Monday, April 13, 2015

கலிபோர்னியா - பயண அனுபவங்கள்

ப்ளோரிடாவில் வசிக்கும் நான் சில வாரங்களுக்கு முன் Spring Breakக்கு குடும்பத்துடன் கலிபோர்னியா சென்று  வந்தோம்.

இங்கே என்னுடைய  பயண அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் பிரிப்படுகிறேன்.

 கலிபோர்னியா செல்வது எனக்கு இரண்டாவது தடவை. இதற்கு முன்பு அலுவல் நிமித்தமாகக்  கடந்த வருடம் சென்றிருந்தேன்.

இந்த முறை பயணத்தின் நோக்கம் ஊரை சுற்றிப் பார்ப்பது, முக்கியமாக அங்கே வசிக்கும் எனது உறவினர்களின் வீடுகளுக்குச்   செல்வதும் தான்.

சித்தி மகன் கார்த்திக்கும் , அத்தை மகன் ஆனந்தும்  இருப்பது கலிபோர்னியாவில் இருக்கும்  சான்பிரான்சிஸ்கோ நகரம்.

அமெரிக்காவில்  சொந்த பந்தம்னு தலைக் காட்ட இருப்பது இந்த இரு
 வீடுகள்தான். அதையும் விட்டா எப்படிங்க?  மட்டுமில்லாமல் ,  என்னுடைய குடும்பத்தை ஆனந்தின் குடும்பம் பத்து வருடங்களுக்குப் பிறகு இப்போதுதான் பார்கிறார்கள் என்பது ஒரு ஹைலைட் வேற .

ஆமாம், தாராளமயமாக்கல் எனும் சூறாவளியில் ,   உலகத்தின்  மூலைக்கு
ஒன்றாக வீசி ஏறியப்பட்ட உறவுகள்  நாங்கள் .

நான்  நினைத்ததுப் போலவே இந்தப் பயணம் மிகச் சிறப்பாகவே  அமைந்தது.
இந்தமுறை  கலிபோர்னியாவின் நீள அகலத்தை முடித்த வரை நன்றாக அளந்தேன் என்றே சொல்லவேணும். ஆம், ஏறக்குறைய சுமார் ஆயிரம் மைல்கள் காரிலேயே சுற்றினேன்.    

கலிபோர்னியா பயணத்தின் வியப்புத் தீருமுன் செய்யும் பதிவு இது.

சமீபத்தில் வெளியான "ஐ" பட வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட
முன்னாள் ஆணழகன் "அர்னால்டு"  இந்த ஊருகாரர்தங்க.  அவர் மாகாண கவர்னராக இருந்ததும்   கலிபோர்னியா தாங்க.

உலகச்  சினிமாவின் கோட்டையான   உலகம் போற்றும் ஹாலிவூட் (hollywood) இங்கே தான் இருக்கிறது.

கம்யூட்டர்  சுல்தான்களாகிய   உலகப் புகழ்பெற்ற  ஆப்பிள் , கூகுல்  போன்ற நிறுவனங்கள்  இருக்ககூடிய சிலிக்கான் பள்ளத்தாக்கு கலிபோர்னியாவில் தான் இருக்கிறது.

"சிலிக்கான் பள்ளத்தாக்கு" அமெரிக்காவில்  இந்தியர்களின் கோட்டை என்பதும் ஒரு கூடுதல் தகவல். குறிப்பாக தமிழர்களின் கோட்டை என்றால் பொருத்தமாக இருக்கும்.

கோல்டன் கேட் பாலம் இருப்பது இங்கேதான் என பலவற்றை அடுக்கிக்கொண்டே போகலாம்.


இவ்வாறு உலகப் புகழ் பெற்ற கலிபோர்னியா அமெரிக்காவின் மிக முக்கியமான மாகாணமும் கூட.  அமெரிக்க டாலர் பொருளாதாரத்தில் 13% கலிபோர்னியாவின் பங்கு என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
கலிபோர்னியாவின் கிழக்குத் திசையில் நெவாடாவும்,  அரிசோனா மாநிலங்களும், மேற்கே பசுபிக் கடலும், வடக்குத் திசையில் ஒரிகன் மாநிலமும், தெற்குத் திசையில் மெக்சிகோவின் பாஹா கலிபோர்னியாவும் உள்ளன (கிழே படத்தில் மஞ்சள் நிறத்தில்).



இம்மாநிலத்தின் கொஞ்சம் வரலாற்றையும் பார்த்து விடலாமே.

1846-1848ல் நடந்த மெக்சிக்கோ  அமெரிக்கப் போரில்  இப்பகுதியை மெக்சிக்கோவிடம் இருந்து அமெரிக்கா கைப்பற்றியது.  பின்பு 1850ல் கலிபோர்னியா அமெரிக்காவின் 31 ஆவது மாநிலமாக மாறியது.

கலிபோர்னியாவின் மக்கள்தொகை  37 மில்லியன், அமெரிக்காவின் மக்கள்தொகையில் கலிபோர்னியாவுக்கே முதலிடம்.  அதிகப்படியான மக்கள் இங்கே வாழ பலதரப்பட்ட  காரணங்கள்  சொல்லலாம்.

