Showing posts with label #tamilnovel. Show all posts
Showing posts with label #tamilnovel. Show all posts

Wednesday, September 13, 2017

மெர்குரிப்பூக்கள் - பாலகுமாரன்

எழுத்தாளர் பாலகுமாரனின் மெர்குரிப்பூக்கள் நெடுங்கதை சுருக்கமாக - தொழிற்சாலை ஒன்றில் நடக்கும் ஒரு வேலைநிறுத்தப் போராட்டம் சாமானியர்களின் வாழ்வில் ஏற்படுத்தும் வேறு வேறு விதமான தாக்கங்களைச் சொல்லும் கதை.

வேலை நிறுத்தப் போராட்டத்தில் எதிர்பாராமல் மரணமடையும்
தொழிலாளி கணேசன், அவனுடைய மனைவி சாவித்திரி. அந்தக் கணேசனின் மரணத்துக்கு குற்றம்சாட்டப்பட்ட தொழில்சங்கத் தலைவன் கோபாலன். அந்தத்  தொழிற்சாலையின் முதலாளி ரங்கசாமி. அங்கே மற்றோரு தொழிலாளியாக சங்கரன் அவனுடைய கள்ளக்காதலியான சியாமளி என பின்னிப்பிணைந்த பல பாத்திரப் படைப்புகள் ரத்தமும் சதையுமாக .

இந்த  ஒவ்வோரு பாத்திரத்திற்கும்  நுணுக்கமான பின்புலத்தை நிறுவி அவர்களின் மனஓட்டத்தை மிகச் சரியாக பிரதிபலிப்பதில் மனிதர் பின்னுகிறார்.  தன் எழுத்தால் எல்லா பாத்திரங்களையும் நம் கண்முன் மனிதர்களாக நடமாட வைத்திருப்பதிலும் ஜெயித்திருக்கிறார் .

இந்தக் கதை எழுதப்பட்ட ஆண்டு மற்றும் அதில் சொல்லப்பட்ட அரசியல் சூழல்களைப் பார்க்கும் போது மத்தியில் இந்திரா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியும், தமிழ்நாட்டில் கம்யூனிசத் தத்துவங்கள் வலுபெற்றிருந்தன என்பது தெரிய வருகிறது.

இந்த நாவல் வெளி வந்த காலகட்டத்தில் கதையின் உள்ளடக்கத்திற்காகவும், அதில் சொல்லபட்ட சர்ச்சைக்குறிய விசயங்களுக்காகவும் பெரிதும் பேசப்பட்டிருக்கும் என நினைக்கிறேன்.

Sunday, November 13, 2016

பருக்கை - வீரபாண்டியன்

சமீபத்தில்  2015ல்  சாகித்ய அகாதமியின்   'யுவ புரஷ்கார்'  விருது பெற்ற வீரபாண்டியனின்  "பருக்கை" நாவலை (புதினம்)வாசித்தேன்.

தமிழில் மறக்கப்பட்டுவரும் பல வார்த்தைகளில் ஒன்றான "பருக்கை" என்பதையே புதினத்தின் தலைப்பாக வைத்தமைக்காகவே வீரபாண்டின் முதலில் பாராட்டுக்குரியவர்.

சரி புதினத்துக்குள் வருவோம். ஊர் பக்கத்திலிருந்து கல்விக் கனவுகளுடன் சென்னை போன்றதோரு பெருநகருக்கு வரும் ஏழை மாணவர்கள் தங்களின் உணவுக்கு,  தங்குமிடத்துக்கு, கல்விக்கட்டணத்துக்கு  என  எதிர்க்கொள்ளும் பல அவலங்களைத் தோலுரிக்கும் கதை.


படிக்க வரும்  அவர்கள்  கையில் காசில்லாததால் படிப்புச் செலவுக்காகவும் நல்ல சாப்பாட்டிற்காகவும் சென்னையில் "கேட்டரிங்" எனும் உணவு பரிமாறும் வேலை செய்கிறார்கள். அங்கே நேரும் அவமானங்கள் , அனுபவங்கள் எனக் கதை விரிகிறது.


