Thursday, July 20, 2023

கூந்தல் குழந்தை எது ?

 'ஆலங்குயில் கூவும் இரயில்..' பாடலில் கவிஞர் கபிலன் மீசையை "கூந்தல் குழந்தை" என்ற புதிய கோணத்தில் உருவகப்படுத்தி எழுதியிருப்பார் (படம்-பார்த்திபன் கனவு). அது நடந்ததோ 2003-வாக்கில்.


அந்தக் கூந்தல் குழந்தை குறித்து ஒரு சிறுகதை எழுதுவேன். அது பரிசு பெறும் கதையாகும் என்றெல்லாம் சுத்தமாக நினைக்க வில்லை. 'நீட்டலும் மழித்தலும்' இடம் பெற்ற 'அமெரிக்கக் கதைகள்' புத்தகம் இப்போதுதான் கைகளுக்கு வந்து சேர்ந்தது.


அந்த நூலின் முன்னுரையில் ஈழ எழுத்தாளரும் கவிஞருமாகிய தீபச்செல்வன் இப்படி எழுதியிருக்கிறார்.


'நீட்டலும் மழித்தலும் என்ற கதை இயல்பான மொழியில் மீசை தமிழ் சூழலில் கொள்ளும் இடத்தையும் புலம்பெயர் தேசத்தில் மீசை குறித்த பார்வையும் ஒரு தனி மனிதனிடத்திலும் அவன் குடும்ப வாழ்விலும் மீசை ஏற்படுத்தும் அசைவுகளையும் நிலத்திற்கும் புலம்பெயர் நிலத்திற்குமான பெயர்வின் வழியாக ஏற்படும் தத்தளிப்புகளையும் மனக்குழப்பங்களை மிக நேர்த்தியாக பேசுகிறது. அதே நேரம் மிக இயல்பாக அதிர்வை உண்டு பண்ணுகிறது.'

நன்றி-தீபச்செல்வன்



Saturday, July 15, 2023

காலந்தாழ்த்தி வந்த பதவி உயர்வு

நண்பருக்கு தனது பணியிடத்தில் பதவி உயர்வு கிடைக்காமல் நீண்ட நாள் தள்ளி போய் கொண்டே இருந்தது. பொறுமையிழந்த அவரோ தனது தகுதிக்கு ஏற்ற இன்னொரு வேலையைத் தேடிக் கொண்டார்.



அதைக் கேள்விப்பட்ட பழைய நிறுவனமோ 'போகாதீங்க.. பதவி உயர்வை இப்போ தர்றோம்..' என்றார்களாம். ஆனால், நண்பரோ காலந்தாழ்த்தி  இறுதியில் வரும் பதவி உயர்வு தனக்கு வேண்டாம் என மறுத்துவிட்டார்.

புதிதாக கிடைத்த வாய்ப்பு என்பது கொஞ்சம் சவாலாக இருந்தாலும் அதைச் செய்து முடித்துவிடலாம் என்ற நம்பிக்கையோடு, பழைய நிறுவனத்தில் 'TOO LATE...' எனச்  சொல்லிவிட்டார்.

இதை நண்பர் ஆழ்மனதின் வழிகாட்டுதலில், பெரிதாக யோசிக்காமல் செய்திருக்கலாம்.

ஆனால், அது பற்றி கொஞ்சம் ஆழ்ந்து யோசித்தபோது எனக்குத் தோன்றியது ;

காலம் கடந்து கிடைக்கிற ஒன்றை வேண்டாம் என மறுப்பதன் மூலம் அதைச் சார்ந்து இருக்கின்றவர்களைத் தண்டிப்பதாக நமது மனது உள்ளூர ஆறுதல் கொள்வதே காரணம்  என நினைக்கிறேன்.

மேற்கண்ட பதிவை முகநூலில் பகிர்ந்தபோது பல அன்பர்கள் 'தன்மானம் ' என்பதும் இன்னொரு காரணம் எனக் குறிப்பிட்டிருந்தனர்.

