பேராசிரியர் தற்போது அமேரிக்காவிற்கு விடுமுறைக்காக வந்திருக்கிறார். (இவருடைய மகன் பாஸ்டனில் இருக்கிறார்)
அவர் இந்த மாத தொடக்கத்தில் நியூஜெர்சியில் நடந்த பேரவையின் 2016ம் ஆண்டு தமிழ்விழாவில் கலந்துக் கொண்டு சிறப்பித்தார். அப்போது பேராசிரியரின் அறிமுகம் கிடைத்தது மிக மகிழ்ச்சி. அதற்கு உதவிய நண்பர் ஆல்பிக்கு எனது நன்றிகள்.
நேற்றைய (ஜூலை, 17, 2016) நிகழ்வுக்கு வருவோம். வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை மாதமொருமுறை இலக்கியச் சொற்பொழிவு நிகழ்வை நடத்திவருகிறது. அந்த நிகழ்வில் பேராசிரியர் அவர்கள் பாஸ்டனிலிருந்து பல்வழி இணைப்பு வழியாக கலந்துக் கொண்டார்.
தனது பேச்சின் தொடக்கத்தில் தமிழ் விழா 2016 பற்றிய தனது அனுபவங்களை பகிர்ந்தார். பின் "தமிழ் நாடகம் ; அடையாளமும், போக்குகளும்" எனும் தலைப்பில் பேசினார். நான் சமீபத்தில் கலந்துகொண்ட இலக்கிய நிகழ்வுகளில் மிகவும் சிறப்பானதொரு நிகழ்வு இது. தனது பேச்சில் நூற்றாண்டு பாரம்பரிய தமிழ் நாடக உலகின் எல்லா தளங்களையும் தொட்டுச் சென்றார்.
அவருடைய பேச்சை தனியாக குறிப்புகள் எதுவும் எடுக்கவில்லை.
அதனால் நிகழ்வின் இறுதியில் கேள்வி நேரத்தில் அவர் தந்த பதில்களை நினைவில் இருந்ததை மட்டும் உங்களுக்கு தருகிறேன்.
(எதேனும் விடுபட்டிருந்தால் அது எனது தவறு மட்டுமே.) இவை தமிழ் பேசும் அனைவரையும் சிந்திக்கவைப்பது.
தமிழ் நாடக உலகின் மூத்தவர் என சங்கரதாஸ் சுவாமிகள் மட்டும் கொண்டாடப்படும் அதே வேளையில் பாஸ்கர தாஸ் அதிகம் பேசப்படவில்லை என்ற குற்றச்சாட்டை ஓட்டிக் கேட்கப்பட்ட கேள்விக்கு.
அது திட்டமிட்டு செய்யபடும் இருட்டடிப்பு அல்ல. சங்கரதாஸ் அவர்கள் நாடக உலகின் முன்னோடி என்ற அளவில் பெரிதும் பேசப்படுவதாகச் சொன்னார்.
தமிழ் சிறுகதைகளை நாடகமாக்குதல் தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு
தமிழ்நாட்டில் முதன்முதலில் சிறுகதைகளை நாடகமாக்கியதில் தனது பங்கை குறிப்பிட்டார். மேலும் ஓருபடி மேலேபோய், கதை என்ன ?, கவிதையையே நாடகமாக்கியிருக்கிறோம் என்றது ஆச்சர்யமே.
காலஞ்சென்ற இயக்குநர் பாலு மகேந்திராவின் கதைநேரம் போன்றதோரு முயற்சிகள் தொடரவேண்டும்.
கர்நாடக சங்கீத சபாக்களில் நாடகங்கள் பற்றி ?
கர்நாடக சங்கீத சபாக்களில் முன்னுரிமை எப்போதும்
இசையென்ற போதிலும், அங்கே மற்ற பொருளாதாரக் காரணங்களுக்காக ஈட்டு நிரப்ப தொடங்கப்பட்டவையே இயல், இசை, நாடகம் எனும் வரிசையில் பேச்சும், நாடகமும்.
அந்த நாடகங்கள் நடுத்தர மக்களின், குறிப்பாக சென்னையில் வாழும் குறிப்பிட்ட ஓரு சமூகத்தின் வாழ்க்கையை ஓட்டியே வளர்ந்து வந்ததாகச் சொன்னார்.
இந்த தகவல் கண்டிப்பாக புதியவர்களுக்கு நல்லதோரு செய்தியாக இருக்கும்.
தமிழ் சூழலில் நாடகத்தின் இன்றைய நிலை ?
