Showing posts with label #ஆருர் பாஸ்கர். Show all posts
Showing posts with label #ஆருர் பாஸ்கர். Show all posts

Sunday, April 11, 2021

ஃபோன்களும் கண்களும்

நாளொன்றுக்கு நான் குறைந்தது 10 மணிநேரமாவது கணினியில்
நேரம் (ஃபோன் நேரம் தனி)  செலவிடுகிறேன்.

என்னைப் போல இங்கே பலரும்  பெரும்பான்மை நேரத்தை தினமும் கணினி, புத்தகம், ஃபோன் என ஏதோ ஒன்றை  கூர்ந்து பார்ப்பதில் இல்லை படிப்பதில் நேரத்தைச்  செலவு செய்வீர்கள்.

இப்படி  நாம் சராசரியாக பார்க்கும், படிக்கும் நேரம் என்பது போன தலைமுறை இதற்காகச்  செலவிட்ட நேரத்தைவிட  அதிகம் என்பதில்  இங்கே கண்டிப்பாக மாற்றுக் கருத்து இருக்காது. 

நடைமுறையில் ஸ்மார்ட் ஃபோன் மற்றும் செயலிகள் வந்தபின் கூர்ந்து படிப்பது என்பது தவிர்க்க இயலாத ஒன்றாகி விட்டது.  சமீபத்தில் வெளிவந்த ஒர் ஆய்வின்படி அமெரிக்கர்கள் தினமும் 12 நிமிடங்களுக்கு ஒருமுறை சராசரியாகத் தங்கள் தொலைபேசியைச் சரிபார்க்கிறார்கள் - அதாவது தூங்கும் நேரத்தைத் தவிர்த்துப் பார்த்தால் ஒருவர் குறைந்தபட்சம் 80 முறை தங்கள் தலைகளைத் தொலைபேசிகளில்  புதைத்துக் கொள்கிறார்கள்.  இந்த எண்ணிக்கை இந்தியாவில் குறைவாக இருக்க வாய்ப்பில்லை.

இன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை   ஃபோன்,
ஐபேட் போன்ற விசயங்களை மிக எளிதாகக் கையாளுகிறார்கள். அதில் அவர்கள்   பல மணிநேரங்கள் தொடர்ச்சியாக நேரம் செலவிடவும் தயங்குவதில்லை. குறிப்பாக இன்றைய இளைஞர்களுக்கு டிவி,கணினியை விட போஃனில்தான் அதிக நாட்டமிருப்பதாக நினைக்கிறேன்.

நேற்றுவரை, ஃபோன்கள் பேசுவதற்காக மட்டும் என்றிருந்த நிலை மாறி, இன்று ஸ்மார்ட் ஃபோன் வரவுக்குப் பின் நேரப்போக்கிற்காக,  இணையம், அலுவலக இமெயில், செயலிகள் (Apps) எனத்  தவிற்கமுடியாத
ஒன்றாகிவிட்டது. அதனால் இன்று 'ஃபோன் இல்லாவிட்டால் கையும் ஓடல காலும் ஓடல' எனப் புலம்பும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டிருக்கிறோம்.

பல நல்ல விஷயங்களுக்கு நாம் தினமும்  ஃபோனைப் பயன்படுத்தினாலும்  அதில் பல பிரச்சனைகள் இருக்கத்தான் செய்கிறது.
குறிப்பாக அவைக் குறைந்த அளவிலான கதிர்வீச்சை (RF) வெளியிடுகின்றன என்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் துண்டிக்கப்பட்ட டிஜிட்டல் உலகில் வாழ்வது, மனஅழுத்தம் போன்ற பல உளச்சிக்கல்கள் வர வாய்ப்பு இருக்கிறது.

உடல் ரீதியாகப் பார்க்கையில் தலையைக் குனிந்தபடித் தொடர்ச்சியாக
நாம் போஃனைப் பயன்படுத்துவது, பயணத்தில் படிப்பது,  படுத்தபடியே மணிக்கணக்கில் படம் பார்ப்பது, பல மணிநேரங்கள் எந்த இடைவேளையு
மின்றிப் பேசுவது, இதெல்லாம் நம் உடலுக்கு எந்த அளவு ஆரோக்கியமானது ?   கழுத்து வலி, தோள்பட்டை வலி,  முதுகு வலி வர வாய்ப்பிருக்கிறதே. இது  நமது கண்களுக்கு எந்த அளவுப் பிரச்சனைகளைத் தரும் ? எப்படித் தப்பிப்பது ?  இதையெல்லாம் குறித்து நேரம் கிடைக்கும் போது கொஞ்சம் யோசியுங்கள்.