கல்யாணவீடுகளில் நாம் எளிதாகக் கடந்தபோகும்  அந்தச் சாமானிய மனிதர்களின் உள்ளக்குமுறலை எந்தவித பாசாங்கமும் இல்லாமல் ஆசிரியர்  பதிவு செய்திருக்கிறார்.  கதையுனுடே இந்த நகரச்சூழலில் அந்த இளைஞர்கள்  எதிர் கொள்ளும்  பொருளாதார ஏற்றத் தாழ்வுகள், காதல், வர்க்கப்பிரிவினை, பண்பாட்டுச் சிக்கல்கள் எனும் பல தளங்களைத் தொட்டுச் செல்கிறது.
  
கதை பெரும்பாலும் பெரிய வர்ணனைகள் இல்லாமல் இயல்பான உரையாடல்களால் நகருகிறது. இயல்பான அன்றாட பயன்பாட்டிலிருக்கும் சாமானியனின் மொழி கதைக்குப் பலம்.

"ஏய்யா.. உங்களுக்லாம் அறிவில்ல ? வேலை செய்யிறதுக்குதான வந்திங்க.. டைம் ஆச்சில்ல எலயப் போடாம வடைய எடுத்துத்
தின்றிங்க. ...." (பக்கம்-153)

இதில் பட்டினி வயிறோடு பந்தியில் ஒடியாடி உணவு பரிமாறுபவனை ஒரு சகமனிதனாக மதிக்காமல் நோகடிக்கும் சமூகத்தை நமக்குக் காட்டுகிறார்.

".. (நீ ) இங்க  மெட்ராஸுக்கு வந்து படிக்கிறன்னு உங்கப்பன் அங்க ஊருபுல்லா பெருமையடிச்சிட்டுக் கெடக்குறான்.  நீ இன்னானா இங்க டீய வித்துங் கெடக்குற. இதுக்குதான் உங்கொப்பன் உன்ன படிக்க அனுப்ச்சானா ? ..." (பக்கம்-239)

ஒரு கிராமத்து மனிதரின் ஆற்றாமையான உள்ளக் குமுறல் அது.

கதையில் கல்யாண மண்டபங்களின் திரை மறைவு விசயங்கள், கல்யாண வீட்டுச் சமையல், அங்கே சமைப்பவர்கள், பரிமாறுதல் போன்ற விசயங்கள் பிரதானப்படுத்தப்பட்டுள்ளது. அதில் வரும் பல நுண்விவரங்கள் வியக்கவைக்கின்றன.

"சாப்பிடுகிறவர்கள் பாராட்டுகிற மாதிரி சாம்பார் ஊற்றுவது ஓரு சாதனை. அந்தப் பாராட்டுதல் அவர்கள் முகத்திலேயே தெரியும். ஒரு தலை ஆட்டுதலிலோ, ஒரு தேங்ஸ்-லோ, விழிகள் விரிய அவர்கள் தரும் சிறு புன்னகையோலோ.. அது தெரியக்கூடும். ஒரு சுருங்கிய முகம் சாம்பார் ஊற்றியதில் மயங்கி மலர்வதிலோ அது தெரியக்கூடும்......  " (பக்கம்-132)

".. சோறு கட்டியாக இல்லாமல் உடைத்து தயார் நிலையில் வைத்திருந்தால் ரசம் ஊற்றுவது சுலபம். ரசத்தை ஒரே இடமாக ஊற்றாமல், சோற்றுக்குள் வட்டமாக ஊற்ற வேண்டும். தோசை ஊற்றும் போது மாவை வட்டமாகத் தேய்ப்பது போல ரசத்தை ஊற்றினால்,.....  " (பக்கம்-133)

ஒடியாடி பரிமாறிக் களைத்து போய் விரும்பிய உணவு தீர்ந்து, பசியெல்லாம் சுத்தமாய் அடங்கி, ஆறியச் சாப்பாட்டைக் கடைசியில் சாப்பிடும் அவலத்தைச் சொல்லும்  இந்தக் கதையில் பசி எனும் உயிர்ப்பு கடைசி வரை தொடர்கிறது. அதுவே எழுத்தாளரின் வெற்றியாக நினைக்கிறேன்.

