Thursday, September 13, 2018

யானையைச் சாப்பிடுவது

'உங்கள் வாசிப்பின் ரகசியம் என்ன? ' என நண்பர் ஒருவர் உள்பெட்டியில்  கேட்டிருந்தார். உண்மையில் இதில் ரகசியம் எதுவும் கிடையாது.

எனக்கு மட்டுமில்லாமல் வாசிப்புப் பழக்கம் எங்கள் வீட்டில் அனைவருக்கும்  பொதுவான ஒன்று. வீட்டில்  சமையலறைத் தவிர மற்ற எல்லா இடங்களிலும்  கண்ணில்படும்படியாக எப்போதும் புத்தகங்கள்  கிடக்கும்.  அதனால் வாசிப்பு கண்டிப்பாக தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. அதுமட்டுமில்லாமல் பிள்ளைகளுக்கு கோடை விடுமுறையில் மட்டுமே டிவி என்பதால் வீட்டில் வாசிப்பு எப்போதும் பிரதானமே.

வாசிப்பைப் பொறுத்தவரை உங்களுக்குப் பிடித்த, கவர்ந்த ஏதாவது ஒன்றைத் தேர்ந்தேடுத்து தொடர்ந்து வாசியுங்கள் என்று சொல்லத் தோன்றுகிறது. தனிப்பட்ட முறையில் வாசிப்பில் நான்  எழுத்தாளர் சுஜாதா சொன்ன ஒரு நுட்பத்தை கடைபிடிக்கிறேன். அதாவது ஒரே சமயத்தில் பல புத்தகங்களை வாசிப்பது.

தற்போது எனது வாசிப்பில்

வரவேற்பறையில்- தேசாந்திரி ( எஸ்.இராமகிருஷ்ணன்)
அலுவலக அறையில் - Outliers Book by Malcolm Gladwell மால்கம் கிளாட்வெல்
காரில் ஒலிப்புத்தகமாக - The Last Voyage of Columbus Book by Martin Dugard
படுக்கை அறையில் - இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள் (வைரமுத்து)

இதை நீங்களும்  முயற்சி செய்துபார்க்கலாம். அதன்படி வீட்டில் அறைக்கு ஒரு புத்தகத்தை வைத்து வாசிக்கலாம். இல்லை பயணங்களில் ஒரு புத்தகம், நண்பிக்காக பீச்சில் காத்திருக்கும் சமயங்களில் (!) ஒரு புத்தகம் என நேரம் கிடைக்கும் போது கொஞ்சம் கொஞ்சமாக சிரமமின்றி எளிதாக நிறைய புத்தகங்களை வாசித்துவிட முடியும்.

இப்படி ஒரே சமயத்தில் நீங்கள் வாசிக்கும் ஒவ்வொரு புத்தகத்தையும் வெவ்வேறு ரசனைகளில் தேர்ந்தேடுத்துக் கொள்வதுகூட வாசிப்புக்குச் சுவை கூட்டும்.

ஆனால்,  வாசிப்பு ஒருவிதத்தில் அந்தரங்கமானது. அதனால் நான் இங்கு சொல்வது அனைவருக்கும் சரியானதாக இருக்கும் எனச் சொல்ல முடியாது.  சிலர் பெரிய திட்டமிடல் எதுவும் இன்றி ‘கண்டதையும்’ வாசிப்பார்கள். சிலர்  தேர்ந்தெடுத்து வாசிப்பார்கள். சிலர் நூலகத்திற்கு போய் வாசிப்பார்கள்.

அதனால் உங்கள் வசதிபடி  உங்களுக்குப் பிடித்த ஏதோ ஒன்றைத் தேர்ந்தெடுத்து, முக்கியமாக தொடர்ந்து வாசிக்கும் பழக்கத்தை கைகொள்ளுங்கள்.

நம்மூரில்  சிறு துளி பெருவெள்ளம் எனச் சொல்வது போல ஆங்கிலத்தில் சிறிது சிறிதாக ஒரு பெரிய திட்டத்தை, இலக்கைக் கொஞ்சம் கொஞ்சமாக கைகொள்வதை Eat the elephant one bite at a time எனச் சொல்வார்கள். அப்படி நீங்களும் வாசிப்பு யானையைச்  சுவைக்கலாம்.

படங்கள்- நன்றி இணையம்.

3 comments:

  1. ஹா.... ஹா.... உங்கள் எண்ணத்திற்கு பாராட்டுகள் அல்ல... வாழ்த்துகள்...

    ReplyDelete
  2. அருமை
    வாசிப்பு யானையைச் சுவைப்போம்

    ReplyDelete