Showing posts with label #CycloneFani. Show all posts
Showing posts with label #CycloneFani. Show all posts

Saturday, May 4, 2019

ஒடிசாவைப் புரட்டிப்போட்ட ஃபானி புயல்

நேற்று சுமார் 245 கீ.மீ  வேகத்தில் கரையைக் கடந்த  ஃபானி புயல் ஒடிசாவைப் புரட்டிப்போட்டுவிட்டுச் சென்றிருக்கிறது. கனத்த மழையோடு வீசிய சூறைக்காற்று நகரங்களிலும் கிராமங்களிலும் பெருத்த சேதத்தை ஏற்படுத்தி இருப்பதாக அறிகிறேன்.

நேற்று வீசிய பலத்த காற்றில் மரங்கள், மின்கம்பங்கள்,தொலைத்தொடர்பு கோபுரங்கள்  அடியோடு விழுவது, பெரிய அலைகளோடு கடல் நீர் ஊருக்குள் நுழைவது போன்ற பல படங்களை இணையத்தில் பார்க்கமுடிகிறது. ஏறக்குறைய 300 கீ.மீ வேகத்தில் வீசிய புயலை எதிர்பார்த்து அரசு தேவையான முன்னேச்சரிக்கை நடவடிக்கைகளைச் சரியாக செய்திருப்பதாக தோன்றுகிறது. இல்லையென்றால் உயிர்சேதம் பலநூறை தொட்டிருக்கும். 


சுமார் 25 இலட்சம் குறுஞ்செய்திகள்,  பல்லாயிரக்கணக்கான தன்னார்வலர்கள், அவசரகால தொழிலாளர்கள்,பொது அமைப்புகள்  
ஒத்துழைப்போடும் தொலைக்காட்சி விளம்பரங்கள், கடற்கரை சைரன்கள்
உதவியோடும் சூறாவளி வருவதை முன்கூட்டியே தொடர்ச்சியாக எச்சரித்து
மக்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தியாவின் ஏழை மாநிலங்களின் பட்டியலில் ஓடிசா-வுக்கு கண்டிப்பாக ஓர் இடம் உண்டு. ஆனால், அவர்களுடைய ஏழ்மை  ஃபானி புயலை எதிர்கொள்வதில் தடையாக இருக்கவில்லை என்பதாக புரிந்துகொள்கிறேன்.
அரசுக்கு பாராட்டுகள்.

மக்களுக்கு தண்ணீர், மின்சாரம், தொலைத் தொடர்பு போன்ற அத்தியாவசியங்கள் அனைவருக்கும் கிடைத்து இயல்பு வாழ்க்கை திரும்ப சில நாட்கள் ஏன் சில இடங்களில் பல மாதங்கள் கூட ஆகலாம். வேறு வழியில்லை.

இங்கிருக்கும் ஒடிசா நண்பர் ஒருவரின் பெற்றோர்கள் தலைநகர் புவனேஷ்வரில் வசிக்கிறார்கள். அவர்களைக் கடந்த இரண்டு நாட்களாக தொடர்புகொள்ள முடியவில்லையாம். அவர்கள் பாதுகாப்பாக இருப்பார்கள் என நம்புவதாக சொன்னார். அதுவரை அமெரிக்கா போன்ற தூரா தேசத்தில் பதைபதைப்போடு காத்துக்கொண்டிருப்பதைத் தவிர என்ன எங்களால்  பெரிதாக செய்துவிடமுடியும் சொல்லுங்கள்.