Wednesday, December 25, 2019

இர்மா- அந்த ஆறு நாட்கள்

நண்பர்களுக்கு ஓர் இனிப்பான செய்தி! .  கடந்த ஆண்டு எனது  'அந்த ஆறு நாட்கள்'  (புதினம்/நாவல்)  அமெசான் கிண்டிலில்   வெளியானது  
உங்களுக்கு நினைவிருக்கலாம்.

நீங்கள் விருப்பப்பட்டது போல அந்தப் புத்தகம் இந்த ஆண்டு  எழுத்து பிரசுரத்தின் (ஸீரோ டிகிரி பப்ளிஷிங்) வழியாக அச்சுப் புத்தகமாக வெளியாகிறது.  தலைப்பை மட்டும் 'இர்மா- அந்த ஆறு நாட்கள்' எனக் கொஞ்சமாக மாற்றியிருக்கிறோம். வண்ணமயமான புதிய அட்டைப்படம் தந்திருக்கிறோம். 

பிறகு, நூலை மீண்டும் மீண்டும் வாசித்து பிழைகளைத் தேடி திருத்தம் செய்திருக்கிறோம்.  அதுபோல,  நூலின் பின் அட்டையில் நூல் குறிப்பு, முன் அட்டையில்  வாசகர்களின்  ஒப்புதல்கள் மற்றும் மதிப்புரைகள்  (endorsements and reviews ) போன்றவற்றையும் சேர்த்திருக்கிறோம். மற்றபடி, அதே உள்ளடக்கம்.  இது எனக்கு நான்காவது நூல். 

நவீன இலக்கியத்தின் பிதாமகர் எனப் போற்றப்படும் சி.சு.செல்லப்பா
தொடங்கிய  ‘எழுத்து பிரசுரம் பெயரில் இந்த நூல் வெளிவருவதைப் பெருமையாக நினைக்கிறேன்.  

அமெசான் மின்னூலாக வந்தபோது புத்தகத்தை வாசித்து உற்சாகப்படுத்திய  நண்பர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி. ஜனவரி புத்தகக் கண்காட்சியில் கிடைக்க ஏற்பாடுகளைச் செய்திருக்கிறார்கள். 'இர்மா... இனி உங்கள் கைகளில்.



Monday, December 9, 2019

அமெசான் - லாஸ் வேகாஸில் நடத்திய மாபெரும் மாநாடு!

அமெசானின் துணை நிறுவனம் லாஸ் வேகாஸில் நடத்திய மாநாடு ( AWS-re:Invent)  முடிந்து வீடு திரும்பிவிட்டேன்.  மொத்தமாக ஐந்து நாட்கள் நடந்த   இந்த மாநாட்டுக்கு ஆஸ்திரேலியா, ஜப்பான், அயர்லாந்து என எண்ணிலடங்காத நாடுகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான தொழில்நுட்ப நிபுணர்கள் கலந்து கொண்டார்கள். நல்ல கூட்டம்.  கலந்து கொண்டவர்களின்  எண்ணிக்கை  60 ஆயிரத்தைத் தாண்டும் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

இந்தக் கூட்டத்தால் லாஸ் வேகாஸ் குலுங்கியது என்றேல்லாம் சொல்லிவிட முடியாது. ஏனேன்றால் அந்த நகரில் இதுபோல பல மாநாடுகள் ஆண்டு முழுவதும் தொடர்ச்சியாக நடந்தபடியிருக்கின்றன.  அதனால், நகர் எப்போதும் விழாக்கோலத்துடன் ஒருவித கொண்டாட்ட மனோநிலையிலேயே இருக்கிறது.  அடுத்து ரோடியோ எனும்  குதிரைச் சவாரி செய்பவர்களுக்கான விழா தொடங்கிவிட்டதால் நகர் முழுவதும்  'கொவ் பாய்' தொப்பியில் ஆண்களையும், பெண்களையும் பார்க்க முடிந்தது.

ஏடபுள்யூஎஸ் (AWS) விழாவில் கலந்துகொண்டவர்கள் தும்மல் வந்தால் "ஹச்.. ஹச்" எனத் தும்மாமல் "அமெசான்... அமெசான்" எனத் தும்மிவிடுவார்களோ எனச் அச்சப்படும் அளவுக்கு ஐந்து நாட்களும் AWS பற்றி பேசித் தீர்த்துவிட்டார்கள்.

உண்மையில் இணையவர்த்தகத்தில் கோலோச்சிக்கொண்டிருந்த அமெசான் தனது சொந்த உள்கட்டமைப்பின் செயல்திறனை மேம்படுத்த உருவாக்கியதே அமேசான் வெப் சர்வீசஸ் (AWS) எனும் தொழில்நுட்பம். ஆனால், அது  இன்று மேகக்கணினி எனும் Cloud Computing துறையில்  உலகையே உள்ளங்கைக்குள் கொண்டு வரும் அளவுக்கு பிரம்மாண்டமாக வளர்ந்து நிற்கிறது.

