Showing posts with label ‬ ‪#வனநாயகன். Show all posts
Showing posts with label ‬ ‪#வனநாயகன். Show all posts

Wednesday, March 25, 2026

10-ஆம் ஆண்டில் வனநாயகன் (மலேசிய நாட்கள்)

சிங்கப்பூர் வாழ் நண்பர் சதீஷ் முத்து கோபல் எனது வனநாயகன் நாவல் குறித்து பகிர்ந்த வாசக அனுபவத்தை மீண்டும் நேற்று ஒருமுறை வாசித்தேன்.

இப்படி 2016 டிசம்பரில் வெளியான இந்த நாவலைக் கடந்த 10 ஆண்டுகளாக வாசக நண்பர்கள் மறந்து விடாமல் தொடர்ச்சியாக வாசித்து அதை உயிர்ப்புடன் வைத்திருப்பது மகிழ்ச்சி தருகிறது. வாசிப்போடு மட்டும் நிறுத்திவிடாமல் வாசக அனுபங்களையும் அவர்கள் பகிர்வது வெகு அபூர்வம்.  அதுவும் தமிழ் எழுத்துலகில் வெளிநாடுகளில் வாழும் எங்களைப் போன்றவர்களுக்குச் சாதாரணமான காரியமில்லை.


அது மட்டுமின்றி, வெளிநாடோ அல்லது உள்நாடோ, வாழ்வனுபவத்தின் பின்புலம் இல்லாமல், எந்த நிலப்பரப்பும் என் படைப்புகளில் இடம்பெற வேண்டாம் என்பதில் இன்றும் உறுதியாக இருக்கிறேன். அப்படி மலேசிய நாட்டின் பின்புலத்தில்  நான் எழுதிய இரண்டாவது படைப்பு "வனநாயகன் (மலேசிய நாட்கள்)".

சதீஸின் இணைப்பு கீழே..

https://www.writersatheesh.com/2024/08/blog-post_10.html



Thursday, January 11, 2024

வனநாயகன் குறித்து-30 (அன்பர்கள் தைரியமாக வாங்கலாம்)

நட்புவட்டத்தில் இருக்கும் மலேசிய முகநூல் அன்பர் மங்கள கெளரி அவர்களுடைய வாழ்த்து.

 


Saturday, July 8, 2023

வனநாயகன் குறித்து-29 (கணினி மென்பொருளாளர்கள் அனைவரும்...)

முகநூல் நண்பரான விஜயன் (Vijayan Usilai) 'வன நாயகன்- மலேசிய நாட்கள்' குறித்து முகநூலில் சமீபத்தில் பகிர்ந்தது. நன்றி விஜயன்!

//

ஆரூர் பாஸ்கரின் புதினமான "வன நாயகன்" அப்படியே கிட்டத்தட்ட நான் ஜப்பான் நாட்டில் வேலை செய்த அனுபவத்தை கருவாகக்கொண்டு எழுதப்பட்டிருந்தது. நம் மனத்திற்குள் நினைப்பதை தெளிவாகவும், மனதில் பதியும்படி சுவையாகவும் எழுதுவது எழுத்தாளர்களுக்குத்தான் முடியும். அதில் ஆரூர் பாஸ்கர் அவர்கள் சூப்பர்.


வேலைபார்த்த இடத்தில் நான் பெற்ற கசப்பான மற்றும் கொடுமையான நிகழ்வுகளை பெற்ற ஒரு கணினி மென்பொருளாளனின் உணர்வுகளை சுவைபட தத்ரூபமாக விளக்கியிருந்தார். அந்த புதினத்தின் அட்டைப்படத்தில் உள்ள உராங்குட்டான் குரங்கின் படத்திற்கான விளக்கத்தினை நீங்கள் புரிந்துகொண்டால் நீங்கள் கில்லாடிதான்.
கணினி மென்பொருளாளர்கள் அனைவரும் கண்டிப்பாக படிக்கவேண்டிய புதினமாகும் "வன நாயகன்".
//

வனநாயகன் – மலேசிய நாட்கள் (நாவல்)
ஆரூர் பாஸ்கர்,

கிழக்கு பதிப்பகம்,
பக்கங்கள் 304, விலை ரூ.275
நூலை இணைய வழியே வாங்க:
வனநாயகன் – மலேசிய நாட்கள்
மின்னூல்
அச்சுநூல்

Sunday, April 2, 2023

வனநாயகன் குறித்து-28 (இகோ-டெரரிசத்தையெல்லாம் தொட்டிருக்கிறார்)

அமெரிக்க வாழ் மருத்துவர் மோகன் அவர்களுடைய வாசிப்பனுபவம். 

வணக்கம், தங்களுடைய வனநாயகன்-மலேசிய நாட்கள் நாவல் வாசித்தேன். இரசித்தேன். சைபர் செக்கியூரிட்டி, இன்டெர்நெட், இகோ-டெரரிசத்தையெல்லாம் (Eco-terrorism) தொட்டு எழுதியது சிறப்பு. வாழ்த்துகள் !! 


(மருத்துவர் படத்தில் வலதுபுறத்தில் இரண்டாவதாக நிற்கிறார். நன்றி !)


*நாவல்*      -வனநாயகன்.       மலேசியநாட்கள்

*ஆசிரியர்* -   ஆரூர்பாஸ்கர் 
*பதிப்பகம்*  - கிழக்குப்பதிப்பகம். 
*விலை*   -ரூ. 275.

புத்தகத்தை வாங்க

https://dialforbooks.in/product/9788184936773_/

Sunday, March 19, 2023

வனநாயகன் குறித்து-27 (நீங்களும் மலேசியாவிற்குச் செல்லவேண்டுமா ?)

ஆரூர் பாஸ்கர் அவர்களின்  *வனநாயகன்- மலேசியநாட்கள்*  நாவலை சமீபத்தில் தான் படித்தேன். அதனைப் பற்றிய எனது எண்ணவோட்டத்தைப் பகிர்கின்றேன். 

இருபத்தெட்டு வயதேயான கல்யாணம் ஆகாத பிழைப்புக்காக காவேரிக்கரையிலிருந்து மலேசியா வந்து தலைநகர் கோலாலம்பூரில் வேலைபார்க்கும்  சுதா எனும் சுதாங்கனே கதாநாயகன்...
..
விறுவிறுப்பாக நேர்த்தியான கதைச் சொல்லலில் நகரும் இந்தக் கதையில் சுதாவின் மலேசிய வாழ்வில் சந்திக்கும் மூன்று இளம் பெண்களில் யாரை மணக்கிறான்? என்பனவற்றிற்கு விடையாக நாவலின் இறுதி அத்தியாயம் இருக்கிறது. மலேசிய நகரத்தை...சுதாவின் அலுவலகத்தை....சுற்றுலாத்தளத்தை... ஆசிரியர் அணு அணுவாக விவரிக்கும் பாங்கு நாம் மலேசியாவை நேரில் பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தி வாசிப்பனுபவத்திற்கு சுவைக்கூட்டுகிறது. 


'உர்ராங்ஊத்தான்' எனும் நமது மூதாதையரான குரங்கு பற்றியும் சுற்றுச்சூழல் பற்றியும் ஆங்காங்கே சொல்லப்பட்டிருக்கிறது. கை உடைந்த நிலையிலும் சாரா போலீஸ் ஆபீசரிடம், என்னோட குறிக்கோள் சிம்பிள் அங்கிள். மார்டின் லூதர் கிங் சொன்னதுதான். *ஓடமுடியலையா? நட. நடக்கவும் முடியலையா? தவழு. இப்படி ஏதோ ஒருவகையில் நாம முன்னேறிக்கொண்டிருக்கனும்னு* சொல்லும்போது சோர்வடையும் மானுடசமூகத்திற்கு நாவலின் மூலம் ஆசிரியர் சொல்ல முயலும் செய்தி புலனாகிறது.