முக்கியமாக இங்கே கிடைக்கும் அபரிமிதமான வேலைவாய்ப்ப்பு  ,  ரொம்பக் குளிர் அல்லது வெயில் இல்லாத நல்ல அருமையான தட்பவெட்பம் போன்றவற்றைச் சொல்லலாம்.

கோல்ட் ரஷ்  நேரத்தில் கலிபோர்னியாவில் புதிதாகக்  கண்டுபிடிக்கப்பட்ட தங்க வயல்கலை நோக்கி  மிகப் பெரிய மக்கள் படையெடுப்பு நடைப்பெற்றது. கோல்ட் ரஷ் கலிபோர்னியாவின் வரலாற்றில் நடந்த ஓர் அதி முக்கியமான நிகழ்வு.

கலிபோர்னியா Golden State அல்லது "தங்க மாநிலம்" என்றே சொல்லபடுகிறது.
அதைப்  பற்றி நேரம் கிடைக்கும் பட்சத்தில் விரிவாகப்  பார்க்கலாம்.


அதுபோல கலிபோர்னியாவை  உலகின் பிரட் பாஸ்கட் என்று சொல்ல காரணமில்லாமல் இல்லை. பால்,பழம், காய்கறி  மற்றும்   ஒயின் என உற்பத்தியில் முன்னணி வகிக்கும் மாகாணம் இது.


கலிபோர்னியா ஓர் இயற்கை எழில் கொஞ்சும் மாநிலம். வேறு எந்த மாநிலத்துக்கும்  இல்லாத சிறப்பம்சமாக இங்கே குளிர், பனி, வெயில் போன்ற சீதொசனம் வருடத்தின் எல்லாக்  காலங்களிலும் இருக்கும்.

அதுபோலப்  பாலைவனம், மலை ,கடற்கரை  மற்றும் சமவெளி என எல்லாவகையான நிலபரப்புகளையும்   உள்ளடக்கியது கலிபோர்னியா.

சேக்ரமெண்டோ கலிபோர்னியாவின் தலைநகராக இருந்தாலும்,  லாஸ் ஏஞ்சல்ஸ், சான் பிரான்சிஸ்கோ போன்றவை இம்மாநிலத்தின் மிகப்பெரிய நகரங்கள்.

என்னுடைய பயணத்தின் பெரும்பாலான நேரத்தை  வளைகுடாப் பகுதியிலும் தெற்குக்  கலிபோர்னியாலும் செலவிட்டேன். வரும் கட்டுரைகளில் அங்கே நான் ரசித்தவைகளை  உங்களுடன் பகிர முயற்சிக்கிறேன்.

Wednesday, April 1, 2015

இதய நிறுத்தம் - உடனடிச் சிகிச்சை


எதிர்பாராத விதமாக உங்கள் நண்பர் அல்லது பணியிடத்தில் அருகில் இருப்பவர் மயக்கமடைந்து விழுந்து,  தன்னுணர்வின்றி   செயற்படாத நிலையில் இருந்தால் உடனடியாக நீங்கள் செய்வது என்னவாக இருக்கும்?

பதற்றத்தில், அக்கம் பக்கம் எவரையாவது  துணைக்கு அழைப்பீர்களா ? அப்போது அவரை தனியே விட்டு செல்லலாமா?

அதிகபட்சமாக உங்களிடம் தொலைபேசி இரூக்கும்    பட்சத்தில் எண் 108 அல்  911 யை அழைப்பீர்கள். ஆம்புலன்ஸ் வர ஆகும் 15-20  நிமிட அவகாசத்தில் நீங்கள் செய்வது என்னவாயிருக்கும்? அதுவரை அவரை எந்த நிலையில் கிடத்தியிருப்பீர்கள். ?  இப்படிப்  பல கேள்விகள் எழுவது இயற்கை.

CPR அல்லது மீளவுயிர்ப்பிப்பு எனும் முதல் உதவி சிகிச்சை  பற்றிக்  கேள்விப் பட்டதுண்டா? நேற்று  அலுவலகத்தில் எனக்கு இதற்கான செய்முறை பயிற்சி அளிக்கப்பட்டது.

கற்றதில் பெற்றது சில.

நான் மருத்துவ நிபுணர் இல்லை, ஆகவே Wikipediaவின் துணையுடன் சில தகவல்கள்:  இங்கே முடித்தவரை டெக்னிக்கல் வார்தைகளை தவிர்த்திருக்கிறேன்.

  • Cardiac Arrest(இதய நிறுத்ததை)  Heart Attack (மாரடைப்பு) உடன் குழப்பிக் கொள்ளாதீர். இதய நிறுத்தம் மாரடைப்பில் இருந்து வேறுபட்டது.


  • மாரடைப்பு என்பது இதயத்தசைக்குச் செல்லும் குருதி வழங்கல் (விநியோகம்) தடைபடுவதால் ஏற்படுவது.


  • இதய நிறுத்தம் என்பது இதயத்தின் சுருங்கி விரியும் தொழிற்பாடு திடீரெனத் தடைப்பட்டு குருதிச்சுற்றோட்டம் நிறுத்தப்படுவது ஆகும். மாரடைப்பு ஏற்பட்ட ஒருவருக்கு இதய நிறுத்தம் ஏற்படலாம்.


  • குருதிச்சுற்றோட்டம் நிறுத்தப்படுவதால் உடலெங்கும் ஆக்சிசன், ஊட்டச்சத்துகள் கொண்டு செல்லப்படுவது தடைபடுகின்றது. மூளைக்கு குருதியோட்டம் தடைபடுவதால் நினைவிழப்பு ஏற்படுகின்றது, அத்துடன் மூச்சுவிடுவதிலும் (சுவாசிப்பதிலும்) சிக்கல் ஏற்படுகின்றது.


  • இதய நிறுத்தம் ஏற்பட்டு ஐந்து நிமிடங்களாக  சிகிச்சை இல்லாதவிடத்து ஆக்சிசன் இல்லாத காரணத்தால் மூளை  செயலிழந்து இறந்துவிடுகின்றது; இக்காரணங்களால் உயிர் பிழைப்பதற்கு உடனடிச் சிகிச்சை இன்றியமையாதது.
  • CPR (Cardiopulmonary resuscitation) உடன் AED (Automated External Defibrillator) எனும் கருவியையும் இதய நிறுத்தத்திற்கு முதல் உதவிக்காகப்  பயன்படுத்தலாம்.


  • CPR என்பது மார்புப் பகுதியில் இதயத்திற்கு மேல் கைகளால் அழுத்திப் பிசைந்து, வாயின் மேல் வாய் வைத்துச் சுவாசத் தூண்டல் செய்யும் முறையாகும்.



  • AED என்பது ஒரு சிறிய மின்னணு சாதனம்.   இதயத்துடிப்பை சரியாகக்  கண்காணித்து,தேவைப்பட்டால் இதயத்துக்கு மின் அதிர்ச்சி செலுத்தக்கூடியது.  அதனால் கையாள்வதில் மிக கவனம் தேவை.  AED சாதனத்தை பெரும்பாலும் எல்லா முதல் உதவி பெட்டியூடன் அமேரிக்காவில் வைத்திருக்கிறார்கள்.




என்னுடைய பதிவு ஒரு தகவலுக்காகவே. நீங்கள் எவருக்கேனும் உதவ வேண்டுமெனில் கண்டிப்பாக முறையான பயிற்சி  அவசியம்.
அமெரிக்கன் ரெட் க்ராஸ் தேவையான பயிற்சியும் சான்றிதழும் தருகிறார்கள்.

http://www.redcross.org/

முடிந்தால்  பயிற்சி எடுத்துக் கொள்ளுங்கள். யாருக்கு தெரியும் ஒர் உயிரை காப்பாற்ற கடவுள் உங்களை விதித்திருக்கிறார் என்று. :)

Reference:

http://en.wikipedia.org/wiki/Cardiopulmonary_resuscitation
http://en.wikipedia.org/wiki/Automated_external_defibrillator

Monday, March 23, 2015

தென்றல் வந்து தீண்டும்போது...

அமெரிக்காவில் உள்ள சான்பிரான்சிஸ்கோ நகரில் வசந்தகாலத்தை
கொண்டாட குடும்பத்ததோடு சென்று வந்தோம் .

ஏய்! கொஞ்சம் நிறுத்து!  நீ என்ன சொல்ல வர ? அப்படின்னு எங்கோ ஒரு குரல் கேட்குதே. அது ஒன்னும் இல்லப்பா, Spring Breakக்கு சான்பிரான்சிஸ்கோ போய்ட்டு வந்தோம் அப்படினு சொல்ல வந்தேன்.. :)

முன்னாடியே, இப்படி விளங்குற மாதிரி தமிழ்ல சொல்லவேண்டியதுதானே ?. சரி இப்போ விசயத்துக்கு வருவோம்.

நினைச்ச மாதிரியே சான்பிரான்சிஸ்கோவில் தென்றல் வீசுகிறது.
நான் சொல்ல வந்தது  வசந்தகாலத்தில் வீசும் தென்றல் காற்று
மட்டுமல்ல. சான்பிரான்சிஸ்கோவில் இருந்து வெளிவரும்
தமிழ் புத்தகம் "தென்றல்" மாதஇதழ்.

வளைகுடா வாழ் தமிழ் கவிஞர்கள், எழுத்தாளர்கள், படைப்பாளிகளின்
படைப்புகளைத் தாங்கி  வெளியாகிறது தென்றல் இதழ்.