 2006-ல் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்ட AWS சேவை இன்று அமேசானின் மொத்த காலாண்டு விற்பனையில் சுமார் 10 சதவீதத்தைக் கையில் வைத்திருக்கிறது.

பொதுவாக மாநாட்டில் கணிசமான அளவு இந்தியர்களைப் பார்க்க முடிந்தது.  அதில் பல நிறுவனங்களின் உயர் பொறுப்பில் இருப்பவர்களும் அடக்கம்.  கடைசி நாளில் நெதர்லாந்தில் இருந்து வந்த பேராசியர் ஒருவரிடம் பேசி கொண்டிருந்தபோது பேச்சுனூடாக "இந்திய மக்கள் தொகை சுமார் 1.3 பில்லியன்.  அதுமட்டுமல்லாமல் தொழில்நுட்பத்திலும் வல்லவராக இருக்கும் இந்தியர்கள் ஏன் இதுபோல் ஒரு தொழில்நுட்ப நிறுவனத்தை இதுவரைத்  தொடங்கவில்லை ? " என்றார்.  நான் பதிலாக  "ஆமாம், இதுவரைத் தொடங்கவில்லை" என்றேன். அதைவிடுத்து அவரிடம்  நமது கல்விச் சூழல்
குறித்தெல்லாம் விளக்கிக் கொண்டிருக்க முடியுமா என்ன ?


Sunday, November 10, 2019

அடுத்த உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு எங்கே ? (10-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு-10)

சிகாகோவில் (2019 ஜுலை) நடைபெற்ற "10-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு" தொடர்பாக கடந்த மூன்று மாதங்களாக நான் எழுதிய அனைத்துக் கட்டுரைகளையும் இதுவரைப் பொறுமையாக வாசித்தவர்களுக்கு நன்றி. நாம் அதன் இறுதிப்பகுதிக்கு வந்திருக்கிறோம்.


நான் முன்பே சொன்னதுபோல அமெரிக்கா வாழ் தமிழர்கள் ஒன்றுகூடி தமிழ்ச்சங்கப் பேரவையின் ஆண்டுவிழாவுடன் சிகாகோ தமிழ்ச்சங்கத்தின் பொன்விழாவையும் 10-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டையும் சேர்த்து இந்தஆண்டு முப்பெரும் விழாவாக  வெற்றிகரமாக நடத்தி முடிந்திருக்கிறார்கள். 

வழக்கமான பேரவை விழாவுடன் இந்த முறை ஆராய்ச்சி மாநாடு  இணைந்த்தால் தமிழுடன், கலையும் சேர்ந்துகொண்டது. 

அதனால் சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா, மொரிசியஸ், தென் அமெரிக்கா, கனடா, இலங்கை, நார்வே, இங்கிலாந்து எனப் பற்பல நாடுகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள். இந்த நிகழ்ச்சிகளை பல நூறு தன்னார்வத் தொண்டர்கள் சிறு சிறு குழுக்களாக பிரிந்து இரவு பகலாக உழைத்து இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் கண்டிப்பாக பாராட்டுக்குரியவர்கள்.

பேரவை விழா பற்றி விசாரித்த நண்பர் ஒருவர் "வழக்கம் போல மெல்லிசை, இன்னிசை, பட்டிமன்றம், கவியரங்கம் தாண்டி வேறென்ன புதுசா ?" எனக் கேட்டிருந்தார். இன்னொருவர் "இந்த வருசமும் புடவை, மளிகை கடைகள் உண்டா ? " என நக்கலடித்திருந்தார். அவர்களுக்கு நான் சொல்வது ஒன்றுதான், தமிழ்ச் சங்கப் பேரவையின் ஆண்டுவிழா என்பது அமெரிக்காவில் வாழும் தமிழர்கள் ஒன்றுகூடிக் கொண்டாடும் திருவிழா. வயது வித்தியாசமின்றி அனைவரும் தமிழர்கள் எனும் ஒற்றைப் புள்ளியில் இணைந்து தமிழ் பாரம்பரிய நிகழ்வுகளைக் கொண்டாடி மகிழ்கிறார்கள். திருவிழா என்றாலே மகிழ்ச்சியும், கொண்டாட்டமும் தானே.