Tuesday, July 11, 2023

பறவைகள் திசை அறிவது எப்படி ?

நம்முடைய மனம், உடல் மட்டுமின்றி உலகின் பல சிக்கலான விசயங்கள் குறித்த ஆய்வுகள் இன்னமும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன.

அப்படி ஆராயப்படும் பல விடயங்களில் ஒன்று பறவைகள் வலசை போவது. இதைப் பற்றி பேசும் How do birds find their way? எனும் ஒரு புத்தகம் வீட்டில் கண்ணில் பட்டது.

பல பறவைகள் குளிர் காலங்களில் சூடு தேடி கண்டம் விட்டு கண்டம் பறப்பது நமக்குத் தெரிந்த ஒன்றுதான். அதன் வழித்தடம்தான் பலருக்கு முன்னுள்ள மிகப்பெரிய கேள்வி. சிலர், அந்தப் பறவைகள் சூரியன் எழும் திசை, மறையும் திசை ஏன் இரவில் வானில் தோன்றும் நட்சத்திரங்களின் அமைப்பைப் பொருத்தும் கூட அவை இரவும் பகலும் பயணிக்கின்றன என்கிறார்கள். அதே சமயத்தில், அவைகளால் மேகமூட்டமான நேரத்திலும் பயணிக்க முடிகின்றன என்பதையும் கவனிக்கிறார்கள்.





சிலர் பறவைகளின் உடலுக்குள்ளேயே தென்புலம், வடபுலம் அறியும் காந்த ஊசி இருப்பதாக நம்புகிறார்கள். ஏன், வலசை என்றில்லை பொதுவாகவே பறவைகள் எப்படி பறவைகள் தங்கள் வழித்தடத்தை தொடர்கின்றன அல்லது கூட்டை வந்தடைகின்றன  என்பதே இன்னமும் புதிராகவே இருக்கிறது. 

அதிலும் குறிப்பாக புறாக்கள் (homing pigeons) தங்கள் வழியைக் கண்டுபிடிப்பதில் கில்லாடிகளாம். ஒரு முறை அதன் கண்களைத் திரையிட்டு மறைத்தாலும் அவைச் சரியான வழியில் பயணித்து தன்னுடைய கூடுவந்து சேர்ந்து விடுகின்றனவாம். (இதெல்லாம் தெரிந்துதானே அன்றே நம்மாட்கள் புறாவை தூது அனுப்பினார்கள் :))

ஒரு லண்டன் பறவையை திடீரென விமானத்தில் கொண்டுவந்து அமெரிக்காவில் 'அம்போ' என விட்டிருக்கிறார்கள். ஆனால், அந்தப் பறவையோ சரியாக  12-வது நாள்  தன்னுடைய லண்டன் கூட்டில் ஜாலியாக வந்து உட்கார்ந்து பலரை ஆச்சர்யப்படுத்தி இருக்கிறது.

இப்போது நவீன தொழில்நுட்பத்தின் உதவியோடு பறவைகளின் வழித்தடம், அதன் பறக்கும் உயரம், காலநிலை போன்றவைகளை மிகத் துல்லியமாக தெரிந்து கொள்கிறார்கள். ஆனாலும், பறவைகளின் உள்ளுணர்வு எனபது இன்னமும் ஆய்வுக்குரிய ஒன்றாகவே இருக்கிறது.

Saturday, July 8, 2023

வனநாயகன் குறித்து-29 (கணினி மென்பொருளாளர்கள் அனைவரும்...)

முகநூல் நண்பரான விஜயன் (Vijayan Usilai) 'வன நாயகன்- மலேசிய நாட்கள்' குறித்து முகநூலில் சமீபத்தில் பகிர்ந்தது. நன்றி விஜயன்!