இளமையில் வறுமை எனும்  துயரம் அனுபவித்தால் தெரியும் என்பதை வாசகர்களுக்குக் கடத்துவதிலும் வெற்றிப் பெற்றிருக்கிறார்.

குறிப்பிட்டுச் சொல்லவேண்டியது கதையில் வரும் எழுத்தாளரின்
ரசிக்கும் படியான சில சொந்தக் கவிதைகள்

"பெண்கள் குனியும் போதெல்லாம்
கும்மாளம் போடாதீர்கள்
உங்கள் மனைவிக்கும்
தண்டுவடம் தாழாமலிருக்காது.. " (பக்கம்-149)

இயல்பான நகைச்சுவைக் கதையில் ஒடுவதும் நல்ல அம்சம். அதுபோல, கதையில் ஆங்காங்கே வெளிப்படும் சமூகவிமர்சனங்களுடன் அமைந்த உரையாடல்களும் கவனிக்கத்தக்கது.  குறிப்பாக அரசு விடுதிகளின் சீர்கேடுகள், உடன் படிக்கும் கண் பார்வையற்றவரின் சிரமங்கள் எனப்  பல மெத்தனங்களுக்குச் சமூகம் பதில் சொல்லக் கடமைப்பட்டுள்ளது.

விருது பெற்ற நாவல் எனும் எதிர்பார்ப்புடன் வாசிக்கும் வாசகர்களுக்கு ஏமாற்றங்களும் உண்டு. 

முதல் படைப்பென்பதால் பெரிதாகத் திட்டமிடல் இல்லாமல் எழுதப்பட்டது போலுள்ளது.  உதாரணமாக.  கதைசொல்லியின் நண்பர்களை எந்தவோரு தனித்தன்மையுடன் படைக்கப்பட்டதாகத் தெரியவில்லை.  கதை நகர்த்தலிலும் அவர்களின் பங்கு பெரிதாக வெளிப்படவில்லை.   நடுவில் வரும்
முழுமை பெறாத  பெண் நண்பியின் கதாபாத்திரம் இப்படிப் பல.

நண்பியிடம் காதலைச் சொல்ல முடியாத தருணத்தில் தனது மனநிலையைக் கதைச்சொல்லி இப்படிப் பதிவுச் செய்கிறார்.

"..அவள் பேசினாலும் 'லவ் பண்றதுலாம் பிடிக்காது ' என்பது மட்டுமே என் காதுக்குள் ஒலித்துக் கொண்டிருந்தது. மனைவி இறந்து குழந்தை பிறந்த மனநிலையோடு நின்றேன். (பக்கம்-67)"

ஒர் இளம் பெண்ணுடன்  தனிமையில் இருக்கும் மணமாகாத இளைஞனுக்கு இதுபோன்றதோரு  மனநிலை என்பது செயற்கைத் தனமாக எழுதப்பட்டதாகத் தோன்றியது.

சமீபத்தில் பட்டமேற்படிப்பு முடித்த வீரபாண்டியனின் முதல் படைப்பு இது. அந்த வகையில் கல்லூரியிலிருந்து பட்டம் பெற்று வெளியே வரும் ஒரு மாணவன் அந்த வாழ்பனுவத்தை ஒரு புனைவாக எழுதுகிறார். அதை ஒரு பதிப்பகம் வெளியிட்டு அந்தப் படைப்பு மத்திய அரசின்  உயரிய விருது பெறுவது என்பதைத் தமிழ் எழுத்துலகில் நல்லதோரு தொடக்கமாக நினைக்கிறேன். இளம் எழுத்தாளர்களுக்குக் கண்டிப்பாக நல்ல உத்வேகத்தைத் தரும் நிகழ்வு.