பல்லாண்டுகளாக வெளிநாட்டில் வாழ்ந்தாலும் பலர் மரபுக்கலைகளை மறவாமல் தாங்கள் கற்பதோடு மட்டுமில்லாமல் அடுத்தத் தலைமுறையினருக்கும் பயிற்றுவித்திருக்கிறார்கள். குறிப்பாக ஒயிலாட்டம், கரகம், சிலம்பம், தப்பாட்டம்,நாதசுவரம் என தமிழகத்தில் வழக்கொழியும் கலைகளை ஊக்குவிக்கும் வகையில் பல தமிழக நாட்டுப்புற கலைஞர்களை அழைத்துவந்து இங்கே மேடை ஏற்றியிருந்தார்கள். 300 இசைக்கலைஞர்கள் இணைந்து "முரசு-சேர்ந்திசை" எனும் தலைப்பில் தமிழ் இலக்கியப் பாடல்களுக்கு இசையூட்டிய நிகழ்ச்சி உலகத் தரம்.


நிறைவாக ஒன்று, தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் வரலாற்றில் முற்றிலும் தன்னார்வத் தொண்டர்களால் ஒருங்கிணைக்கப்பட்டு நடந்து முடிந்த விழா இதுவாக இருக்கும் என்பதை மீண்டும் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன். 

வழக்கமாக தமிழ்ஆராய்ச்சி மாநாட்டின் நிறைவு நாளில் அடுத்த மாநாட்டு நிகழ்வை அறிவிப்பது வழக்கம். அந்த வகையில் 11-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு தமிழகத்தில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அது திட்டமிட்டபடி சிறப்பாக  அரசியல் இலாபமின்றி தமிழுக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் நிகழ வாழ்த்துவோம்.

குறிப்பு- இந்தக் கட்டுரைத் தொடரின் முதல் கட்டுரையை இங்கிருந்து வாசிக்கத்தொடங்கலாம். 

Wednesday, October 30, 2019

படிக்கவேண்டிய 100 தமிழ்ப்புத்தகங்கள் (10-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு-9)

இந்தத் தொடரின் முந்தையக் கட்டுரையை (8) இங்கே வாசிக்கலாம்.

வழக்கமாக பேரவை விழாவில் கலந்துகொள்ளும் விருந்தினர்களுக்கு  விழா மலர் அன்பளிப்பாக வழங்குவது மரபு. அந்தப் பேரவைவிழா மலரின் ஆசிரியர் குழுவில்  இந்தஆண்டு  உறுப்பினராக இருந்தேன்.  பேரவை மலருடன் பல ஆண்டுகள் தொடர்பிருந்தாலும் உறுப்பினராக மலர்க் குழுவுடன் இணைந்தது இதுவே முதல்முறை.

அதனால் பல மாதங்களாகவே விழா குழுவினருடன் தொடர்பில் இருந்தேன். சரியாக சொல்வதென்றால் இந்த ஆண்டு (2019) பிப்ரவரியில் இருந்தே அதற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கிவிட்டன. உலகின் பல நாடுகளில் இருந்து   விழாவின் கருப்பொருளுக்கு ஏற்றவகையில் படைப்புகளை வரவேற்பது, தேர்வு செய்வது, பிழை திருத்துவது, நெறிமுறைகளைச் சரிபார்ப்பது என பல வேலைகள் இருந்தன.

இவற்றைச் செய்து முடிக்க உறுப்பினர்கள் அனைவரும்  வாரம் ஒருமுறை தொலைபேசி பல்வழி இணைப்பில் சந்தித்தோம். பிறகு நாட்கள் நெருங்க நெருங்க அது வாரம் இருமுறை என்றுகூட ஆனது. குழு உறுப்பினர் எனும் வகையில் நான்  இணைந்து செயல்பட்ட பல பணிகளில் குறிப்பிட்டு சொல்ல வேண்டியது இரண்டு. ஒன்று சமூக வலைதளங்களில் பகிர மார்கெட்டிங் அணியுடன் இணைந்து ஃபிளையர்கள் தயார் செய்து பகிர்ந்தது. அடுத்தது தமிழில் சிறந்த 100 நூறு புத்தகங்கள் எனும் பட்டியல் தயாரிப்பை ஒருங்கிணைத்தது.

இந்தியாவில் இருந்து கிராபிக் வல்லுனர்கள் வடிவமைத்த பல ஃபிளையர்களில் சிறந்த இரண்டைத் தேர்ந்தேடுப்பது என்பது பாலுமகேந்திராவின் படங்களில் சிறந்த ஒளிப்பதிவைத் தேர்தெடுப்பது போல கடினமான வேலை இல்லை என்பதால், வந்த ஃபிளையர்களில் சிறந்த இரண்டை மட்டும் குழுவினரின் பார்வைக்கு அனுப்பி அவர்களின் ஒப்புதலைப் பெற்று வெளிச்சுற்றுக்கு அனுப்பினோம்.

