Saturday, August 17, 2024

வனநாயகன் குறித்து-36 (அழிந்து வரும் போர்னியா காடுகளும் சூழலியலும்)

வனநாயகன்(மலேசிய நாட்கள்)  நாவல் குறித்து சிங்கப்பூர் வாழ் நண்பர் சதீஷ் முத்து கோபால் அவர்களுடைய வாசக அனுபவம் கீழே.  சமகாலத்தில் சூழலியலில் தனது எழுத்தோடு பயணிக்கும் சதீஸ் அவர்களுக்கு நன்றி !

//

தோழர் திரு.ஆரூர் பாஸ்கர் அவர்களின் "வனநாயகன்" வாசித்தேன். மலேசியாவை கதைக்களமாக கொண்ட ஒரு அற்புதமான நாவல். முற்றிலும் புதுமையான கதை. யாரும் எழுதாத மென்பொருள் நிறுவனத்தில் நிகழும் சிக்கலைகளை மையமாக வைத்து, புதியதொரு களத்தில் விறுவிறுப்புடன் கூடிய நாவலை படைத்திருக்கிறார் பாஸ்கர். ஆனால் அதையும் தாண்டி, அழிந்து வரும் போர்னியா காடுகளை இந்த கதைக்குள் கொண்டுவந்த போது, அவருடைய சிந்தனை ஆச்சரியப்படுத்தியது. 


கதையின் ஊடாக, தன்னால் இயன்றவரை மலேசியாவை பற்றிய தகவல்களை கொட்டிக் கொடுத்து ஆச்சர்யப்படுத்துகிறார். மிகவும் நுட்பமாக மனிதர்களை அடையாளப்படுத்துகிறார். காட்சி நடக்கும் இடங்களை அப்படியே கண் முன்னால் நிறுத்துகிறார். இந்த நாவலுக்காக அவர் எடுத்துக் கொண்ட உழைப்பை ஒவ்வொரு பக்கத்திலும் காண முடிகிறது. 

கதையில் விழும் முடிச்சுகள், அதன் பின்னால் இருக்கும் கதைகள், அதன் வழியே அவர் நமக்குள் ஏற்படுத்தும் தாக்கம், எதிர்பாராத திருப்பம் என வாசிப்பதற்கு மிகவும் சுவாரஸ்யமான நூல் வனநாயகன். கார்ப்பரேட் நிறுவனங்களில் எதுவும் நாணயமானது இல்லை என, மோசடிப் பேர்வழிகள் எனச் சொல்லும் இடத்தை அவ்வளவு எளிதில் கடந்து போக முடியவில்லை. 

மென்பொருள் ஊழியர்கள், அவர்களுக்கிடையே தோழமை, பகை, காதல் என எல்லாவற்றையும் கடந்து, பத்திரிக்கையாளர், காவலர், மருத்துவர், டாக்ஸி ஓட்டுநர் என கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றையும் தேவைக்கேற்ப அழகாக வடிவமைத்திருக்கிறார். கதையை சுவாரஸ்யமாக கொண்டு செல்லும் எழுத்து நடையை நான் மிகவும் ரசித்தேன். 

கதையின் நாயகனாக வரும் சுதாகர், எந்த தீய பழக்கமும் இல்லாத நல்லவராக இருக்கிறார். இப்படி ஒரு நாயகனை சமீபத்தில் எந்த தமிழ் சினிமாவிலாவது பார்த்ததுண்டா ? எனக்கு சுதாகரை மிகவும் பிடித்துப்போனது. கதையின் போக்கில் சில இடங்களில் நான் சுதாகராக உணர்ந்தேன்.


தோழர் பாஸ்கர் அவர்களால், ஒரு முழு சூழலியல் நாவலை எழுத முடியும் என நான் நம்புகிறேன். அவர் இதில் தொட்ட விஷயத்தை இன்னும் ஆழமாக ஆராய்ந்தால் இன்னும் பல நூறு கதைகள் பிறக்கும். அவரால் நிச்சயம் அது முடியும். அவர் மேலும் பல படைப்புகளை உருவாக்க மனதார வாழ்த்துகிறேன்.

//

Orgninal Link:

https://www.writersatheesh.com/2024/08/blog-post_10.html



No comments:

Post a Comment