிப்பாக இருக்க வேண்டும்.
நாவல், சிறுகதை, கட்டுரை ஆகிய மூன்று பிரிவுகளில் நூல்களை அனுப்பலாம். ஒவ்வொரு பிரிவிலும் தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த படைப்புக்கு ரூபாய் 10,000 பரிசு
பிற விவரங்களை இணைப்பில் காண்க.


. இதன் உள்ளடக்கத்திற்கு நான் பொறுப்பல்ல. பகிர்வதற்காக மட்டுமே முன்னனுப்பப்படுகிறது

இராம.செ. சுப்பையா நினைவு - நாவல் போட்டி 2026

இராம.செ. சுப்பையா நினைவு அறக்கட்டளை நடத்தும் நாவல் போட்டி - 2026, சிறந்த 2 நாவல்களுக்குப் பரிசு. மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 50,000.  உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய கடைசி நாள் ஆகஸ்ட் 31.

மேலதிக விவரங்கள் கீழே.





Sunday, May 31, 2026

அந்திமழை இளங்கோவன் நினைவு சிறுகதைப் போட்டி 2026 - முடிவுகள்

 அந்திமழை இதழ் ஆண்டுதோறும் 'இளங்கோவன் நினைவு சிறுகதைப் போட்டி'யை நடத்துகிறது. இந்த ஆண்டிற்கான (2026) போட்டி 40 வயதுக்குட்பட்ட இளையோருக்காக நடத்தப்பட்டு, அதற்கான முடிவுகள் மே மாத இறுதியில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன. முடிவுகள் கீழே..



வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள் !. இதில் நண்பர் எழுத்தாளர் அரவிந்தின் ‘Function’ சிறுகதை  இந்த இளையோர் சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது கூடுதல் மகிழ்ச்சி.


Saturday, May 30, 2026

தோடுடைய செவியாள்

இரயிலில் எதிரே அமர்ந்திருந்த பெண் தனது காதில் அணிந்திருந்த வைரக் கம்மலைக் கழட்டினார்.  பின் தனது செல்போன் கவரைப் பிரிக்கத் தொடங்கினார்.



ஜேம்ஸ்பாண்ட் போல செல்போன் கவருக்குள் அந்த வைரத்தை மறைத்து வைக்கப்போகிறார் என ஆர்வமுடன் கதாசிரியர் கவனித்தார். ஆனால்..

அம்மணியோ... பொறுமையாக செல்போன் கவரைப் பிரித்து விட்டு வைரத்தோட்டின் கூர்மையான பின்புறத்தை சிம்கார்ட்டை குத்தி எடுக்கும் கருவியாக்கி சிம்கார்டை சவகாசமாக வெளியே எடுத்தார். 

எத்தனை கோடி நரம்புகள் மூளையில் வைத்தாய் எங்கள் இறைவா !!

#தோடுடையசெவியாள்


Monday, May 25, 2026

கங்கணம் கட்டி திரியவில்லை

நேரத்தைக் காரணம் சொல்லி கவிதைகளையோ, கவிதை நூல்களையோ வாசிக்க மாட்டேன் என்றெல்லாம் கங்கணம் கட்டி திரியவில்லை.


கவிதைகளைத் தேடித் தேடி படிப்பதில்லையே தவிர சிறப்பான கவிதைகள் கண்ணில் பட்டால்.. படித்து, பாராட்ட தவறுவதில்லை.

அப்படிச் சமீபத்தில் பட்ட கவிதை ஒன்று அமெரிக்காவில் இருந்து எழுதும் கவிஞர் பிரதீபா பிரேம் எழுதியது

"விரித்த கைகளோடு

விசும்பினை நோக்கி

இயற்கையிடம்

முறையிட்டுக் கொண்டிருக்கும்

மரக் கூட்டங்களை..."

எனும் அந்தக் கவிதை 'மரங்கள்' குறித்து கவிக்கோ அப்துல் ரகுமான்  "நேயர் விருப்பம்" தொகுப்பில் எழுதிய கவிதையை நினைவுபடுத்தியது. அந்தக் கவிதை

"மரங்களே! பூமியின்

வரங்களே!

விதை வாமனனின்

விசுவ ரூபங்களே!

நீங்கள் 

ஓவியமாகவே

உருவெடுத்தத் தூரிகைகள்.."

இப்படி ஒரு கவிதையோ அல்லது ஒரு கவிதையின் வரி கூட ஏதோ ஒன்றை நமக்கு நினைவுபடுத்துவதாய் இருக்கிறது. அப்படி வரும் நினைவு என்பது கூட தனித்திருப்பதல்ல. அது வேறொன்றை நினைவுபடுத்துவதாய் இருக்கிறது.

Saturday, May 2, 2026

“சக்களத்தி” என்பதற்கு ஏன்‌ ஆண்‌ இணைச்சொல்‌ இல்லை ?