அடுத்தது படிக்கவேண்டிய 100 தமிழ்ப்புத்தகங்களின் பட்டியல் ஒன்றைத்  தயார் செய்யவேண்டும் என்ற போதே மலர்க்குழுவில் இருந்த
நாங்கள் அனைவரும் மலைத்தோம். தயாரிக்கும்போதும் கண்டிப்பாக அதன் கனத்தை அனைவரும் உணர்ந்தோம். விண்மீன்களில் சிறந்த நூறைத் தேர்தெடுப்பதுபோல  அது சவாலான ஒன்றாகத்தான் இருந்தது.

முக்கியமாக தமிழில் சிறந்த நூறு புத்தகங்கள் எனும் போது திருக்குறள், சிலப்பதிகாரம் என்றில்லாமல் நவீன எழுத்துகளை அடையாளப்படுத்த நினைத்தோம். அதனால், கடந்த 100-120 ஆண்டுகள் எனும் வரையறையில் சிறப்பான படைப்புகளைத் தேர்ந்தேடுக்க முடிவுசெய்தோம். அதைப் புதினம் (50), கவிதை (25), புதினம் இல்லாதவை (25) என மூன்றாக பிரித்துக்கொண்டோம்.  இந்த வேலையில் எனது புனைவிலக்கிய பரிச்சயம் கண்டிப்பாக கைகொடுத்தது.  சிறந்த கவிதைத் தொகுப்புகளை அடையாளம் காணும் முயற்சியில் மரியாதைக்குரிய நண்பர் கவிஞர் ஜெயதேவனும் உதவி செய்தார். அவருக்கு எனது அன்பும் நன்றியும்.

புத்தகப் பட்டியல் -விழா மலரில் இருந்து...






முக்கியமாக இது தரவரிசைபட்டியல் இல்லை.  மலர்க்குழுவின் ஒரு வழிகாட்டுதல் மட்டுமே என்பதை அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும் .
இந்தப் பட்டியல் வாசகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் என நம்புகிறோம். இந்தப் பட்டியலில் விடுபடல்கள்  இருக்க வாய்ப்பு உண்டு.

புதின (நாவல்) வரிசை எழுத்துரு வடிவில் கீழே


#  புத்தகம் ஆசிரியர்
1 புயலிலே ஒரு தோணி ப சிங்காரம்
2 ஒரு புளிய மரத்தின் கதை சுந்தர ராமசாமி
3 கரைந்த நிழல்கள் அசோகமித்திரன்
4 மோகமுள் தி ஜானகிராமன்
5 சில நேரங்களில் சில மனிதர்கள் ஜெயகாந்தன்
6 கோபல்ல கிராமம் கி ராஜநாராயணன்
7 சாயாவனம் சா கந்தசாமி
8 பொன்னியின் செல்வன் கல்கி
9 உப்பு நாய்கள் லக்ஷ்மி சரவணக்குமார்
10 ஆழி சூழ் உலகு ஜோ டி குரூஸ்
11 வாடிவாசல் சி சு செல்லப்பா
12 உப பாண்டவம் எஸ் ராமகிருஷ்ணன்
13 விஷ்ணுபுரம் ஜெயமோகன்
14 கரிப்பு மணிகள் ராஜம் கிருஷ்ணன்
15 இரும்பு குதிரைகள் பாலகுமாரன்
16 கோவேறு கழுதைகள் இமையம்
17 ஸீரோ டிகிரி சாரு நிவேதிதா
18 கடல்புரத்தில் வண்ணநிலவன்
19 நாளை மற்றோரு நாளே ஜி நாகராஜன்
20 வெக்கை பூமணி
21 கிருஷ்ணபருந்து ஆ மாதவன்
22 வானம் வசப்படும் பிரபஞ்சன்
23 குருதிப்புனல் இந்திரா பார்த்தசாரதி
24 சோளகர் தொட்டி ச பாலமுருகன்
25 காவல் கோட்டம் சு வெங்கடேசன்
26 எட்டுத்திக்கும் மதயானை நாஞ்சில் நாடன்
27 பசித்த மானுடம் கரிச்சான் குஞ்சு
28 சாய்வு நாற்காலி தோப்பில் முகமது மீரான்
29 தரையில் இறங்கும் விமானங்கள் இந்துமதி
30 கூளமாதாரி பெருமாள் முருகன்
31 ஒருநாள் க நா சுப்ரமணியம்
32 தலைமுறைகள் நீல பத்மநாபன்
33 நாகம்மாள் ஆர் ஷண்முகசுந்தரம்
34 அஞ்சலை கண்மணி குணசேகரன்
35 புத்தம் வீடு ஹெப்சிபா ஜேசுதாசன்
36 வாசவேஸ்வரம் கிருத்திகா
37 ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள் தமிழவன்
38 வேள்வித்தீ எம் வி வெங்கட் ராம்
39 சித்திரப் பாவை அகிலன்
40 புதுமைப்பித்தன் கதைகள் புதுமைப்பித்தன்  
41 கமலாம்பாள் சரித்திரம் ராஜம் அய்யர்
42 அகல் விளக்கு மு.வ.
43 நைலான் கயிறு சுஜாதா 
44 அபிதா லா சா ராமாமிர்தம்
45 நல்ல நிலம் பாவை சந்திரன்
46 ரத்த உறவு யூமா வாசுகி
47 மலரும் சருகும் டி செல்வராஜ்
48 பிரதாப முதலியார் சரித்திரம் மாயூரம் வேதநாயகம் பிள்ளை
49 கூகை சோ தர்மன்
50 கருக்கு பாமா


