Showing posts with label #சிறகுகள். Show all posts
Showing posts with label #சிறகுகள். Show all posts

Saturday, June 20, 2026

சிறகுகள் 2026 - சீரும் சிறப்பும் !!

சிறகுகள் அறக்கட்டளையின் சார்பாக 2026-ஆம் ஆண்டுக்கான  கல்வி உதவித்தொகை வழங்கும் விழா ஜுன் 19-ஆம் தேதி நடந்து முடிந்தது.

அனைவரும் விரும்பும் 100 சதம் தேர்ச்சி எனும் இலக்கை மாங்குடி அரசு மேல்நிலைப்பள்ளி எட்டவில்லை என்றாலும், பள்ளி நிர்வாகம் துடிப்போடு செயல்படுகிறது. அடுத்த ஆண்டு அந்த இலக்கை எட்டும் எனும் நோக்கத்தில் மாங்குடி பள்ளி தேர்தெடுக்கப்பட்டது.

அமெரிக்க குடியுரிமை பெற்று குடும்பத்தோடு  டெக்சாஸ் மாகாணத்தில் வசிக்கும் சீனிவாசன் சண்முகம் தனது குடும்பத்தோடு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவில் உரையாற்றினார். திருவாரூர் அலிவலத்தை சொந்த ஊராக கொண்ட சீனிவாசனின் மனைவி பிரியா அவர்களுடைய உரை கிராமப்புற மாணவர்களை உற்சாகமூட்டி நம்பிக்கை தரும் வகையில் அமைந்தது சிறப்பு.



2012-ல் தொடங்கப்பட்ட சிறகுகள் அமைப்பின் வழியாக ஆண்டுதோறும் பரிசு எனும் நிகழ்ச்சி தொடங்கி 10-ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. அந்த விதத்தில் 2026-இல் நடந்த இந்த நிகழ்வு குறிப்பிடத்தகுந்த ஒன்று.

விழா குறித்து அங்கு ஆசிரியாக உள்ள நண்பர் விமல், 'அறக்கட்டளையின் குடும்ப விழாவாக நடந்தேறியது மகிழ்ச்சி !!'  என வாட்ஸ்-அப் செய்திருந்தார். கூடவே  இந்த விழாவானது சீரும் சிறப்பாக நடைபெறுவதற்கு மிக முக்கிய காரணமாக இருந்த உங்களுக்கு எங்கள் பள்ளியின் சார்பாகவும், என்னுடைய சார்பாகவும் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி அண்ணா என்றிருந்தார்.

உண்மையில், பெரிய வாய்ப்புகள் இல்லாத எளிய பின்புலத்தில் இருந்து வரும் மாணவ மாணவியர் கல்வியால் தங்கள் வாழ்வில் சீரும் சிறப்பும் பெறவேண்டும்  என்பதே எனது பெரு வேட்கை. அதை உறுதிப்படுத்தும் நோக்கில் அவர்களுடைய தோளில் தட்டி உற்சாகப்படுத்தும் ஒரு சிறு முன்னெடுப்பே இது என பதில் எழுதினேன். 

பரிசு பெற்ற மாணவ மாணவிகளுக்கும்,  தேர்வில் வெற்றி பெற்று உயர்நிலைப்பள்ளி நுழையும் அனைவருக்கும் வாழ்த்துகள் !!. 

சீர்-சிறப்பு என்றால் என்ன ? என்பர்களுக்காக-  சீர் means prosperity, glory, or grace. சிறப்பு means excellence, distinction, or special honor.

Saturday, June 28, 2025

சிறப்பித்த சிறகுகள்- வாழ்த்துகள் மாணவர்களே !

சிறகுகள் கல்வி அறக்கட்டளை சார்பில் இந்த ஆண்டு 10-ஆம் வகுப்பில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பழையவலம் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினோம். 