அதுபோல ஆசிரியருக்கு இது முதல் புத்தகம் என்பதால் இந்தப் படைப்பு எவர் கண்ணிலும் படாமல் போயிருக்கவே வாய்ப்புகள் அதிகம். தமிழ் எழுத்துலகில் அதுதான் நிதர்சனம்.  அதிஷ்டவசமாக   இந்தப் படைப்பு இலக்கிய உலகின்  உயரிய விருதால்  நல்ல கவனம் பெற்றிருக்கிறது. எழுத்தாளர் வீரபாண்டியன் விருது தந்த இந்த வெளிச்சத்தை வரும் காலங்களில் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

இதுவரை எந்தத் தமிழ்படைப்பாளியும் தொட்டதாக நினைவில் இல்லாத மாதிரியான ஒரு கதைக்களன்.  இதை கதைக்கட்டமைப்பு, செவ்விதழ் இலக்கியம் என்றேல்லாம் கறாராகச் சீர்தூக்கிப் பார்க்காமல்  சாமானியர்களின் கதைக்கரு என்பதை மட்டும் கருத்தில் கொண்டால் நிச்சயம் இது ஒரு புதுமையான படைப்பு.   

வீரபாண்டியனை வாழ்த்தும் அதே நேரத்தில் ஆசிரியர் புகழ்பெறாதவர் என ஒதுக்காமல் அவரின் நூலை வெளியிட்ட பரிசல் புத்தக நிலையத்துக்குப் பாராட்டுகளும் வாழ்த்துகளும்!!

பருக்கை 
வீரபாண்டியன்
பரிசல் புத்தக நிலையம், எம்.எம்.டி.ஏ. காலனி, சென்னை-106
விலை : ரூ.160
கைப்பேசி : 9382853646 


இந்தக் கட்டுரை சொல்வனம் இணைய இதழில் வெளியாகி உள்ளது.

http://solvanam.com/?p=47204


Sunday, September 25, 2016

இவர்கள் வாசகர்கள்-4

நண்பர்களே,  எனது இரண்டாவது புதினம் என்னுடைய பெரும்பான்மையான நேரத்தை கேட்கிறது.  போன வாரம்
ஒரு வழியாக  எழுத்துப்பணி நிறைவடைந்து இந்த வாரம்
பிழைத்திருத்தத்தில் இருக்கிறேன். முழுதாக முடிந்ததும் சொல்கிறேன்.

"இவர்கள் வாசகர்கள்" பகுதியில்  "பங்களா கொட்டா" புதினம்
பற்றி  குமுதம் புகழ் நண்பர் சுரேஷ் கண்ணன் அவரகளின் கருத்துகளை உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன்.  நான் முன்பே சொன்னது போல வாசகர்களின் கருத்துகளை அப்படியே உங்களின் முன் வைக்கிறேன்.

வாசகர்களின் பரந்துபட்ட கருத்துகளால்,  நான் ஒரு படைப்பாளியாக நிறைய கற்றுக் கொள்கிறேன் என சொல்லிக் கொள்வதில் மிகையோன்றுமில்லை.

***********

நண்பர் ஆரூர் பாஸ்கர், அவருடைய நாவலான 'பங்களா கொட்டா'வை அனுப்பித் தந்தார்.
அது பற்றிய விமர்சனக் குறிப்பு, புத்தக மதிப்புரைகளுக்கென வெளிவரும் பிரத்யேக மாத இதழான 'அலமாரி'யில் வெளிவந்துள்ளது.
நண்பருக்கு வாழ்த்துகள்.

அலமாரி  (கிழக்கு பதிப்பகம்)





பங்களா கொட்டா வை வாசித்து கருத்துகளைச் சொன்ன சுரேஷ் கண்ணனுக்கு எனது நன்றிகள்!!

Sunday, August 7, 2016

இவர்கள் வாசகர்கள்-2

நண்பர்களே, கிராமத்து பிண்ணனி உள்ளவர்களுக்கு எனது 'பங்களா கொட்டா' நாவல்(புதினம்) பிடித்திருக்கிறது என்ற எனது அனுமானத்தை சமீபத்தில் வந்த இந்த வாழ்த்து உறுதிசெய்திருக்கிறது. வாழ்த்திய அந்த வாசகருக்கு எனது நன்றிகள் !! #bunglawkotta #பங்களா கொட்டா




Add caption

Sunday, April 17, 2016

எங் கதெ - இமையம்

தனது முதல் புதினத்தில் (நாவல்) இலக்கிய உலகின் கவனத்தைப் பெற்ற எழுத்தாளர்கள் மிகக்குறைவு. அப்படிப் பரவலான கவனம் பெற்றவர் எழுத்தாளர் இமையம் என எங்கோ படித்த நினைவு.

அவர் தனது முதல் படைப்பான கோவேறு கழுதைகள் (1944)ளுக்குப் பின் தனித்துவத்துடன் இலக்கிய உலகில் தொடர்ந்து இயங்கிவருபவர். அவருடைய  "எங் கதெ" யை சமீபத்தில் வாசித்தேன்.

முதல் நூல் என்பதால் எழுத்தாளர் பற்றிய எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் வாசிக்கத் தொடங்கினேன். இந்த புத்தகத்தில் இரண்டு அம்சங்கள் குறிப்பாக கவனத்தைக் கவர்ந்தன. ஓன்று அவரின் மொழி நடை. இரண்டாவது அவர் எடுத்துக் கொண்ட கதைக்கரு.

நூலின் பெயரே "எங் கதெ" எனப் பேச்சு வழக்கில் இருந்ததால் அந்த எதிர்பார்ப்புடனே உள்ளே நுழைந்தேன்.  கடலூர் மாவட்ட பேச்சு வழக்கில் எழுதப்பட்டுள்ளது. பெருமாள் முருகன், நாஞ்சில் நாடன், கி.ரா போன்றவர்களின் வழியாக மற்ற பேச்சுவழக்கு நூல்களை வாசித்து பழக்கப்பட்டிருந்தாலும் இந்த மொழிநடை எனக்கு முற்றிலும் புதுமையான வாசிப்பனுபவம்.  இந்தப் பேச்சு நடை கொஞ்சம் அழுத்தம் திருத்தமாக இருப்பது போல் தோன்றுகிறது.

"கள்ளக் காதலனைக் கொன்ற காதலி கைது". "பல ஆண்களுடன் தொடர்பு வைத்திருந்ததால், கல்லைத் தூக்கிபோட்டுக் கொன்ற கள்ளக் காதலன் கைது". இது போன்ற  தலைப்புகள் செய்தித்தாள்களில் அன்றாடம் நாம் எளிதாகக் கடந்து செல்லும் விஷயம். ஆனால் "எங் கதெ" அது மாதிரியான ஓரு நிகழ்வை உற்றுப் பார்க்கிறது. அப்படியானதொரு வாழ்க்கையை நம் கண்முன்னே நிகழ்த்திக் காட்டுகிறது. அதில் சம்பந்தப்பட்டவர்களுடன் தொடக்கம் முதல் முடிவு வரை நம்மை பயணிக்கவைக்கிறது.

ஆம். இதன் கதைக்கரு மற்ற நூல்கள் பெரும்பாலும் பேசாத அல்லது பேசத்தயங்கும் விசயமான ஆண் பெண் கள்ள உறவைப் பற்றியது. இரண்டு பெண் குழந்தைகளுக்குத் தாயான  “கமலா” என்கிற 28 வயது இளம் விதவை பெண்ணுக்கும் முதல் தலைமுறையாகப் படித்துவிட்டு வேலை தேடும் 33 வயது "விநாயகம்" என்பவருக்கும் ஏற்படுகின்ற உறவை பேசுகிறது.

இந்தக் கதை முழுமையும் சம்பந்தப்பட்ட விநாயகத்தின் மன ஓட்டத்தில் , பார்வையில் சொல்லப்படுகிறது. விநாயகத்தின் மனம் கமலாவை விரும்புவது, அவளுக்காக தன் குடும்பத்தை உதறிவிட்டு  நகரத்துக்கு குடிப்பெயர்வது, பத்தாண்டுகளுக்கு பின் அவர்களின் உறவில் நுழையும் மூன்றாமவன் என விரிவாகக் கதை சொல்லப்படுகிறது.

புதுமையானக் கதை சொல்லல் இங்கே குறிப்பிடப்பட வேண்டிய ஓன்று.

"இது எங் கதெ. பத்து வருசத்துக் கதெ. என் ரத்தம். என் கண்ணீர்." என முதல் வரியே உணர்ச்சிப்பூர்வமாய்த் தொடங்கி வாசகனை உள்ளிழுத்துக் கொள்கிறது. - பக்கம்-1

தேவையற்ற இழுவைகளில்லாமல் அடுத்தப் பக்கத்திலேயே கமலாவின் அறிமுகம்.

"நல்ல பாம்பு வர்ற மாரி சரசரன்னு வந்தா. போன் பேசினா, காச விட்டெரிஞ்சா. வந்த மாரியே சரசரன்னு போயிட்டா. அடுத்த நாளு வந்தா. அப்பறம் சனி,ஞாயிறு வரல."

இப்படிப் பேச்சு நடையில் கதை நகர்த்தல் பாய்ச்சலாய் இருக்கிறது. - பக்கம்-2

எழுத்து நடை வேகமாக இருக்கும் அதே சமயத்தில் விநாயகத்தின் மன ஓட்டம் வாசகனுக்கும் தொற்றிக் கொள்கிறது- பக்கம்-75

"பத்து வருசமா அவதான் எனக்குக் காத்து. தண்ணி, சூரியன், சோறு. எனக்கு அப்படித்தான் காலம் ஓடிப் போச்சி. அவ கேக்கல.நானா கொடுத்தன். மனச. அவ சொல்லல. நானா அவ காலுல மண்டியிட்டன்."

அதுபோல கதையினுடே வரும் நிகழ்வுகள்  நாம் குடும்பங்களிலும், சமூகத்திலும் பார்த்து வளர்ந்த எதார்தத்தை சொல்லிச் செல்கிறது.

கமலாவின் மீதான தனது அதீதக்காதலுக்கான நியாயத்தை இதைவிட எளிமையாக சொல்லமுடியுமா தெரியவில்லை- பக்கம்-48.

"பணம் சம்பாதிக்கிறத்துக்காக எத வேணுமின்னாலும் செய்யுற பைத்தியம் இருக்கு. ஊரு, காடுகாடுன்னு சேக்கிற பைத்தியம் இருக்கு. பொட்டசிவுளுக்கு விதவிதமா நக வேணும். சீல வேணும்.. ...

நான்தான் நாட்ட திருத்தப்பொறன்னு ரயிலுக்கு குண்டு வைக்கிறவன் இருக்கான்... சாமி இருக்குன்னு சொல்ற பைத்தியம் இருக்கு. சாமி இல்லன்னு தீச்சட்டிய ஏந்திகாட்டுற ஆளும் இருக்கு. இப்பிடி ஓலகத்திலெ இருக்கிற ஓவ்வொருத்தனுக்கும் ஓரு பைத்தியம். இந்த மாரி பைத்தியம் புடிக்காதவன் பொணந்தான். ஓலகமே பைத்தியமாத்தான் இருக்கு. எனக்கு கமலா பைத்தியம்.என முடிக்கிறார்.

கமலாவும் தன் பங்கிற்கு தன் அப்பா, அம்மா மற்றும் முன்னாள் கணவரை கட்சி பைத்தியங்கள் என்கிறார். அவர்கள் கட்சி பேப்பரை மட்டும் படிக்கிறார்கள், கட்சிக்காக கைகாசை செலவுசெய்கிறார்கள். தேர்தல் வேலை செய்கிறார்கள். கட்சிக்கல்யாணம் செய்வதுக் கொள்கிறார்கள். தன் பிள்ளைகளுக்கு தூய தமிழ்ப் பெயர்களை வைக்கிறார்கள். அவர்களை மெட்ரிகுலேசன் பள்ளியை தவிர்த்து அரசுப் பள்ளிகளில் படிக்க வைக்கிறார்கள்.

இப்படி வாழும் போது எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல், ஏதோ ஓரு கட்சிக்காக உழைத்து உழைத்து தன்னலமின்றி தன்னையும்  தன் வாழ்க்கையையும்  கட்சிக்காக அர்பணிப்பவர்களுக்கு கடைசியில் கிடைப்பது போகும்போது பிணத்தின் மீது போர்த்தப்படும் கட்சிக்கொடி மட்டுமே என்கிற எதார்த்தம் முகத்தில் அறைவது போல சொல்லப்படுகிறது.

