Sunday, April 25, 2021

நேர்த்தியான கதைச்சொல்லி - அட்லாண்டா ஜெயா மாறன்

கழுத்தை நெரிக்கும் அன்றாட லெளதீக இடைஞ்சல்களைத் தாண்டி  கலை, இலக்கியம், எழுத்து எனப் பொதுவெளியில் செயல்படுவது என்பது சவாலான ஒன்று. அதை ஒரு வேலையாக, ஒரு பாரமாக நினைத்துப் புலம்புபவர்களுக்கு மத்தியில் முழுமனதோடும், தன்முனைப்போடும் தொடர்ந்து  செயல்படுபவர்கள் யாராவது கண்ணில் பட்டால் அவர்களைப் பாராட்டுவதே சரியாக இருக்கும்.

அந்த வகையில் அமெரிக்காவின் அட்லாண்டா மாநகரில் இருந்து பல ஆண்டுகளாகச் செயல்பட்டுக்கொண்டிருப்பவர் ஜெயா மாறன். முகநூல் வழியாக எனக்கு அறிமுகமான ஜெயாவின் சொந்த ஊர் மதுரை. தொழில் முறையில் ஜார்ஜியா டெக் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணி செய்கிறார்.



பகுதி நேரமாகத் தமிழாசிரியர், மேடைப் பேச்சாளர், கவிஞர், நாடகக் கலைஞர் என தமிழின் பல தளங்களில் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து இயங்கி வரும் ஜெயாவின் பரந்துபட்ட ஆர்வம் ஆச்சர்யம் தருகிறது. அவருடைய நிகழ்ச்சிகளின் தொகுப்பு JeyaMaran என்னும் YouTube சேனலில் இருக்கிறது. நேரம் கிடைத்தால் பாருங்கள்.குறிப்பாக, சிறுவர்களுக்கு  எளிதில் புரியும் வகையில் அவர் உணர்வோட்டத்தோடு கதை சொல்லும் நேர்த்தி அபாரம். உலகத்தரம்.


கையில் எடுத்த ஒன்றுக்குத் தன்னை முழுமையாக ஒப்படைத்த ஒருவரால் மட்டுமே இந்த அளவுக்குச் சிறப்பாக செய்யமுடியும்.  அந்த வகையில் ஜெயா மாறன் நம் பாராட்டுதல்களுக்கு உரியவர். வாழ்த்துகள் ஜெயா ! தொடர்ந்து இயங்குங்கள்.

நேரமில்லை.. நேரமில்லை.. எனப் புலம்பாமல் அவர் ஒளவையாரின் மூதுரையை  ஜென் கதையோடு இணைத்து அழகாக சொல்லும் 3 நிமிட காணோலியைக் கீழே  தருகிறேன் பாருங்கள்.

யாருக்கு உதவலாம்? | மூதுரை | ஒளவையார் | Jeya Maran

Sunday, April 11, 2021

ஃபோன்களும் கண்களும்

நாளொன்றுக்கு நான் குறைந்தது 10 மணிநேரமாவது கணினியில்
நேரம் (ஃபோன் நேரம் தனி)  செலவிடுகிறேன்.

என்னைப் போல இங்கே பலரும்  பெரும்பான்மை நேரத்தை தினமும் கணினி, புத்தகம், ஃபோன் என ஏதோ ஒன்றை  கூர்ந்து பார்ப்பதில் இல்லை படிப்பதில் நேரத்தைச்  செலவு செய்வீர்கள்.

இப்படி  நாம் சராசரியாக பார்க்கும், படிக்கும் நேரம் என்பது போன தலைமுறை இதற்காகச்  செலவிட்ட நேரத்தைவிட  அதிகம் என்பதில்  இங்கே கண்டிப்பாக மாற்றுக் கருத்து இருக்காது. 