பத்தாம் வகுப்பு பொது தேர்வு முதலிடம்:  இ.அகல்யா- பரிசுத் தொகை ரூ-5000 /- , இரண்டாம் இடம்:  அ.அனுஸ்ரீ- பரிசுத் தொகை 2500/-, மூன்றாம் இடம்: வி.மாதேஸ்வரி, த.செமிலா, ஜோ.ஜெபஸ் ராஜா-பரிசுத் தொகை ரூ 1000/- 

இந்த ஊக்கத் தொகையுடன்,  கேடயமும், சான்றிதழ்களும் வழங்கினோம்.  நிகழ்வில் சிறப்பிக்கப்பட்ட மாணவர்களுக்கும், சிறப்பாக செயல்பட்ட ஆசிரிய பெருமக்களுக்கும் வாழ்த்துகள் !









Saturday, June 24, 2023

வாழ்த்துகள் மாணவர்களே !

சிறகுகள் கல்வி அறக்கட்டளை சார்பில் இந்த ஆண்டு 10-ஆம் வகுப்பில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற வடகரை அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினோம்.


கடந்தவாரம் பள்ளியில் நடந்த நிகழ்வில் பொதுத்தேர்வில் முதல் மூன்று மதிப்பெண் பெற்றவர்களுக்கு உதவித்தொகையும், பாராட்டுச் சான்றிதலும் வழங்கப்பட்டது. அதுபோல, தமிழ் பாடத்தைச் சிறப்பாக ஆர்வத்தோடு படித்து முதலிடம் பெற்ற மாணவருக்கும் பரிசு அளித்து உற்சாகப்படுத்தினோம்.

பரிசு பெற்றவர்கள்  ஆதித்யா(முதல் இடம்),  ஆரூத்ரா(2-ஆம் இடம்),  பரணிதரன் (3-ஆம் இடம்).

தமிழில் முதல் இடம் - விசுவநாத்

இதைச் சாதித்துக் காட்டிய பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டுகளோடு, பரிசு பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகள் !! 

#சிறகுகள்2023


Thursday, June 20, 2019

முன்மாதிரி அரசுப்பள்ளி

இன்றையச்  சூழலில் ஓர் அரசுப்பள்ளி மாணவர்கள் தொடர்ச்சியாக  மூன்று ஆண்டுகள் 100 சதவீதம் வெற்றி பெறுவதும் மாணவர்களின்
சேர்க்கை  இரட்டை இலக்கத்தில் உயர்வதும்  தற்செயலான நிகழ்வுகள் இல்லை. அந்தச் சாதனையை திருவாரூர், மாங்குடி அரசு உயர்நிலைப் பள்ளி செய்து காட்டியிருக்கிறது.

ஆமாம். இதுபோல மாநிலம் முழுவதும் உள்ள பல அரசுப்பள்ளி தலைமையாசிரியர்களும் ஆசிரியர்களும் இணைந்து தன்னெழுச்சியாக செயல்படுவது மகிழ்ச்சியளிக்கிறது. "சிறகுகள் கல்வி அறக்கட்டளை" சார்பில் மாங்குடி பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக கடந்த நான்கு ஆண்டுகளாக நாங்கள் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறோம்.

கடந்தவாரம் நடந்த நிகழ்ச்சியில் பொதுத்தேர்வில் முதல் மூன்று மதிப்பெண் பெற்றவர்களுக்கு உதவித்தொகையும், பாராட்டுச் சான்றிதலும் வழங்கினோம். அதுபோல தமிழ் பாடத்தை சிறப்பாக ஆர்வத்தோடு படித்து முதலிடம் பெற்றவருக்கு பரிசு அளித்து உற்சாகப்படுத்தினோம்.

நிகழ்ச்சி காணோலியை பள்ளி ஆசிரியர் ஒருவர் எனக்கு அனுப்பியிருந்தார்.
பல உள்ளூர் பிரமுகர்கள் பேசியிருக்கிறார்கள். இதுபோல  ஆசிரியர் குழுவுடன் உள்ளூர்காரர்கள் இணைந்து செயல்படுவது நல்லதொரு வழிகாட்டல். உண்மையில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் உள்ளூர் மக்களின் அபிமானத்தையும் நம்பிக்கையும் பெறுவதே இன்றைய உடனடி தேவை. அதை இவர்கள் கச்சிதமாக செய்திருக்கிறார்கள். வாழ்த்துகள்.