இவ்விதழ் தமிழக, தேசிய மற்றும் அமெரிக்க மாதாந்திர முக்கிய செய்தி நிகழ்வுகளின் தொகுப்பு, கவிதைகள், பழமொழி,  குறுக்கெழுத்துப் புதிர், நேர் காணல், கைப்பக்குவம்,  சிறுகதைகள், குறுந்தொடர்கள், மற்றும் உள்ளூர் மாதாந்திர நிகழ்சிகளின் நிரல் தொகுப்பு போன்ற பகுதிகளை  கொண்டிருக்கிறது.

தென்றல் வந்து தீண்டும்போது என்ன வண்ணமோ  மனசுல .. தெரியாதுங்க, ஆனா இந்த தென்றல் கையில் தவழ்ந்தால் மகிழ்ச்சி தாங்க. என்னதான் கம்ப்யூடர் வந்தாலும், புத்தகத்தை கையில் படித்து படிக்கும் அந்த சுகமே தனிதான்.

இந்த புத்தகம் விலையின்றி கிடைக்கிறது என்பதை நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும். இலவசமாக தரப்படும் இந்த புத்தககத்தில் உள்ள படைப்புக்குகளில் கண்டிப்பாக தரத்திற்கு குறைவில்லை.  எந்த ஒரு பகுதியையும் சும்மா சொத்தை என ஒதுக்க இயலவில்லை.

உதாரணமாக சொல்லின் செல்வி திருமதி உமையாள் முத்துவை
பற்றி மார்ச்  இதழில் அறிந்து கொள்ளமுடிந்தது. லாஸ் ஏஞ்சலஸ் ராமின் 'கருப்ஸ் பாண்டியன்' சிறுகதையையும் ரசித்தேன்

நாம் ஈசியாக சொல்லி விடுகிறோம் மாதஇதழ் என்று, ஆனால்
மாதம்தோறும் தரமான ஒரு பிரதியை கொண்டு வருவது அவ்வளவு எளிதல்ல.  தென்றலுக்கு பின் ஒரு பெரிய குழுவே செயல்படுகிறது போல. அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்!. மற்ற அமேரிக்க தமிழ் மன்றங்களுக்கும் இந்த புத்தகம் ஒரு நல்ல வழிகாட்டி.

இந்தப் புத்தகம் கலிஃபோர்னியா வில் உள்ள இந்திய பலசரக்கு கடைகள்,
சிற்றுண்டியகங்கள், மற்றும் வீடியோ கடைகளில் இலவசமாக கிடைக்கிறது
என நினைக்கிறேன்.  ஆனால் சான்பிரான்சிஸ்கோவில் கண்டிப்பாக கிடைக்கிறது.

அதனால் இதை படிக்கும் நீங்கள், கலிஃபோர்னியா  அன்பராய் இருந்தால்
தென்றலை  ஒரு விளம்பர தொகுப்பு என உதாசினப்படுத்தாமல்
ஒரு பிரதியை வாங்கி புரட்டிப் பாருங்கள்.

கலிஃபோர்னியா பற்றிய வேற ஒரு பதிவு சூடா தயாராயிக்கொண்ட்டேயிருக்குது. :)  அதுவரை காத்‌திருங்கள். அடுத்த பதிவில் சந்திப்போம்!.

Monday, March 2, 2015

நடிகை சுகன்யாவின் மொய் விருந்து


நீங்கள் தற்போது தமிழ்நாட்டில் இருந்தால் கடந்த இரண்டு மாதஙகளில் கண்டிப்பாக ஒரு கல்யாண வீட்டயோ  ரீசப்சனையோ  எட்டி பார்த்திருப்பீர்கள்.  தை மற்றும் மாசி மாதங்‌கள் தமிழ்நாட்டின் அதிமுக்கிய கல்யாண மாதங்கள்.

சென்னை இன்ஜினியரிங் கல்லூரிகளில் கூட இடம் கிடைத்துவிடும், ஆனால் இந்த சீஸனில் நல்ல கல்யாண சத்‌திரம் கிடைப்பது குதிரைக் கொம்பாக இருக்கும்.

மாசி மாதம் பற்றி ஒரு கொசுறு செய்தி:  மாசி மாததிற்கும் தமிழ் சினிமாவிற்கும் நல்ல முகூர்த்தம் இருக்கிறது போல. "மாசி மாசம்"  எனும் வரிகள் இடம் பெறும் பாடல்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றவை. உதாரணத்துக்கு "மாசி மாசம் ஆளான பொண்ணு" ,  “மாசி மாசம் தான் கெட்டி மேள தாளம்  தான்"  போன்ற  ரஜினியின் வெற்றி பாடல்களைச் சொல்லலாம்.

கல்யாண வீடுகளில் விருந்து எவ்வளவு முக்கியமோ அதுபோலவே மொய் எழுதுவதும்தான்.    இப்பொழுதெல்லாம் நகர்புறங்களில் பரிசுப் பொருள்களை அன்பளிப்பாக தருவதுதான் பேஷனாக உள்ளது.  ஆனாலும், சிறுநகரங்களிலும், கிராமங்களிலும் மொய் எழுதும் பழக்கம் இன்றும் தொடர்கிறது.