மொத்தத்தில் வெளிநாட்டில் வேலை செய்பவர்கள் எளிதாக சம்பாதித்து விடுவதில்லை. பல இடைஞ்சல்களை சந்தித்தே தம் காலத்தை கடத்துகின்றனர் என்பதை சுவராஸ்யமாக ஆசிரியர் ஆரூர்பாஸ்கர் தன் *வனநாயகன் மலேசியநாட்கள்* எனும் விறுவிறுப்பான நாவல் மூலம் காட்சிப்படுத்துகிறார்!  ஆசிரியருக்கு இதயம்நிறை நன்றிகளும், வாழ்த்துகளும்💐💐💐💐💐🙏

நீங்களும் மலேசியாவிற்குச் செல்லவேண்டுமா? ஆரூர்பாஸ்கர் அவர்களின் வனநாயகனை வாங்கிப் படித்துப்பாருங்களேன். 

*நாவல்*      -வனநாயகன்.       மலேசியநாட்கள்
*ஆசிரியர்* -   ஆரூர்பாஸ்கர் 
*பதிப்பகம்*  - கிழக்குப்பதிப்பகம். 
*விலை*   -ரூ. 275.

புத்தகத்தை வாங்க

https://dialforbooks.in/product/9788184936773_/

Tuesday, December 27, 2022

வனநாயகன் குறித்து-25 (வசீகரமான தலைப்போடு அறுசுவை)

வனநாயகன்(மலேசிய நாட்கள்) குறித்து தனது வாசிப்பனுவத்தைப் பகிர்ந்த தோழர் அப்துல் காதர் (சென்னை) அவர்களுக்கு மிக்க நன்றி !

//

வாழ்க வளமுடன்.

அன்புத் தோழர் பாஸ்கரன் அவர்களுக்கு,

தங்களின் வசீகரமாக வனநாயகன் வாசித்தேன். சிறப்பான நாவல்.இது குறித்தான கருத்துப் பறிமாற்றம் செய்ய போதுமான அவகாசம் கிட்டவில்லை.

நாவல் வாசித்து நாட்கள் பலவாகி இருந்தாலும், அலுப்பு தட்டாத உங்களின் மொழிநடையாலும், இதுவரை நான் அறியாத பணி களத்தை விவரித்த அழகில், சுஜாதா( ரங்கராஜன்) க்குப் பிறகு சிலிக்கான் தொழில்நுட்ப பணிகளில் இப்படியும் வகையுண்டா? எனும் ஆச்சரிய மேலீட்டாலும், அத்துடன் கலகலப்பான க்ரைம் கலந்து விறுவிறுப்பு கூட்டியதாலும், இரண்டே நாள் அவகாசத்தில் படித்து முடித்து விட்டேன் என்றாலும், தொலைதூர அலுவலகப் பணிகளாலும், விடுமுறை; ஓய்வு எனும் அடிப்படையில் இங்கு வந்ததாக மனைவியும் மகளும் கருதியதாலும் விட்டு விட்டு பயணங்கள் என பொழுது கழிந்ததால், பொருத்தமான கால அவகாசம் கிட்டவில்லை.


ஒராங் உட்டான்(ஓராங் ஊத்தான்) என சாதாரணமாக அறியப்பட்டுள்ள ஓர் உயிரினத்தின் வலிகளையும், அதனைத் தமிழ்ப்படுத்தி வசீகரமான தலைப்பிட்டதிலும் தொடங்கி, துறை சார்ந்த குறிப்புகள் அதனுடன் பின்னிப் பிணைந்த தொழிற்போட்டிகள், எல்லாவற்றையும் மீறிய அரசியல் குறுக்கீடுகள் அல்லது தலையீடுகள் அத்துடன் அளவான ரசபாசமான காதல் உணர்வுகள் என கலந்துகட்டி அறுசுவை விருந்து படைத்து விட்டீர்கள். வாழ்த்துகள்.

பயணக்கட்டுரை போல் இல்லாமல், கதைகளத்தின் ஊடே மலேசிய சுற்றுலாத்தலங்களை அறிமுகப்படுத்தி அவற்றைக் காண வேண்டுமென்ற ஆர்வத்தை தூண்டி விட்டீர்கள். நல்லவேளையாக இந்நாவலை என் மனைவி படிக்கவில்லை. படித்து முடித்தால், லிஸ்டில் மலேசியாவும் சேர்ந்து விடும்.(ஏற்கனவே சிங்கப்பூர் லிஸ்டில் உள்ளது)...

