Showing posts with label #அந்தஆறுநாட்கள். Show all posts
Showing posts with label #அந்தஆறுநாட்கள். Show all posts

Monday, May 6, 2019

அந்த ஆறு நாட்கள்- வாசிக்க வேண்டிய சாரமான படைப்பு

வாசகர் ஹேமா ஜே (Hema Jay) முகநூலில் "அந்த ஆறு நாட்கள்" குறித்து 
எழுதிய  வாசிப்பனுபவம்.  நன்றி  ஹேமா !!

                                              ******************
நல்ல படைப்பு. எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. தனிபதிவாக எழுதணும்னு நினைச்சு அப்படியே போயிடுச்சு. இப்போது இலவச தரவிறக்கம் கொடுத்திருக்கிறார். வாய்ப்பு இருப்பவர்கள் வாசித்துப் பாருங்கள்.

இர்மா பற்றிய ஆயுத்தங்களையும், ப்ளோரிடா நிலபரப்பின் தன்மைகளையும், நாயகனின் வேலை குறித்த தொழில்நுட்ப தகவல்களும் வாசிக்க விறுவிறுப்பாக இருந்தது. அமெரிக்க வாழ்க்கையின் போலிகளையும், புலம் பெயர்ந்து வாழ்பவர்களின் கவலைகளும் கூட நிதர்சனமாய். அந்த சூழலில் சிக்கியிருப்பவர்களின் மனநிலையை, அந்த பதட்டத்தை (குறிப்பாக அவர்கள் வேறு இடம் தேடி பயணப்படும்போது.. அத்தனை வருட உழைப்பையும் சேகரிப்பையும் அப்படியே விட்டுவிட்டு இங்கு மீண்டும் வருவோமா என்ற தவிப்புடன் செல்வதை....) மிக சரியாக கடத்தி இருந்தீர்கள்.
சிறு விலகல் என்று பார்த்தால் மின்தொடர்பு வேலைகள் குறித்த கவனத்தை போலவே அந்த குடும்பத்தின் தவிப்புகளையும் இன்னும் சிறிது அதிகமாக அழுத்தமாக கொடுத்திருக்கலாமோ என்று தோன்றியது, குறிப்பாக அவன் மனைவியின் உணர்வுகளை. அவள் இவ்வளவு பெரிய இயற்கை சீற்றத்தை வெகு மேலோட்டமாக கடப்பது போன்ற ஒரு எண்ணம் வந்தது. (அதே நேரம் மனிதர்கள் பலவிதம், அவள் ஈஸி கோயிங் ஆக இருக்கலாமே என்றும் நினைத்துக் கொள்கிறேன்) வெகு சில இடங்களில் தற்குறிப்பேற்ற வாக்கியங்கள் - எடிட்டிங்கில் விடுபட்டு போயிருக்கலாம்.
நிச்சயம் கவனிக்கப்படவேண்டிய வாசிக்க வேண்டிய சாரமான படைப்பு. வாழ்த்துகள் திரு. ஆரூர் பாஸ்கர்.

****************
நூலை வாங்க USA நண்பர்களுக்கு கிண்டில் முகவரி- 

https://amzn.to/2K1IoEr

இந்திய முகவரி - https://amzn.to/2UYBi4d

Wednesday, May 1, 2019

அந்த ஆறு நாட்கள்- தமிழில் இப்படிப்பட்ட கதைக்களங்கள் அரிது

சிங்கப்பூர் நண்பரும் எழுத்தாளருமான சித்தூராஜ் பொன்ராஜ் (Sithuraj Ponraj) முகநூலில் "அந்த ஆறு நாட்கள்" குறித்து எழுதிய கதை விமர்சனம். நன்றி  சித்துராஜ் !!

