Friday, April 14, 2017

வாசிங்டனில் திருமணம் -எழுத்தாளர் சாவி

எழுத்தாளர் சாவி எழுதிய வாசிங்டனில் திருமணம் நாவலை வாசித்தேன்.  வாசித்தேன் எனச் சொல்வதை விட வரிக்குவரி சிரித்தேன் எனச் சொல்வது பொருத்தமாக இருக்கும்.  வாசகர்களை சிரிக்க வைக்காமல் விடமாட்டேன் என கங்கணம் கட்டி நகைச்சுவை ஒன்றைமட்டுமே பிராதனமாக எடுத்துக் கொண்டு கதையை எழுதியிருப்பார் என நினைக்கிறேன்.

இந்தக் கதை வழக்கமான விறுவிறுப்பான தொடர்கதை
எனும் வரையரைக்குள் எழுதப்படாமல் நகைச்சுவையாகத் தன்போக்கில் போய்கொண்டிருக்கிது. 

ஒரு தென்னிந்தியத் திருமணத்தை அதன் ஆச்சாரம் மாறாமல் அமெரிக்காவில் நடத்தினால் எப்படி இருக்கும் என்பதன் கற்பனை வடிவம் தான் கதை.

அமெரிக்காவின் ராக்பெல்லர்  குடும்பம்  ஒரு தென்னிந்திய திருமணம் ஒன்றை வாசிங்டன் நகரில் நடத்திப் பார்க்க
ஆசைப்படுதாகவும் அந்தத் திருமணம் நடத்திடத் தேவைப்படும் அனைத்துச் செலவுகளையும் அவர்களே செய்வதாக கதையமைத்திருக்கிறார்.  அந்தத் திருமணம் எப்படி நடத்தது என்பதனை சாவி நகைச்சுவையாக எழுதியிருக்கிறார்.

"வாசிங்டனில் திருமணம்" எனும் தலைப்பில் இருக்கும் "வா" வில் 
தொடங்கி "ம்" வரை மொத்தமாக 11 அத்தியாயங்களுக்குத் தலைப்பிட்டு ஆனந்தவிகடனில் தொடர்கதையாக எழுதியிருக்கிறார்.  

இருபது வருடங்களுக்கு முன்பு "ஜீன்ஸ்" படத்தில் டைரக்டர் சங்கர்
நடிகை லட்சுமியை அமெரிக்காவின் டிஸ்னிலாண்டில் கோலம் போட வைத்து, வடை சுட்டு, ஜின்ஸ் போட்டு, ஆட வைத்தார் நினைவிருக்கிறதா ? அதையெல்லாம் வெகுநாட்களுக்கு முன்பே சாவி இதில் நிகழ்த்திக் காட்டியிருக்கிறார்.

இந்தக் கதை எழுதப்பட்ட வருடம் சரியாகத் தெரியவில்லை.
ஆனால், கதையில் வரும் குறிப்புகளைப் பார்க்கையில் 1960-70 களில் இருக்கலாம் என நினைக்கிறேன். அமெரிக்கா எனும் தூராதேசத்துக்கு  டிரங்க் கால் புக் செய்து காத்திருந்து பேசிய
அந்தக் காலத்தில், தென்னிந்திய திருமணங்கள் 2-3 நாட்கள்
அதன் கட்டுக்கோப்புடன் நடந்த காலகட்டத்தில் எழுதியிருக்கிறார்.

தஞ்சாவூர் மாமா வாசிங்டன் நதியில் இறங்கிக் குளித்துவிட்டு
அதன் கரையிலேயே வேட்டியைக் காயவைத்துத் கட்டிக்கொள்கிறார் என்பது போல,   அந்தக் காலத்து  மாமா, மாமிகளின் கண்டோட்டத்தில் அமெரிக்காவைப் பார்த்து ஹாஸ்யமாக எழுதியிருக்கிறார்.

அப்போதேல்லாம்,  கல்யாணத்துக்கு சொந்தமாக வீட்டிலேயே அப்பளம் அவர்களே போடுவார்கள் போல. அதனால்
அப்பளம் மாவு இடிக்க உரல்,உலக்கை, உளுந்துக்கு என ஒரு விமானம் அமெரிக்கா வருகிறது. அப்புறம், அப்பளம் போடும் பாட்டிகளுக்கு ஒரு தனி விமானம் என வாய்விட்டுச் சிரிக்கவைக்கிறார்.

விமானத்தில் வந்திரங்கிய இங்கிலீஸ் தெரியாத அந்தப் பாட்டிகளிடம்  ' ஹவ் டு யூ டு ? ' என ஒரு வெள்ளைக்காரப் பெண்மணி  விசாரிக்க,  அவர்கள் முழிக்க,  அப்போது ஒரு மாமா குறுக்கிட்டு 'ஓ தே டு ஒண்டர்புல் அப்ளம்ஸ் !' எனச் சொல்லி நம்மையும் சிரிக்க வைக்கிறார்.

இப்படி வரிக்கு வரி நகைச்சுவைக் கரைபுரண்டோடுகிறது. நகைச்சுவையில் லாஜிக் பார்க்காமல் படிப்பவராக இருந்தால்
கதையை நீங்கள் ரசிக்கலாம்.