//

வனநாயகன் – மலேசிய நாட்கள் (நாவல்)
ஆரூர் பாஸ்கர்,

கிழக்கு பதிப்பகம்,
பக்கங்கள் 304, விலை ரூ.275

Wednesday, December 21, 2022

வனநாயகன் குறித்து-24 (ஐடி துறை பற்றி பேசும் நவீன புதனம்)

"வனநாயகன்(மலேசிய நாட்கள்)" குறித்து மணிகண்டன் அமேசான்  தளத்தில் பகிர்ந்த கருத்து..










Monday, September 12, 2022

வனநாயகன் குறித்து-23 (மலேசியா பற்றி அறியும் வாய்ப்பு)

கனடா வாழ் நண்பர் பாமா இதயகுமார் அவர்கள் அனுப்பிய செய்தி. நன்றி பாமா ..

 //

வணக்கம்,...

உங்கள் நான்கு புத்தங்களும் நிச்சயமாக பயனுள்ள சாரத்தை தந்தது என்பதில் ஐயமில்லை. அனைத்தும் எனக்கு மிகவும் பிடித்தன. கூடுதலாக, மலேசியா பற்றி அறிய கூடிய வாய்ப்பு (கதையின் மூலம் விமான செலவு இல்லாமல் அழைத்து சென்று விடும் வல்லமை).

அதேவேளை social media பற்றிய தகவல் , மிக அருமையான புத்தகங்கள். வாழ்த்துக்கள் !!!

//



Monday, October 5, 2020

வனநாயகன் குறித்து-17 (சமகால புலம்பெயர் படைப்புகளில் குறிப்பிடத்தகுந்த ஒன்று)

"வனநாயகன்"  சமகால புலம்பெயர் படைப்புகளில் குறிப்பிடத்தகுந்த ஒன்று என  Good Reads தளத்தில் வாசகர் மணிகண்டன்(Mo Manikandan) சொல்லியிருக்கிறார். கூடவே ஆங்கிலத்தில் மதிப்புரையோடு, Must read! எனக் குறிப்பிட்டு  5 நட்சத்திர மதிப்பீடும் செய்திருக்கிறார்.  நண்பருக்கு நன்றி சொல்லுவோம்.

//

Very interesting novel that talks about different aspects of "onsite job" or "foreign job" of technical professionals. The author touches Malaysia's geography, linguistics, culture, politics and Malaysian Tamil peoples life along with the story without boring. The corporate politics, office politics, journalism, environmental aspects all are talked through dialogues. The mystery of twists are kept until the end. Must read novel. New generation Tamil novels are fresh, exciting and more relevant to our modern IT lifestyle. Amazon kindle is a brilliant platform for such attempts. Bravo

Lately i wanted to mention that, This is a contemporary immigration fiction! Genre which is not so many in tamil. The one I remember is pa.singaram's "puyalile oru thoni" & "kadaluku appaal" (historical immigration fiction though). Must read!

//


புத்தகத்தை இணையம் வழியாக வாங்க


Sunday, August 30, 2020

வனநாயகன் குறித்து-16 (கார்ப்ரேட்டின் மற்றொரு முகம்)

தமிழ்ப்படம் பார்க்கும் 1000 பேரில் ஒருவர் வாசிப்பவராக இருந்தால் கூட ஆண்டுதோறும் விற்பனையாகும் தமிழ்ப் புத்தகங்கள் எண்ணிக்கை கணிசமாக இருக்கும்  என எழுத்தாள நண்பர் ஒருவர் குறைபட்டுக் கொண்டார்.
அந்த 1000-க்கு 1 எனும் கணக்கெல்லாம் எந்த அளவு சாத்தியமோ தெரியவில்லை. ஆனால்,  கருத்துகளைப் பகிர்வதில் கண்டிப்பாக வாசகர்களைக் குறை சொல்வதற்கு எதுவும் இல்லை.  கொரோனா காலத்திலும் தொடர்ச்சியாகப்  பல வாசகர் கடிதங்கள், மதிப்புரைகள் எழுதியிருக்கிறார்கள்.
நேற்று "வனநாயகன்-மலேசிய நாட்கள்" குறித்து goodreads  தளத்தில் பிரியதரிசினி எழுதிய ஒரு மதிப்புரை கூட கண்ணில் பட்டது...