அடுத்தப் பதிவு 10-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு பற்றிய இறுதிப் பதிவாக இருக்கும்.

Wednesday, October 23, 2019

ஓஷோ எனும் ஆளுமை

சமயங்களில் சில புதிய மனிதர்களைச் சந்திக்கும் போது இவரை எப்படி  இத்தனை நாள் தெரிந்து கொள்ளாமல் இருந்தோம்  (நல்ல விதத்தில்)  என நினைக்கத் தோன்றும் . அப்படி சமீபத்தில் வாசிக்கும்போது தோன்றிய புத்தகம் "Osho's Emotional Wellness" (Transforming Fear, Anger, and Jealousy Into Creative Energy)  தமிழில் நேரடியாக  "உணர்ச்சி ஆரோக்கியம்" (எப்படி பயம், கோபம், பொறாமையைப்  படைப்பு ஆற்றலாக மாற்றுவது)  எனச் சொல்லலாம்.

நமது தினசரி பிடுங்கல்களில் இருந்து கொஞ்சம் விலகி நின்று வாழ்வைச் சற்று உள்ளார்ந்த பார்வை பார்க்க வைக்கும் புத்தகம்.

நம் அன்றாட வாழ்வின் மிகப்பெரிய சிக்கலே வாழ்க்கையை வாழ்வதுதான்.
உண்மையில் உள்ளே என்ன  நினைக்கிறோம். எதை வெளியே சொல்கிறோம்.  அதை எப்படிச் சொல்கிறோம்.  என நொடிக்கு நொடி நமக்குள் பல கேள்விகள் பல அடக்குமுறைகள்.  சமயங்களில் நம் உண்மையான உணர்வுகளை வெளிப்படுத்துவதன் மூலம், நெருக்கமானவர்களைக் காயப்படுத்திவிடுகிறோம்.  இல்லை சொன்னால் அவர்களிடமிருந்து அந்நியப்படுவோம் என அஞ்சி சிலதைச் சொல்லாமல் மறைக்கிறோம். அந்தவகையில் எது சரி, எது தவறு. அதை யார் சொல்வது எனும் பல குழப்பங்களுக்கு விடை காண முயலும் ஒரு புத்தகம் இது என்றும் சொல்லாம்.

குறிப்பாக மானுட வாழ்வின் கசடுகளைப் பற்றி ஓஷோ எனும் ரஜனீஷ் பல புத்தகங்களை எழுதியிருப்பதாக அறிகிறேன். அந்தவகையில் இந்தப் புத்தகத்தில் மானுடத்தை உடல், புத்தி, இதயம் (body,mind,heart) என மூன்றாகப் பிரித்து அதன் போக்கையும் அழகாகச் சொல்கிறார். அதனூடாக ஆண், பெண் உறவுச் சிக்கலையும் அவர் சொல்லத் தவறவில்லை. அதுபோல மனிதர்கள் ஒவ்வொரும் தனித்துவமானவர்கள். அதனால், நம்மை நாமே தினம் தினம் சக மனிதர்களுடன் ஒப்பீடு செய்துகொண்டு பொறாமை பிடித்து வாழ்வது முட்டாள் தனமான செயல் எனவும் சாடுகிறார்.

பொறாமை குறித்து ஓரிடத்தில் "நல்லவேளை நீ மரங்களுடன்   உன்னை ஒப்பிட்டுக்கொள்ளவில்லை.  அப்படி செய்திருந்தால் நீ மிகுந்த  பொறாமை பட்டிருப்பாய். நான்  மட்டும் ஏன்  பச்சையாக இல்லை. எனக்கு மட்டும் ஏன் பூக்களைத் தாங்கும் சக்தி இல்லை என்றெல்லாம் கூட பலவாறு நீ வருத்தப்பட்டிருப்பாய். 

அதுபோல நல்லவேளையாக பறவைகளோடும், ஆறுகளோடும், மலைகளோடெல்லாம்  நீ  உன்னை ஒப்பிட்டுக் கொள்ளவில்லை. அப்படிச் செய்திருந்தாலும் நீ  இன்னமும் மிகுந்த வேதனை பட்டிருப்பாய்.