நடைமுறையில் ஸ்மார்ட் ஃபோன் மற்றும் செயலிகள் வந்தபின் கூர்ந்து படிப்பது என்பது தவிர்க்க இயலாத ஒன்றாகி விட்டது.  சமீபத்தில் வெளிவந்த ஒர் ஆய்வின்படி அமெரிக்கர்கள் தினமும் 12 நிமிடங்களுக்கு ஒருமுறை சராசரியாகத் தங்கள் தொலைபேசியைச் சரிபார்க்கிறார்கள் - அதாவது தூங்கும் நேரத்தைத் தவிர்த்துப் பார்த்தால் ஒருவர் குறைந்தபட்சம் 80 முறை தங்கள் தலைகளைத் தொலைபேசிகளில்  புதைத்துக் கொள்கிறார்கள்.  இந்த எண்ணிக்கை இந்தியாவில் குறைவாக இருக்க வாய்ப்பில்லை.

இன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை   ஃபோன்,
ஐபேட் போன்ற விசயங்களை மிக எளிதாகக் கையாளுகிறார்கள். அதில் அவர்கள்   பல மணிநேரங்கள் தொடர்ச்சியாக நேரம் செலவிடவும் தயங்குவதில்லை. குறிப்பாக இன்றைய இளைஞர்களுக்கு டிவி,கணினியை விட போஃனில்தான் அதிக நாட்டமிருப்பதாக நினைக்கிறேன்.

நேற்றுவரை, ஃபோன்கள் பேசுவதற்காக மட்டும் என்றிருந்த நிலை மாறி, இன்று ஸ்மார்ட் ஃபோன் வரவுக்குப் பின் நேரப்போக்கிற்காக,  இணையம், அலுவலக இமெயில், செயலிகள் (Apps) எனத்  தவிற்கமுடியாத
ஒன்றாகிவிட்டது. அதனால் இன்று 'ஃபோன் இல்லாவிட்டால் கையும் ஓடல காலும் ஓடல' எனப் புலம்பும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டிருக்கிறோம்.

பல நல்ல விஷயங்களுக்கு நாம் தினமும்  ஃபோனைப் பயன்படுத்தினாலும்  அதில் பல பிரச்சனைகள் இருக்கத்தான் செய்கிறது.
குறிப்பாக அவைக் குறைந்த அளவிலான கதிர்வீச்சை (RF) வெளியிடுகின்றன என்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் துண்டிக்கப்பட்ட டிஜிட்டல் உலகில் வாழ்வது, மனஅழுத்தம் போன்ற பல உளச்சிக்கல்கள் வர வாய்ப்பு இருக்கிறது.

உடல் ரீதியாகப் பார்க்கையில் தலையைக் குனிந்தபடித் தொடர்ச்சியாக
நாம் போஃனைப் பயன்படுத்துவது, பயணத்தில் படிப்பது,  படுத்தபடியே மணிக்கணக்கில் படம் பார்ப்பது, பல மணிநேரங்கள் எந்த இடைவேளையு
மின்றிப் பேசுவது, இதெல்லாம் நம் உடலுக்கு எந்த அளவு ஆரோக்கியமானது ?   கழுத்து வலி, தோள்பட்டை வலி,  முதுகு வலி வர வாய்ப்பிருக்கிறதே. இது  நமது கண்களுக்கு எந்த அளவுப் பிரச்சனைகளைத் தரும் ? எப்படித் தப்பிப்பது ?  இதையெல்லாம் குறித்து நேரம் கிடைக்கும் போது கொஞ்சம் யோசியுங்கள்.

Monday, March 29, 2021

திருவாரூர் தேரோட்டம்

பெயருக்கு முன்னால் ஊர் பெயரை ஆரூர்-ஐ வைத்துக் கொண்டு திருவாரூரில் நடக்கும் தேரோட்டத்தைப் பற்றி குறிப்பிடாமல் இருக்க முடியுமா என்ன ?

கொரோனா காரணமாக சென்ற ஆண்டு  தடைபட்ட தேரோட்டம் இந்த ஆண்டு பல்வேறு பாதுகாப்பு அம்சங்களுடன் சிறப்பாக நடந்து முடிந்திருக்கிறது.



