அமெரிக்காவிலிருந்து வெளியாகும் "புளூம்பர்க் பிசினஸ் வீக்" (Bloomberg Businessweek) வணிக இதழில் இந்திய வணிகச் சந்தையில் நுழைந்த கார்பெரேட் சாமியார்கள் பற்றி ஒரு கட்டுரை வெளியாகியிருக்கிறது.
"மேற்கத்திய கம்பெனிகளின் வணிகச் சந்தையை திருடும்
உள்ளூர் சாமியார்கள்" எனும் தலைப்பிட்ட அந்தக் கட்டுரையில்
கார்பரேட் சாமியார்களின் சமீபத்திய அசுர வளர்ச்சியைப் புள்ளி விவரங்களுடன் புட்டுபுட்டு வைத்திருக்கிறார்கள்.
டை கட்டியவர்களை வியர்க்க வைக்கும் கோமணான்டிகள் என
பாபா ராம்தேவ், ரவி சங்கர், ஜக்கி போன்ற சில பெயர்களையும் அவர்களின் பிராண்ட் பெயரையும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
பதஞ்சலி (ராம்தேவ்) நிறுவனத்தின் 97 சதவீத பங்குகளை வைத்துள்ள ஆச்சார்யா பாலகிருஷ்ணாவின் சொத்து மதிப்பு 2.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்பதை நாம் நம்பித்தான் ஆகவேண்டும். இவர்களின் வெற்றிக்கு ஹெர்பல் என்பதைத் தாண்டி உலகத் தரம், குறைந்த விலை,நல்ல நெட்வோர்க், மார்கெட்டிங், மற்றும் தொழிலில் வரும் லாபம் தொண்டு நிறுவனங்களுக்கு எனும் பரப்புரையும் முக்கியக் காரணம் என்கிறார்கள்.
அப்படியே போகிறபோக்கில், இந்தியாவிலும் வெளிநாடுகளிலிருந்தும் இயங்கும் பல மதநிறுவனங்கள்
மோடியின் Make in India மந்திரத்தை நன்றாக பயன்படுத்தி இந்த வணிகத்தில் குதித்திருகின்றன என கொளுத்திப்போட்டிருக்கிறார்கள்.
வரும் நாட்களில் இந்தக் கம்பெனிகள் சோப்,ஷாம்பூ, பேஸ்ட் எனும் காஸ்மெடிக்கைத் தாண்டி, எண்ணெய்,பால்,துணி என சகலவிதமான துறையிலும் இறங்கப் போகிறார்களாம்.
முக்கியமாக, வெளிநாட்டுக் கம்பெனிகள் A1 பால் விற்பனையில் இறங்கிவிட்டன எனும் குற்றச்சாட்டு வைக்கப்படும் இந்தத் தருணத்தில் இந்தக் கம்பெனிகள் A1 பால் விற்பனையில் குதித்து
கொடி கட்டலாம். பொறுத்திருந்து பார்க்கலாம்.
வாடிக்கையாளர்கள் பாரம்பரியத்தை நோக்கித் திரும்ப நினைப்பதை உள்ளூர் நிறுவனங்கள் மிகச் சரியாக பயன்படுத்திக் கொள்வது தப்பில்லைதான். ஆனால், அவர்களின் பொருட்கள் தரமானதா இல்லை கண்களை மூடி வாங்கிக் குவிக்கிறோமா என யோசிக்க வேண்டும். அடுத்து லாப நோக்கில்லை எனச் சொல்லும் இந்த நிறுவனங்களின் செயல்பாடுகள் எந்த அளவு வெளிப்படையானது என்றும் தெரியவில்லை.
நன்றி; Bloomberg Businessweek
No comments:
Post a Comment