Wednesday, August 2, 2017

மாணவர்களின் கேடயம்

கடந்த கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில்  திருவாரூர் மாவட்டத்தில்  100 சதம்  வெற்றி பெற்ற அரசுப்பள்ளிக்கள்
இரண்டு பள்ளிகளில்   ஒன்று மாங்குடி அரசு உயர்நிலைப்பள்ளி.

அங்கு 2016ல் "சிறகுகள் கல்வி அறக்கட்டளை"யின் கல்வி உதவித்தொகை வழங்கும்  நிகழ்வில்  'டிரஸ்ட் சார்பில்  எங்கள் பள்ளியைத் தத்து எடுத்துக் கொள்ளுங்கள்' எனும் கோரிக்கை வைத்தபோது, 'செய்யலாம்,  100 % ரிசல்ட்  கொண்டுவாங்க.'  என மேடையிலேயே அறிவித்திருந்தோம். அதைச் சவலாக எடுத்துக்கொண்டவர்கள் இந்த வருடம் எங்களாலும் முடியும் என நிருப்பித்திருக்கிறார்கள்.

ஒரு கிராமப்புற அரசுப்பள்ளியில்  100% வெற்றி என்பது பல தடைகளைத் தாண்டிய ஒரு சாதனை. அவர்களுக்கு எனது வாழ்த்துகள்.

இந்தச் செய்தியை நண்பர்களுக்கு முன்பே பகிர்ந்திருந்தேன் என

நினைக்கிறேன். அதன் தொடர்ச்சியாக இந்தவருடமும் அந்தப் பள்ளி மாணவர்களுக்கு  சிறகுகள் சார்பில்  கல்வி உதவித்தொகை வழங்கினோம்.

தேர்வில் முதல்  மதிப்பெண் பெற்றுத் தேர்ச்சி பெற்ற
சந்தியாவுக்கு ஐந்தாயிரமும் இரண்டாம், மூன்றாம் மதிப்பெண் பெற்ற ரூபன்ராஜ் , வினிதாவுக்கு 2,500, 1,000 வழங்கினோம்.

அதுபோல தமிழில்
சிறப்புகவனம் செலுத்துபவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் வருடந்தோரும் தமிழில்
முதல் மதிப்பெண் பெறுவருக்கு சிறப்பு பரிசாக
இரண்டாயிரத்து ஐநூறு வழங்குவோம்.  இந்தவருடம் அந்தப் பரிசையும் மாணவி சந்தியா பெற்றார்.  மனப்பூர்வமாக  வாழ்த்துகள் மாணவர்களே.

நாம் வழங்கும் இந்தச் சிறிய  உதவித்தொகை அவர்களின் உயர்க்கல்விக்கு எதேனும் ஒரு வகையில் உதவும் என கண்டிப்பாக நம்புகிறேன்.

வசதியானவர்களுக்கு தனியார் கல்வி எனும் இன்றைய நிலையில் எளியவர்களின் கடைசி நம்பிக்கை அரசுப்பள்ளிகள் மட்டுமே. அங்கே சுயநலமின்றி அக்கறையுடன்
உழைக்கும் ஆசிரியர்களும் இருக்கதான் செய்கிறார்கள். அவர்களின் முயற்சியில்லாமல் முழுதேர்ச்சி, நல்ல மதிப்பெண் எல்லாம் கண்டிப்பாக  சாத்தியமே இல்லை.  அவர்களுக்கு நமது
பாராட்டுகளும் , நன்றியும்.

பள்ளி தலைமை ஆசிரியர் கேட்டுக்கொண்டபடி வெற்றிபெற்ற எல்லா மாணவர்களையும் உற்சாகபடுத்தும் விதமாக
விழாவில் அனைவருக்கும் ஒரு கேடயத்தை நினைவுப்பரிசாக வழங்கினோம்.

எனக்கு இதுபோன்றதோரு உலோகக் கேடயத்தில் எல்லாம் பெரிதாக நம்பிக்கையில்லை. ஆனால், எளியவர்களுக்கு அவர்கள் பெறும் நல்ல கல்வி மட்டுமே வலிமையான கேடயம் என உறுதியாக நம்புகிறேன். அது நல்லதொரு ஆயுதம் கூட.  அவர்கள் எதிர்காலத்தில் வாழ்க்கையில் போராடி  வெல்ல அதைப் போன்றதோரு கூர்மையான வேறு ஆயுதம் இருக்கமுடியுமா என்ன ?

தேர்வில் மதிப்பெண்கள் முக்கியம் எனச் சொல்லும் அதே நேரத்தில் நமது கிராமப்புற மாணவர்களின் திறன் வளர்க்கப்படவேண்டும்
என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதற்கென பள்ளியில் பயிற்சிப்பட்டறைகள், குழு விவாதங்கள் நடத்தும்
எண்ணம் இருக்கிறது. நண்பர்களின் உதவி தேவைப்பட்டால் தொடர்பு கொள்கிறேன்.நன்றி

2 comments: