Wednesday, March 10, 2021

சென்னை புத்தகக் காட்சியும் எஸ்.ரா.வும்

44ஆவது சென்னை புத்தகக் காட்சி இன்று நிறைவு பெறுகிறது.  

இந்த ஆண்டு புத்தகக் காட்சி தொடர்பாக  எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் கட்டுரைகளைக் கடந்த இரண்டு வாரங்களாக தொடர்ந்து வாசிக்கிறேன்.  

இன்று புத்தகக் கண்காட்சியில் நல்ல கூட்டம். நேற்று ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான வாசகர்கள் திரண்டிருந்தார்கள். அரங்கினுள் வெக்கை தாங்கமுடியவில்லை. வியர்த்து வழிய மக்கள் புத்தகங்களை வாங்கிச் சென்றார்கள் என பல நேரலை கட்டுரைகளால் நிகழ்ச்சியை நம் கண்முன் கொண்டு வந்திருந்தார் எஸ்.ரா..

தேசாந்திரி பதிப்பகத்தில் தனது வாசகர்களை நேரடியாக சந்திக்கும்  அவர் தனது அன்றாட அனுபவங்களை மட்டும் எழுதாமல் புதிய புதிய புத்தக அறிமுகங்கள், பரிந்துரைகள், நூல் வெளியீடுகள், இளம் படைப்பாளிகளின் அறிமுகம் என தொடர்ச்சியாக எழுதிக் குவித்துவிட்டார்.






கடந்த முப்பது ஆண்டுகாலமாக எழுத்தோடு பயணிக்கும் எஸ்.ரா. கடந்த இரண்டு வாரங்களாக மகிழ்ச்சியோடு ஒருவித கொண்டாட்ட மனநிலையில் இருந்திருக்கிறார் என்பதை அவருடைய கட்டுரைகள் வழியாக தெரிந்து கொள்ள முடிகிறது.

இப்படி ஓர் எழுத்தாளனுக்கு தனது எழுத்தை நேசிக்கும் வாசகர்களைச் சந்திப்பதோடு வேறென்ன மகிழ்ச்சி இருந்துவிடப் போகிறது. வாழ்த்துகள் எஸ்.ரா. !! 

இணைப்பு

Saturday, March 6, 2021

அரவிந்த் சச்சிதாநந்தம்

சிலர் மிக நன்றாக, வாசிக்கத் தூண்டும் வகையில், வித்தியாசமான கதைக் களன்களில் அசத்தலாக எழுதுவார்கள். அவர்களுடைய படைப்புகள் பல விருதுகள் கூட வாங்கி இருக்கும். ஆனால், ஏதோ காரணங்களுக்காகச் சரியான நபர்களால் அடையாளம் காட்டப்படாததால் அவர்கள் பரந்த வாசக வட்டத்தில் அரியப்படாதவராக இருப்பார்.

அந்த வகையில் நான் ரசித்து வாசித்து ஆச்சர்யப்படும் ஒரு எழுத்தாளர் அரவிந்த் சச்சிதாநந்தம். எனது நட்பு வட்டத்தில் இருக்கும் அரவிந்த்  மிக அருமையான எழுத்துக்குச் சொந்தக்காரர்.



அவருடைய நூல்களை நண்பர்களுக்குப் பரிந்துரைக்கிறேன்.  சென்னை புத்தக கண்காட்சியில் பனுவல்-இல் ( அரங்கு எண் 166, 167 ) கிடைக்கிறது.  

நனவிலி சித்திரங்கள்- குறுநாவல் 

இரண்டு கலர் கோடுகள் – குறுநாவல் மற்றும் நெடுங்கதைகள் 

கொஞ்சம் திரைக்கதை,  ஆக்சன் திரைக்கதை- கட்டுரை தொகுப்புகள் 

ஊச்சு- ஹாரர் துப்பறியும் நாவல்



2015- 'யுவ புரஷ்கார்' விருது பெற்ற பருக்கை - மறுவாசிப்பில்

 2015 ஆம் ஆண்டுக்கான  'யுவ புரஷ்கார்' விருது  பெற்ற பருக்கை நாவலை (புதினம்) இன்று மறுவாசிப்பு செய்து முடித்தேன்.  இந்த நூல் குறித்து எழுதிய ஒரு பதிவின் மூழமாகவே எழுத்தாளர் சுரேஷ் கண்ணனை நெருக்கினேன் என்பது வேறு விசயம்.