சின்ன கவுண்டர் படத்தில் பணத்துக்கு நெருக்கடி ஏற்படுகையில் சுகன்யா ஊர் ஜனங்களை அழைத்து மொய் விருந்து வைப்பார்.  அவர்கள் சாப்பிட்டு இலைக்கு அடியில் பணத்தை வைத்து செல்ல, விஜயகாந்த் மட்டும் தாலியை வைத்து தனது காதலை சொலலுவதை  ரசிக பெருமக்களாகிய  நீங்கள் மறந்திருக்க வாய்ப்பில்லை.

அப்பொழுதெல்லாம் கிராமங்களில் கல்யாண வீடுகளில் ஓவ்வொருவர் தரும் அன்பளிப்பையும், மொய் பணத்தையும் மைக் போட்டு அறிவிப்பார்கள்.
அங்கே அது அவர்களுக்கு  ஒரு கொளரவப் பிரச்சனைக்கூட.  வயலில் அறுவடை முடிந்த காலத்தில் கல்யாணம் வைப்பதுக்கூட ஒருவகையில் மொய் பணத்‌தை வசூல் பண்ணத்தான்.

நம்மிடம் மொய் பணம் வைப்பதிலும் ஒரு கணக்கு இருக்கிறது.  11, 21, 51, 101, 501 எனக் கொடுப்பதைத்தான் சொல்கிறேன். இந்த ஐதீகத்திற்கான காரணம் யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்களேன். இப்போ இருக்கிற விலைவாசியில்  பத்து ரூபாய்க்கு பணம் போடுற கவர் வேணா கிடைக்கும்னு நினைக்கிறேன். :)

ஆனால், நான் சொல்லவந்தது சீனாவின் ஐதீகம் பற்றி. அங்கே புது வருடம் போன்ற நல்ல நாட்களில் பெரியவர்கள் இளையவர்களை ஆசிர்வதித்து பரிசாக சிறுதொகை தருவது வழக்கமாம். அந்த தொகையை ஒரு சிகப்பு நிற உறையில் இட்டு தருகிறார்கள். சிகப்பு நிறம் வளமையை தருவதாக அவர்கள் நம்புகிறார்கள். இப்ப புரிஞ்சுதா ? சீனா கொடி ஏன் சிகப்பா இருக்குன்னு :)

முக்கியமாக ,அப்படி பரிசாக தரப்படும் பணத்தில் எண் (4)  நான்கு கண்டிப்பாக இருக்க கூடாதாம். அதனால் 40,400,404 போன்ற தொகைகள் கொடுக்கப்படுவதில்லை. நான்கு என்ற எண்ணே அங்கே அமங்கலமாக கருதப்படுகிறது. நான்கு என்பது சீன மொழியில் 'மரணத்'தை ஒத்த ஓலி கொண்டதாம்.

சீனாவில் புத்தாண்டு அன்று செய்யக் கூடாதவை என்று பல உண்டு. முடிவெட்டக்கூடாது, விவாதம் கூடாது, கடன் வாங்கக் கூடாது என நீளும் 'கூடாது' பட்டியலில் துடைப்பமும் பயன்படுத்தவும் கூடாதம்.
துடைப்பம் கொண்டு வீட்டைக் கூட்டிப் பெருக்கும்போது, குப்பையுடன் சேர்ந்து அதிர்ஷ்டமும் அடித்து செல்லப்படலாம் என நம்புகிறார்கள்.

மூடநம்பிக்கைகளில் நம்மை விட சீனர்கள் எந்த விதத்திலும் சளைத்தவர்கள் இல்லை போல இருக்கிறது.

Thursday, February 19, 2015

கவிஞர் பழநிபாரதியின் கையெழுத்து

கவிஞர் பழநிபாரதி அறிமுகம் தேவையில்லாத  உலக தமிழர்கள்
அனைவரும் அறிந்த  திரைப்படப் பாடலாசிரியர் மற்றும் கவிஞர்.

ஆயிரம் திரை பாடல்களைத் தாண்டி கடந்த இருபது வருடங்களாக
தரமான தன் படைப்புகளால் நம் இதயங்களில் குடி கொண்டவர்.
பல விருதுகளுக்குச் சொந்தக்காரர்.

இவரின் " காற்றின் கையெழுத்து "  கட்டுரைத்தொகுப்பை
முழுமையாக இன்றுதான் வாசித்து முடித்தேன்.

இந்த புத்தகம் குங்குமம் இதழில் அவர் தொடராக எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. மொத்தம் 52 கட்டுரைகளுடன் விகடன் பிரசுரத்‌தால் வெளிடப்பட்டுள்ளது.

இந்த புத்தகத்தைப் பற்றி எழுதும் முன் எனக்கும் நூலாசிராயருக்குமான பரிட்சத்தை சொல்லி விடுவது நல்லது.

பழநிபாரதின்  அறிமுகம் நான் ரசித்த பல  திரைப்பாடல்களின் பாடலசிரியராக மட்டுமே. மற்றபடி இவருடைய பல கவிதைத்தொகுப்புகள் வெளியாகியிருந்தாலும், நான் வாசிக்கும் அவரின் முதல் நூல் இதுவே.