அப்புறம், அப்பளம் போட கிணத்துத் தண்ணீர் வேண்டுமென அமெரிக்காவில் கிணறு வெட்டுகிறார்கள், வெட்டிய கிணற்றில்
கட்டிய ராட்டினத்தில் வரும் ஒலியை சங்கீதம் என அமெரிக்கர்கள் வியக்கிறார்கள் என நான்ஸ்டாபாக பூந்து விளையாண்டிருக்கிறார்.

சேமியா பாயசத்தை  பற்றி வெள்ளைக்காரருக்கு  நம்மூர்காரர்
விளக்கும் விதம்  ரசிக்கவைத்தது.  இப்படி வெளிநாடு வரும் எல்லா இந்தியர்களும் வெளிநாட்டவருக்கு நம்முடைய உணவு இல்லை நமது  பழக்க வழக்கங்களை விளக்குகிறேன் பேர்வழி ஏதோ ஒரு தருணத்தில் அதுமாதிரி திணறியிருப்பார்கள் என்பது உண்மை.

மாப்பிளை வரவேற்பில் (ஜானவாச ஊர்வலம்) காஸ்
லைட்டுகளைத் தூக்க வரவைக்கப்பட்ட  நரிக்குறவர்களைக் கிண்டலிக்கும் தோணியில் எழுதியிருப்பது இன்றைய
காலகட்டத்தில் ரசிக்கும்படியில்லை.

எழுத்தாளர் சாவி ஒரு நல்ல பத்திரிக்கை ஆசிரியர் என்பதைத் தாண்டி அபார நகைச்சுவை உணர்வுள்ளவர் என்பதை தெரிந்துகொள்ள முடிகிறது.

பெரும்பாலான நகைச்சுவைத் துணுக்குகள் மொழிபெயர்ப்பு சம்பந்தப்பட்டவையாக இருக்கிறது. சட்டென நினைவுக்கு வருவதைச் சொல்லி விடுகிறேனே.

"பத்துப் பாத்திரம் தேய்க்கிறவங்கன்னா யாரு ? " எனக் கேட்டாள் மிஸ்ஸ் ராக்ஃபெல்லர்.  "டென் வெஸ்ஸல்ஸ் தேய்கிறவா " என மொழிபெயர்கிறார் ஒருவர். "10 என்ன 100 வேணுமானாலும் தேய்க்கட்டுமே ! பிரச்சனையே இல்லை" என்றாள் மிஸ்ஸ் ராக்ஃபெல்லர்.

அடுத்ததாக ,  'உங்க ஊர் டாக்ஸ் வாய்ஸ் எப்படி இருக்கும் ? ' எனக் கேட்டவருக்கு  'ரொம்ப பிரமாதம். ஆனால் கொஞ்சம் நாய்ஸா இருக்கும் அவ்வளவுதான்'.   என்பதுபோன்ற பல ' கடி' களும்
கதையில் உண்டு.

தென்னிந்தியத் திருமண சங்கடங்களை இல்லை மன்னிக்கவும்
திருமண சடங்குகளை விரிவாக இதற்குமுன் யாரேனும் எழுத்தில்
பதிவு செய்திருக்கிறார்களா எனத் தெரியவில்லை.  சாவி இந்தக் கதையில் அதை நகைச்சுவையாக தெளிவாக பதிவு செய்திருக்கிறார்.

இன்று அமெரிக்கா இந்தியாவுக்கு கொல்லைப்புறமாக மாறி
உலகமே கைபேசியில் அடங்கிவிட்ட காலத்திலும் இந்தப் புத்தகத்தைப் படிப்பது புதிய அனுபவமாகதான் இருக்கிறது.

இன்றைய காலகட்டத்தில் இந்தக் கதையை ஒட்டி  ஒரு அமெரிக்க மாப்பிளைக்கும் தென்னிந்தியப் பெண்ணும் கல்யாணம் செய்வதுபோல ஒரு திரைப்படம் எடுப்பது கூட ஒரு நல்ல
முயற்சியாக இருக்கும் என நினைக்கிறேன். பார்க்கலாம்.

கதையில் கல்யாணம் அமெரிக்காவில் பல வேடிக்கைகளுக்கு நடுவே நடந்தாலும் 50 ஆண்டுகளுக்கு முன்  நடந்த ஒரு வைணவ கல்யாணத்திற்கு போய் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தி வயிராறக் கல்யாண சாப்பாடு சாப்பிட்டு வந்த திருப்தியைக் கதை வாசகனுக்குத் தருகிறது. நேரமிருந்தால் கண்டிப்பாக வாசியுங்கள்.
மின்னூல் இணையத்தில் இலவசமாகவே கிடைக்கிறது. அப்புற மென்ன?  ஜமாயுங்கள்.

4 comments:

  1. அவசியம் வாசிப்பேன் நண்பரே
    நன்றி

    ReplyDelete
  2. உங்களின் வருகைக்கு நன்றி!!

    ReplyDelete
  3. This has been already produced as a drama with lead actor Sachu in early 90's.. YouTube it.. very comedy drama...

    ReplyDelete