சமீபத்தில் உகாண்டாவின் சர்வாதிகாரி இடி அமீன் பற்றிய ஒரு ஆங்கிலப் புத்தகத்தை வாசித்தேன். "20ம் நூற்றாண்டின் கொடுங்கோல் வரலாறு- இடி அமீன்" என்ற அந்த புத்தகத்தை எழுதியவர் ஸ்டீவ் டாக்வெர்தி (A Wicked History 20th Century, Idi Amin by Steve Dougherty).
தமிழக அரசியலில் ஹிட்லர், கோயபல்ஸ்க்கு அடுத்து அதிகம் மேற்கோள் காட்டப்பட்ட பெயர் இடி அமீனாகத்தான் இருக்கும். அந்த ஒரு ஆர்வத்திலேயே புத்தகத்தை வாசிக்கத் தொடங்கினேன். பல திரைப்படங்கள் எடுக்கும் அளவுக்கு தகவல்கள். உடனே உள்ளே இழுத்துக் கொண்டது.
தமிழக அரசியலில் ஹிட்லர், கோயபல்ஸ்க்கு அடுத்து அதிகம் மேற்கோள் காட்டப்பட்ட பெயர் இடி அமீனாகத்தான் இருக்கும். அந்த ஒரு ஆர்வத்திலேயே புத்தகத்தை வாசிக்கத் தொடங்கினேன். பல திரைப்படங்கள் எடுக்கும் அளவுக்கு தகவல்கள். உடனே உள்ளே இழுத்துக் கொண்டது.
அமீனுக்கும் எல்லா சர்வாதிகாரிகளையும் போன்றதொரு வாழ்க்கைதான். இளமையில் வறுமை. பின் படிப்படியாக முன்னேறி வெற்றியின் உச்சிக்குப் போய் கடைசியில் கொடுங்கோலனாகிறான். சிறுவயதில் ஏழ்மையால் முறையான பள்ளிப்படிப்பு இல்லாமல் தெருக்களில் இனிப்பு விற்றுத் திரிந்துக் கொண்டிருந்த அமீனிடம் இருந்த ஒரே சொத்து அவனுடைய முரட்டு உருவம். அதையே மூலதனமாக வைத்து குத்துச் சண்டை கற்றுக் கொள்கிறான். அப்போது ஒரு இளைஞனாகவே அவன் உயரம் ஏறக்குறைய ஆறரை அடி, எடை 200 பவுண்டுக்கு மேல்.
இப்படி தெருவோரம் குத்துச்சண்டை செய்து பிழைத்து தன் வாழ்க்கையைத் தொடங்கியவன், ஒரு கட்டத்தில் பிரிட்டிஷ் ராணுவத்தில் சமையல் கூலியாக சேர்ந்திருக்கிறான். தனது இரக்கமற்ற முரட்டுத்தனத்தன அணுகுமுறை, அசாத்திய உடல்வலிமையால் அடுத்தடுத்து மேலெலுந்து படைவீரனாக முன்னேறியிருக்கிறான். ஒரு சமயத்தில் பிரிட்டனுக்கு எதிராக கென்யாவில் நடந்த கிளர்ச்சியை அடக்க பிரிட்டனின் சார்பாக போரிடச் செல்லும் அமீனின் படை அங்கு காட்டுமிராண்டித்தனமாக போராளிகளைக் கொன்று குவிக்கிறது. ஏறக்குறைய 50,000 பேர் கொல்லப்பட்டு இரத்த ஆறு ஓடிய அந்தக் கிளர்ச்சியை பிரிட்டன் வெற்றிகரமாக அடக்குகிறது. போரில் தனது கொடுமையான சாகசங்கள் மூலம் பிரிட்டிஷ் எஜமானர்களைக் குளிர்வித்த அமீன் ராணுவத்தில் மிக உயரிய பதவி தரப்பட்டு சிறப்பிக்கப்படுகிறான்.
இப்படி, உகாண்டா பிரிட்டனின் காலனி நாடாக இருந்த சமயத்தில் ஆங்கிலயர்களால் வளர்த்துவிடப்பட்ட முரட்டு பக்தன்தான் இடி அமீன். அதே இடி அமீன்தான் பின்பு மேற்குலக நாடுகளுக்கு எதிராக திரும்பியிருக்கிறான். 1962ல் பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் பெற்ற உகாண்டாவின் படைத்தளபதியாக பொறுப்பேற்ற அமீன் 1971ல் இராணுவப் புரட்சி மூலம் ஆட்சியில் அமர்கிறான். அதன் பின் வந்த 8 ஆண்டுகளும் கற்பனை செய்து பார்க்க இயலாத அளவுக்கு வெறியாட்டம் ஆடியிருக்கிறான். அமீனின் எதிர்ப்பாளர்கள் கணக்கு வழக்கில்லாமல் கொன்று குவிக்கப்பட்டிருக்கிறார்கள். சந்தேகத்தின் பேரில் பிடித்துச் செல்லப்பட்ட ராணுவ அதிகாரிகள் வீடு திரும்வதில்லை. பின் அவர்கள் தேச துரோக குற்றத்துக்காக விசாரிக்கப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டதாக அறிவித்துவிடுவார்களாம்.
