Tuesday, October 6, 2026

தமிழில் “One-hit-wonder“ செய்தவர்கள்

மாதமொருமுறை , இரு முறை அல்லது  நேரம் கிடைக்கும் போது வாசிப்பு, தமிழ் எழுத்துலகம் குறித்து ஃபோன் செய்து பேசும் ஒரு சில நண்பர்களில் ஒருவர் தமிழ்நாட்டில் இருக்கும்  எழுத்தாளர் அரவிந்த் சச்சிதானந்தமும் ஒருவர்.

அரவிந்த் கடந்த பதினைந்து வருடங்களாக தொடர்ச்சியாக எழுதிக்கொண்டிருக்கிறார். எழுத்தாளர் சுஜாதா விருது உட்பட பல விருதுகளைப் பெற்றவர், திரைப்பட வசனகர்த்தா என்றெல்லாம் அவர் குறித்து  தனியாக ஒரு பதிவே எழுதவேண்டும். ஆனால், நான் சொல்ல வந்த விசயம் அதுவல்ல.

கடந்த வாரம் அவருடன் பேசும் போது திடீரென இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கத் திரைப்பட இயக்குநரான மனோஜ் நைட் சியாமலான் (M. Night Shyamalan)  குறித்த பேச்சு வந்தது.  சியாமலான் தனது The Sixth Sense வெற்றிப் படத்தின் வழியாக உலகப்புகழ் பெற்றவர். இந்தியாவின் உயர்ந்த விருதான பத்மஸ்ரீ பெற்ற இவர்  தொடர்ச்சியாக மர்மம், அமானுஷ்யம் மற்றும் உளவியல் தொடர்பான பல படங்கள் எடுத்தாலும் அவரால் தனது  Sixth Sense படத்தின் வெற்றியை மீண்டும் தொட இயலவில்லை.


வேண்டுமானல், அவருடைய Signs  படத்தை  Sixth Sense படத்துக்கு இணையாக சேர்த்துக்கொள்ளலாம். மற்றபடி தொடர்ச்சியாக அவரால் மக்களின் எதிர்பார்ப்பை பெரிதாக பூர்த்தி செய்ய இயலவில்லை என்பதே உண்மை. இப்படி உலகம் முழுவதும் பல கலைஞர்கள் தங்களுடைய சொந்த சாதனையை தங்களால் முறியடிக்க இயலாமல் இறுதியில் கரைந்து போகிறார்கள்.  உண்மையில்  யாருக்கும் தான் ஒரு மோசமான ஒரு படைப்பைத் தரவேண்டும் என்ற எண்ணம் கண்டிப்பாக இல்லை என்றாலும் ஏனோ கலை கைகூடி வருவதில்லை அல்லது அது கோரும் உழைப்பை அவர்கள் தருவதில்லை என்றே சொல்லத் தோன்றுகிறது.

இதையெல்லாம் வென்று காலம் கடந்து நிற்கும் பல சாதனைகளைச் செய்தவர்களையே உலகம் “லெஜண்ட்”எனக் கொண்டாடுகிறது. மற்றவர்களை சமூகம் “One-hit wonder“ செய்தவர்கள் என எளிதாக ஒதுக்கி வைத்துவிடுகிறது.

தமிழில் “One-hit wonder“ செய்தவர்கள் பட்டியல் இருக்கிறதா என்ன ?


நன்றி- படம் இணையம்.