Tuesday, July 3, 2018

தமிழ்நாடு - ஒன்னுக்கும் உதவாத ஊரா ?

ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு ...

****
கிடைத்த 20 நாள் விடுமுறையில் தமிழ்நாட்டைக் குறுக்கும் நெடுக்குமாக பயணித்துவிட்டு ஃபிளாரிடா திரும்பியிருக்கிறேன்.

குடும்பத்தோடு இரயில், கார், பஸ் என முற்றிலுமாக  தரைவழி பயணம்.
முக்கியமாக  ஊர் சுற்றிப்பார்ப்பது அப்படியே வழியில் முடிந்தால்
உறவினர்களையும்,  நண்பர்களையும் சந்திப்பது முக்கிய நோக்கமாக இருந்தது.

பயணம் மொத்தமாக  எட்டு நாள்கள். சராசரியாக ஒவ்வொரு ஊரிலும்  ஒர் இரவு தங்கியிருக்கிறோம்.

முதலில் சென்னையிலிருந்து கிளம்பி தென்கோடியான கன்னியாக்குமரியைத் தொட்டு அங்கிருந்து நாகர்கோயில், திருநெல்வேலி, தென்காசி வழியாக உடுமலைப்பேட்டை, கோயம்புத்தூரைச் சுற்றிவிட்டு  பிறகு கடைசியாக சொந்த ஊரான திருவாரூர் போய் சேர்ந்தோம்.

தனிப்பட்ட முறையில் இந்தப் பயணம் தமிழ்நாட்டின் மாறுபட்ட நில அமைப்புகளையும் மனிதர்களையும், சூழலையும் ஒரு பருந்து பார்வையில் அறிந்துகொள்ள எனக்கு நல்லதொரு இருந்தது.

நாங்கள் போயிருந்தது ஜூன் மாதத்தின் தொடக்கம் என்பதால் தென் மேற்கு பருவமழை தொடங்கியிருந்த அருமையான நேரம். நாஞ்சில் நாடு -

எப்போதும் பொழியத் தயாராக மழை நீரைச் சுமந்தபடித்  திரிந்து கொண்டிருக்கும் மேகங்களுடன் ரம்யமாக இருந்தது.   குற்றாலம் -
மனதைக் குளிர வைக்கும் தென்றல் காற்றுடன் சாரல் மழை பொழிந்து
திகைப்பூட்டியது.                              கொங்கு நாடு - குளிர்ச்சியான மலைகள்,  தென்னந்தோப்புகள் என இயற்கை எழில் கொஞ்சியதால்  தமிழகத்தை ஒரு செழிப்பான மாநிலமாக உணர்ந்தேன்.

அந்த வகையில்  இது  முன்பு எப்போதும் இல்லாத இல்லாத ஒரு மாறுபட்ட பயணமாக இருந்தது. தமிழ்நாட்டின் எனது  சமீபத்திய பயணங்களில்  இதை முக்கியமாக நினைக்கிறேன். உண்மையில் "என்ன இல்லை இந்தத் திருநாட்டில் ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில் ?" எனும் திரைப்பாடலை ஆழமாக மனப்பூர்வமாக உணர்ந்தத் தருணங்கள் அவை.
நான் ஒரு செழுமையான தேசத்தின் பிரதிநிதி என்றும் பெருமை கொண்ட நாட்கள் அவை.

அதே சமயத்தில் காவிரி பாயும் டெல்டா பகுதி பாலைவனமாக வறண்டு கிடைக்கிறது. அதைப் பற்றியும் தமிழகத்தில் இன்றையக் கல்வி  வேலைவாய்ப்பு போன்ற மற்ற சில விசயங்களையும் நாம் தனியாகப் பேசவேண்டியிருக்கிறது.

கடைசியாக ஒரு விசயம், 'சுத்த வேஸ்ட்,  ஒன்னுக்கும் உதவாத ஊரு ' என்றெல்லாம் தமிழ்நாட்டைச் சபிப்பவர்கள் கண்டிப்பாக ஒருமுறையேனும் மாநிலத்தை முழுவதுமாக சுற்றிப் பார்த்துவிட்டு பேசுட்டும் எனச் சொல்லத் தோன்றுகிறது.

#தமிழ்நாடு2018

3 comments:

  1. பெருமை சிறுமை ஆகாமல் இருந்தால் சரி...!

    ReplyDelete
  2. ****"என்ன இல்லை இந்தத் திருநாட்டில் ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில் ?" ****

    எல்லாமே இருக்கு. ஆனால் சாதரண ஏழை குடிமகனுக்கு கிடைப்பது அரிதாக இருக்குனு சொல்றாங்க. இல்லையா?

    ஏன், போதுமான தண்ணீர் வசதிகூட இல்லைனு சொல்றாங்க. எத்தனை அடி தோண்டினாலும் போரிங தண்ணீர் வரமாட்டேன்கிதாம்! அதெல்லாம் பொய்யா?!!

    நீங்க என்ன செழிப்பான தமிழ்நாட்டை மட்டும் பார்த்துட்டு வந்துட்டீங்களா? பரமக்குடி, ராமம்நாடு, மானாமதுரை எல்லாம் போகலையா?! ஏன் இந்த ஓர வஞ்சனை? :)


    ***கடைசியாக ஒரு விசயம், 'சுத்த வேஸ்ட், ஒன்னுக்கும் உதவாத ஊரு ' என்றெல்லாம் தமிழ்நாட்டைச் சபிப்பவர்கள்***

    பொதுவாக அமெரிக்கர்கள் ஊர் சுற்றிப் பார்க்கணும்னா, ஐரோப்பாதான் போவாங்க. அவங்க கிட்ட சொல்லிப்பாருங்க, அடுத்த முறை செழிப்பான தமிழ்நாட்டுக்குப் போய்வர சொல்லி! போயிட்டு திரும்பி வந்து சொல்வார்கள், என்ன இல்லை உங்க திருநாட்டில்னு :)

    ReplyDelete
  3. வணக்கம்க, நான் போனது பருவகாலம் அதுவும் மேற்கு தொடர்ச்சி மலையோரம்னு சொல்லிட்டேனே. தமிழ்நாடு 5வகை நிலமும் உள்ள பூமி தானே.

    இயற்கை கொடுத்ததை சரியாக வைச்சுக்காம தலையில் நாமே மண்ண வாரி கொட்டினால் அது நிலத்தோட தப்பில்லையே

    ReplyDelete