ஒரு கட்டத்தில், கொன்றவர்களைப் புதைக்க முடியாமல் ஆயிரக்கணக்கான உடல்களை நைல் நதியின் முதலைகளுக்கு உணவாக வீசியிருக்கிறார்கள். முதலைகள் தின்ற உடல்களின் மிச்சங்கள் கரை ஒதுங்கி மக்களை அச்சமூட்டியிருக்கின்றன. ஒரு சந்தர்ப்பத்தில் நூற்றுக்கணக்கான எதிர்ப்பாளர்கள் தங்கியிருந்த சிறைச்சாலையை குண்டு வீசி தரைமட்டம் ஆக்கியிருக்கிறார்கள். கேட்டால் வெடிக்காத குண்டுகள் வெடித்ததாக அறிவித்ததோடு மட்டுமில்லாமல் ஒருபடி மேலே போய், இதுபோல பல வெடிக்காத குண்டுகள் தங்களிடம் இருப்பதாக மக்களிடம் பீதி கிளப்பியிருக்கிறார்கள்.
திடீரென வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறேன் பேர்வழி என யாருக்கும் புரியாதபடி உளறிக் கொட்டிய சம்பவங்களும் நடந்திருக்கிறன. அதன் உச்சமாக அமைச்சர்களுக்கு வானொலியிலேயே கட்டளைகள் பிறப்பித்து அச்சமூட்டியிருக்கிறான். ஒரு நாள் ஞானோதயம் வந்து உள்நாட்டு பொருளாதார சீரழிவிற்கும் வறுமைக்கும் காரணம் அங்கு குடியேறிய ஆசியர்கள் எனக் குற்றம் சாட்டினான். உகாண்டாவின் படித்த மற்றும் வியாபரத்திலிருந்த ஆசியர்கள் (இந்திய, பாகிஸ்தான்) அனைவரின் சொத்துகளும் பிடுங்கப்பட்டு நாட்டை விட்டு விரட்டப்பட்டனர். அவர்கள் அப்படி நாட்டை விட்டு வெளியேறினாலும், பொருளாதாரத்தில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. மேற்குலக மற்றும் அண்டை நாடுகள் உதவி செய்யாமல் கைவிரிக்க, உகாண்டா அரசுக்கு லிபியா மட்டும் கொஞ்சம் உதவி செய்திருக்கிறது. ஒருபுறம் குடிமக்கள் உணவில்லாமல் செத்துக் கொண்டிருக்க, மறுபுறம் அமீன் படைவீரர்களும் சகாக்களும் இறக்குமதி செய்யப்பட்ட ஜெர்மன் கார்களில் பெண்கள், குடி என உல்லாசமாக திரிந்திருக்கிறார்கள்.
1976ல் இஸ்ரேலிலிருந்து பாரிஸ் சென்று கொண்டிருந்த பயணிகள் விமானத்தைக் கடத்திய பாலஸ்தினிய தீவிரவாதிகள் அந்த விமானத்துடன் உகாண்டாவில் தஞ்சமடைந்தனர். அடுத்த சில நாட்களிலேயே இஸ்ரேலியர்கள் ஒருநாள் நள்ளிரவில் சினிமா காட்சி போல விமானம் மூலம் வந்து இறங்கி அதிரடித் தாக்குதல் நடத்தி கடத்தப்பட்ட பயணிகளில் ஒருவரைத் தவிர மற்றவர்களை மீட்டுச் சென்றனர். கடைசியில் எஞ்சிய டோரா பிளாச் எனும் பெண்ணை அமீன் அரசு படுகொலை செய்கிறது. அந்தக் கொலையே அமீன் அழிவின் தொடக்கம் எனச் சொல்கிறார்கள். உலகம் முழுவதும் கண்டனக் குரல்கள் எழுந்தன.
இறுதியில் தான்சானியாவுடன் நடந்த போரில் இடி அமீனின் 8 வருட கொடுங்கோல் ஆட்சி முடிவுக்கு வந்தது. அமீன் அதிகாரத்தில் இருந்த எட்டு ஆண்டுகளில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,00,000த்தை தாண்டும் என்கிறார்கள். போரின் முடிவில் உகாண்டாவிலிருந்து தப்பியோடிய அமீன் கடைசியாக சவுதி அரேபியாவில் தஞ்சம் புகுந்தான். அவனது கடைசிகாலம் வரை தன் குற்றங்களுக்கு எந்தவொரு தண்டனையும் அனுபவிக்காமல் 2003ல் மரணமடைந்தான். காலம் இடி அமீன் பெயரை "20ம் நூற்றாண்டின் கொடுங்கோலன்" என இரத்தத்தால் எழுதிக்கொண்டது, கொஞ்சம் அழுத்தமாகவே.
Idi Amin (A Wicked History)
by Steve Dougherty
Published March 1st 2010 by Franklin Watts
எனது இந்தப் பதிவு ஆம்னி பஸ் தளத்தில் வெளியாகியுள்ளது.
No comments:
Post a Comment