//

ஆரூர் பாஸ்கரின் புதினமான "வன நாயகன்" அப்படியே கிட்டத்தட்ட நான் ஜப்பான் நாட்டில் வேலை செய்த அனுபவத்தை கருவாகக்கொண்டு எழுதப்பட்டிருந்தது. நம் மனத்திற்குள் நினைப்பதை தெளிவாகவும், மனதில் பதியும்படி சுவையாகவும் எழுதுவது எழுத்தாளர்களுக்குத்தான் முடியும். அதில் ஆரூர் பாஸ்கர் அவர்கள் சூப்பர்.


வேலைபார்த்த இடத்தில் நான் பெற்ற கசப்பான மற்றும் கொடுமையான நிகழ்வுகளை பெற்ற ஒரு கணினி மென்பொருளாளனின் உணர்வுகளை சுவைபட தத்ரூபமாக விளக்கியிருந்தார். அந்த புதினத்தின் அட்டைப்படத்தில் உள்ள உராங்குட்டான் குரங்கின் படத்திற்கான விளக்கத்தினை நீங்கள் புரிந்துகொண்டால் நீங்கள் கில்லாடிதான்.
கணினி மென்பொருளாளர்கள் அனைவரும் கண்டிப்பாக படிக்கவேண்டிய புதினமாகும் "வன நாயகன்".
//

வனநாயகன் – மலேசிய நாட்கள் (நாவல்)
ஆரூர் பாஸ்கர்,

கிழக்கு பதிப்பகம்,
பக்கங்கள் 304, விலை ரூ.275
நூலை இணைய வழியே வாங்க:
வனநாயகன் – மலேசிய நாட்கள்
மின்னூல்
அச்சுநூல்

Saturday, June 24, 2023

வாழ்த்துகள் மாணவர்களே !

சிறகுகள் கல்வி அறக்கட்டளை சார்பில் இந்த ஆண்டு 10-ஆம் வகுப்பில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற வடகரை அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினோம்.


கடந்தவாரம் பள்ளியில் நடந்த நிகழ்வில் பொதுத்தேர்வில் முதல் மூன்று மதிப்பெண் பெற்றவர்களுக்கு உதவித்தொகையும், பாராட்டுச் சான்றிதலும் வழங்கப்பட்டது. அதுபோல, தமிழ் பாடத்தைச் சிறப்பாக ஆர்வத்தோடு படித்து முதலிடம் பெற்ற மாணவருக்கும் பரிசு அளித்து உற்சாகப்படுத்தினோம்.

பரிசு பெற்றவர்கள்  ஆதித்யா(முதல் இடம்),  ஆரூத்ரா(2-ஆம் இடம்),  பரணிதரன் (3-ஆம் இடம்).

தமிழில் முதல் இடம் - விசுவநாத்

இதைச் சாதித்துக் காட்டிய பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டுகளோடு, பரிசு பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகள் !! 

#சிறகுகள்2023


Monday, June 19, 2023

நீ ஓட்டுவது BMW-காரா?

'ஃபேர்-அன்-லவ்லியின் (fair and lovely) பேரா

நீயும் நானும் வேறா

ஐந்துக்கு பின் ஆறா

நீ ஓட்டுவது பிம்-எம்-டபில்யூ (BMW) காரா ?'

என்பது போன்ற நாலு காமா சோமா பாட்டெழுதி கூட ஒருவர் இன்று  பிரபல பாடலாசிரியராகிவிட முடியும்.  ஆனால், இலக்கியத்தில் 30-ஆண்டுகளுக்கு மேலாக செறிவான நவீன கவிதைகளை  எழுதிக்கொண்டிருக்கும் கவிஞர் தேவதேவன் போன்றவர்கள் புகழ்பெறுவது என்பது கானல் நீர்தான். அதுவும் வாசிப்பு அரிதாகி வரும் இந்தக் காலத்தில்.