Friday, March 1, 2019

வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும் ?

வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும், சிரிக்கத் தெரிந்த ஒரே விலங்கு மனிதன் என்றெல்லாம் பொதுவாக சொன்னாலும் நமது சமூகம் நகைச்சுவை விசயத்தில் கொஞ்சம் பலவீனமானது என்றே நினைக்கிறேன். அதுவும் குறிப்பாக சென்னை போன்ற அழுத்தமிகுந்த, பரபரப்பான பெருநகரங்களில் நகைச்சுவை என்பது காற்றில் கூட இல்லை என்பதைக்  கவனித்திருக்கிறேன்.

மற்ற இடங்களில் எப்படியோ நகரங்களின் கடைகள், ரயில் நிலையங்கள் போன்ற முன் பின் அறிமுகமில்லாதவர்களைச் சந்திக்கும் பொது இடங்களில் சிரிப்பு என்பதை மருந்துக்குக் கூட பார்க்க முடிவதில்லை. பெரும்பாலும் இறுக்கமான முகங்களே. சமயங்களில் நகைச்சுவை உணர்வற்ற இருண்டகாலத்தில் வாழ்கிறோமோ என்றுகூட நினைப்பதுண்டு.

அப்படியே அரிதாக யாரேனும் தப்பித்தவறி நகைச்சுவையாக பேசினாலும் அவர்களைச் சந்தேகக் கண்ணோடு பார்ப்பவர்களே இங்கு அதிகம்.
இங்கே நகைச்சுவை எனச் சொல்வது வடிவேலு போல ஏற்ற இறக்கத்துடன் பேசி சிரிக்க வைக்கும் முயற்சியை அல்ல. மாறாக இயல்பான உரைநடையில் வாய்ப்பும் சூழலும் கிடைத்தால் மெல்லிய பகடியோடு பேசுவது தவறில்லை. உங்களால் முடியாவிட்டாலும் பரவாயில்லை அப்படி வேறு யாரேனும் பேசினால், பதிலுக்கு சிரிக்காவிட்டாலும் கண்டிப்பாக முறைக்காதீர்கள். சரி நாம் என்ன செய்யலாம் எனக் கேட்பது காதில் விழுகிறது. :)

அடுத்த முறை பேருந்தில் "2 ரூபாய் சில்லறை இல்ல , 5 ரூபாய இருக்கு சார்" எனும் நடத்துனரிடம் சிரித்தபடி "அது எனக்கு பிரச்சனை இல்லை, குடுத்தா நான் வாங்கிக்க ரெடி" எனச் சொல்லி சூழலைக் கலகலப்பூட்ட முயற்சி செய்யலாம்.

இல்லை ஒரு நகைக்கடைக்கு போனால்,  "மேடம் நீங்க எத்தனை சவரன்ல நெக்லஸ் பாக்குறீங்க எனும் விற்பனைப் பிரதிநிதியிடம், 10 பவுன்ல பாக்க ஆசைதான், ஆனால் இப்ப 3 பவுன்லேயே காட்டுங்க பார்ப்போம்" என சிரித்தபடி சொல்லிப் பாருங்கள். அவரும் பதிலுக்கு சிரித்தபடி உற்சாகத்தோடும் ஆர்வத்தோடும் உங்களுக்கு நகைகளை எடுத்துக்காட்ட வாய்ப்புள்ளது.


இப்படி பொது இடங்களில் நகைச்சுவையாக பேசுபவர்களைப் பற்றிய நமது மதிப்பீடுகளும் வேறாக இருப்பது துரதிஷ்டமே.




Thursday, February 7, 2019

சைக்கிள் (2018) - மராத்தி

சாதாரண கதையை பிரமாண்டப்படுத்தி வரும் திரைப்படங்களை விட குறைந்த பொருட்செலவில் கவித்துவமாக எடுக்கப்படும்
படங்கள் சமயங்களில்   நல்ல வரவேற்ப்பைப் பெற்றுவிடும்.

