Saturday, July 21, 2018

தொண்டிமுத்துலம் டிரிக்ஷாக்ஷியம் - மலையாளம்

நான் பெரும்பாலும் திரைப்படங்களைப் பற்றி எழுதுவதில்லை. அதற்குத்
தமிழில் நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் நான் படம் பார்ப்பதும்  மிக மிகக் குறைவு. இந்தமுறை விமானப் பயணத்தில் இரண்டு படங்களைப் பார்த்தேன். அவை இரண்டுமே மலையாளப் படங்கள்.

முதல்படம்  "தொண்டிமுத்துலம் டிரிக்ஷாக்ஷியம்",
(Thondimuthalum Driksakshiyum) இரண்டாவது   "வர்ணத்திள் ஆஷ்ன்கா" (Varnyathil Aashanka). மூழுநீள நகைச்சுவை திரைப்படம். அதைப் பார்க்கலாம்.  மற்றபடி படத்தில் சிறப்பாக ஒன்றுமில்லை.

ஆனால் "தொண்டிமுத்துல டிரிக்ஷாக்ஷியம்" (தமிழில்- "திருட்டுப்பொருளும் சாட்சியும்") படத்தைப் பற்றி குறிப்பிட்டு சொல்ல நினைத்தேன். பிறகு இணையத்தில் அந்தப்படத்தைப் பற்றி துழாவியபோதும் அது பல விருதுகளைப் பெற்றிருப்பதாக தெரிகிறது. ஆச்சர்யப்படவில்லை.

கதை இதுதான்.  புதிதாக காதல் திருமணம் செய்துகொண்ட ஒரு ஜோடி பஸ்சில் பயணிக்கிறது.  பஸ்சில் எதிர்பாராதவிதமாக அந்த இளம்பெண்ணின்  தங்கச்சங்கிலி  திருடுபோகிறது. அவள் கத்தி கூப்பாடு போடுகிறாள்.  உடனே திருடனை மடக்கிப் பிடித்த பயணிகள்  பஸ்சை போலீஸ் நிலையத்திற்கு விடுகிறார்கள்.  இப்படி சங்கிலியைப் பறிகொடுத்த ஜோடி போலீஸ் உதவியுடன் அதை  மீட்டார்களா ? என்பதே படத்தின் கதை.

இந்த மிக எளிய கதையை எந்தவித சினிமாத்தனங்களும் இல்லாமல்
மலையாளப் படங்களுக்கே உரிய மிக இயல்பான திரைக்கதையில்
அருமையாக சொல்லியிருக்கிறார்கள். நடிகர்களின் தேர்வும் அற்புதமாக வந்திருக்கிறது. கூடவே கேரளாவின் செழிப்பையும் அழகாக படமாக்கியிருக்கிறார்கள். படத்தில் நடித்த நடிகர்கள் சூரஜ் வெஞ்சஞ்சமுடு
மற்றும்  ஃபஹத் பாசிலுக்கும் (இயக்குநர் பாசிலின் மகன்) மிகச்சிறப்பான
எதிர்காலம் இருப்பதாக கணிக்கிறேன். முடிந்தால் பாருங்கள்.

#தொண்டிமுத்துலம்_டிரிக்ஷாக்ஷியம்

1 comment: