Tuesday, June 22, 2021

நேர்காணல்கள்

மனநல மருத்துவர் ஷாலினியின் நேர்காணல் ஒன்று யூடியூப் சேனலில் வந்திருந்தது (தமிழகத்தின் பரபரப்பான நாளிதழ் தயாரித்தது ).  அதைத் தொடர்ந்தார் போல 5 நிமிடம் கூட பார்க்கமுடியவில்லை.

காரணம் ?, நேர்காணல் செய்தவர் கேட்ட கேள்விகள் தான். கேள்விகள் எல்லாம் இப்படித்தான் இருந்தன. "அந்த படம் எடுத்த இயக்குநர் சில்ரண் பத்தி இப்படி ஒரு பதிவ போன வாரம் போட்டிருந்தார்.." , "அந்த இந்தி நடிகர் பேர்ல நேத்து இப்படி ஒரு வாட்ஸ்-அப் வந்ததே , அத பத்தி என்ன நினைக்கீறிங்க.. ? " இப்படி  எல்லாம் வெறும் தட்டையான கேள்விகள். 

இன்றைய நெறியாளர்களின் அனுபவம் என்பது இப்படித்தான் இருக்கிறது.  வாசிப்பு  ? அது சுத்தமாக இல்லை. சரி, நேர்காணல் செய்பவருக்கு சுயமான சிந்தனை வேண்டாம்.  கேட்க  நாலு உருப்படியான கேள்விகள் கூடவா இல்லை ?  ஒரு மனநல மருத்துவர்களிடம் விவாதிக்க தெருவில் போகும் நாலு பேரை நிறுத்தி  விசாரித்தாலே ஆயிரம் பிரச்சனைகளைச் சொல்வார்களே. கூடவே, அவருடைய கேள்விகள் அனைத்தும் ஆங்கில மயம். தமிழைத் தேடித்தான் பார்க்கவேண்டி இருந்தது.

புதிதாக நேர்காணல் செய்ய கிளம்புவர்களுக்கு  இங்கே சில அறிவுரைகள். தமிழர்களுக்காக உருவாகும் நிகழ்ச்சிகளில் நெறியாளர்கள் முடிந்தவரைத் தமிழில் பேசவேண்டும் எனும் உயரிய மாண்பை எல்லாம் இப்போது நாங்கள் எதிர்பார்க்கவில்லை. முதலில் பார்வையாளர்களின் நேரத்துக்கு  மதிப்பளிக்கப் பழகுங்கள். முடிந்தவரை முன்தயாரிப்போடு வாருங்கள் என்று தான் சொல்கிறோம்.  

விருந்தினரின் அனுபவத்துக்குத் தகுந்த கேள்விகளைக் கேளுங்கள். கண்டபடி உளராமல் நேர்காணல் செய்பவரைப் பற்றி கொஞ்சமாக தெரிந்து கொள்ளுங்கள்.  கூர்மையான கேள்விகளைக் கேட்க பழகுங்கள்.  ரபி பெர்னாட், சித்ரா லட்சுமணன், மு.குணசேகரன் போன்ற பல அனுபவமுள்ளவர்களின் நிகழ்ச்சிகளைப் பார்த்தாவது கொஞ்சம் திருந்துங்கள்.

1 comment:

  1. கேள்விகளுக்கு தான் அதிகம் படிக்க வேண்டும்...

    ReplyDelete