எப்பொழுதுமே மனிதன் தன்னை மற்றொன்றுடன் பொருத்தி பார்த்து தான் தன் சூழலின் ஆழத்தை உணருகிறான். நாவலில் சுதாவும் தான் வேலை செய்யும் நாடான
மலேஷியாவில் சொல்லப்படும் பழங்கதையான வனநாயகன் என்று அழைக்கப்படும் குரங்கின் நிலையுடன் தன்னை ஏமாற்றியவர்களின் செயல்களால் சொல்லமுடியா அவமானத்தை உள்ளுக்குள் புதைத்துக் கொண்டு ஒப்பீட்டு அளவில் மனதை தேற்றி கொண்டாலும் கிடைத்த குறுகிய காலத்தில் தனக்கான நியாயத்தைத் தேடுபவனுக்குக் கிடைத்தது கார்ப்ரேட்டின் மற்றொரு முகம். 


சுதாவின் வழியே மலேஷியாவின் முக்கிய இடங்களும், அவர்களின் வாழ்க்கை முறையும். மனிதர்களின் குணங்களும் என்று புதிய சூழலை கண் முன் கொண்டு வருகிறது. கதையின் மென்நகர்வு அதற்கு ஏற்ப அமைந்ததால் இயல்பான சம்பவங்களாக நடந்தேறுகிறது.

தற்பொழுது இந்த நாவலை படிக்கும் போது ஒரு தலைமுறை இடைவெளியை

துல்லியமாக உணரமுடிகிறது. கடந்தக் காலத்தை திரும்பி பார்க்கும் நிகழ்வாகவே முற்றிலும் அமைந்தது எதிர்பாராமல் என்று எடுத்துக்கொள்ள வேண்டியது தான். அதுவும் யாஹூ சாட் பற்றி எல்லாம் படிக்கும் போது ஞாபகங்களைத் தட்டி எழுப்பிவிடுகிறது.
ஒரு வருடம் மலேஷியாவில் இருந்த சுதாவிற்கு முடியும் காலம் கசப்பாகவே அமைந்தாலும் பல மனிதர்களுடனான தொடர்பு வாழ்ந்த காலத்தின் எச்சமாகவே மனதில் நின்றுவிடுகிறது. காதல் என்று நினைப்பது காதலல்ல அது உணரும் போது எதிரில் இருப்பது தான் காதல் என்று பத்மாவின் மூலம் அமைந்த நகர்வு எதார்த்தம்.

நாம் அனைவருமே எதார்த்தவாதிகள் தான் ஆனால் நாவல் வாசிக்கும் போது நம்மையும் மீறி ஒரு ஹீரோயிசத்தை எதிர்பார்க்கும் மனதை அடக்கத் தெரியாதவர்களும் என்பது உண்மை. சுதாவிற்கு ஏற்பட்ட மறைமுகத் துரோகத்திற்கு அவன் எதாவது அதிரடி செய்வானோ என்று எதிர்பார்த்துக் கொண்டே கடைசிவரை வந்ததும் நம் மனம் தான்.

வாடிக்கையாளர்களின் தரவுகள் ஒவ்வொன்றும் பொக்கிஷம் தேவைப்படுபவர்களுக்கு. இதில் சம்பத் என்ற கதாபாத்திரம் கார்ப்ரேட்டின் ஒரு முகம். அது இல்லாத இடம் இல்லை. தன்னை உயர்த்த கீழே இருப்பதின் மேல் கால் மட்டும் தான் வைக்க வேண்டும் மனதை வைத்தால் முதல் பலி அவனாகத்தான் போவான்.

சாரா மாதிரி பத்திரிக்கையாளர்களின் பிரசன்னமே நியாயத்தின் வாழ்விற்காக எதிர்பார்த்திற்கும் மக்களுக்கு ஒரு பலத்தை அளிக்கிறது.

பலிகளைக் கொண்டு தான் கார்ப்ரேட் வளர்கிறது. உண்மைகள் வெளிவந்த பிறகு அதற்கான அழிவு என்று சொல்வது முடிவல்ல மற்றொரு தொடக்கத்தின் புள்ளி அது.

..
கிழக்கு பதிப்பக வெளியீடான வனநாயகன் புத்தகமாகவும், கிண்டிலிலும் கிடைக்கிறது.  இணைப்பு விவரங்கள்.
https://dialforbooks.in/product/9788184936773_/

https://www.amazon.in/%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-VanaNayagan-Malaysia-Naatkal-ebook/dp/B06X9VTR71



Friday, February 28, 2020

வனநாயகன் குறித்து-14 (ஓர் அருமையான நாவலை வாசித்து முடித்த திருப்தி)

வனநாயகன் நாவல் குறித்து வரும் வாசகர் கடிதங்கள் தொடர்கின்றன..

"வனநாயகன் (மலேசிய நாட்கள்)"  குறித்து  ஃபிளாரிடா வாசகர் மருத்துவர் உதயகுமார் அவர்கள் முகநூலில்  எழுதியது.  நன்றி  உதயகுமார் !!

**************************
ஆரூர் பாஸ்கரின் “வனநாயகன்-மலேசிய நாட்கள்“ வாசித்து முடித்துவிட்டேன். ஓர் அருமையான நாவலை வாசித்து முடித்த திருப்தி இன்னமும் என் மனதில் வழிந்துகொண்டே இருக்கிறது. அந்த நினைவுகளோடு எனது வாசக அனுபவத்தைப் பகிர்கிறேன்.

மழையில் நனைந்த சாலை சற்று நேரத்தில் காய்ந்து மிகப் பிரகாசமாகத் துடைத்து எடுத்தது போல மாறிவிடும். அதுபோல, திரைக்கதை போல நகரும் ஆரூர் பாஸ்கரின் நாவலில் ஒவ்வொரு அத்தியாயமும் புத்தம் புது காட்சிகளோடு மிக அழகாக நம் கண்முன்னால் விரிகிறது. 

எடுத்த உடனேயே இது ஒரு கம்பியூட்டர் யுகக் கதை, நிச்சயம் ஓயிட் காலர் கிரைம் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. பிறகு ஐடி-யும் வங்கிகளும் வருவதால் இது வர்த்தகக் கதையோ இல்லை இது காதல் கதையாககூட இருக்குமோ என்றெல்லாம் கூட மூளை ஆரம்பத்தில் விவாதிக்கிறது. பிறகு கதையோட்டம் நமக்குப் பிடிபடுகிறது. இப்படியெல்லாம் கூட நடக்குமா? இந்தக் கம்பியூட்டர் யுகத்தில் ? அதுவும் தன் சுய நலத்திற்காக ? என்பதை அறியும் போது நமக்கு அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது. ஆனால், அதுதான் உண்மை. இப்போதைய நிலைமை. கதையினூடே மலேசியாவில் கை நிறையச் சம்பாதிக்கும் தமிழ் நாட்டு இளைஞர்களின் வாழ்க்கை சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் எப்படிப் போய்க் கொண்டிருந்தது என்பதையும் ஆசிரியர் அழகாகச் சொல்லிவிடுகிறார். அதுபோல இந்திய வம்சாவளியில் பிரிட்டீஷ்காரர்கள் காலத்திலேயே மலேசியா வந்துவிட்ட சீக்கியர்களின் சந்ததியரான டிரைவர் சிங் மறக்கமுடியாத மனிதராக இருக்கிறார்.

வனநாயகனில் நாயகனாக சுதா மட்டும் வரவில்லை நடு நடுவே (எழுத்தாளர்) சுஜாதாவும் வருகிறார். நம் மூளையைத் திறந்து கதையை உள்ளே போடுவதிலும் சுஜாதா மாதிரிதான் ஆரூர் பாஸ்கர் வல்லவராக இருக்கிறார். அதோடு அந்தக்

காலத்திலேயே மலேசியா போன தமிழர்கள் பலர் இன்னமும் பழமை மாறாமல் திண்ணையில் அமர்ந்து பெரிய பைண்டிங் செய்த அக்கவுண்ட் புத்தகங்களைச் சிறு மேஜைகளின்மேல் வைத்துக்கொண்டு கணக்கு வழக்குப் பார்க்கிறார்கள், லாபத்தைப் பற்றி கவலைப் படாமல் மலிவான விலையில் சுவையான நல்ல இட்லி சாம்பார் விற்கிறார்கள் என்பது போன்ற பல சுவையான விவரங்களை நான் அறிந்துகொண்டேன்.