நல்லவேளை  மனிதர்களோடு மட்டும் நீ உன்னை ஒப்பிட்டுக்கொள்கிறாய். உண்மையில்  நீ அப்படித்தான் பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறாய். இல்லையென்றால் நீ தினம் தினம்  உன்னை ஆடும் மயிலோடும், பேசும் கிளியோடும் ஒப்பிட்டு ஒப்பிட்டு பொறாமையால் வெந்திருப்பாய்.  ஒருகட்டத்தில் அந்தப் பொறாமையின் கனம் தாங்காமல்  நீ செத்து ஒழிந்திருப்பாய்".

என பல தத்துவ விசாரணைகளைத் தூண்டும் புத்தகம். வாய்ப்பிருந்தால் வாசியுங்கள்.   முக்கியமாக நான் ஓஷோவின் எல்லா புத்தகங்களையும்
படித்து அவரை முழுமையாகப் புரிந்துகொண்டேன் என்றோ இல்லை அவர் சொல்வதை அப்படியே ஏற்றுக்கொள்கிறேன் என்றெல்லாம் சொல்ல முடியாது. ஆனால், இதை வாசித்தபின் ஓஷோ 20ம் நூற்றாண்டின் குறிப்பிடத்தகுந்த ஆளுமைகளில் ஒருவர் எனச் சொல்வதில் ஓரளவு உண்மையிருக்கிறது என்றே தோன்றுகிறது.

Tuesday, October 8, 2019

காந்தி குறித்த முதல் ஆவணப்படம்

அக்டோபர் 2 காந்தி பிறந்த நாள் - காந்தி குறித்து முதன் முதலில் ஓர் ஆவணப்படம் (டாக்குமெண்டரி) வெளியான ஆண்டு 1940. அதைத் தயாரித்து வெளியிட்டவர் ஒரு தமிழர். அவர் "உலகம் சுற்றும் தமிழன்" என அழைக்கப்பட்ட அ.கருப்பன் செட்டியார்.  ஏ.கே. செட்டியார் என்ற பெயரில் அறியப்பட்ட அவர் 1930களிலேயே ஜப்பான், ஐரோப்பா, அமெரிக்கா என உலகம் முழுமையும் சுற்றி திரிந்து தமிழில்  பல பயணக்கட்டுரைகளை எழுதியிருக்கிறார். அவர் குறித்த ஒரு புத்தகத்தை வாசித்துக்
கொண்டிருக்கிறேன்.

அவருக்கு காந்தி மேல் இருந்த அன்பாலும், பக்தியாலும்  காந்தி குறித்த
ஓர் ஆவணப்படம் எடுக்கவேண்டும் எனும் யோசனை வந்திருக்கிறது. ஆனால்,  அந்த யோசனைக்கு அப்போது இந்தியாவில்   அவர் நினைத்தது போல பெரிய ஆதரவு எதுவும் கிடைத்துவிடவில்லை. ஏன் சென்னையில் இருந்த பட தயாரிப்பு நிறுவனங்களே அவருக்கு உதவிசெய்ய முன்வரவில்லை. இது வெளிநாட்டில் படித்த  ஒரு இளைஞனின் கனவு என அவருடைய யோசனையைப் புறந்தள்ளின. அதுமட்டுமல்லாமல்  அது உலக அரங்கில் ஆங்கிலேயர்களின் கை ஓய்கி இருந்த சமயம். காந்தியைப் பற்றிய படம் என்பது ஏகாதிபத்தியத்துக்கு எதிரானதாகக் கருதப்பட்டது. ஆனால் காந்தி மேல் இருந்த அபரிதமான அன்பால் அந்த முழு நீளப்படத்தைத் தானே தனியாக பொருட்செலவு செய்து தயாரிப்பது என  உறுதியானதொரு முடிவை செட்டியார் எடுத்தார். ஏற்கனவே புகைப்படக்கலையில்  ஆர்வம் கொண்டிருந்த அவர் காந்திக்கு நெருக்கமான பல  நண்பர்களை, கட்சிக்காரர்களை ஆர்வமுடன் சந்தித்தார். பிறகு காந்தி குறித்த பழைய செய்திக் குறிப்புகளையும், படத்தொகுப்புகளையும் தேடி கல்கத்தா, பம்பாய், புனே என ஊர் ஊராக பல ஸ்டியோக்களை ஏறி இறங்கத் தொடங்கினார்.

அதுபோல காந்தி குறித்த வெளிநாட்டுப் படக்காட்சிகளைத் தேடி தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து, அமெரிக்கா, பிரான்ஸ் எனப் பல நாடுகளைச் சுற்றி திரிந்து சேகரித்திருக்கிறார்.  அதுமட்டுமல்லாமல் காந்தி குறித்து சுமார் 200 புத்தகங்களை வாசித்து பல அரிய தகவல்களையும் திரட்டியிருக்கிறார்.

1937இல் தொடங்கிய இந்தவேலை சுமார் 3 ஆண்டுகள்  கழித்து நிறைவடைந்திருக்கிறது. மொத்தமாக சுமார் 50,000 அடி நீளமுள்ள 
ஓளிபடங்களில் இருந்து 12,000 அடி நீளமுள்ள அந்த ஆவணப்படத்தைத் தயாரித்தார். மிகப் பெரிய நிதி நெருக்கடிக்கிடையிலும் அந்தப்  படத்திற்க்கு  அவர் பலரைத் தேடிப்பிடித்து பின்னணி இசை, பாடல்கள், விளக்க உரை
எல்லாம் சேர்த்திருக்கிறார்.

படத்திற்காக நான்கு கண்டங்களில் சுமார் 1 இலட்சம் மைல் பயணம் செய்திருக்கிறார். உலகம் முழுமையிலும் 30 ஆண்டுகளாக நூற்றுக்கும் அதிகமான கேமாரக்களில் எடுக்கப்பட்டிருந்த காந்தி குறித்த படங்களைச் சேகரித்திருக்கிறார்.  அந்தப் படமே ஒரு தனிப்பட்ட மனிதரின் வாழ்க்கையை அவரது வாழ்வியல் சம்பவங்கள் மூழமாக சித்திரிக்கும்  ஒரு முழு நீளமுள்ள முதல் சரித்திரத் திரைப்படம் எனும் பெயர் பெற்றது.

இந்தியாவில் திரைப்படத்துறையே முழுமையாக வளர்ச்சி அடைந்திராத,
தகவல் தொடர்புகள் பெரிதும் வளராத அந்த நாட்களில் ஒரு தனிமனிதராக இத்தனையும் ஏ.கே செட்டியார் செய்து முடித்திருக்கிறார் என்பதை அறியும் போது இன்று நமக்கு பெரிய மலைப்பாக இருக்கிறது.

இப்படிப் பல சிரமங்களுக்கிடையே அந்த ஆவணப்படம்
தயாரிக்கப்பட்டதோ நெருக்கடியான யுத்த காலம் . காங்கிரஸ் ஆங்கிலேயர்களை எதிர்த்து யுத்தத்தில் கலந்து கொள்ளாமல் யுத்த எதிர்ப்பில் வேறு இருந்தார்கள். அதனால் அந்த சமயத்தில் ஆங்கிலேயர்கள் காந்தி குறித்த இந்தப்படம் வெளியாகுவதை விரும்பவில்லை.  அப்போதைய அரசு அந்தப்படத்தை தணிக்கை (சென்சார்) குழுவுக்கு அனுப்ப பரிந்துரைத்தது.

ஆனால், ஆங்கிலேயர்களின் விருப்பத்துக்கு மாறாக அப்போது தணிக்கைக் குழுவில் இருந்தவர்கள் படத்தில் எந்ததொரு வெட்டும் இல்லாமல்
வெளியிட அனுமதித்தனர். அதனால் கோபம் கொண்ட ஆங்கிலேயர்கள் அனுமதித்த இரண்டு உறுப்பினர்களையும் பதவியில் இருந்து தூக்கியடித்தனர். அப்படிப் பதவி இழந்த இரண்டு உறுப்பினர்கள் பிரபல மருத்துவர் ஏ. கிருஷ்ணா ராவ் மற்றோருவர் இந்து பத்திரிக்கை ஆசிரியர் கஸ்தூரி சினிவாசன்.

இரண்டரை மணி நேரம் ஓடக்கூடிய அந்தப் படத்தில்  காந்தி நேரடியாக தோன்றி பேசுவதுபோல ஒரு காட்சிகூட இல்லை. பலர் பார்த்து பாராட்டிய அந்தப் படத்தை காந்தி கடைசி வரை பார்க்கவேயில்லை.  தயாரிப்பு வேலைகள் முடிந்த பின் அதை வெளியிட முதலில் அரங்க உரிமையாளர்கள் முன்வர வில்லை என பல சுவையான  நிகழ்வுகள் நடந்தேரி இருக்கின்றன.

மகாத்மா குறித்து எடுக்கப்பட்ட அந்த ஆவணப்பபடம் இன்று இந்திய அரசின் உடமையாக இருக்கிறது.

ஐரோப்பாவில் இருக்கும் தங்கத்தால் ஆன தமிழ் ஓலைகள் (10-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு-8)


ஜெர்மனியைச் சேர்ந்த நண்பரும் முனைவருமான சு.சுபாஷிணி தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் நிறைவு நாள் அன்று "ஐரோப்பிய ஆவணப் பாதுகாப்பகங்களில் உள்ள அரிய தமிழ் ஓலைச்சுவடிகள்" எனும் தலைப்பில் ஓர் ஆய்வுக்கட்டுரையை  வழங்கினார்.