நகர்மயமாதலிலும், உலகமயமாதலிலும் காணாமல் போன சிவன் கோயில்கள் அதை ஓட்டிய அக்ஹாரங்கள் பற்றிய குறிப்பு. அங்கிருந்த அடுத்த தலைமுறை அய்யர்கள் அமேரிக்கா, கனடா போன்ற நாடுகளுக்கு இடம்பெயர்ந்துச் சென்றுவிட்டார்கள் என்பதையும் போகிற போக்கில் தொட்டுச் செல்கிறார் (பக்கம் 90).

இந்தக் கதையில் பல வாய்ப்புகள் இருந்தும் வரம்பு மீறப்படவில்லை.  கதை முறை தவறி நடக்கும் மகனை தடுக்க வழியின்றி தவிக்கும் குடும்பம், வேலை சூழலில் இளம் விதவைகளைப் பார்க்கும் கண்ணோட்டம், கிராமத்திலிருந்து வேலைக்காகவும், பிழைப்புக்காகவும் நகரத்திற்கு இடம்பெயரும் மனங்கள் எனப் பல தளங்களில் பயணிக்கிறது.  அது போல, பெண் படித்துப் பதவியில் இருந்தாலும், மன ரீதியாக, உடல் ரீதியாக ஆணின் உடமையாக்கப்படுகிறாள் என்பதை பட்டவர்த்தனமாகச் சொல்கிறது "எங் கதெ".

ஆனால், இவ்வளவு நடக்கும்போதும் கமலா மௌனம் காக்கிறாள். இப்படித் தடம்மாறும் கமலாவின் மன ஓட்டம் என்னவாக இருக்கும் என வாசகர்களால் கொஞ்சமும் அறிந்துகொள்ள முடியவில்லை.

 ஆண் பெண் உறவு , கணவன்-மனைவி எனும் பந்தத்தில் நுழையாத பட்சத்தில் ஏற்படும் வாழ்வியல் சிக்கலாகவே நான் இந்தக் கதையை அணுகுகிறேன்.

முடிவில் மனைவியைப் போல் கமலாவை பாவித்து வாழும் விநாயகத்தின் வாழ்வில் மூன்றாமவன் நுழைகையில் அவனுடைய கோபம், குரோதத்தின் வெளிப்பாடு என்னவாக இருக்கும் என்பது "எங் கதெ" யின் முடிவு.

எளிமையானவர்களின் கதையைச் சொல்லும் அழுத்தமானதொருப் படைப்பு. வாய்ப்பிருந்தால் கண்டிப்பாக வாசியுங்கள்.

தலைப்பு :எங் கதெ
எழுத்தாளர்: இமையம்
பதிப்பகம்: க்ரியா
ISBN : 978-93-82394-15-0
பக்கங்கள்: 112
விலை : ரூ.125

குறிப்பு :  இந்த அறிமுகம் ஆம்னி பஸ் தளத்தில் சில திருத்தங்களுடன் வெளியாகியிருக்கிறது.
http://omnibus.sasariri.com/2016/04/blog-post.html

Sunday, September 20, 2015

சாய்வு நாற்காலி - தோப்பில் முஹம்மது மீரான்

கடந்த இரண்டு மாதங்களாக தொடர்ந்து கொண்டிருந்த
'சாய்வு நாற்காலி' நாவலை கடந்த வாரம் வாசித்து முடித்தேன்.

எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் கிளாசிக் நாவல் வரிசையில் அறிமுகப்படுத்திய நாவல்களில்  இதுவும் ஓன்று.  1997 ஆம் ஆண்டு தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்ற நாவல் இது.

இதை எழுதியவர் எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான்.   மலையாளப் பின்னணி உடைய இவர் தமிழ் மற்றும் மலையாளத்தில் பல்லாண்டுகளாக இயங்கிவருபவர்.

ஓரு வரியில் நாவலின் கதையைச் சொல்வதெனில் வாழ்ந்துக் கெட்ட ஓரு குடும்பத்தின் கதை.  இதைப் படிக்கும் போது ஜல்சாகர் எனும் பெங்காளி படம் ஞாபகத்திற்கு வருவதை தவிர்க்க  முடியவில்லை.