சக்களத்தி” என்பதற்கு ஏன்‌ ஆண்‌ இணைச்சொல்‌ இல்லை என்று பதின்வயதிலேயே சிந்தித்தாக All Our Loves: Journeys with Polyamory in India  எனும் ஆங்கில நூலின் ஆசிரியர் Arundhati Ghosh எழுதியிருக்கிறாராம். இதை அம்ருதா இதழில்  பதிவு செய்திருப்பவர் ஜெ.தீபலட்சுமி.






வாய்ப்பிருந்தால் வாசித்துப் பார்க்கவேண்டும்.



Thursday, March 26, 2026

Celebrating 10 Years of VanaNayagan: Malaysia Naatkal (Tamil Edition)

 A decade ago, a story crossed borders and found its place in the hearts of tamil readers.



வனநாயகன்: மலேசிய நாட்கள் / VanaNayagan: Malaysia Naatkal (Tamil Edition) is more than a novel — it is a journey of identity, struggle, and belonging.



Wednesday, March 25, 2026

10-ஆம் ஆண்டில் வனநாயகன் (மலேசிய நாட்கள்)

சிங்கப்பூர் வாழ் நண்பர் சதீஷ் முத்து கோபல் எனது வனநாயகன் நாவல் குறித்து பகிர்ந்த வாசக அனுபவத்தை மீண்டும் நேற்று ஒருமுறை வாசித்தேன்.

இப்படி 2016 டிசம்பரில் வெளியான இந்த நாவலைக் கடந்த 10 ஆண்டுகளாக வாசக நண்பர்கள் மறந்து விடாமல் தொடர்ச்சியாக வாசித்து அதை உயிர்ப்புடன் வைத்திருப்பது மகிழ்ச்சி தருகிறது. வாசிப்போடு மட்டும் நிறுத்திவிடாமல் வாசக அனுபங்களையும் அவர்கள் பகிர்வது வெகு அபூர்வம்.  அதுவும் தமிழ் எழுத்துலகில் வெளிநாடுகளில் வாழும் எங்களைப் போன்றவர்களுக்குச் சாதாரணமான காரியமில்லை.


அது மட்டுமின்றி, வெளிநாடோ அல்லது உள்நாடோ, வாழ்வனுபவத்தின் பின்புலம் இல்லாமல், எந்த நிலப்பரப்பும் என் படைப்புகளில் இடம்பெற வேண்டாம் என்பதில் இன்றும் உறுதியாக இருக்கிறேன். அப்படி மலேசிய நாட்டின் பின்புலத்தில்  நான் எழுதிய இரண்டாவது படைப்பு "வனநாயகன் (மலேசிய நாட்கள்)".

சதீஸின் இணைப்பு கீழே..

https://www.writersatheesh.com/2024/08/blog-post_10.html



Sunday, March 1, 2026

AI (செயற்கை நுண்ணறிவு) - எழுத்தாளர் சுஜாதா பார்வையில்

எழுத்தாளர் சுஜாதா பார்வையில் ஏஐ தொழில்நுட்பம். 

சமீபத்தில் சிலிக்கான் சில்லுகளுக்குள் ஒரு குட்டி மூளை குடியேறியிருக்கிறது;  ஆமாம் நண்பர்களே அதற்குப் பெயர் Artificial Intelligence இல்லை செயற்கை நுண்ணறிவு. நீங்கள் ஒரு கவிதை கேட்டால், கம்பனையும் ஷெல்லியையும் கலந்து ஒரு நொடியில் துப்பிவிட்டு அடுத்த வேலைக்குப் போகிறது.

"கணேஷ்,  ஏஐ-க்கு இதயம் இருக்கா?" என்று கேட்டால், "லாஜிக் தான் இதோட இதயம் வசந்த்" என்பான் கணேஷ். ஆமாம்,  தகவல்கள் தான் அதன் ரத்தம்; அல்காரிதம்கள் தான் அதன் நரம்பு மண்டலம்.

உங்கள் ரசனையை, உங்களை விட ஒரு மென்பொருள் துல்லியமாகத் தீர்மானிப்பதை நினைத்தால் கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது. ஆனால், இது மனிதனை விஞ்சுவதல்ல, மனிதனின் நீட்சி; ஒரு டிஜிட்டல் ஊன்றுகோல் என்பேன்.

நீண்ட அலகு நாரை

நீரை கொத்தினாலும் நீங்காத நிலா...” இது அமுத பாரதி எழுதிய ஹைக்கூ. இதுபோன்ற பல ஆயிரம் கவிதைகளை ஏஐ நொடியில் பிரசவிக்கும். ஆனாலும், மனிதர்கள் உணர்ந்து ரசனையாக எழுதியதை வாசிக்கையில் வரும் மென்புன்னகை அங்கே சுத்தமாக மிஸ்ஸிங்.