கடந்த ஆண்டு நான் நேரில் சென்றிருந்தபோது 'சிறகுகள் அறக்கட்டளை எங்க பள்ளிக்கு வந்த நேரம் பசங்க ஆர்வமா, உற்சாகத்தோட படிக்க ஆரம்பிச்சுட்டாங்க, நன்றி! ' என பள்ளி நிர்வாகத்தினர் புகழ் மொழி சொன்னாலும்,  இந்த வெற்றி முழுக்க முழுக்க மாணவர்கள், ஆசிரியர்களின் பூரண உழைப்பில் வந்த ஒன்று. அவர்களைப் பாராட்டி கைகுலுக்கி வாழ்த்துவோம்.

#சிறகுகள்2019






Wednesday, August 2, 2017

மாணவர்களின் கேடயம்

கடந்த கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில்  திருவாரூர் மாவட்டத்தில்  100 சதம்  வெற்றி பெற்ற அரசுப்பள்ளிக்கள்
இரண்டு பள்ளிகளில்   ஒன்று மாங்குடி அரசு உயர்நிலைப்பள்ளி.

அங்கு 2016ல் "சிறகுகள் கல்வி அறக்கட்டளை"யின் கல்வி உதவித்தொகை வழங்கும்  நிகழ்வில்  'டிரஸ்ட் சார்பில்  எங்கள் பள்ளியைத் தத்து எடுத்துக் கொள்ளுங்கள்' எனும் கோரிக்கை வைத்தபோது, 'செய்யலாம்,  100 % ரிசல்ட்  கொண்டுவாங்க.'  என மேடையிலேயே அறிவித்திருந்தோம். அதைச் சவலாக எடுத்துக்கொண்டவர்கள் இந்த வருடம் எங்களாலும் முடியும் என நிருப்பித்திருக்கிறார்கள்.

ஒரு கிராமப்புற அரசுப்பள்ளியில்  100% வெற்றி என்பது பல தடைகளைத் தாண்டிய ஒரு சாதனை. அவர்களுக்கு எனது வாழ்த்துகள்.

இந்தச் செய்தியை நண்பர்களுக்கு முன்பே பகிர்ந்திருந்தேன் என

நினைக்கிறேன். அதன் தொடர்ச்சியாக இந்தவருடமும் அந்தப் பள்ளி மாணவர்களுக்கு  சிறகுகள் சார்பில்  கல்வி உதவித்தொகை வழங்கினோம்.

தேர்வில் முதல்  மதிப்பெண் பெற்றுத் தேர்ச்சி பெற்ற
சந்தியாவுக்கு ஐந்தாயிரமும் இரண்டாம், மூன்றாம் மதிப்பெண் பெற்ற ரூபன்ராஜ் , வினிதாவுக்கு 2,500, 1,000 வழங்கினோம்.

அதுபோல தமிழில்
சிறப்புகவனம் செலுத்துபவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் வருடந்தோரும் தமிழில்
முதல் மதிப்பெண் பெறுவருக்கு சிறப்பு பரிசாக
இரண்டாயிரத்து ஐநூறு வழங்குவோம்.  இந்தவருடம் அந்தப் பரிசையும் மாணவி சந்தியா பெற்றார்.  மனப்பூர்வமாக  வாழ்த்துகள் மாணவர்களே.

நாம் வழங்கும் இந்தச் சிறிய  உதவித்தொகை அவர்களின் உயர்க்கல்விக்கு எதேனும் ஒரு வகையில் உதவும் என கண்டிப்பாக நம்புகிறேன்.

வசதியானவர்களுக்கு தனியார் கல்வி எனும் இன்றைய நிலையில் எளியவர்களின் கடைசி நம்பிக்கை அரசுப்பள்ளிகள் மட்டுமே. அங்கே சுயநலமின்றி அக்கறையுடன்
உழைக்கும் ஆசிரியர்களும் இருக்கதான் செய்கிறார்கள். அவர்களின் முயற்சியில்லாமல் முழுதேர்ச்சி, நல்ல மதிப்பெண் எல்லாம் கண்டிப்பாக  சாத்தியமே இல்லை.  அவர்களுக்கு நமது
பாராட்டுகளும் , நன்றியும்.

