ஒருமுறை தன்முன் பிரமாண்டமாக வளர்ந்து நிற்கும் அடர்வனத்தை மனதில் ஒரு கனவோடு எதிர் நின்று அழிக்கும் சித்திரம், மறுமுறை தாசி பஞ்சவர்ணத்துடனான மையல், இன்னொரு முறை புதிய சிந்தனைகளுடன் உள்ளூருக்கு வரும் இளைஞனுடன் தனது தன்மானத்தை விட்டுத்தராமல் வீறுநடை போடும் சிவனாண்டி தேவர்.
இந்தமுறை, 'தங்கக் காசுகளாலும், பொன் குண்டுகளாலும், மஞ்சள் நூல்களாலும், வெற்றிலைகளாலும் பாப்பாவின் நெற்றி நிறைந்துவிட்டது' எனும் சித்திரம் மனதில் தங்கி நிற்கிறது.
1960 களின் இறுதியில் வெளிவந்த இந்த நாவல் அந்தக் காலகட்டத்தை மிக அழகாக நமக்காக பதிவுசெய்திருக்கிறது. இயற்கை சீர்கேட்டின் தொடக்கம், அன்றைய வாழ்க்கைமுறை, எளிய மனிதர்களின் வாழ்வாதாரம், கொடுக்கல் வாங்கல்கள், உறவுகள், திருமணச் சடங்குகள், சாதியப் படிநிலை என பலத்தளங்களைத் தொட்டுச் செல்கிறது. இதன் கதைக்களம் கீழத்தஞ்சை என்பதாலோ என்னவோ இந்தப் படைப்பு மனதுக்கு மேலும் நெருக்கமாகிறது. வாய்ப்பு கிடைத்தால் மயிலாடுதுறைக்கு அருகில் இருக்கும் சாயாவனம் கிராமத்தை இப்போது பார்க்க வேண்டும். பார்ப்போம்.
இறுதியாக ஒன்று. தமிழ் இலக்கிய உலகுக்கு நுழைபவர்கள் தவறாமல் வாசிக்கவேண்டிய படைப்பு சாயாவனம். அதுமட்டுமின்றி, ஆரவாரம் இன்றி ஆற்றொழுக்கமாக செல்லும் இந்த நாவலை எழுதியபோது எழுத்தாளர் சா. கந்தசாமியின் வயது வெறும் 25 என்பது பெருவியப்பு.

No comments:
Post a Comment