நீங்கள் ஜல்சாகர் (The Music Room) பார்த்திருப்பீர்களா தெரியவில்லை. புகழ்பெற்ற திரைப்பட மேதை  சத்யஜித் ராய் இயக்கிய பெங்காளி படம் (1958). அதில் வரும் ஜமீந்தார் தனது குடும்பத்தின் வறட்டு கௌரத்துக்காக வீட்டின் கடைசி சொத்தையும் விற்று இசை நிகழ்ச்சி நடத்துவார்.

இந்த நாவலில் முஸ்தபாகண்ணு கதை நாயகன்.  உழைக்காமல் சோம்பேறித் தனமாக பழம் பெருமை பேசியபடி சொத்துகளை விற்றுத் தின்கிறார்.

முஸ்தபாகண்ணுவின் மன ஓட்டத்திலேயே இந்தக் கதை நகர்கிறது. முஸ்தபாகண்ணு சாய்ந்து காலாட்டியபடியே வாசம் செய்யும் சாய்வு நாற்காலியும் பெண்களை அடித்து நெறிப்படுத்தும் அவருடைய அதபு (ஓழுக்கம்) பிரம்பும் கதையின் முக்கிய பாத்திரங்கள்.

இதைத் தாண்டி  ஓரு  தலைமுறையின் பெண் சுகம், வெட்டி கௌரவம், ருசி கொண்டு அடங்காத நாக்கு,  குடும்பப் பந்தம் என பல தளங்களில் இந்த கதை பயணிக்கிறது.

கதையில் குடும்பத்தின் இருநூறு ஆண்டு கால வரலாற்றை அஞ்சு தலைமுறை மூலம்  ஆசிரியர் சொல்கிறார்.  இந்த கதையை ஒரு குடும்ப வாழ்வினுடைய வீழ்ச்சி என மட்டும் பார்க்காமல் தலைமுறை தலைமுறையாக குடும்பத்தில் தொடரும் மன ஓட்டத்துக்கான புரிதலாகவும் எடுத்துக்கொள்ளலாம்.

ஆனால் முழுமையாக வட்டாரமொழி வழக்கில் நாவல் எழுதப்பட்டிருப்பதால் தங்குதடையின்றி வாசிப்பது கேள்விக்குறியே !.

உதாரணமாகக்  கதையில் முஸ்தபாகண்ணு தனது காலை திடுமெனப் பிடிக்கும் வேலைக்காரனை "நீயாடா, கிறாத்லெப் பெறந்தப் பயலெ" என்கிறார். இதை வாசிக்கும் வாசகன் என்ன அர்த்தம் எடுத்துக் கொள்வது ? எதோ திட்டுகிறார் என வேண்டுமானால் எடுத்துக் கொள்ளலாம்.

கொஞ்சம் விவரம் தெரிந்தால் கடைசி பக்கத்தில் கொடுத்துள்ள பொருளைத் தேடலாம். கடைசிப் பக்கத்தில் விளக்கம் இருக்கும் விவரத்தை முன்கூட்டியாவது சொல்லித் தொலைத்திருக்கலாம்,  அல்லது மிக எளிமையாக ஓவ்வொரு பக்கத்தின் கீழேயும் விளக்கம் கொடுத்திருக்கலாம். (பதிப்பகத்தார்- கவனிக்க).  நானும் அந்த வார்த்தைக்கு அர்த்தம் தேடி தேடிப்பார்த்து களைத்தே போய்விட்டேன்.


கடைசியாக, இந்த நாவலை படித்து முடித்தபின்  சோம்பலில் ஓரு விதமான 'மதமத'ப்பை நான் உணர்ந்தேன். அதுவே , இந்த புத்தகத்தின் வெற்றி என்று நினைக்கிறேன்.

நேரம் அனுமதித்தால் படிக்கலாம்.



தலைப்பு :சாய்வு நாற்காலி
எழுத்தாளர்: தோப்பில் முஹம்மது மீரான்
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம்
ISBN : 9788189359423
பக்கங்கள்: 344
விலை : ரூ.275