பள்ளி தலைமை ஆசிரியர் கேட்டுக்கொண்டபடி வெற்றிபெற்ற எல்லா மாணவர்களையும் உற்சாகபடுத்தும் விதமாக
விழாவில் அனைவருக்கும் ஒரு கேடயத்தை நினைவுப்பரிசாக வழங்கினோம்.

எனக்கு இதுபோன்றதோரு உலோகக் கேடயத்தில் எல்லாம் பெரிதாக நம்பிக்கையில்லை. ஆனால், எளியவர்களுக்கு அவர்கள் பெறும் நல்ல கல்வி மட்டுமே வலிமையான கேடயம் என உறுதியாக நம்புகிறேன். அது நல்லதொரு ஆயுதம் கூட.  அவர்கள் எதிர்காலத்தில் வாழ்க்கையில் போராடி  வெல்ல அதைப் போன்றதோரு கூர்மையான வேறு ஆயுதம் இருக்கமுடியுமா என்ன ?

தேர்வில் மதிப்பெண்கள் முக்கியம் எனச் சொல்லும் அதே நேரத்தில் நமது கிராமப்புற மாணவர்களின் திறன் வளர்க்கப்படவேண்டும்
என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதற்கென பள்ளியில் பயிற்சிப்பட்டறைகள், குழு விவாதங்கள் நடத்தும்
எண்ணம் இருக்கிறது. நண்பர்களின் உதவி தேவைப்பட்டால் தொடர்பு கொள்கிறேன்.நன்றி

Sunday, June 19, 2016

கும்பாபிஷேகமும் கண்ணீரும்

கடந்தவாரம் பதிமூன்றாம் தேதி சிறகுகள் அறக்கட்டளையின் சார்பில் 
2016-பத்தாம்வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றிபெற்று முதல்மூன்று மதிப்பெண்களைப் பெற்ற மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கினோம். 

இந்த முறை திருவாரூருக்கு அருகில் உள்ள மாங்குடி அரசினர் உயர்நிலைப் பள்ளியை தேர்வு செய்திருந்தோம். கல்வி உதவித் தொகையை வழங்கும் அதே நேரத்தில் அந்த உதவி உரிய பயனாளிகளுக்குதான் சென்று சேருகிறது என்பதை கருத்தில் கொண்டே மாங்குடி பள்ளியை தேர்வு செய்தோம்.  

இதை ஏன் சொல்கிறேன் என்றால் -  எல்லா அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் நிதிஉதவியும் ஊக்கமும் கிடைத்துவிடுவதில்லை. அதே சமயத்தில் ஓரு அரசுப்பள்ளி வசதியான சூழலில் அமைந்துவிட்டால் ஓரளவேனும் அப்பள்ளி மாணவர்களுக்கு தேவையான உதவிகள் யார் மூழமாகவோ கிடைத்துவிடுகிறது. அந்த வகையில் மாங்குடி பள்ளி மிகச் சரியான தேர்வு. 

பரிசு பெற்றவர்கள், மதிப்பெண்ணுடன் கீழே.

சுந்தரேசன்  - முதல் மதிப்பெண்** 475
ராஜகுமாரன்  - இரண்டாவது மதிப்பெண்** 466 
சர்மிளா தேவி - மூன்றாவது மதிப்பெண்** 463

முதல் பரிசாக ரூபாய் ஐயாயிரம், இரண்டாம் பரிசாக ரூபாய் இரண்டாயிரத்து ஐந்நூறும், மூன்றாம் பரிசாக ரூபாய் ஆயிரமும் வழங்கப்பட்டன.

சிறப்பு பரிசாக வழங்கப்படும்  'தமிழ்ப்பாடத்தில் முதல்  மதிப்பெண் ' பரிசைப் பெற்றதும் சுந்தரேசன்தான். அவருக்கு ரூபாய் மூவாயிரம் கூடுதல்பரிசாக வழங்கப்பட்டது. பரிசு பெற்ற அனைவருக்கும் சிறகுகள் சார்பில் பாராட்டு சான்றிதழும்  வழங்கப்பட்டது.


நிகழ்ச்சியில் அறக்கட்டளை சார்பில் அப்பாவும் (R.சிவசுப்பிரமணியன்), அப்பாவின் நண்பரான திரு. V.G. கிருஷ்ணமூர்த்தியும் கலந்து கொண்டனர். பரிசு பெற்ற மாணவர்கள் அனைவரையும்  சிறகுகள் அறக்கட்டளை சார்பில் மனமார வாழ்த்துவோம்.

இந்தச் சிறிய கல்வி உதவித்தொகை அவர்களின் உயர்க்கல்விக்கு எதேனும் ஒரு வகையில் உதவும் என கண்டிப்பாக நான் நம்புகிறேன்.

முக்கியமாக சமீபத்தில் தன் தந்தையை இழந்த சுந்தரேசனுக்கு இந்த தொகை கண்டிப்பாக பெரிய உதவியாக இருக்கும்.  சுந்தரேசனுடன் பரிசுபெற மேடைக்கு அழைத்தபோது கணவனை இழந்த  அந்த தாய் அழுதபடி மறுத்து விட்டாராம். அப்போது அவர் மனம் என்ன பாடுபட்டிருக்கும் என்பதை உங்களுக்குச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஆனால் சுந்தரேசன் போன்ற பொறுப்பான, துடிப்பான மாணவர்கள் படித்து கண்டிப்பாக சாதிப்பார்கள். தங்கள் அம்மாக்களின் கண்களில் ஆனந்தக் கண்ணீரை பெருகச் செய்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு நிச்சயமாக இருக்கிறது. 

இந்த மாணவர்கள் பந்தயக் குதிரைகள் போல. அவர்கள் போட்டியில் ஓடி ஜெயிக்கத் தயாராயிருக்கிறார்கள்.  அறிவார்நத சமூகமாக  நாம் செய்யவேண்டியதெல்லாம் அவர்களுக்கான சரியான இலக்கையும் அதை வென்றுமுடிக்க வேண்டியதைச் செய்வதுமே. 

அப்புறம்,  விழாவில் கலந்து கொண்ட எண்பது வயதுப்  பெரியவர் தனது சொந்த நான்கு மா  நிலத்தை இந்த அரசு பள்ளிக்கு  தானமாக தந்தவராம்.  இதற்கும் அவர் ஓன்றும் பெரிய உத்யோகத்தில் இருந்தவரில்லை. சாதாரண அரசு ஆசிரியராக இருந்து தனது குடும்பத்தை கரையேற்றியவர்தான். அந்தகாலத்தில்  ஓரு ஆசிரியராக அவர் பெரிதாக என்ன சம்பாதித்திருக்கப் போகிறார் சொல்லுங்கள். இவரைப் போன்ற சாதாரண மனிதர்கள் இன்னமும் வாழ்வதால்தான் ஊரில் மழை பெய்கிறது என நினைத்துக் கொண்டேன். 

நிகழ்வின் முடிவில் அந்த பெரியவர் ' கோயில்  கும்பாபிஷேகம் போல நிகழ்ச்சி சிறப்பா பண்ணிட்டீங்க ' என்றாராம். ஆனால் கும்பாபிஷேகத்தை விட அந்த தாயின் கண்ணீரே மனதில் நின்றது. 

நாம் கோயில் கும்பாபிஷேகத்தை பற்றி பெரிதாக பேசவேண்டியதில்லை. ஏனேன்றால் அந்த பாரதி கண்ட கனவே பள்ளித் தலம் அனைத்தும் கோவில்கள் செய்வது தானே.

தொடர்ந்த ஊக்கமும் உற்சாகமும் அளித்துவரும் நண்பர்களுக்கு நன்றி!!