நண்பர்களுக்கு வணக்கம். இந்தத் தகவலை இதற்குமுன்
உங்களுடன் பகிர்ந்துகொண்டதாக நினைவில்லை. அதனால் சொல்லிவிடுகிறேன்.
விசயம் இதுதான். நான் வார இறுதியில் ஐந்தாறு சிறுவர், சிறுமியர்களுக்கு வீட்டில் முறையாக தமிழ் வகுப்பெடுக்கத் தொடங்கியிருக்கிறேன்.
கடந்த ஒருவருடமாகவே நெருக்கமான ஃபிளாரிடா நண்பர்கள்
என்னை வகுப்பெடுக்கச் சொல்லி தொடர்ந்து வற்புறுத்திக் கொண்டிருந்தார்கள். நானதான் ஆரம்பத்திலிருந்து எழுத்துப்பணியில் பிசியாக இருப்பதாகச் சொல்லி தட்டிக் கழித்துக் கொண்டிருந்தேன். அவர்களும் விடுவதாயில்லை. கடைசியில் ஒத்துக் கொண்டேன்.
எனக்கு நேரம் ஒரு காரணமாக இருந்தாலும். உண்மையில்
இதை எடுத்து செய்ய ஆரம்பத்தில் கொஞ்சம் அச்சம் இருந்தது.
காரணம், நம்மை நம்பி வரும் பிள்ளைகளுக்கு முழுமையாக சொல்லித் தரவேண்டுமே எனும் எண்ணம் தான்.
பெற்றோர்களின் தாய்மொழி ஆர்வம் எனக்குப் புரிகிறது. ஆனால்
இதில் பல நடைமுறைச் சிக்கல்கள். 6 முதல் 10 வயதுள்ள இந்தப் பிள்ளைகள் பிறந்து வளர்ந்தது எல்லாம் அமெரிக்காவில். வீட்டில் டிவி, பள்ளி, நண்பர்கள் என அவர்கள் பெரும்பாலும் புழங்கும் மொழி ஆங்கிலம். தமிழில் பேசினால் புரிந்துக் கொள்வார்கள் தான். ஆனால், பதில் சொல்வது ஆங்கிலத்தில்.
இவர்களுக்கு தமிழ் சொல்லித்தருவதில் இருக்கும் சிரமங்களை நன்றாக தெரிந்ததால் ஆரம்பத்தில் யோசித்தேன். சோதனை முயற்சியாக 4 வகுப்புகள் எடுத்து பார்த்துவிட்டுதான் தைரியமாக பெற்றோர்களுக்கு கமிட் செய்தேன். மனைவியும் உதவி செய்வதாக சொல்லி இருக்கிறார். பிள்ளைகளை எப்படியாவது தமிழ், எழுத, படிக்க, பேச வைத்துவிட வேண்டும். கண்டிப்பாக நம்பிக்கை இருக்கிறது. செய்துவிடலாம்.
ஆரம்பத்தில் அவர்களுக்கு பாடத்தை அரிச்சுவடியிலிருந்து தொடங்க வேண்டியிருந்தது. ஆங்கிலத்திலிருந்து தமிழ் கற்றுத்தருவது கொஞ்சம் கடினம் தான். பல சிக்கல்கள். ஆனால், வகுப்பு தொடங்கிய இரண்டு மாதத்தில் பிள்ளைகளிடம் நல்ல மாற்றம் தெரிவதாக பெற்றோர் சொல்கிறார்கள். மகிழ்ச்சியாக இருக்கிறது. குறிப்பாக மூன்றாம் வகுப்பு படிக்கும் ஒரு கோயம்புத்தூர் பையன் நிஜமாகவே கலக்குகிறான். இதெல்லாம் எனக்கு இது புதிய அனுபவம். பல சுவையான நிகழ்வுகள். நேரம் கிடைக்கும் போது பகிர்கிறேன்.
இதை, தமிழ் எழுத்தறிவிக்கிறேன். தமிழ்ச்சேவை செய்கிறேன் என்றேல்லாம் சொல்லி நாம் பெரிதாக குழப்பிக் கொள்ள தேவையில்லை என்றே நினைக்கிறேன். எனது தாய்மொழியை அடுத்த தலைமுறைக்கு கடத்த ஒரு சிறுமுயற்சி செய்கிறேன் என்ற அளவில் நான் மனதிருப்தி அடைந்துகொள்கிறேன். அதுவே சரியானதாக இருக்கும்.
இப்போதெல்லாம், ஞாயிற்றுக் கிழமை மாலையில் வீடு "ஜேஜே" என களைக்கட்டி விடுகிறது. "வணக்கம். பாஸ்கர் மாமா !",
"வீட்டுப்பாடம் எழுதிட்டேன்" , "நன்றி !" என தமிழ் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. நல்ல தொடக்கமான உணர்கிறேன்.
என்னைத் தொடர்ந்து உற்சாகப்படுத்தி இயக்கிக் கொண்டிருக்கும்
அனைவருக்கும் நன்றி! வேறு ஆலோசனைகள், உதவிகள் தேவைப்பட்டால் நண்பர்களிடம் கண்டிப்பாக கேட்கிறேன்.
No comments:
Post a Comment