32 ஆண்டுகளுக்கு முன் சென்னை மாநகரில் ஒரு சாதாரண குடும்பம் வீடு கட்டுவதற்காக எத்தனைத் துயரங்களைச் சந்திக்கிறது என்பதைப் பேசும் படம் பாலுமகேந்திராவின் "வீடு".
வீடு படத்தைச் சின்ன வயதில் கறுப்பு வெள்ளையாக தூர்தசனில் பார்த்தது. நேற்று மறுபடியும் பார்த்தேன்.
அறியாத வயதில் பார்த்த போது படம் கொஞ்சம் மெதுவாக நகர்வதாக உணர்ந்திருந்தேன். அதைத் தவிர படம் குறித்த வேறு எந்த நினைவும் இருந்திருக்கவில்லை. அதனால், புதிய படம் பார்க்கும் அதே ஆர்வத்துடனே நேற்று பார்த்தேன். வீட்டில் பார்ப்பதால் தேவையற்ற காட்சிகளை வலிந்து ஓட்டும் வசதி இருந்தும் ஏனோ ஒரு வினாடி கூட அப்படிச் செய்ய தோன்றவில்லை.
இருந்தாலும், சில காட்சிகளை ஒருங்கிணைத்து ஒரே காட்சியாகச் செய்திருக்கலாமோ எனும் எண்ணம் ஓரிரு இடங்களில் தோன்றியதை மறைக்க வேண்டியதில்லை.
முன்பு, முற்றிலும் மனித உழைப்பைக் கொண்டு அஸ்திவாரம் என்னும் கடைக்கால் போடுவதில் இருந்து பக்கத்தில் நின்று சொந்த வீடு கட்டும்
பழக்கம் இன்று வழக்கொழிந்து வருகிறது. பணம் இருந்தால் உடனே கையில் வீடு எனும் நிலை இருப்பதால் வீட்டைக் கட்டிப்பார்.. பழமொழி பெரும்பாலும் இன்று செல்லுபடியாவதில்லை.
அதனால், வீடு கட்டுவதன் சிரமங்களை ஒதுக்கிவிட்டுப் பார்த்தாலும்,
படம் ஒட்டு மொத்தமாக 30 ஆண்டுகளுக்கு முந்தைய சென்னையின் மத்தியதர வாழ்வை அழகியலோடு ஒரு சொட்டாக நம் கண் முன்னால் நிறுத்துகிறது.
வீட்டில் அக்காவுக்குப் பிறந்தநாள் எனும்போது மதியம் பாயசமும், மாலை வடையும் வேணும் எனக் கேட்டு வாங்கிக்கொள்ளும் தங்கை.
பிறந்தநாளுக்குத் தாத்தாவின் காலில் விழுந்து ஆசீர்வாதத்துடன் 1 ரூபாய் பெற்றுக் கொள்ளும் நாயகி. அவள் கடன் கேட்ட இடத்தில் கிடைக்காத எரிச்சலில் வீட்டுக்கு வரும் போது தங்கையிடம் காட்டும் கோபம். என குடும்ப நிகழ்வுகளை மிக இயல்பாக செயற்கைத்தனங்கள் இன்றி அழகாகச் சொல்லி இருக்கிறார் இயக்குநர் பாலுமகேந்திரா.
பிறந்தநாளுக்குத் தாத்தாவின் காலில் விழுந்து ஆசீர்வாதத்துடன் 1 ரூபாய் பெற்றுக் கொள்ளும் நாயகி. அவள் கடன் கேட்ட இடத்தில் கிடைக்காத எரிச்சலில் வீட்டுக்கு வரும் போது தங்கையிடம் காட்டும் கோபம். என குடும்ப நிகழ்வுகளை மிக இயல்பாக செயற்கைத்தனங்கள் இன்றி அழகாகச் சொல்லி இருக்கிறார் இயக்குநர் பாலுமகேந்திரா.
உண்மையில் அன்றைய காலகட்டத்தில் அனைவரும் ஏறக்குறைய ஒரே பொருளாதார நிலையில் இருந்தனர். உறவுகள் மகிழ்ச்சியை ஒன்றாக அனுபவித்தனர். துன்பத்தில் ஒருவருக்கொருவர் ஆறுதல் கூறினர். அதனால் அன்று உறவுகள் பலப்பட்டன. வளர்ந்தன. என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.
அதுபோல, பணத்தால் சக பெண் ஊழியரைப் படுக்கைக்கு இழுக்க நினைக்கும் அலுவலக உயர் அதிகாரி ஒருபுறம் என்றால் சித்தாளைத் தவறான கண்ணோட்டத்தில் நோக்கும் மேஸ்திரி என வாழ்வின் இரு புறங்களையும் காட்டும் நேர்த்தி என படம் அழகான யதார்த்தமான சிறுகதையாகத் திரையில் விரிகிறது. இறுதிக் காட்சி கூட வலிந்து திணித்தது போல இல்லாமல் இயல்பாக வந்திருக்கிறது. பாடல்கள் இல்லாத படத்துக்கு இளையராஜாவின் இசை பக்க பலமாக இருக்கிறது.
முக்கியமாக, படத்துக்கு மிகப்பெரிய பலம் அர்ச்சனாவும், அவருடைய தாத்தாவாக வரும் சொக்கலிங்க பாகவதரும். அதை நடிப்பு என்பதை விட அந்தப் பாத்திரமாக வாழ்ந்திருக்கிறார்கள் எனச் சொன்னால் அது தேய்வழக்காகவே இருக்கும். அதிலும் குறிப்பாக, வீட்டுக்குக் கடைக்கால் போடும் நிகழ்ச்சியில் அர்சானாவை முன்னிருத்திச் சடங்கு செய்யும் காட்சி அதில் அவருடைய முகத்தில் தெறிக்கும் பெருமையும், கம்பீரமும் படம் பார்க்கும் நமக்கும் ஒட்டிக்கொள்கிறது. இப்போது எங்கே இருக்கிறீர்கள் அர்ச்சனா ?
இன்னமும் 30 ஆண்டுகள் கழித்து அடுத்த தலைமுறையினர் பார்த்தாலும் (தமிழ் வசனங்களுக்கு ஆங்கில சப்டைட்டில் தேவைப்படலாம்) அவர்களையும் வியக்க வைக்கும் ஒரு தரமான படமாக "வீடு" கண்டிப்பாக இருக்கும்.
No comments:
Post a Comment