தேரோட்டம் பற்றி நண்பர் 'வாலு டிவி' மோகனனின் காணொளியை இணைத்திருக்கிறேன் நேரம் கிடைக்கும் போது பாருங்கள்.

https://youtu.be/hUa62vZoCbw


Wednesday, March 24, 2021

சிங்கப்பூர் நூலகங்களில் இர்மா(அந்த ஆறு நாட்கள்)

சிங்கப்பூரில் வசிக்கும் வாசகி ஒருவர்  வழியாக நேற்று ஒரு தகவல் வந்தது.

எனது "இர்மா-அந்த ஆறு நாட்கள்" (நாவல்) சிங்கப்பூரில் 20-க்கும் அதிகமான நூலகங்களில் வாசிக்கக் கிடைக்கிறதாம். சிங்கப்பூர் வாழ் நண்பர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.


நண்பர்கள் தங்களுக்கு அருகில் இருக்கும் நூலகத்தில் புத்தக இருப்பை சிங்கப்பூர் தேசிய நூலகத்தின் இணையதளத்தின் மூழம் தெரிந்து கொள்ளலாம். முகவரி:

catalogue.nlb.gov.sg

Sunday, March 21, 2021

சாதனை சியமளா

 40+ என்பது கொஞ்சம் தடுமாற்றமான வயதுதான். ஒருவருடைய  சராசரி  வாழ்நாள் வயது 80-இல் இருந்து 85 என வைத்தால் கூட, இந்த 40+ என்பது ஏறக்குறைய வாழ்வின் பாதியை வாழ்ந்து முடித்த வயது. பலர் வாழ்க்கையில் ஒரு விதமாக செட்டில் ஆகி இருக்கும் வயதும் கூட. 

வாழ்வின் முதல் பாதியை இதுவரை  எப்படிப் பயணித்தோமா அதே பாதையில் தொடர்ந்து பயணிப்பதா ? அல்லது முற்றிலும் வேறு ஒன்றைத் தேர்ந்தெடுப்பதா என்பதைப் பற்றிகூட பலர் யோசிக்கத் தொடங்கி இருப்பார்கள். ஆனால், வெறும் யோசனையோடு விடாமல் சிலர் மட்டுமே திரும்பி முற்றிலும் வாழ்வின் வேறு திசையில் பயணிக்கத் தொடங்குவார்கள்.

அந்த வகையில் , தெலங்கானாவைச் சேர்ந்த சியாமளா கோலி தனது 48 வயதில் சாதித்திருக்கிறார். விவசாயக் குடும்பத்தில் பிறந்த பட்டதாரியான சியமளா ஒரு குடும்பத்தலைவி. சொந்தமாக தொழில் செய்துவருகிறார். அவர் 4 ஆண்டுகளுக்கு முன்புதான் நிச்சல் பழகி இருக்கிறார். நிச்சல் கற்றுக்கொண்ட கையோடு இலங்கை தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரை உள்ள கடல் பரப்பை நீந்தி உலக சாதனை செய்திருக்கிறார்.

இந்தியாவையும், இலங்கையையும் பிரிக்கும் அந்த கடல் பரப்பு என்பது ஆபத்தான கடல் பாம்புகள், ஜெல்லி மீன்கள் போன்ற பல உயிரினங்கள்  நிறைந்த ஒன்று. அதை  ஏறக்குறைய 14 மணி நேரங்கள் இடைவெளியில்லாமல் கடலில் நீந்திக் கடப்பது என்பது சாதாரண செயல் அல்ல. அதை  குற்றாலீஸ்வரன் 1994-இல் நீந்திக் கடந்து சாதனை புரிந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம்.  அப்போது குற்றாலீஸ்வரனுக்கு வயது 13, அதை தனது 48 வயதில் செய்து முடித்த சியமளா இந்திய பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் மிகப்பெரிய ஒரு  உந்துசக்தி.

40 வயதில் தொப்பையோடு கை காலைப் பிடித்துக்கொண்டு ஐயோ, அம்மா என உட்காரும் மனிதர்களுக்கு மத்தியில் இந்த வயதில் உலக சாதனையை நிகழ்த்தியிருக்கும் சியாமளா ஒரு தெறிப்பு. அனைவரும் நிமிர்ந்து பார்க்க வைக்கும் ஒரு ஒளிக்கீற்று. ஏன் நம்பிக்கை தந்து எல்லா வயதினரையும் சாதிக்கத் தூண்டும் ஒரு துருவ நட்சத்திரமும் கூடத்தான்.