அதுபோல, நல்ல கதை வாசித்த அனுபவத்தோடு மலேசியாவில் பார்க்கவேண்டிய இடங்களை ஆர அமர சுற்றிப்பார்த்த அனுபவமும் நாவலை வாசித்த போது கிடைத்தது. மலேசியா போக எண்ணுபவர்கள், அங்கு என்ன என்ன பார்க்கவேண்டும் என அறிய விரும்புபவர்கள் இந்த நாவலை ஒரு வழிகாட்டியாகக் கூட எடுத்துக்கொள்ளலாம். முக்கியமாக வனநாயகனாக சித்தரிக்கப்படும் ஒராங்குட்டான் குரங்கின் பிறப்பிடமும் அதன் வாழ்விடங்களும் தற்போது எப்படியெல்லாம் சிதைந்து கொண்டிருக்கிறது என்பதை வாசகர்களுக்கு புரியுமாறு கதையோடு பிணைந்து வழங்கியதும் சிறப்பு.
கதையில் மலேசியத் தமிழ்ப்பெணணாக அறிமுகமாகும் பத்மா வாசிப்பவர்களின் மனதைவிட்டு இறங்க மறுக்கிறாள். அதற்கு அவளுடைய குடும்பச் சூழல் மட்டுமல்ல, அவள் சுதாவிடம் காட்டும் அன்பும் அக்கறையும் நம்மை அவளுக்காக யாரிடமும் வாதாடச் சொல்கிறது. நாவலின் முடிவு மிகவும் திருப்திகரமாக இருந்தது.

மிக அருமையான கதையமைப்பு, நெஞ்சைத்தொடும் பாத்திரங்கள் என வனநாயகனில் ஆரூர் பாஸ்கர் வாசகர்களுக்கு ஓர் அறுஞ்சுவை விருந்து படைத்திருக்கிறார். அந்த விருந்தின் சுவை என்றும் நாவிலும் மனதிலும் தொக்கி நிற்கும் திருப்தியோடு நாவலை வாசித்து முடித்துவிட்டு கீழே வைத்தேன். வாழ்த்துகள் !

அன்புடன்,
உதயகுமார்


புத்தகத்தை இணையத்தில் (கிழக்கு பதிப்பகம்) வாங்க:

அமெசான் கிண்டில் வடிவில் வாங்க:

Sunday, February 23, 2020

உலக கவனம் பெற்ற ஓராங் ஊத்தான் புகைப்படம்

ஓராங் ஊத்தான்/ஒராங்குட்டான் (Orangutan)  குரங்கு ஒருவனுக்கு கைகொடுப்பதுபோல் உள்ள இந்தப் புகைப்படம் உலக கவனம் பெற்றிருக்கிறது. அதற்கு முன்  "போர்னியோ" தீவு பற்றி ஒரு சிறிய அறிமுகம்.

மலேசியாவுக்கும் இந்தோனேசியாவுக்கும் நடுவில் இருக்கும் "போர்னியோ" ஆசியக் கண்டத்தின் மிகப்பெரிய தீவு.  எனது 'வனநாயகன் -மலேசிய
நாட்கள்' வாசித்தவர்களுக்கு உலகின் மூன்றாவது பெரிய தீவான போர்னியோ பற்றி தெரிந்திருக்கும்.