ஆனால், முதல் அறிமுகத்திலேயே என்னிடத்தில் ஒரு நல்ல எழுத்தாளாராக
தாக்கத்தை ஏற்படுத்‌திவிட்டார் என்றே சொல்லத் தோன்றுகிறது.

கொஞ்சம் நேரம் கிடைத்தபோது, இவரைப் பற்றி கூகிலில் தோண்டினேன்.
பல அருமையான தகவல்கள் வந்து கொட்டின.

சந்தேகமின்றி, திரையுலகில் நீண்ட தமிழ் பாரம்பரியமுள்ள வெகு சிலரில் இவரும் ஒருவர். அவர் உணர்ச்சி பொங்க கவிதைகளை வாசிக்கும் அழகைக் கண்டு 'ஐ' என்று வியந்தேன். :)

இப்போ புத்தகத்தை பற்றி பார்ப்போம்.

தனது கட்டுரைகளில் உலகமயமாக்கல், மேற்கத்திய கலாச்சார தாக்கம்,
நடுத்தர வர்க்க நிலைமை , இயற்கை வளக் கொள்ளை என இன்றைய பல பற்றி எரியும் நிகழ்வுகளை கையில் எடுத்திருக்கிறார்.

நாம் சமூக அவலங்களைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறோம் அல்லது
ஒதுங்கி செல்கிறோம். ஆனால் பாரதியின் பெயர் கொண்ட கவிஞர் நெஞ்சம்
பொறுக்காமல் காட்டாற்று வெள்ளம் போல் பொங்கி எழுகிறார்.

இவர் எழுத்தின் வீச்சு அபாரம். சமூக அவலங்களை சாடும்போது தயங்காமல் தேவையான  தரவுகளையும் கூடவே தருகிறார்.

உதாரணமாக " இன்றைய தமிழரின் தாய் மொழி ஆங்கிலமா  ? " எனும் கட்டுரையில் திருமதி மிஷல் ஒபாமாவை மேற்கோள் காட்டுகின்றார்.
அதே சமயத்தில் மலையாள மொழி எழுத்தாளர் தகழி சிவசங்கரப் பிள்ளையையும் மேற்கோள் காட்டுகின்றார்.

அதுபோல, கட்டுரைகளுடன் அருமையான கவிதைகளையும் இணைத்துள்ளது அழகு. அந்த கவிதைகளும் கட்டுரையைத் தாண்டி துருத்திக் கொண்டிருக்காமல் உயிரோட்டமாய் இருக்கிறது.

தமிழ்ச் சமூகத்தின் மீது அன்பும் அக்கறையும் கொண்ட
அனைவரின் மனநிலையையும் சரியாய் இந்த நூல் பிரதிபலிக்கிறது.

நமது சிறு வயதில் பார்த்துப்  பழகிய பக்கத்‌து வீட்டு அல்லது
எதிர் வீட்டு அண்ணன் தோழமையோடு சொல்வது போல இருக்கிறது.
இந்த அந்நியமற்றத்தன்மையே இந்த நூலின் முக்கியமான பலமாக கருதுகிறேன்.

புத்தகத்தை படித்து முடித்தபின் பழனி பாரதியை நம்மில் ஒருவராக,
தோழராக ஏற்றுக்கொள்ள எந்தவித தயக்கமும் இருக்கப்போவதில்லை.

இதில் குறை என்று தனியாக ஏதும் சொல்லத் தோன்றவில்லை.
வாய்ப்பு கிடைத்தால் வாங்கி படித்து பாருங்களேன், கண்டிப்பாக ஏமாற மாட்டீர்கள்!.

Wednesday, February 4, 2015

குமரப்பா அல்லது இந்திரா நூயி

உங்களின் முதல் நூலக அனுபவம் அல்லது விஜயம் இன்னும் ஞாபகம் இருக்கிறதா ?

அந்த அனுபவம் சிறுவயதில் நடந்திருந்து, அது இன்னமும் நினைவில் நின்றால் நீங்கள் அதிஷ்டசாலிதான்.

சொல்லப்போனால் கல்லூரி செல்லும்  வரை எனக்கு பரவலான புத்தக பரிட்சயம் இல்லை என்பதே உண்மை.

எவ்வளவுதான் நான் யோசித்தாலும்,  எனது முதல் நூலக அனுபவம்
பூண்டி புஷ்பம் கல்லூரியில் தான்.  மலைக்கவைக்கக்கூடிய ஆயிரக்கணங்கான புத்தகங்கள்.  கல்கி முதல் ஸிட்னி ஷெல்டன் வரை அறிமுகமும் அங்குதான்.

அந்த நூலகம் என்னைப்போல எத்தனையோ பேருக்கு ஒரு
போதிமரம். எத்தனையோ புத்தக பறவைகளின் வேடந்தாங்கல் எனவும் சொல்லலாம்.