ஆதாரம்-பிபிசி தமிழ் 

படங்கள் நன்றி இணையம்.


Friday, March 19, 2021

ஏன் ஆண்-பெண் பாகுபாடு ?

திருமண நிகழ்ச்சி ஒன்றின்  வீடியோவை சமீபத்தில் 8 வயது மகளுடன் சேர்ந்து பார்த்தேன்.

முதல் நாள் இரவு மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சி. இசை நிகழ்ச்சி ஏற்பாடாகி இருக்கிறது. அதைத் தொடர்ந்து இசைக்கலைஞர்களுக்கு  மரியாதை. முதலில் ஆண்கள். வரிசையாக மேளம், கிடார், கீபோர்ட் வாசித்தவர், பாடியவர், மைக்செட்காரர் என ஒவ்வொருவராக அழைத்து பெரிய மனிதர் ஒருவர் துண்டு போர்த்தி மரியாதை செய்கிறார். இறுதியாக,  3 பெண் பாடகிகள் அழைக்கப்படுகிறார்கள். அவர்கள் துண்டுவாங்க குனியும் சமயத்தில் பெரிய மனிதர் துண்டைப் போர்த்தாமல். கொஞ்சம் பொறுங்க!! எனச் சொல்லிவிட்டு வேறோரு பெண்மணியை ( அவருடைய மனைவி என நினைக்கிறேன் ) கூப்பிடுகிறார். கூட்டத்தில் அந்தப் பெண்மணியை தேடிக்கண்டுபிடித்து அந்தப் பெண்பாடகிகளுக்கு மரியாதை செய்யச் சொல்கிறார்கள்.

இதைக் கவனித்த மகள், 'ஏன் முதலில் ஆண்களுக்கு மட்டும் முதலில் மரியாதை ? அப்புறம்,  பெண்களுக்கும் அந்தப் பெரிய மனிதரே போர்த்தி இருக்கலாமே ? '   என அடுக்கடுக்காக சில கேள்விகள். நான்  'அது அப்படித்தான். நீ பேசாம பாரு ' என அமர்த்தினேன்.

அடுத்த நாள்  திருமணம்-  சடங்குகள் செய்ய வழக்கம்போல... மணமேடைக்கு முதலில் அழைக்கப்பட்டது மணமகன். பாதபூஜைக்கு  முதலில் அழைக்கப்பட்டது மணமகனின் பெற்றோர். பார்வையாளர்கள் பகுதியில் ஆண்களும், பெண்களும் தனிதனியாக பிரிந்து உட்கார்ந்திருக்கிறார்கள். இந்த விசயங்களைத் தொடர்ச்சியாக கவனித்தவள்.  'Why there is such segregation against women ? ' என்கிறாள். 

பெண்களை ஏன் இப்படி விலக்கி வைக்கிறீர்கள் என்பதைச் சிறு பெண்ணின் வேடிக்கையான கேள்வி என என்னால் எளிதாக ஒதுக்க முடியவில்லை. அவளே கூட கொஞ்சம் வளர்ந்தால் , ' சடங்குகள் என்ற பெயரால் ஏன்  ஆண் பெண் கழுத்தில் நிரந்தரமாக தொங்க தாலி கட்டுகிறான் ?... மெட்டி அணிவித்து விடுகிறான் ?... '  எனக் கேட்பாளாக இருக்கும்.

Sunday, March 14, 2021

எழுத்தாளர் இமையம் - வாழ்த்துகள் !!

இந்த ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருது எழுத்தாளர் இமையத்திற்கு வழங்கப்பட்டிருக்கிறது.



தனது இயல்பான, அதே சமயத்தில் அழுத்தமான எழுத்தால் சமூகத்தின் பல்வேறு தட்டு மக்களின் வாழ்வைப் பதிவு செய்தவவர்களில் மிக முக்கியமானவர் இமையம். வாழ்த்துகள் !!