Friday, July 31, 2020

எண்ணும் இளம் பெண்ணும்

இரண்டு ஆண்டுகளுக்கு முன் இந்தியா வந்திருந்த போது நடந்த ஒரு சம்பவம்.  என் நினைவு சரியாக இருந்தால் அது  எழும்பூர் இரயில் நிலையம் என நினைக்கிறேன்.  அதிகாலை சுமார் 5 மணி இருக்கும். இருள் பிரியும் அந்த வேளையில் இரயிலில் நிலையத்துக்கு  வெளியே  ஆட்டோவுக்குக் காத்திருந்தேன்.

அப்போது தீடிரேன  "ஐயோ... அம்மா போயிடுச்சேமா..." எனும் பெருங்குரல் குரல்  வந்த திசையில் திரும்பினேன்.  சற்று தூரத்தில்
மங்கலான மஞ்சள் ஒளி கசிந்த மின்கம்பத்துக்கு கீழே  15-16 வயதுமதிக்கத்தக்க இளம் பெண்.  பாவாடை சட்டை 
போட்டிருந்தாள். கூடவே  கையில் மூட்டை முடிச்சுகளுடன் அவளுடைய  அப்பா, அம்மா. ரொம்ப வசதியானவர்களாக  தெரியவில்லை. ஊரில் இருந்து வந்திருப்பார்கள் போல. 

அந்த இளம்பெண் செல்போனை அந்த பஸ்டாப்பில் தொலைத்து விட்டாள் போல. வேறு பஸ்சில் திரும்பி வந்து தேடிப் பார்த்தும் கிடைக்க வில்லை போல.  ."இங்க தானே மா வச்சிட்டு இருந்தேன்... ஐயோ அம்மா.. எல்லாம் போச்சே மா...."  என செல்போன் தொலைந்து விட்ட துயரம் தாங்காமல் வாய்விட்டு அழத்தொடங்கினாள். 

அந்த அழுகை  "ஐயோ ராசா எங்கள விட்டுட்டு இப்படி போயிட்டியே..."  என செத்த வீட்டில் துக்கம் தாளாமல் நெஞ்சில் அடித்துக்கொண்டு 
அழுவது போல மரண ஓலம் எழுப்பினாள்.  நெருங்கிய குடும்ப உறவை இழந்தது  போன்ற உணர்வுப்பூர்வமாக அவளுடைய அழுகை 
பொங்கி பொங்கி கண்ணீராக வழிந்து ஓடி கன்னங்களை நனைத்துக் கொண்டிருந்தது.

அவளுடைய அம்மா, அப்பாவும் எதுவும் பேசாமல்  யாரோ எவரோ என்பதுபோல் நின்றிருந்தார்கள். அவர்கள் அவளைச் சமதானபடுத்த எந்த முயற்சியும்  செய்ததாக தெரிய வில்லை.  சும்மா ரோட்டை 
வேடிக்கை பார்த்தபடி இருந்தனர். அவர்களைய உடல் மொழி இது உன்னோட தவறுதானே அனுபவி என்பது போல இருந்தது.

அந்த பெண் கூட செல்போன் தொலைந்ததால் திரும்ப வாங்க வேண்டுமே என கவலைப்பட்டதாக தெரியவில்லை.  
மாறாக,  அவள்  "என்னோட பிரென்ட்ஸ்ச எப்படி நான் தேடி புடிப்பேன்...  இனிமே நான் எப்படி பேசுவேன்..." என சொல்லி வாய்விட்டு கதறிக்கொண்டிருந்தாள்.

பொது இடத்தில் நிற்கிறோம், ஒரு செல்போனுக்காக வாய்விட்டு அழுகிறோம் என்ற எந்தவித பிரக்ஞையும் இ்ல்லாமல் அன்று அவள் ஏங்கி ஏங்கி அழுது கொண்டிருந்தது இன்று வரை மனதை உறுத்திக்கொண்டிருக்கிறது.

அவளைப் போல இளைய தலைமுறைக்கு நாம் நண்பர்கள் எனச்சொல்லி வெறும் எண்களை அறிமுகம் செய்துவிட்டோமோ என 
இன்று நினைத்துக்கொள்கிறேன். நீங்கள் ?

——

No comments:

Post a Comment