மிகப் பழமையான மழைக்காடுகளைக் கொண்ட இந்தத்தீவு இந்தோனேசியா, மலேசியா, புரூணை ஆகிய நாடுகளின் ஆளுமையில் இருக்கிறது.  மேற்சொன்ன மூன்று நாடுகளும் போட்டிபோட்டு இந்தத் தீவின் இயற்கை வளத்தைப் பல்லாண்டுகளாக சீரழித்துவருகின்றன. அதனால் அந்த தீவில் உள்ள அரிய வகை மரங்கள், செடிகொடிகள், விலங்குகள், பறவைகள் வெகு வேகமாக அழிந்து வருகின்றன. குறிப்பாக, போர்னியாவின் தனிச்சிறப்பான  ஒராங்குட்டான் குரங்குகள். அவை அழிவின் விளிம்பில் இருக்கின்றன. வனநாயன் நாவலின் அட்டைப்பட நாயகனும்  ஒரு ஒராங்குட்டான் குரங்கே.

மனிதர்களுக்கு அடுத்து அறிவு கொண்ட இனமாக கருதப்படும் இந்த ஓரங்குட்டான் இனக் குரங்குகள் விவசாயத்திற்கு இடையூறு செய்வதாக,  மாமிசத்திற்காக, அதனுடைய அழகான கறுப்பு குட்டிகளுக்காக, விபச்சாரத்திற்காக எனப் பல்வேறு காரணங்களுக்காக அங்கிருக்கும் மனிதர்களால் தொடர்ந்து வேட்டையாடி அழிக்கப்படுகின்றன. இப்படி மனித மிருகங்களால் வேட்டையாடப்படுவதால் தனது வாழ்விடங்கள் சூரையாடப்படுவதால் கடந்த மூன்று தலைமுறைகளுக்குள் மட்டும் இந்தக் குரங்குகளின் எண்ணிக்கை 80% க்கும் அதிகமாக குறைந்திருக்கிறது என்கிறார்கள்.

அப்படிப்பட்ட ஓரங்குட்டான் குரங்கு ஒன்று சமீபத்தில் காட்டில் வந்து சேற்றில் சிக்கிய மனிதன் ஒருவனுக்குக் கை கொடுத்து உதவுவது போலோரு புகைப்படம் வெளியாகி உலக அளவில் கவனம் பெற்றிருக்கிறது.

இந்தமாத தொடக்கத்தில், ஏதோ காரணங்களுக்காக காட்டுக்குள் வந்த ஒரு நபர் அங்கிருந்த சேற்றில் வசமாக சிக்கிக்கொண்டாராம்.  அடுத்த அடி எடுத்து வைக்க முடியாமல் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தவருடைய நிலையைப் பார்த்த  ஒரு ஓரங்குட்டான் எங்கிருந்தோ ஓடி வந்து தனது கைகளை நீட்டி அவர் கரைக்கு வர உதவியிருக்கிறது.

இப்படிச் சேற்றில் சிக்கிய  மனிதன் அருவாள் போலோரு ஆயுதத்தைக் கையில் வைத்து  இருந்தாலும் அந்த மனிதனுக்கு ஒரு ஆபத்து எனும் போது ஓடிப் போய் உதவிக்கரம் நீட்டிய அந்தக் குரங்கின் செயலை பலர் இணையத்தில் வியந்து பாராட்டுகிறார்கள். சிலர்  'இது கண்களில் கண்ணீரை வரவைக்கும் காட்சி'.  'மனிதன் மறந்த கருணையை இன்னமும்  குரங்குகள் நினைவில் வைத்திருக்கின்றன'. 'விலங்குகள் மனிதர்களைப் போலவும் மனிதர்கள்  குரங்குகள் போலவும் நடந்து கொள்கிறோம்' என்றெல்லாம் சிலாகிக்கிறார்கள். நல்லவேளை, இதெல்லாம் அந்தக் குரங்கிற்கு எதுவும் புரியப் போவதுமில்லை. புரிந்தாலும் அது நம்மைப்போல  அதைத் தலையில் ஏற்றிக்கொள்ளப் போவதுமில்லை.

இதுபோன்ற விலங்குகள் நம்மிடம் யாசித்து கேட்பதெல்லாம் குறைந்த பட்சம் எங்களையும் இந்த பூமியில் வாழவிடுங்களேன் என்பதுதான். இந்த நிலத்தில் வாழும் மிகப்பெரிய விலங்கான யானையையே அடக்கி தெருவில்  பிச்சை எடுக்க வைத்து பிழைக்கும் மனிதனுக்கு இந்தக் குரங்குகளின் குரல் கேட்கவா போகிறது ?