மறுவாசிப்பு செய்தேன் என்பதால் பருக்கை நாவலின்  இலக்கியச் சுவை கருதி அல்லது  கட்டுமானம், அமைப்பு  அல்லது விறுவிறுப்பான எழுத்து நடை கருதி வாசித்தேன்  என்றெல்லாம் நினைக்கத் தேவையில்லை. உண்மையில் கராராக சொல்வதென்றால் மேலே சொன்ன எதுவும் இல்லாத படைப்பு தான் பருக்கை. ஏதோ தோன்றியது எடுத்து படித்தேன். மற்றபடி சிறப்பான வேறு காரணங்கள் எதுவும் இல்லை.

5 ஆண்டுகளுக்கு முந்தைய முதல் வாசிப்பை விட தற்போதைய மறுவாசிப்பு நாவல் குறித்த வேறுபரிணாமத்தைத் தருகிறது. இப்போது வாசிக்கும் போது நாவலில் அவலச்சுவை மேலோங்கி நிற்பதாக தோன்றுகிறது. குறிப்பாக தற்போதைய  வாசிப்பில்  நூல் இன்றைய இளைஞர்களின் நகர வாழ்க்கை , அங்கு நிலவும் வர்க வேறுபாடுகள், அவர்களிடம்  தங்களுடைய எதிர்காலம் குறித்தான அவநம்பிக்கையைப் மேலோட்டமாக பேசுவதாகவே உணர்கிறேன். ஆனால், விசேச வீடுகளில் உணவு பரிமாறும் கல்லூரி மாணவர்களின் கதை என்ற வகையில் பேசப்படாத கதைக்களம் என்ற வகையில் பாராட்டலாம்.

உண்மையில், தினந்தோறும் தமிழகத்தின் கடைகோடிகளில் இருந்து படிக்க அல்லது பிழைப்புக்கு வழிதேடி சென்னை போன்ற பெருநகரங்களுக்கு எத்தனை பேர் வருகிறார்கள். அதில் எத்தனை பேர் அங்கு நிலவும் புதிய பொருளாதார, பண்பாட்டுச் சூழலில் தங்களைத் தகவமைத்து நிலை பெறுகிறார்கள் ?. எத்தனை பேர் அந்தச் சூழலில் தங்களைப்  பொருத்திக் கொள்ள இயலாமல், அதன் அழுத்தங்கள் தாங்காமல் கசப்போடும் அவமானத்தோடும் வேறுவழியில்லாமல் ஊர் திரும்புகிறார்கள். 

ஊர்ப்புறத்தில் இருந்து வந்து நகர்புறங்களிலும், வெளிநாடுகளிலும் தங்களைத் தகவமைத்துக் கொள்பவர்களை வெற்றி பெற்றவர்களாக கொண்டாடும் இந்தச் சமூகம் மற்றவர்களைத் தோல்வியடைந்தவர் பட்டியலில் தயங்காமல் சேர்த்துவிடுகிறது எனும் நிதர்சனம் கசப்பாக மனதில் படிகிறது.




Thursday, March 4, 2021

பாட்டனும் முப்பாட்டனும் ...

உறவினர் வீட்டில் ஒரு சிறிய குடும்ப நிகழ்ச்சி கும்பகோணத்துக்கு பக்கம். அழைத்திருந்தார்கள். போயிருந்தேன்.

அருமையான பண்ணை வீடு. வீட்டைச் சுற்றி நெருக்கமான மரங்கள்,  வாசலில் இருந்தபடியே மயில், குரங்கு, கிளி என சகலமானவற்றையும் காலை, மாலை என இரு வேளைகளிலும் பார்த்துவிட முடியும். நல்ல இயற்கையான சூழல். 

