Sunday, March 24, 2019

டிரங்க் பொட்டி - எழுத்தாளர் பால கணேஷ்

காலம் அதிவேக ரயிலாக முடிவிலியை நோக்கி  விரையும்
இன்றைய அவசர உலகில் எதையும் நிறுத்தி நிதானமாக யோசிப்பதற்கு
கூட அவகாசமில்லை. இந்தச் சூழலில் கடந்த கால மனிதர்களைப்
பெருமையோடு நினைத்துப் பார்ப்பதும் அவர்கள்  வாழ்வை ரசனையோடு கொண்டாடுவதையும் நேரவிரயம் என்றே பலர் நினைப்பார்கள்.. ஆனால் அதையெல்லாம் புறந்தள்ளி முகநூல் நண்பர் பால கணேஷ் நாமெல்லாம் ஆச்சர்யப்படும் வகையில் டிரங்க் பொட்டி எனும் புதையலை திறந்து நம் கண் முன் வைத்திருக்கிறார்.

கணேசுக்கு தனது தாத்தாவின் மறைவுக்குப் பின் அவர் ரகசியமாக பாதுகாத்த டிரங்க் பெட்டியைத் திறந்து பார்க்கும்  வாய்ப்பு  கிடை த்திருக்கிறது. அதில் அவர் தாத்தா அள்ள அள்ள குறையாமல் சுரக்கும் அமுதசுரபி போல பல அற்புத விசயங்களை சேகரித்து வைத்து இருந்ததைப் பார்த்து கணேஷ் கண்கள் விரிய ஆச்சர்யப்பட்டிருக்கிறார். அந்த ஆச்சர்யத்தை டிரங்க் பெட்டி புத்தகம் வழியாக நமக்கும் கடத்தியிருக்கிறார்.

கணேஷ் கண்டெடுத்த ஆச்சர்யம் விலை உயர்ந்த நகையோ, செல்வமோ
அல்ல. மாறாக விலை மதிக்கமுடியாத பழைய புத்தகங்கள், அன்றைய நாணயங்கள், ஓலைச்சுவடிகள், திருமண அழைப்பிதழ்கள்,
பாத்திரங்கள், மரப்பாச்சி பொம்மைகள், பேனா, பழைய முகத்தல் அளவை சாமான்கள், விளம்பர நோட்டீசுகள் என எல்லாம் அந்தகால சாமான்கள். இந்தப் புத்தகம் அவற்றைப் பட்டியல் மட்டும் போடும் ஒரு சிறு குறிப்பாக இல்லாமல் அவற்றைப் படத்தோடு அதன் பின்புலத்தைக் கதையாக சுவாரசியமாக வாசிக்கும்படி சிறு புத்தகமாக வந்திருக்கிறது. தமிழில் இது நல்ல முயற்சி. அனைவராலும் பாராட்டப்பட வேண்டிய ஒன்று.

அன்றைய மக்கள் மதிப்பீடுகள், வாழ்க்கை முறை,
அன்று தமிழ் பொதுவெளியில் எழுதப்பட்டவிதம் என புத்தகத்தைப் பல நம்மால் கோணங்களில் அணுகமுடிகிறது. எடுத்துக்காட்டாக இதில் குறிப்பிடப்பட்டுள்ள 1864இல் மசூலிப்பட்டினத்தைச் சுனாமி  தாக்கிய சம்பவம் இன்று இணையத்தில் தேடினாலும் கிடைக்கவில்லை. இதுபோன்ற பல அரிய தகவல்கள் புத்தகத்தில் கொட்டிக்கிடக்கின்றன.

உண்மையில் நாம்  இப்படித்தான் அன்றைய வெகுஜன மக்களின் வரலாற்றைக் கட்டியமைக்க வேண்டியிருக்கிறது. மேற்கு நாடுகளில் family bible எனும் பெயரில் குடும்ப வரலாறு எழுதும் வழக்கமிருக்கிறது. அதாவது ஒரு குடும்பத்தினர் வழிவழியாக தங்கள் குடும்பத்தின் வரலாற்றை எழுதி ஆவணப்படுத்தி அடுத்தத் தலைமுறைக்கு பயன்படும் வகையில் விட்டுச் செல்கிறார்கள். இப்படிச் செய்வதால் ஒரு குடும்பத்தின் மரபு,  பழக்க வழக்கங்கள்,வட்டார மொழி,  உணவு, உடை, முக்கிய நிகழ்வுகள், அன்றைய வாழ்க்கைமுறை போன்ற பல அரியதகவல்கள்  நூற்றாண்டுகள் கடந்து அடுத்தத் தலைமுறைக்குச் சென்றுசேர வாய்ப்பிருக்கிறது.

பால கணேஷின் டிரங்க் பொட்டி புத்தகம் ஒருவிதத்தில் குடும்ப பைபிள் என்று கூட சொல்லலாம். கூட்டுக் குடும்பங்கள் ஓழிந்து நகரமாயான இன்றையச் சூழலில் அடுத்த தலைமுறைக்கு நமது மரபின் தொடர்ச்சியைச் சொல்ல   அனைவரும் நமது வீட்டின் டிரங்க்பெட்டிகளைத் தேடி திறந்து காட்டவேண்டிய தருணம் இது.

வாழ்த்துகள் பாலகணேஷ் !!, முடிந்தால் அழகான வண்ணப்படங்களோடு அனைவருக்கும் பயன்படும் வகையில் டிரங்க் பெட்டியை இணையத்தில் வெளியிடமுடிந்தால் மேலும் சிறப்பாக இருக்கும்

நூல் : டிரங்க் பொட்டி
ஆசிரியர் : பாலகணேஷ்
பதிப்பகம்: தங்கத் தாமரை பதிப்பகம்
விலை: ரூ. 80


1 comment:

  1. உங்களின் முகவரியை எனக்கு writersuprajaa@gmail.com க்கு அனுப்பவும்.

    ReplyDelete