அந்த வரிசையில் சேர்க்கவேண்டிய ஒரு படம் 'சைக்கிள் (2018)'. மராத்திய மொழியில் வெளியான இந்தப்படத்தை சமீபத்தில் பார்த்தேன்  (உபயம்- சப்டைட்டில்). படத்தை பிரகாஷ் குன்டே இயக்கியிருக்கிறார்.

1950 ஆண்டுவாக்கில் நடக்கும் இந்தக் கதையின் நாயகன் கேசவ்.
தனது தந்தை, மனைவி, மகளுடன் வசிக்கும் கேசவ் தொழில்முறையில் ஒரு  ஜோதிடர். கிராமத்தில் வசிக்கும் கேசவ் தனது தாத்தா ஆங்கிலேயரிடம் இருந்து பெற்ற ஒரு மஞ்சள் சைக்கிளைப் பொக்கிசமாக கருதி பாதுகாத்து வைத்திருக்கிறார். நல்ல பயன்பாட்டில் இருக்கும் அந்த சைக்கிள் ஒரு நாள்  இரவு திருடுபோகிறது.


ஊருக்குள் திருட வந்த இரண்டு திருடர்கள் அதைத்  தப்பிக்கும் வாகனமாக எடுத்துச் சென்றுவிடுகிறார்கள். திருட்டு சைக்கிளோடு வெளியேறிய திருடர்கள் பல கிராமங்களைக் கடந்து செல்லும்போது  எப்படி நல்லவர்களாக திருத்துகிறார்கள் என்பதே படத்தின் கதை.  படம் முழுமையும் சைக்கிள் என்பது ஒரு குறியீடாகவே தொடர்ந்து வருகிறது.

உண்மையில் ஒருவன் பயன்படுத்தும் பொருள் என்பது ஓர் உயிரற்ற ஜடம் மட்டும் தானா ? அப்படியென்றால் அவன் இல்லாதபோது அவனுக்கு கிடைக்கும்  சகல மரியாதையும் அவன் பயன்படுத்தும் பொருளுக்கும் கிடைக்கிறதே ? எனும்
ஆதார கேள்வியை முன்னிருத்தி படம் பயணிக்கிறது.

தனது விருப்பத்துக்குரிய சைக்கிளை இழந்த கேசவ் நிலைகொள்ளாமல் வருத்தத்தோடு அதைத் தேடி வீட்டை விட்டு வெளியேறுகிறார். அந்தத் தேடலில் அவர் தன்னை உள்ளார்ந்து பார்ப்பது போன்ற தத்துவப் பார்வைகள் இருந்தாலும் படம் மெல்லிய நகைச்சுவையோடு நகர்வதால் வெகு இயல்பாக இருக்கிறது.

கூடவே படம் எளிய கிராமங்கள், அங்கு வாழும் வெள்ளந்தியான மனிதர்கள், அவர்களுடைய பாசாங்கற்ற வாழ்க்கையை அழகாக சொல்கிறது.
ஒளிப்பதிவாளர் அமலென்டு செளத்ரியின் (Amalendu Chaudhary)  கைவண்ணத்தில் மராட்டிய கிராமங்களில் கேரள கிராமங்களின் அழகையும் வனப்பையும் காணமுடிகிறது.

'சைக்கிள்' பல சர்வதேச விருதுகளையும் பெற்றிருப்பதாக அறிகிறேன். வாய்ப்பிருப்பவர்கள் பாருங்கள்.

படங்கள்- நன்றி இணையம்.


Friday, February 1, 2019

ஊச்சு (The Fear) -அரவிந்த் சச்சிதானந்தம்

தமிழ் உரைநடையில் எழுத்தாளர் சுஜாதாவுக்கு என்றும் ஒரு முக்கிய இடமிருக்கிறது. ஆங்கில வெகுஜன எழுத்தை ஒட்டி தனக்கென ஒரு புதிய பாணியைக் கைகொண்டு  நாற்பதாண்டுகளுக்கு மேலாக தமிழில்
கதை,கட்டுரை,நாடகங்கள்,புதினங்கள் என வணிக எழுத்தில் கோலோச்சியவர்.