ஒரு நாள் காலை,  மயில் ஒரு கூட்டமாக வந்து மேய்ந்து கொண்டிருந்தது.


அப்போது வெளியில் விளையாடிக்கொண்டிருந்த உறவினர் பையனை நான் தூக்கி வைத்து மயிலை வேடிக்கை காட்டிக்கொண்டிருந்தேன். என்ன சொல்லி  வேடிக்கை காட்டி இருப்பேன் ? குயில் என்றா சொல்லி இருக்கப் போகிறேன். மயில் என்றே சொல்லி காட்டி கொண்டிருந்தேன். நகரத்தில் வளரும் பையனுக்கு மயில் எல்லாம் புதுசு என்பதால், பயம் கலந்த ஆர்வத்தோடு பார்த்துக்கொண்டிருந்தான். நிறைவாக இருந்தது.

பையனுடைய அம்மா இதையெல்லாம் குறுக்கும் நெடுக்குமாக நடந்தபடி பார்த்துக்கொண்டிருந்தார். அன்று மாலையே மயில் மறுபடியும் வந்தது. இந்த முறை பையனைத் தூக்கி வைத்து வேடிக்கைக் காட்டியது பையனுடைய அம்மா. மயிலைக் கைகாட்டிபடியே "2யே... peacock பாரு... அதோட features  சாஃப்டா எவ்ளோ நல்லா இருக்கு பாரு..." எனச் சத்தமாக என் காதில் விழும்படி சொன்னார். 

அந்தப் பக்கம் வந்த நான் இதைக்  கவனிக்கிறேன் என்பது தெரிந்ததும்கூட இன்னமும் கூடுதல் அழுத்தத்தோடு  peacock, peacock  அழுத்தி சொன்னார். அதாவது, மயில் என்பது peacock எனத் தெரியாத முட்டாள் நான் என்பதை விட  அவருடைய பையன் மனதில் மயில் என்பது தப்பித் தவறிக் கூட  பதிந்து விடக் கூடாது என்பதில் அவர் மிகுந்த கவனமாக இருந்தார் என நினைக்கிறேன். ஏனென்றால்,  அதன்பிறகு நாங்கள் அங்கு இருந்த 3 நாட்களும் தவறாமல் அவரே தனது பையனைத் தூக்கி வைத்துக் கொண்டு மயிலையும், குரங்குகளையும் Peacock, Monkey  எனக் காட்டிக் கொண்டிருந்தார். மேய வந்த மயில்களும், வாழைப்பழத்துக்காக வந்த குரங்குகளும் இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் அரக்க பறக்க வயிற்றை நிரப்பிக்கொண்டிருந்தன. 

சரி விடுங்கள். நமக்குத்தான் அடுத்தத் தலைமுறை மொழியை இப்படி படிப்படியாக இழக்கிறதே என்ற கவலை, ஆற்றாமை எல்லாம்.  அவைகளுக்கு என்ன... உனது பாட்டனும் முப்பாட்டனும் என்னைப் பல்லாயிரம் ஆண்டுகளாக "மயில்" என்று தானே சொன்னார்கள். இது என்ன புதுசா "peacock ?" என மனிதர்களிடம் கோவித்துக் கொள்ளப் போகிறதா என்ன..

Wednesday, February 24, 2021

சென்னை புத்தகத் திருவிழாவில்...

 சென்னை புத்தகத் திருவிழாவில் எனது புத்தகங்கள் கிடைக்கும் அரங்குகள்;


*) வனநாயகன் (கிழக்கு பதிப்பகம்)-ரூ.275, அரங்கு எண் F-7

*) இர்மா-அந்த ஆறு நாட்கள் (ஸீரோ டிகிரி) - ரூ.180, அரங்கு எண்கள் 10, 11

*) பங்களா கொட்டா (அகநாழிகை)- ரூ.130,  டிஸ்கவரி புக் பேலஸ், அரங்கு எண் F-19



வழக்கம் போல புத்தக விற்பனை மூழம் வரும் இராயல்டி தொகை அனைத்தையும்   சிறகுகள் கல்வி அறக்கட்டளை நிதியில் சேர்த்துவிடுவோம். நன்றி !

