தமிழர்களையும் தமிழ் சினிமாவையும் தனியாக பிரித்துப் பார்க்க இயலுமா தெரியவில்லை. கடந்த ஐம்பது ஆண்டுகளாக சினிமா சம்பந்தப்பட்டவர்கள் மட்டுமே ஆளும் மாநிலம் தமிழ்நாடு. உலகத்தில் வேறு எங்கும் இது போலதோரு நிகழ்வு நடந்திருக்க வாய்ப்பில்லை.
நான் இங்கே தமிழ் சினிமாவைப் பற்றி எழுதக் காரணம் இருக்கிறது. சமீபத்தில் பழைய சினிமா டைரக்டர் ஓருவரிடமும், டிஸ்டிரிபியூட்ர் ஓருவரிடமும் தனித்தனியாகப் பேசிக் கொண்டிருந்தேன்.
முதலில் அந்த டைரக்டரைப் பற்றிப் பார்ப்போம். பெயர் வேண்டாமே. அவர் 80களில் பல நூறு நாட்கள் ஓடிய இமாலய வெற்றிப்படம் ஓன்றைத் தந்தவர். அந்தப் படத்தின் பாடல்களை இன்றும் வானோலியில் நீங்கள் கேட்கலாம். அதன் பிறகு நல்ல வாய்ப்புகள் வராமல் அல்லது வந்த வாய்ப்பை உதாசீனப்படுத்தியவர்.
நீண்ட நெடிய போராட்டத்துக்குப்பின் சமிபத்தில் தன் சொந்த செலவில் ஒரு படத்தை எடுத்து சரியாக டிஸ்டிரிபியூட் செய்ய இயலாமல் படு தோல்வி அடைந்திருக்கிறார். தற்போது தனது அடுத்த படத்திற்கான தயாரிப்பாளரை தேடிக்கொண்டிருக்கிறார். ஆசை யாரை விட்டது சொல்லுங்கள் ?. அதை 'ஆசை' என்று சொல்லி ஓற்றைச் சொல்லில் என்னால் எளிதாகக் கடந்துச் செல்ல முடியவில்லை. ஏதோ ஓரு உந்துதல், ஆங்கிலத்தில் Urge என்று சொல்வார்கள் இல்லையா அது போல. தன்னை மீண்டும் நிருபிப்பேன் என்ற எண்ணம் தான் வேறு என்ன.
சரி போகட்டும். இவர் தன்னுடைய வாலிப வயதில் தமிழ்த் திரை உலகின் ஜாம்பாவான்களிடம் பால பாடம் படித்தவர்தான். தன்னுடைய நேரத்தையும் விதியையும் குறை சொல்லும் அதே நேரத்தில் தமிழ்த்திரை உலகின் இன்றைய நிலை பற்றி ஆற்றாமையோடு புலம்பிக் கொண்டிருந்தார்.
விஷயம் நாம் அறிந்த ஓன்றுதான். தமிழ் சினிமாவில் தற்போது நிலவும் நிலையாமை மற்றும் ஆரோக்கியமற்ற சூழல் பற்றிதான். கதை, நட்சத்திரங்கள்,பாடல்கள், தயாரிப்பு, விற்பனை, விநியோகம்,தொழில்நுட்பம் என பெரிய பட்டியலே வாசித்தார். எல்லா முனைகளிலிருந்தும் நெருக்குதல் என்கிறார்.
தாறுமாரான தயாரிப்பு செலவு. அதே நேரத்தில், பெரிய நட்சத்திர நடிகர்கள் இருந்தாலும் படம்கூட வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில்லை. இவ்வளவு தெரிந்தும் படத்தின் வெற்றி தோல்விபற்றி கவலைப்படாமல் தனது சம்பளத்தை குறைத்துக் கொள்ளாத நடிகர்கள்.
தனது கவர்ச்சியையும் பொலிவையும் இழந்து வரும் மனதில் நிற்காத இசை மற்றும் பாடல்கள். அப்படி வரும் பாடல்களையும் டிஜிட்டலில் விலையின்றி தரவிரக்கம் செய்யும் இளைஞர்கள். இதன் தொடர்சியாக சில வருடங்களில் ஆங்கிலப் படங்கள் போல பாடல்களே இல்லாது படங்கள் வரும் காலம் தூரத்தில் இல்லை என்கிறார். இனி பாடலுக்காக ஓடிய படங்கள் வரப்போவதே இல்லை என உறுதியாகச் சொல்கிறார்.