எளிய நடையில் சுருக்கமாக திரைக்கதை பாணியில் செல்லும் அவருடைய எழுத்து வசீகரமானது. நீதித்துறை, காவல், மருத்துவம், அறிவியல் என அந்தந்தத்துறை சார்ந்த சொல்லாடல்களை  தன் படைப்புகளின் வழியாக வாசகர்களுக்கு சிறப்பாக அறிமுகம் செய்தவர்.  ஒரு கட்டத்தில்
எழுத்தில் சிறிதேனும் சுஜாதாவின் பாதிப்பு இல்லாமல் எழுதுவது தவிர்க்கஇயலாது எனும் நிலையை ஏற்படுத்திய ஆளுமை அவர்.

சமகால இளைஞர்களைக் கவரும் விதத்தில் இளமை துள்ளலோடு அமைந்த
சுஜாதாவின் நடையை ஒட்டி தமிழில் தொடர்ந்து கவனிக்கத்தகுந்த வகையில் எழுதிவருபவர்களில் குறிப்பிடத்தகுந்தவர் அரவிந்த் சச்சிதானந்தம். 2014ம் ஆண்டிற்கான உயிர்மையின் சுஜாதா விருது, 2017ம் ஆண்டில் அசோகமித்திரன் (பாரட்டுதலுக்குரிய சிறுகதை) விருது பெற்றவர்.

கடந்தவாரம் அவருடைய ஊச்சு எனும் குறும்புதினத்தை
(குறுநாவலை) வாசித்தேன். "ஊச்சு (The Fear)" எனும் தலைப்போடும் மர்மக்கதை எனும் மிரட்டலோடும் அமெசான் கிண்டிலில் கிடைக்கும் இந்த நூலை சில மணிநேரங்களில் விறுவிறுப்போடு வாசித்துவிட முடிகிறது.

ஆவணப் படம் எடுக்க மேல்பாறைக்கு பயணமாகும் நான்கு நண்பர்கள் நடுக்காட்டில் மர்மமாக மறைகிறார்கள்.
மாயமான அவர்களை மீட்டு அந்த மர்மத்தை விலக்க சென்னையில் இருந்து  அர்ஜூன் எனும் காவல்துறை அதிகாரி புறப்பட்டு வருகிறார். அவர் எப்படி சிக்கலான அந்தப் புதிரின் முடிச்சை அவிழ்க்கிறார் என்பதே கதைகதையின் வித்தியாசமான தலைப்பான ஊச்சு மனிதனின் ஆழ்மனத்துக்குள் புதைந்துகிடக்கும் பய உணர்வைச் சொல்கிறது. 

மக்களின் மூடநம்பிக்கைகள் அதைப் பயன்படுத்திக்கொள்ளும் அதிகாரவர்கத்தின் அத்துமீறல்கள், அமானுஸ்யம் என மர்மக் கதைகளுக்கு உரிய எல்லா அம்சங்களையும் சரியான விகிதத்தில் கலந்து குழப்பமின்றி சரசரவென கதை நகர்கிறது. இப்படி கதை விறுவிறுப்பாக நகரவேண்டும் எனும் உந்துதலில் கதையின் மையக்கரு எனும் motive குறித்தான விவரங்களை இன்னமும் விரிவாக விலாவரியாக ஆசிரியருக்கு எழுத இயலாத சூழல் அமைந்ததாக நினைக்கிறேன்.

மற்றபடி சுஜாதாவின் நறுக் வசனங்களையும், பல பகடியான சொல்லாட்சிகளும் கதை முழுவதும் விரவிக் கிடக்கின்றன. கதையில் தமிழ் பேசமட்டும் தெரிந்த ஒரு வடநாட்டு காவல்அதிகாரி பேசுவதுபோல ஒர் இடம் 'தமிழ்நாட்டு கவர்மெண்ட் ஆபிசரெல்லாம் தமிழ்ல கையெழுத்து போடனும்னு சொல்றீங்க. ஆனா, உங்க பசங்க எல்லாம் படிச்சிட்டு வெளிநாட்டுக் காரனுக்கு வேலைபாக்குறான். இந்தியாவில, கவர்மெண்ட் வேலையில முக்கால்வாசி பேரு எங்கள மாதிரி வெளியூர்காரங்கதான் தெரியுமில்ல...' எனும் சுஜாதா டச் பல இடங்களில்  தெறிக்கிறது. அதுபோல 
போகிற போக்கில் 'இப்ப உங்க குரூப் எக்ஸாம் கூட வெளி ஸ்டேட் பசங்க எழுதலாம்னு சொல்லியாச்சி '  என உள்ளூர் அரசியலையும் சேர்த்து சொல்லிச் செல்வதை ரசிக்கமட்டுமே முடிகிறது. ஆனால், உண்மை சுடுகிறது. இதுவே எழுத்தின் வெற்றியும் கூட.


