Monday, November 12, 2018

மறப்போம்... மன்னிப்போம்

துபாயிலிருந்து கிளம்பி நீயூயார்க் விமானநிலையத்தில்  வந்து
இறங்கி பெட்டியைத் தேடினால்  அதிர்ச்சி. செக்கின் செய்த இரண்டு பெட்டிகளில் ஒன்று வந்து சேரவில்லை. விமானத்தில் ஏற்றிய கடைசி பெட்டி 
வெளியே வரும் வரை பொறுத்து பொறுத்துப் பார்த்து காத்திருந்துதான் மிச்சம். கடைசிவரை பெட்டி  வரவில்லை. கூடவே அகோர பசி வேறு. விதியை  நொந்தபடி அங்கே இங்கே என விசாரித்து  ஒருவழியாக காணவில்லை என வாடிக்கையாளர் சேவையில் புகார் தந்துவிட்டு வீடு வந்து சேர்ந்தேன்.

வீட்டுக்கு வரும்போது நள்ளிரவு 1 மணி.  24 மணி நேரப்பயணக் களைப்பு.
அசதியில் படுக்கையில் விழுந்து காலையில் அலுவலகத்துக்கு கிளம்பலாம் என எழுந்தால் அடுத்த அதிர்ச்சி. பல் துலக்க, சவரம் செய்ய,குளிக்க எனத்
தேவையான எல்லாம் காணாமல் போன பெட்டியில் மாட்டிக்கொண்டது.

வேறு வழி ? வீட்டில் இருந்த பழைய பேஸ்டை தேடி எடுத்து பிதுக்கி துவம்சம் செய்து பல் துலக்கினேன். விடுமுறைக்கு பின் அலுவலகம் போவது பெருங்கொடுமை அதுவும் இரண்டுநாள் தாடியோடு போவது ?
காலையில் திறந்தும் திறக்காமலும் இருந்த கடையில் முதல் ஆளாக
நின்று 'அத்தியாவசிய'ங்களை (essentails) வாங்கி ஒருவழியாக வேலைக்குப் போய் சேர்ந்தேன்.

பெட்டி காணாமல் போன மூன்றாவது நாள் கண்டுபிடித்துவிட்டோம்
என வீட்டுக்கு பெட்டியை அனுப்பியிருந்தார்கள். பெட்டியில் இருந்த
பொருட்களை சரிபார்த்த கையோடு 'அத்தியாவசியம்' என முதல்நாள்
வாங்கிய ரசீதைத் தேடி எடுத்தேன்.  உங்களுடைய கவனக்குறைவால் தான் இதெல்லாம் வாங்க நேரிட்டது, கூடவே மனஉலைச்சல் வேறு  எனச் சொல்லி
நஷ்டஈடு கேட்டு அந்த ரசீதை விமானசேவை நிறுவனத்திற்கு அனுப்பிவைத்தேன்.

எந்தக் கேள்வியும் கேட்காமல் அதற்கான முழுத்தொகையையும் காசோலையாக அனுப்பியவர்கள் கூடவே ஒரு வருத்தக்கடிதத்தையும் சேர்த்து அனுப்பியிருக்கிறார்கள். போனால் போகிறார்கள். மறப்போம்.  மன்னிப்போம். :)

#கஸ்டமர்_கஷ்டங்கள்

1 comment:

  1. வருத்தம் தெரிவித்ததோடு. தொகையையும் அனுப்பியுள்ளார்களே
    பாராட்டுவோம்

    ReplyDelete