கதைப் பற்றாக்குறை- முன்பே சொல்லப்பட்ட கதை அல்லது கதாபாத்திரங்கள். ரசிகர்களின் உலகத்தரமான எதிர்பார்ப்பு, இணையம் என இது ஓரு பக்கம்.
அப்புறம் எல்லோரும் படம் எளிதாக படம் எடுக்கலாம் என்ற சூழலில் வெளியிட
தியேட்டர்கள் கிடைக்காத நிலை. அப்படியே தியேட்டர்கள் கிடைத்தாலும் முன்னூறு, ஐநூறு என டிக்கெட்டுக்கு அடங்காமல் கொட்டமடிக்கும் மல்டிபிலக்ஸ் தியேட்டர் உரிமையாளர்கள்.
24 X 7 டிவி சானல்கள், சீரியல்களைத் தாண்டி முன்னூறும் ஐநூறும் கொடுத்து படம் பார்க்கவருபவரும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு. புதுப்புதுக் கேமராக்கள்,லென்சுகள் என மாறும் தொழில்நுட்பம். அத்தனையும் தாக்குப்பிடிக்கும் சூட்சுமம். இப்படிப் பல.
திருட்டு விசிடிக்கள், இணையம் என எளிதாக நடைபெறும் திருட்டு. இதற்கு சேரனின் Direct to Home அல்லது DTH நல்ல மாற்றாக இருக்கும் என நம்பும் அதே வேலையில் திரைத்துறையில் சிலர் இதைத் தொடர்ந்து இருட்டடிப்பு செய்ய முயலுவதையும் சுட்டிக் காட்டினார்.
முன்பேல்லாம் தயாரிப்பாளர்களுக்கும் மற்றவர்களுக்கும் சில நடிகர்களின் படமெனில் ஓரு மினிமம் கியரண்டி இருந்தது. அந்த காலம் மலை ஏறிவிட்டது. அப்படி வளர்ந்து வந்தவர்கள் தானே இன்றைய விஜயகாந்த் போன்ற நடிகர்கள் என்கிறார் நான் பேசிக் கொண்டிருந்த பழைய விநியோகஸ்தர்.
அவரும் 80களில் மதுரையில் விநியோகஸ்தரராக பல வருடங்கள் இருந்தவர் தான். நடிகர்கள் விநியோகஸ்தர்களிடமும், தயாரிப்பாளர்களிடமும் வைத்திருந்த மரியாதை சுத்தமாய் போய்விட்டது. நட்சத்திரங்களை சுற்றி மட்டுமே மொத்த படக்குழுவும் இயங்கத் தொடங்கிவிட்டதாகப் புலம்பிக் கொண்டிருந்தார்.
உச்ச கட்ட நடிகரிடம் தானே தமிழ்நாடு வெள்ள நிவாரணத்தை எதிர்பார்கிறது. ஏன் ஓரு உச்சகட்ட டைரக்டரிடம் எதிர்பார்ப்பதில்லை என்பதற்கான விடை மேலேயே இருக்கிறது.
இப்போது ஸ்டாக் மார்க்கெட் வணிகத்தில் இருக்கும் இவர் கமல் ஓருமுறை இவரை காரிலிருந்து இறங்கிவந்து மரியாதை செய்ததை நினைவு கூர்ந்தார். அந்தநாளில் ரஜினியுடன் ஓரு விநியோகஸ்தராக தன்னால் 3 மணி நேரம் பேசமுடிந்தது என்று சிலாகிக்கும் இவர். AVM தனது படத் தயாரிப்பை நிறுத்தி, அடுக்குமாடி கட்டிடம் பக்கம் திரும்பியது கூட இந்த காரணங்களுக்காக தான் என்கிறார்.
சினிமா உலகத்தில் பார்வையாளர்களைத் தாண்டி ஓட்டு மொத்த தொழிலும் மாறி விட்டதை தெளிவாக உணர முடிகிறது. 'மாற்றம் என்ற சொல்லே மாறாதது' என்பார்கள். அது போல மாறும் விஷயங்களுக்கு ஏற்றாற் போல மாறாதவர்கள் கரை ஓதுங்கிய சிப்பிகள். அவர்கள் கடலை வெறித்துப் பார்ப்பதன்றி வேறேன்ன செய்ய, சொல்லுங்கள் !.
குறிப்பு: இது எனது சொந்தக் கருத்து மட்டுமே.
நன்றி: google images
No comments:
Post a Comment