கூடவே வழக்கமான ஒரு துப்பறியும் கதையை முன்னும் பின்னுமாக  விறுவிறுப்போடு திரைக்கதைபோல சாமர்த்தியமாக நகர்த்தும் லாவகம் அரவிந்துக்கு அழகாக வந்திருக்கிறது. கதையில் எந்தவொரு எழுத்தும் தேவையில்லை எனச் சொல்லும் சுஜாதாவின் சொற்சிக்கனத்தை இம்மிபிசகாமல் பின்பற்றியிருக்கிறார். சுஜாதாவை வாசித்தவர்கள், மர்மக்கதை விரும்பிகள் ஊச்சு வை விரும்புவார்கள்.

இணையத்தில்-

https://www.amazon.in/%E0%AE%8A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-Oochchu-Tamil-Aravindh-Sachidanandam-ebook/dp/B07L7CLWJ3/ref=sr_1_1?s=digital-text&ie=UTF8&qid=1549083521&sr=1-1&keywords=%E0%AE%8A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81

Wednesday, January 2, 2019

2018இல் வாசித்தவை

ஆண்டு இறுதியில் நட்சத்திரங்கள் திரைப்பட்டியல் வெளியிட்டு பெருமை கொள்வது போல வாசித்த புத்தகங்களின் பட்டியலைப் பகிர்வதில் தணியாத விருப்பம் எதுவுமில்லை. மாறாக இந்த வாசிப்பு எனது அன்றாட வாழ்வியல் மதிப்பீடுகளை ஒர் அங்குலமாவது உயர்த்தி இருக்கிறது எனும் நம்பிக்கையுடன் 2019க்குள் நுழைகிறேன்.

(புனைவுகள்)
முஸ்தபாவைச் சுட்டுக் கொன்ற ஓரிரவு - அகரமுதல்வன் BOX: கதைப் புத்தகம் (நாவல்) - ஷோபாசக்தி பார்த்தினியம் - தமிழ்நதி புவியிலோரிடம் -பா. ராகவன் பேட்டை - தமிழ்பிரபா திருடன் மணியன்பிள்ளை - ஜி. ஆர். இந்துகோபன் மிதவை - நாஞ்சில் நாடன் தேசத்துரோகி - எழுத்தாளர் ஷோபா சக்தி கானகன்- லட்சுமி சரவணக்குமார் ஆயிஷா - இரா. நடராசன் உலோகம் - ஜெயமோகன் ஊச்சு -அரவிந்த் சச்சிதானந்தம் (கட்டுரைகள்) நாவவெலுனும் சிம்பொனி - எஸ்.ராமகிருஷணன் சங்கரன் கோவில் - 1000 ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஒரு மூதூரின் வரலாறு தேசாந்திரி-எஸ். ராமகிருஷ்ணன் இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள் - வைரமுத்து தமிழ்நாடா ? 'டமில்நடு' வா ? -அருணகிரி வாங்க சினிமாவைப் பற்றி பேசலாம் - கே.பாக்யராஜ் திரைக்கதை எழுதுவது எப்படி - சுஜாதா மீத்தேன் அகதிகள் - பேராசிரியர் த.செயராமன் ஊழல்-உளவு-அரசியல் - சவுக்கு சங்கர் (ஆங்கிலத்தில்) Confessions of an Economic Hit Man by John Perkins My Year of Meats by Ruth Ozeki Communism (Exploring World Governments) by Sue Vander Hook The Swamp: The Everglades, Florida, and the Politics of Paradise by Michael Grunwald The Last Voyage of Columbus Book by Martin Dugard Outliers Book by Malcolm Gladwell The Alchemist (novel)- Paulo Coelho

#2018இல்வாசித்தவை