Wednesday, February 17, 2021

டெக்சாஸில் வரலாறு காணாத பனிப்புயல்

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் வரலாறு காணாத கடுங்குளிர். உறைய வைக்கும் குளிரோடு கூடவே தொடர்ச்சியான பனிப் பொழிவால் ஏராளமான சாலை விபத்துகள், உயிர் இழப்புகள் என அங்கு நெருக்கடியான சூழல் நிலவுகிறது. 


இரயில், விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டிருக்கிறன. கல்விக் கூடங்கள், அரசு அலுவலகங்கள் இயங்கவில்லை.  அவசர நிலைப் பிரகடனம் செய்திருக்கிறார்கள். உதவிக்கு இராணுவமும் களத்தில் இறக்கியிருக்கிறது.

தொடர்ச்சியாக உறைய வைக்கும் குளிர் காற்று வீசிக்கொண்டிருப்பதால் வீடுகளின் மின்சாரத் தேவை அதிகரித்திருக்கிறதாம்.  அதனால் வந்த மின்தட்டுப்பாட்டால் மின்வெட்டு வேறு. ஓரிரு நாட்களுக்குச் சுழல் தான் முறையில் மின்சாரம் என்கிறார்கள். இங்கே சகலமும் மின்சாரத்தில் இயங்குவதால்,  மின்சாரம் இல்லாத அமெரிக்க வாழ்வை நினைத்துப் பார்க்கவே முடியாது. 

ஹூஸ்டனில் இருக்கும் ஒரு நண்பரிடம் பேசினேன். மின்சாரம் இல்லாததால் இரண்டு நாட்களாக சமைக்க அடுப்பு பற்றவைக்க முடியவில்லை. வெளியில் போய் சாப்பிடவும் வழியில்லை. வெப்பம் உறைநிலைக்குக் கீழே சென்றதால் வீட்டுக்குழாய்களில் தண்ணீர் வருவதில்லை. வெளியே சாலைகளில் போக்குவரத்து விளக்குகள் எரிவதில்லை.... என மிக நீண்ட கஷ்டப்பட்டியல் வைத்திருக்கிறார்.

இயற்கை என்ற ஒன்று இருப்பதும். அதனோடு மனிதன் இயைந்து வாழ்வது அவசியம் என்பதையும் இதுமாதிரியான நெருக்கடி காலங்களில் கண்டிப்பாக உணரமுடியும் என்பது நிதர்சனம்.  

கடுங்குளிர், பனிப்பொழிவோடு கடுமையான மின்வெட்டையும் எதிர்கொள்ளும் டெக்சாஸ் மாநில அன்பர்கள் விரைவில் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப விழைகிறேன்.

இது குறித்த ஒரு காணொளி https://youtu.be/qMivwXOfOmM

Monday, February 15, 2021

2-ஆம் ஆண்டில் தமிழ்ச்சரம் - இரண்டு புதிய அம்சங்களுடன்

தனது இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தமிழ்ச்சரம் (www.tamilcharam.com) எழுத்தாளர் பக்கம், தேர்ந்தெடுக்கப்பட்டவை எனும் இரண்டு புதிய அம்சங்களைத் அறிமுகப்படுத்தி இருக்கிறது.

இனி, தளத்தின் முகப்புப் பக்கத்தில் வரும் இந்தப் புதிய வசதிகளைக் கொண்டு தேடுதல் அவசியமின்றி  வாசகர்கள் தங்களுக்கு விருப்பமான  எழுத்தாளர்களின் பதிவுகளையும் , நிர்வாகக்குழு தேர்ந்தேடுக்கும் பதிவுகளையும் நேரடியாக  வாசித்து மகிழலாம்.


#தமிழ்ச்சரம்.காம்