இங்கே சுபாஷிணி பற்றி ஒரு சிறிய அறிமுகம்.  மலேசியாவில் பிறந்து தற்போது ஜெர்மனியில் வசிக்கும் சுபாஷிணி தொழில் முறையில் ஒரு கணிப்பொறியாளர். ஆனால், தமிழ் தொன்மை மீதுள்ள தீராத ஆர்வத்தால்  தமிழ் மரபு அறக்கட்டளை எனும்  அமைப்பை நிறுவி அதன் வழியாக பண்டைய தமிழ்மரபு சார் விடயங்களை (எ.கா. கல்வெட்டுகள், ஓலைச்சுவடிகள்..) மின்னாக்கம் செய்து பலருக்கும் உதவும் வகையில் பொதுவில் வைக்கிறார். (http://thfcms.tamilheritage.org/palmleaves/) இதை  உலகம் முழுவதிலும் உள்ள பல தன்னார்வ தொண்டர்களின் உதவியோடு,
களப்பணி செய்து செயல்படுத்தும் அவருடைய முயற்சி  வாழ்த்துதலுக்கும், பாராட்டுதலுக்கும் உரிய ஒன்று.

நிகழ்வில் சுபா ஐரோப்பிய ஆவணப் பாதுகாப்பகங்களில் பல நூறு ஆண்டுகளாக பாதுகாக்கப்படும் பல அரிய தமிழ் ஓலைச்சுவடிகள் பற்றிய தனது தேடல் குறித்து பேசினார் (நிகழ்வில் இருந்து சில படங்கள் இங்கே).

ஆய்வின் நோக்கம்

தமிழர் தம் தொன்மையை அறியவும், தமிழக வரலாற்றினை அறிந்து கொள்ளவும், தமிழ் மக்களின் சமூக நிலைப்பாட்டினைப் புரிந்து கொள்ளவும் தமிழ் நிலப்பரப்பில் தொடர்ச்சியாக நிகழ்ந்த இலக்கிய, சமய சிந்தனைகளை அறியவும் ஆதாரமாக அமைபவைகளில் ஓலைச்சுவடிகளுக்கு முக்கிய இடம் இருக்கிறது.

அந்த வகையில் தமிழகத்துக்கு வெளியே குறிப்பாக ஐரோப்பிய ஆவணப் பாதுகாப்பகங்களில் இருக்கும் தமிழ் ஓலைச்சுவடிகள் முழுமையாக
ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.

****
தற்போது இலண்டனில் உள்ள பிரித்தானிய நூலகம், பாரீஸ் நகரிலுள்ள பிரான்சு தேசிய நூலகம், கோப்பன்ஹாகனிலுள்ள அரச நூலகம் போன்ற ஆவணக்காப்பங்களில் பாதுகாக்கப்படும் இந்த ஆவணங்கள்
ஐரோப்பியர்கள் தமிழகம் வந்தபோது இருந்த சமூகசூழல் குறித்துப் பேசுகிறன.
மேலும் தங்கம், வெள்ளி, பனை,
காகிதங்களால் ஆன இந்த ஆவணங்களில் தமிழ் எழுத்து வடிவில் மட்டுமன்றி  சில ஐரோப்பியர்கள் தங்கள் கைப்பட உருவாக்கிய  ஓவியங்களுடன்  இருப்பது சிறப்பு என்றும் குறிப்பிட்டார்.

அதுபோல அவர்களால் (ஐரோப்பியர்களால்) 17 நூற்றாண்டு வாக்கில் பல தமிழ் இலக்கிய நூல்கள் ஐரோப்பிய மொழியில்
மொழிபெயர்க்கப்பட்டதைக் குறிப்பிட்ட அவர் திருக்குறள்
லத்தின்,ஜெர்மன், டோய்ச், ஆங்கிலம்,  சுவீடிஷ், பிரெஞ்ச் போன்ற மொழிகளில் மொழிப்பெயர்க்கப்பட்டதையும் மேற்கோள் காட்டினார்.

அதுமட்டுமல்லாமல் தமிழக நிலப்பரப்பில் ஐரோப்பியர்களின் வருகை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. அதனால், அவர்களுடைய தமிழக வருகை நம்மில் ஏற்படுத்திய சமூக,சமய, வாழ்வியல் சார்ந்த மாற்றங்கள் ஆய்வு நோக்கில் உற்றுநோக்கப்பட வேண்டும் எனும் கருத்தை இறுதியாக வலியுறுத்தினார்.

தமிழ் மரபு அறக்கட்டளையில் இணையதள முகவரி - http://www.tamilheritage.org/