Tuesday, July 21, 2026

2026-அமெரிக்க பேரவை இதழில் எனது சிறுகதை

2026-அமெரிக்க பேரவை இதழில் என்னுடைய 'கரை வந்தது சிறுகதை தேர்வாகி இருக்கிறது. தேர்வுக் குழுவினருக்கு மனமார்ந்த நன்றி !!





தலைப்பு-  மேற்கிசை வலசை
வெளியீடு- இலக்கியக்குழு, வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை
ஆண்டு- 2026


Friday, July 10, 2026

அமெரிக்காவில் பரவலாகும் தானியங்கி புல்வெட்டும் இயந்திரம்

புல்வெளியை மனித உதவியின்றி தானாகவே வெட்டும் புத்திசாலி இயந்திரம்தான் "லான் மோவர் ரோபோ" (lawn mower robot) எனும் தானியங்கி புல்வெட்டும் இயந்திரம்.

சென்சார் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியால் தடைகளைத் தவிர்த்து, திட்டமிட்ட பாதையில் துல்லியமாக  இது புல்லை வெட்டுகிறது.



நேரத்தையும் உழைப்பையும் மிச்சப்படுத்தும் இந்த ரோபோக்கள் அமெரிக்க வீடுகளில் கொஞ்சம் கொஞ்சமாக பயன்பாட்டுக்கு வருகின்றன. கடந்த வாரம்
எங்கள் குடியிருப்பில் பார்த்த காட்சி இது.


Tuesday, July 7, 2026

39வது பெட்னா(FETNA) பேரவை விழா - இணை அமர்வு 1

நியூஜெர்சியில் 2026, ஜூலை 2 முதல் 4 வரை பிரம்மாண்டமாக நடைபெற்ற  39-வது பெட்னா(FETNA) பேரவை விழாவில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. நிகழ்வில் பெட்னா இலக்கியகுழு இரண்டு இணை அமர்வுகளுக்கு ஏற்பாடு செய்திருந்தது.

இந்த இணை அமர்வுகளில் கவிஞர் பெருந்தேவி, கவிஞர் சாம்ராஜ், எழுத்தாளர் சரவண கார்த்திகேயன் மற்றும் தமிழ்நதி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர்.

ஜூலை 3-ம் தேதி வெள்ளி அன்று நடந்த அமர்வு சமகாலத் தமிழ் இலக்கியம் - துவக்கமும், திசைகளும், போக்குகளும் என்ற தலைப்பில் அமைந்திருந்தது.

முதலில் கவிஞர் பெருந்தேவி , "புதுமைப்பித்தன்: நவீன இலக்கியத்தின் முகம்" என்ற தலைப்பில், புதுமைப்பித்தனின் படைப்புகளும் நவீனத் தமிழ் இலக்கியத்தில் அவர் ஏற்படுத்திய மாற்றங்களும் குறித்து பேசினார். அடுத்து பேசிய எழுத்தாளர் சரவண கார்த்திகேயன், "நவீனத் தமிழ்ப் புனைவின் பரிணாமம்" என்ற தலைப்பில், நவீனத் தமிழ்ப் புனைவின் வளர்ச்சிப் பாதை, மாற்றங்கள் மற்றும் புதிய போக்குகள் குறித்து தனது கருத்துகளைப் பகிர்ந்தார். அவர் தன்னுடைய பேச்சில் ஓர் எழுத்தாளராக தனது அவதானிப்புகளாக இன்றைய காலகட்டத்தில் ஊடகங்கள், வாசகர்கள், பதிப்பகங்கள்,சமூகம், செயற்கைத் தொழில்நுட்பம் என்பது மாதிரியான பத்து விசயங்களைத் தொட்டு பேசியது இரசிக்கும்படி இருந்தது.
அடுத்து பேசிய எழுத்தாளர் தமிழ்நதி, "புலம்பெயர்ந்தோர் இலக்கியம் – ஒரு பார்வை" என்ற தலைப்பில், புலம்பெயர் வாழ்வியலைப் பிரதிபலிக்கும் தமிழ் இலக்கியத்தின் தனித்துவம், வளர்ச்சி மற்றும் அதன் சமகாலப் பரிமாணங்கள் குறித்து பேசினார். அது ஈழத்தமிழ் எழுத்தாளர்கள் மேல் வைக்கப்படும் பல கேள்விகளுக்கு பதில் சொல்வது போலவும் அமைந்தது. இறுதியாக பேசிய எழுத்தாளர் சாம்ராஜ், "தமிழ்ச் சிறுகதைகளும் பகடியும்" என்ற தலைப்பில் தமிழ்ச் சிறுகதைகளில் பகடி எவ்வாறு கையாளப்பட்டுள்ளது, அதன் இலக்கியப் பங்கு மற்றும் சமூக விமர்சனத் தன்மை குறித்து உரையாற்றினார்.


இவர்களுடைய அனைத்து உரைகளும் சமீபத்தில் நான் கேட்ட உரைகளில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக செறிவானதாக இருந்தது. குறிப்பாக, புதுமைப்பித்தன் படைப்புகள் குறித்தும் அவருடைய காஞ்சனை சிறுகதை குறித்தும் பேசியது தனது நெடுநாள் கனவு என பெருந்தேவி நேர்பேச்சில் குறிப்பிட்டார். இதில் இருந்து அதற்கான உழைப்பை நம்மால் புரிந்து கொள்ளமுடிகிறது.

சாம்ராஜ் தனது உரை நடிகர் கமலுடைய திரைப்பகடி என்பது மலையாள பட தாக்கதில் வந்தது, தமிழ் திரையில் மதுரைத் தமிழை பகடியாக்கி புதியபாதை கண்டவர் வடிவேலு, பொதுவாக சுயபகடி என்பது தமிழி்ல் குறைவு அதனால்தான் பகடி நிறைந்த எழுத்துகள் வருவதில்லை. இலக்கியம் விடுதலைக்கானது, பகடி அதைத் தரவல்லது என்பது போன்ற பல கூர்மையான அவதானிப்புகளால் நிறைந்திருந்ததும் சிறப்பு.