சிறுவயதில் மிஞ்சி போனால் சிறுவர் மலர், தினமணிக் கதிர். பிறகு பதின்மவயதில் குமுதம், மாலைமதி, கல்கண்டு, ஜுவி, பாக்யா போன்ற ஜனரஞ்சக பத்திரிக்கைகளைத் தாண்டி பெரியதாய் எதுவும் அறிமுகமில்லை.

ஆனால், ஆரம்பகாலத்‌தில்  கவிதைகளும் சிறுகதைகளும் குறுநாவல்களும்
அறிமுகம்  செய்தவை அவை. வைரமுத்து, சுஜாதா, லேனா தமிழ்வாணன் போன்ற  ஆளுமைகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டதும் இவற்றின் மூலமே.

அதை தாண்டி இலக்கிய செறிவான நூல்களுக்கோ அல்லது
சுய ஊக்குவிப்பு புத்தகங்களுக்கோ வாய்ப்பில்லை என்றே சொல்லவேண்டும்.

சுயபுராணத்தை விடுங்க,  சொல்லவந்த விசயத்துக்கு வருவோம்!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள குளிக்கரை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு கண்டிப்பாக இந்த நிலை இல்லை என்றே சொல்லலாம்.

சிறகுகள் அறக்கட்டளை மூலமாக இந்த பள்ளிக்கு நூலக விரிவாக்கம் செய்து தந்துள்ளோம். ஒரு புத்தக அலமாரியும்,  புத்தகங்களும் இதில் அடங்கும்.

இவை கடந்த வாரம் பள்ளியில் நடந்த குடியரசுதின விழாவில் பள்ளி தலைமையாசிரியரிடம் அவை வழங்கப்பட்டன.

சுமார் எண்ணூறு பேர் பயிலும்  இந்த இருபாலர் பள்ளி  திருவாரூர் மாவட்டத்தில் உள்ளது. நல்ல தேர்ச்சி விகிதம், மாவட்ட அளவில் கவிதைப் போட்டியில் முதலிடம் என கலக்குகிறார்கள். அரசுப் பள்ளியாயினும் மிகவும் நம்பிக்கை அளிக்கக்கூடிய பள்ளி. இதற்கு மேலும் சிறப்பு சேர்ப்பதுபோல இருந்தது இந்த நூலக விருவாக்கம்.

பள்ளி தலைமையாசிரியர் உட்பட இங்கு பணிபுரியும்
அனைவரும் பாராட்டுக்குரியவர்கள். கிராமப்புரத்தில் செயல்படும் இந்த மாதிரியான பள்ளிகளுக்கு உதவாமல் வேறு யாருக்கு உதவப் போகிறோம்?

சிறகுகள் சார்பில் என்னைத்தவிர அனைத்து உறுப்பினர்களும் விழாவில் கலந்து கொண்டனர்.

குறிப்பாக, மனிதவள நிர்வாக அலுவலராக பணிபுரியும் திரு கேசவன் சென்னையில் இருந்து கலந்துகொண்டு மாணவர்களுக்கிடையே உரையாற்றினார்.

கண்ணாடி வைத்த புத்தக அலமாரி தேவைபட்டதால் ஆர்டர் கொடுத்து கொஞ்சம் காத்திருக்க வேண்டியதாயிற்று.  மற்றபடி பெரிய சிரமமில்லை. எல்லாம் நினைத்ததுபடி நன்றாக நடந்து முடிந்தது.

இந்த முயற்சியில் எங்களுக்கு உறுதுணையாக இருந்தவர் தா.ரெ. தமிழ்மணி அவர்கள். அதே பள்ளியில் தமிழாசிரியரியராக பணிபுரியும் இவர் என்னுடைய பள்ளி தோழர்,கவிஞர்  மற்றும் நல்ல நண்பர்.  நமது உதவி சரியான இடத்தை சென்று சேர்கிறது என்ற  உறுதியை வழங்கியவர். அவருக்கு முதல் நன்றி!

எனது கவிதை நூலான "என் ஜன்னல் வழிப் பார்வை" யினை அமெரிக்கா மற்றும் சிங்கப்பூரில் விற்பனை செய்த தொகையில் இருந்து இந்த செலவு செய்யப்பட்டுள்ளது.

ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி!, எனது கவிதைத் தொகுதியில் ஐம்பது பிரதிகளை வாங்கி தன் நண்பர்களுக்கு பரிசளித்த சிங்கப்பூரில் வசிக்கும் எனது முன்னாள் மேலாளர் (Manager), நண்பருமான திரு. சண்முகத்திற்க்கும் நன்றிகள் பல!

உங்களுடைய சிறு உதவி , எங்கேயோ யாருடைய வாழ்க்கையேனும் கண்டிப்பாக மாற்ற உதவக்கூடும் என உறுதியாக நம்புகிறேன்.

நல்ல நூல்கள் ..
வாழ்க்கைச் சாலையின்
கைகாட்டி மரங்கள்

அவை காட்டும் வழி 
என்றும் நல்வழியே!!

