Sunday, April 21, 2019

ஓத்தெல்லோ

நான் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படித்தவனில்லை. அதனால்  வில்லியம் சேக்ஸ்பியரின் படைப்புகளை ஆழ்ந்து வாசிக்கும் வாய்ப்பு
இதுவரைக் கிடைக்கவில்லை.

இன்று அப்படி ஆர்வத்தோடு அவர்படைப்புகளை வாசிக்க நினைப்பவர்களுக்கு உள்ள பெரிய சிக்கல் மொழி என்றே நினைக்கிறேன். ஏறக்குறைய நானூறு ஆண்டுகள் பழைமையான அந்தப்  படைப்புகளை நேரடியாக அவருடைய மொழியில் வாசித்து புரிந்துகொள்வது கொஞ்சம் சிரமமே.  சமயங்களில் பேராசிரியர்களின் துணைகூட தேவைப்படலாம்.  ஆனாலும், இன்றுவரை ஆங்கிலத்தின் மிகப் பெரும் மொழி ஆளுமையாகவும் ஆதர்சனமாக சேக்ஸ்பியர்  உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறார். அவருடைய சானட் எனும் பல செய்யுள்களும் ரோமியோ ஜூலியட், மக்பெத், ஜூலியஸ் சீசர் போன்ற புகழ்பெற்ற பல நாடகங்களும் இன்றும் பெரிதும் சிலாகித்துப் பேசப்படுகின்றன.

சமீபத்தில் அவருடைய ஒத்தெல்லோ நாடகத்தை இன்றைய பொழிப்புரையோடு சேர்ந்து வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது.  முன்னிலை பாத்திரங்களாக கறுப்பின மூர் படைத் தளபதி ஒத்தெல்லோவும் அவனது
அழகான இளம் மனைவியாக டெஸ்டிமோனாவும் வருகிறார்கள்.
மேலோட்டமாக பார்த்தால் இனச்சண்டை, நிறச்சண்டைகள் நிறைந்த ஒரு காதல்கதை.  அதில் பொறாமையும் பெண் பித்தும்  ஒருவனை எவ்வாறு அழித்து, மற்றவர்களின் வாழ்க்கையையும் சீரழிக்கும்  என்பதை இயாகோ
எனும் ஒரு சிக்கலான பாத்திரப் படைப்பின் மூலம் மிக அற்புதமாக சொல்லியிருக்கிறார்.  அதுபோல அழகான குடும்பவாழ்வில் மூன்றாம் மனிதனால் கிளம்பப்படும் சந்தேகப்புயல் எப்படி ஒருவனுடைய வாழ்வை  சிதைத்து சின்னாபின்னப்படுத்துகிறது என்பதையும் ஆழமாக சொல்லியிருக்கிறார்.

நாயகி டெஸ்டிமோனாவின் வழியாக கணவனால் வெறுத்து ஒதுக்கப்படும் பெண்களின் மன ஓட்டத்தையும் உணர்வுப்பூர்வமாக கடத்தியிருக்கிறார்.
மற்றபடி அந்த நூற்றாண்டுக்கே உரித்தான பெண்ண்டிமைத் தனமான கண்ணோட்டத்துடன் கூடிய வசனங்களைக் கடந்து பார்த்தால் பல மேற்கோள்கள் சிந்திக்கத் தூண்டுபவை. என்னைக் கவர்ந்த சில

"Unkindness is powerful. His unkindness may kill me, but it will never destroy my love " 

"என்னுடைய நன்மதிப்பை  நீ  திருடினால் செல்வந்தன் ஆவதில்லை,
உண்மையில்  அதனால்  உனக்கு எதுவுமே கிடைக்கப்போவது இல்லை.
ஆனால், அது என்னைப் பரம ஏழை ஆக்குகிறது."

"Guilty speak volumes even when they are silent."

"The winner's always got the last laugh, hasn't he ?."

குடும்பப் பெண்களை விலைமகளாக சித்திரிக்கும் இயாகோக்குளும் அதைக் கேட்டு மனைவியைக் கொலைசெய்யத் துணியும் ஒத்தெல்லோக்களும்  இருக்கும் வரை சேக்ஸ்பியரின்
"ஒத்தெல்லோ" பேசப்பட்டுக்கொண்டே இருக்கும் என்றே நினைக்கிறேன்.

படங்கள்- நன்றி, இணையம்


Title - No Fear SHAKESPEARE (OTHELLO)
Publisher - A Barnes & Noble Publication

1 comment:

  1. வீர கடம்ப கோபு முத்துசாமிApril 22, 2019 at 10:20 PM

    ஒதெல்லோ அல்ல
    ஓத்தெல்லோ

    ReplyDelete