Saturday, September 22, 2018

அரசுப்பள்ளிகளுக்கு மூடுவிழா

மாணவர்களின் சேர்க்கைக் குறைவாக இருப்பதைக் காரணம் காட்டி
தமிழக அரசு பலநூறு அரசுப் பள்ளிகளை மூடப்போவதாக அறிவித்துள்ளது.
அந்தச் செய்தி ஏனோ  ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும்  பெரிதாக விவாதிக்கப்படவில்லை என நண்பர் ஒருவர் முகநூலில்  வருத்தப்பட்டிருந்தார்.

கூடவே கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் 1 கோடியாக இருந்த அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை, 2015-ஆம் ஆண்டில் 56 லட்சமாக குறைந்துள்ளது. இது நடப்புக் கல்வியாண்டில்  மேலும் குறைந்து 46 லட்சமாகி உள்ளது (-தினத்தந்தி)  என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

நாம் இங்கே கொஞ்சம் வெளிப்படையாகவே பேசலாமே. அரசுப் பள்ளிகளையோ இல்லை அரசு உதவிபெறும் பள்ளிகளையோ இதுபோலத் தொடர்ந்து மூடிக்கொண்டிருந்தால் யார் கவலைப்படுவார்கள்? உண்மையில்  அங்குப் பணிபுரியும் ஆசிரியர்களைத் தவிர வேறு யாரும் பொருட்படுத்தவில்லை என்றே நினைக்கிறேன். இதை ஒரு குற்றச்சாட்டாக, விமர்சனமாக முன்வைக்காவிட்டாலும் இதுதான் இன்றைய நிதர்சனம்.

தரமான கல்வி, மருத்துவம் போன்ற அடிப்படை விசயங்களை
மக்களுக்கு வழங்க வேண்டிய கடமையில் இருந்து அரசு தவறியதால்
வாய்ப்புள்ளவர்கள் விலகி இதற்கெனத்  தனியார் பக்கம் திரும்பி பல வருடங்களாகிவிட்டது.

இன்று சரியான  குடும்பச் சூழல் அமையாத வேறுவழியற்ற விளிம்பு நிலை மக்களுக்கு மட்டுமே அரசுப்பள்ளிகள் எனும் எண்ணம் நிலைபெற்றுவிட்டது.
இந்த நிலைக்குக் காரணம் வெளிப்படையானது.  பல வருடங்களாக
அதிகாரத்தில் இருந்தவர்கள் அரசுப்பள்ளிகளின் உள்கட்டமைப்பிலும், கல்வித் திட்டத்திலும் உரிய நேரத்தில் கவனம் செலுத்தாமல் மெத்தனமான போக்கைக் கடைபிடித்து திட்டமிட்டு அரசுப்பள்ளிகளை மோசமான நிலைக்குத் தள்ளிவிட்டார்கள்.

எது தரமான கல்வி ?  அதை யார் நிர்ணயிக்கிறார்கள் ? அதை  எந்த மொழி வழியாகக் கற்பது? இந்தியா போன்ற துணைக்கண்டங்களில் மாநிலம் தழுவிய சமச்சீர்க் கல்வி உயர்ந்ததா  இல்லை ஒற்றைத் தன்மையான மத்திய அரசாங்கப் பாடத்திட்டக் கல்வி உயர்ந்ததா ?  அதுபோல  எதிர்காலக் கல்வியை வடிவமைப்பதில் இன்றைய தொழில்நுட்பத்தின் பங்கு என்ன ? பிள்ளைகளின் சிந்தனையைத் தூண்டுவதோடு உயர்கல்விக்கும் சிறப்பான எதிர்காலத்திற்கும் அடித்தளம் அமைக்க எந்த மாதிரியான கல்விக்கொள்கை அவசியம் என்பது போன்ற விவாதங்கள் இந்தியாவைப் போல, தமிழகத்தைப்போல உலக அரங்கிலும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது.

ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம்.  இனி வரும்காலங்களில் நம்நாட்டு
மக்களுக்கு வேலைவாய்ப்பு என்பது தனியார் மற்றும் அந்நிய நிறுவனங்களின் மூலமாக மட்டுமே என்பது உறுதியாகிவிட்டது.  அதனால், அதற்கு உதவும் வகையில் அரசு  கல்வித் துறையைத் தனியாருக்கு முழுமையாகத் தாரைவார்த்துவிட்டு நாங்கள் அந்தப் பொறுப்பில் இருந்து விலகிக் கொள்கிறோம் என வெளிப்படையாக அறிவிக்க  இயலாத தர்மசங்கடத்தில் அரசு சிக்கிக் கொண்டிருக்கிறது என்பதே உண்மை.

#அரசுப்பள்ளிகள்

No comments:

Post a Comment