நன்கொடை வழங்கிய புத்தகங்களில் அப்துல்கலாமின் 'அக்னிச்சிறகு'களும் ஒன்று. யாருக்கு தெரியும் ?  இராமேஸ்வரத்தில் இருந்து அப்துல்கலாம் போல,
குளிக்கரையில் இருந்து குமரப்பாவோ அல்லது  இந்திரா நூயிவோ வர மாட்டார்கள் என்று.

Sunday, February 1, 2015

சென்னைவாசிகளே உஷார்!

உங்கள் பெயரை சொல்லுங்கள், நான் உங்கள் ஜாதகத்தை சொல்கிறேன்
என்று யாராவது சொன்னால் நம்புவீர்களா ?

ஆனால் உங்கள் உங்கள் பெயரை சொல்லுங்கள், நான் பிறப்புச் சான்றிதலை ( Birth Certificate) தருகிறேன்  என்று யாராவது சொன்னால் நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும்.

ஆம், நீங்கள் சென்னையில் பிறந்திருந்தால் உங்கள் பிறப்புச் சான்றிதல்   அல்லது Birth Certificateடை எவரும் பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.

அதற்காக நீங்கள் எதுவும் பெரிதாய் பிரயத்தனம் செய்ய தேவையில்லை
சென்னை மாநகராட்சியின் இந்த லிங்கை பார்க்க.

http://www.chennaicorporation.gov.in/online-civic-services/birthCertificate.do?do=show

பிரச்னையே, யாரும் யாருடைய சான்றிதழையும் எந்தவித தடையுமின்றி பெறலாம் என்பதே.

உலகத்தின் எங்கோ மூலையில் இருக்கும் ஒருவரால் சென்னையில் எந்த வீட்டில் குழந்தை பிறக்கிறது.  அது ஆணா,பெண்ணா? அதன் தாய், தந்தை பெயர்கள்,  பிறந்த நாள்,  பிறந்த இடம், முகவரி போன்றவற்றை ஒரு க்ளிக்கில் தெரிந்து கொள்ள இயலும்.

இந்த தகவல்கள் எந்த அளவுக்கு முக்கியம்?

அதை வைத்து எளிதாக இலக்கு மார்க்கெட்டிங் (Target Marketing) செய்ய இயலும். உதாரணமாக  'கடந்த வாரம் பிறந்த உங்கள் பெண் குழந்தைக்கு  தங்கநகை திட்டத்தில் முதலீடு செய்யச் சொல்லி எவரேனும் தங்களின் பிரதிநிதியை உங்கள் வீட்டுக்கு அனுப்பலாம் அல்லது கடிதம் எழுதலாம்'.  கொஞ்சம் அதிகமாக, அருகில் இருக்கும் மருத்துவமனை அல்லது மழலையர் பள்ளி உங்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு பல..

மேலோட்டமாக பார்த்தால் இது ஒரு சின்ன விசயமாகக்கூட படலாம்.
கல்லூரி, பள்ளி மாணவன் தான் சைட் அடிக்கும் பக்கத்‌து வீட்டு பெண்ணின் விவரங்களை பெறலாம்  எனத் தோன்றுவது கூட இயற்கை.

மாறாக,  இந்த சான்றிதல் மற்றும் விவரங்கள் மூலம் யாரேனும் உங்கள் பெயரில் வங்கி கடன் வாங்கினால்? செல்போன் இணைப்பு வாங்கினால் ? அல்லது இந்த விவரங்கள் மூலம் உஙகள்  ஆன்லைன் வங்கிக்குள் யாரேனும் அத்துமீறி நுழைந்தால்.  இப்படி பல கில்லாடிதனங்கள் செய்தால் கடைசியில் பாதிக்கப்படுவது நீங்கள் தான்.

நம்முடைய அதிகாரத்துவ வங்கிகள் அவ்வளவு எளிதில் ஏமாற மாட்டார்கள் என நம்புவோம்.

இது போன்ற தனி மனித தகவல்கள் பொதுப்படையாக  தருவது
அடையாள திருட்டு (Identity Theft) மற்றும் அடையாள மோசடி (Identity Fraud)
க்கு வழிவகுக்கும் என்பது அடிப்படை அறிவு அல்லவா. பல அடுக்குகளைக் கொண்ட கணினி குற்றதின்(Cyber Crime)ன் ஒரு வடிவம்தான் இது.

இது போல உங்களுக்கு  தெரியாமல் உங்களை பற்றிய தகவல்கள் இணையத்தில் எங்கெல்லாம் தாராளமாய் சுண்டல் போல கிடைக்கிறதோ? அந்த பெருமாளுக்கே வெளிச்சம்.! :)

இந்தியாவில் மேன்மேலும் இணைய பயன்பாடு அதிகரிக்கும் இந்த காலகட்டத்தில் சமூக எதிரிகளின் அடுத்த குறி இதுவாகவே இருக்கும்.

பொதுவாக, "Better Safe than Sorry" என ஆங்கிலத்தில் ஒரு தொடர்மொழி உண்டு.
எளிதாக சொல்வதென்றால் மக்களே... பாத்து சூதனமா நடந்துகோங்க....