அவரைப் போன்றவர்களுக்கு அரசியலும் சரியாக தெரிவதில்லை.பாவம்.

யார்  அந்த தேவதேவன்? அவருடைய கவிதை ஒன்று சொல்லமுடியுமா? என்பவர்களுக்கு அவருடைய 'ஒரு மரத்தடி நிழல் போதும்'  எனும் கவிதை கீழே...

ஒரு மரத்தடி நிழல் போதும்

உன்னை தைரியமாய் நிற்கவைத்துவிட்டுப் போவேன்

வெட்டவெளியில் நீ நின்றால்

என் மனம் தாங்க மாட்டேன் என்கிறது


மேலும்

மரத்தடியில் நிற்கையில்தான்

நீ அழகாயிருக்கிறாய்

கர்ப்பிணிபெண்ணை

அவள் தாயிடம் சேர்ப்பதுபோல

உன்னை ஒரு மர நிழலில் விட்டுப்போக விழைகிறேன்

 

மரங்களின் தாய்மை

முலை முலையாய் கனிகள் கொடுக்கும்

கிளைகளின் காற்று

வாத்சல்யத்துடன் உன் தலையை கோதும்

 

மரம் உனக்கு பறவைகளை அறிமுகப்படுத்தும்

பறவைகள் உனக்கு வானத்தையும் தீவுகளையும்

வானமோ அனைத்தையும் அறிமுகப்படுத்திவிடுமே


          ஒரு மரத்தடி நிழல் தேவை

உன்னை தைரியமாய் நிற்க வைத்து விட்டுப்

போவேன்.

 

Monday, June 12, 2023

சினிமா... சினிமா... சினிமா...

ஒரு காலத்தில் படித்தவர், படிக்காதவர் என்ற வித்தியாசமின்றி  பலர் பேச்சினுடே குறள், ஓளவை முதுமொழி ஏன்  குறைந்த பட்சம் ஒரு பழமொழியையாவது மேற்கோள் காட்டி பேசுவது என்பது மிகச் சாதாரணம். சிலர் ஏகலைவன்,  கட்டை விரல், கண்ணகி, கர்ணன் என்றெல்லாம் புராண கதைகளை டக்கென சொல்லக் கேட்டிருக்கிறேன்.

ஆனால், இன்று அது போன்ற வழக்கங்கள் பெரும்பாலும் ஒழிந்து விட்டதாகவே நினைக்கிறேன்.  மாறாக, கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் உரையாடல்கள்  என்பது கொஞ்சம் தட்டையாகி அந்த இடத்தை சினிமா பிடித்துவிட்டதாக நினைக்கிறேன். அதாவது, வயது வித்தியாசமின்றி பேச்சுவழக்கில் ஒரு சினிமா காட்சியையோ அல்லது வசனத்தையோ மேற்கோள் காட்டி பேசாதவர்களே இல்லை என்ற நிலை வந்திருக்கிறது. அதிலும் குறிப்பாக, இளைய தலைமுறைக்கு சினிமாவைத் தொடாமல் எதையும் பேசவே முடிவதில்லை.  (தமிழ்புத்தகங்கள் !?- மூச்!) அந்த அளவுக்கு சினிமா வாழ்வில் புரையோடிக் கிடக்கிறது. இது முற்றிலும் உண்மை.


சினிமா என்பது வெறும் பொழுதுபோக்கு. அது மிகைப்படுத்தப்பட்டக் கனவுலகம் என்ற மனநிலை முற்றிலுமாக மாறி விட்டது. மாறாக, திரைப்படம் என்பது இன்று சமூகத்தின் நிகழ்காலத்தைப் பேசும் ஒன்றாக தமிழர் வாழ்வோடு இரண்டற கலந்த ஒன்றாகி இருக்கிறது. அது நல்லதா..கெட்டதா? எனும் முடிவை உங்களிடமே விட்டுவிடுகிறேன்.

#சினிமா_சினிமா_சினிமா