ஏஐ-யைப் பொறுத்தவரை கவிதை என்பது வெறும் நிகழ்தகவு-Probability. அதற்கு நிலா தெரியாது, நிலவின் அலைநீளம் (Wavelength) தான் தெரியும். நாரை தெரியாது, 'Bird' என்கிற டேக் (Tag) தான் தெரியும். அது வார்த்தைகளை மிக்ஸியில் போட்டு அரைத்து, இலக்கணத்தை ஐஸ் கட்டியாகத் தூவி தரும் ஜூஸில் சுவை இருக்குமா ?என்பதை வாசிக்கும் நீங்களே முடிவுசெய்து கொள்ளுங்கள்.



இதனுடன், துக்கடாவாக ஏஐ-யால் மேம்படுத்தப்பட்ட என்னுடைய வாலிப கால படத்தையும் இணைத்திருக்கிறேன், கண்டு இரசியுங்கள்.

நன்றி-கூகுள் ஜெமினி.

Monday, February 9, 2026

செல்வத்தை அனுபவித்தல்

"வறுமையில் இருக்கும்போது நீங்கள் எவ்வளவு அதிகமாக அவமதிக்கப்பட்டீர்களோ, அவ்வளவு அதிகமாக உங்கள் செல்வத்தை வெளிப்படுத்துவதை நீங்கள் ரசிப்பீர்கள்". ராபர்ட் குயிலன் 

“The more you were snubbed while poor, the more you enjoy displaying your wealth.”

— ராபர்ட் க்வில்லன்

இந்த ஒரு வரி, மனித மனதின் ஆழமான காயங்களை மிக எளிமையாக வெளிச்சம் போடுகிறது. வறுமை என்பது வெறும் பணமின்மை அல்ல; அது பல நேரங்களில் மதிப்பின்மை, அவமதிப்பு, புறக்கணிப்பு ஆகியவற்றின் தொகுப்பாக மனித உள்ளத்தில் பதிந்து விடுகிறது. 

ஏழ்மையில் இருந்த காலங்களில் ஒருவர் சந்தித்த அலட்சிய பார்வைகள், மரியாதையற்ற நடத்தை, “நீ யார்?” என்ற மௌனக் கேள்விகள் — இவை அனைத்தும் மனதில் மறையாத சுவடுகளாகத் தங்கி விடுகின்றன.

அந்த மனிதன் வாழ்க்கையில் உயர்ந்து, செல்வம் சேர்க்கும்போது, அந்த செல்வம் வெறும் வசதிக்காக மட்டும் இல்லை. அது ஒரு பதில். முன்பு தன்னைப் பொருட்படுத்தாத உலகிற்கு, “இப்போது என்னைப் பாருங்கள்” என்று சொல்லும் ஒரு மௌனக் குரல். விலை உயர்ந்த உடைகள், ஆடம்பரமான வீடுகள், பிரமாண்டமான விழாக்கள் — இவை எல்லாம் சமூகத்திற்கு காட்டும் காட்சிகள் மட்டுமல்ல; மனதுக்குள் ஒளிந்து கொண்டிருந்த குறைபாட்டை மறைக்கும் கவசங்களும் ஆகும்.


இங்கு செல்வத்தின் காட்சிப்படுத்தல் பெருமைக்காக மட்டும் அல்ல. அது ஒரு வகையில் சுய உறுதிப்பாடு (self-validation). “நான் யாரோ ஆகிவிட்டேன்” என்று தானே தன்னை நம்ப வைக்கும் முயற்சி. வறுமையில் இருந்தபோது கிடைக்காத மரியாதையை, இப்போது பணம் வாங்கித் தரும் என்ற நம்பிக்கை. அதனால் தான், சிலருக்கு செல்வம் வந்த பிறகும் அமைதி வராது; காட்ட வேண்டிய அவசரம் மட்டும் அதிகரிக்கும்.

ஆனால் இந்த மேற்கோள் நம்மை ஒரு கேள்வியையும் கேட்க வைக்கிறது:
நாம் செல்வத்தை அனுபவிக்கிறோமா, அல்லது வறுமையின் நினைவுகளுக்கு பதில் சொல்லிக் கொண்டிருக்கிறோமா ?

Wednesday, February 4, 2026

கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ போட்டி - 2026

கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ போட்டி - 2026,  இறுதிநாள் ஏப்ரல்- 02- 2026



Sunday, February 1, 2026

Thursday, January 1, 2026

சொற்கள் தோற்குமிடம்

சமயங்களில்

உண்மைக்கும் பொய்க்கும் உள்ள

இடைவெளி குறைவாக 

மிக நெருக்கமாக இருந்து விடுகிறது.


தீர விசாரிப்பதில்

அதைக் களைய முற்படலாம்

ஆனால் அதை முழுதாக அரிய

முடியாது.


சொற்கள் தோற்குமிடம் மௌனம் ஆள்கிறது

புரியாத உண்மைகளை அதுவே சுமக்கிறது.