மிக முக்கியமானதோருக்குக் கேள்வி. தனது உரையில் பல இடங்களில் இதை தொட்டுச் சென்றார். அதை குறிப்புகளாகத்
தருகிறேன்.
- இன்று வெகுஜன ஊடகங்கள் பெரும்பாலும் திரைப்படங்களும், அரசியலுமே பேசுகின்றன. அவையே பெரும்பான்மை மக்களின் பொழுதுபோக்காக தொடர்ந்து முன் வைக்கப்படுகிறது.
- சின்னத்திரையின் தாக்கம், நகர்மயமாதல் போன்ற காலச் சூழல்
- நாடகம் எனும் கலை மக்களின் பெரும் ஆதரவு இல்லாத போதிலும் இந்திய அரசின் உதவியாலும், சில தன்னார்வ தொண்டு நிறுவனங்களாலும் நாடகங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. புதிய நாடக முயற்சிகள் தொடர்கின்றன.
தற்போதைய நிலைக்கு என்ன காரணம் ?
கலை வடிவங்களான கவிதை, நாடகம், எழுத்து, மேடைப் பேச்சு,
திரைப்படம் இவற்றின் மூழம் ஆட்சியைப் பிடித்த அரசியல்
கட்சிகள் அந்த விழுமியங்களை அடுத்த தளத்திற்கு கொண்டு சென்றிருக்கலாம் என ஆதங்கப்பட்டார். கேரள, மகாராஷ்டிர, வங்காள மாநிலங்களை நல்ல எடுத்துக்காட்டாக சுற்றிக் காட்டினார்.
அடுத்த தலைமுறையில் நாடகத் துறையை வளர்க்க ?
பல கல்லூரிகளில் தொடங்கப்பட்டு, மாணவர்கள் விருப்பிச் சேரும்
ஓரு துறை விசுவல் கம்யூனிகேசன். அந்த மாணவர்களுக்கு ஓரு குறும்படம் இயக்குவது என்பது பாடத்திட்டத்தில் இருப்பதால் அவர்கள் நாடகவடிவத்தை தேடி அணுகும் போக்கு வளர்ந்திருப்பதாகச் சொன்னார். அது லேசாக
நம்பிக்கையளிப்பதாக உள்ளது.
இளைய தலைமுறையிடம் (மாணவர்களிடம்) நாடகத்தை கொண்டு செல்வதன் மூலம் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும். அதற்கான முயற்சியில் தன்னுடைய மாணவர்கள் ஈடுபட்டிருப்பதாகவும் குறிப்பாக பாண்டிச்சேரி பல்கலைக்கழக மாணவர்களைச் சொன்னார்.
இப்போது திரைப்படங்களுக்கும் இந்த பின்புலம் (Stage) தேவை எனும் நிதர்சனம் புரியத் தொடங்கியிருப்பதாக ஜிகிர்தண்டா திரைப்படத்தை மேற்கோள் காட்டியதாக நினைவு.
கேள்வி நேரத்தில் நான் கேட்க நினைத்த கேள்விக்கு பேராசிரியரே
கடைசியில் பேச்சுனுடே பதில் சொல்லிவிட்டார். ஆங்கிலத்தில் Reading between the Lines என்று சொல்வதுபோல. அதை நான்
புரிந்து கொள்கிறேன்.
நான் கேட்க நினைத்த கேள்வி "தமிழ்நாட்டில் இன்னும் ஐம்பது ஆண்டுகளில் நாடகத்தின் நிலை என்னவாக இருக்கும் ? "
அவர் சொன்ன அந்த வரி " நாடகம் அழியுமோ என்ற கவலை இருக்கிறது " .
நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்த பேராசிரியர். அ.ராமசாமி
அவர்களுக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்.
நாடகங்கள் அழிந்துவிட்டன என நினைத்து இருந்தேன் ஆனால் உங்கள் பதிவை படிக்கும் போது இன்னும் அழியவில்லை என்று தெரிந்து கொண்டேன்
ReplyDeleteஇந்த கால இளைஞர்களுக்கு நாடம் எல்லாம் பார்க்கும் அளவிற்கு பொறுமை இல்லை என்பதுதான் உண்மை....
அதுமட்டுமல்ல நாடகத்தின் இடத்தை இன்றைய தமிழ் டிவி சீரியல்கள் பிடித்து கொண்டன
மிக உண்மை. நாடகம் எனும் அழகிய கலை வடிவத்திற்கு மறுபிறவி தேவை. !!
ReplyDelete