                                       ******************
ஆரூர் பாஸ்கரின் - அந்த ஆறு நாட்கள் - 4 1/2 பாரா வாசிப்பனுபவம்
Gripping tale என்பார்கள். தொடக்கத்திலிருந்தே வாசகனை அங்கும் இங்கும் அசையாதபடி கட்டிப் போடும் கதை. ஆரூர் பாஸ்கர் அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாநிலத்தை 2017ல் அடித்து நொறுக்கிய மிக உக்கிரமான இர்மா புயலைச் சுற்றி அப்படிப்பட்ட ஒரு நாவலைப் பின்னியிருக்கிறார்.
சகல வல்லமைகளும் வசதிகளும் பொருந்திய வல்லரசு இயற்கைக்கு முன்னால் எதுவும் செய்ய முடியாமல் நிற்கும் நிதர்சனத்தைப் பரணி என்ற மின்சாரக் கம்பெனியில் வேலை பார்க்கும் இந்திய ஊழியரின் கண்களின் வழியே காட்டியிருக்கிறார். அதே இயலாமையைக் காட்டும் விதத்தில் பரணியின் கையில் பணமிருந்தும் புயலுக்கு முந்திய நாள்களில் அவருக்குச் சேமித்து வைப்பதற்காக குடிநீர் வாங்குவதும் பெட்ரோல் வாங்குவதும்கூட சிரமமாக இருக்கிறது. வழக்கமாக மிகுந்த ஒழுங்கோடும், பரஸ்பர மரியாதையோடும் காரியங்களைச் செய்யும் அமெரிக்கர்களிடையே இந்த இயலாமை ஏற்படுத்தும் நுணுக்கமான மாறுதல்கள். ஆரூர் பாஸ்கர் அற்புதம் செய்து இருக்கிறார்.

இயற்கை பேரிடர் போருக்கு ஒப்பானதுதான். இர்மா புயல் தாக்கத்தை மட்டும் சொல்லாமல் அது வரும் முன்பான நாள்களில் நாவலை பாஸ்கர் தொடங்கியது சிறப்பானது. போரும் பேரிடரும் வரும் முன்பு மனிதர்களிடையே ஏற்படும் வெற்று நம்பிக்கைகளையும், ஆயத்தங்களையும், மனப் போராட்டங்களையும் எடுத்துக் காட்ட இது உதவி இருக்கிறது. அது மட்டுமல்லாமல், இந்த விவரிப்புகளின் மூலமும், அமெரிக்காவை முன்னர் தாக்கிய புயல்களைப் பற்றி இடையிடையே சொல்லியும் பாஸ்கர் அமெரிக்க வாழ்வின் சவால்களை, அரசியலை, கறுப்பர்களுக்கு இழைத்த அநீதியை, அமெரிக்காவில் வேலை செய்யும் இந்தியர்களின் சந்தோஷங்களை, மன சஞ்சலங்களை, நட்பை ஒரு சேர அள்ளித் தந்திருக்கிறார். இதற்கு மிக உதவியாய் இருப்பவை நாவல் முழுவதும் பரவிக் கிடக்கும் தினசரி அமெரிக்க வாழ்வைப் பற்றிய மிக இயல்பான விவரங்கள். இதில் புயலால் அதிகம் பாதிப்படையக் கூடிய மின்சாரக் கட்டமைப்பு ஊழியரைக் கதாநாயகன் ஆக்கியிருப்பது புத்திசாலித்தனம் - அதிக தகவல்களைப் போகிற போக்கில் கொடுக்க முடிகிறது. புயலைப் படிக்கத் தொடங்கித் தற்கால அமெரிக்காவைப் பற்றி முழுமையாக படித்த அனுபவம்.
அழகான நடை. ஆனால் சில இடங்களில் தகவல்களைச் சொல்ல வந்த கட்டுரை போன்ற பாராக்கள் அசதி ஏற்படுத்தின. அது போல் இன்னமும் அழுத்தமாக சில வெள்ளை, லத்தீனோ, கறுப்பு அமெரிக்க கதாபாத்திரங்களை உருவாக்கியிருக்கலாமோ என்றும் தோன்றியது. பாஸ்கர் முயலவில்லை என்றில்லை. ஆனால் நாவலில் இருக்கும் அத்தகைய கதாபாத்திரங்கள் கொஞ்சம் மேம்போக்கானவையாகவே எனக்குத் தோன்றின. அதே நேரத்தில் ஆங்கிலத்தில் எழுத்தப்பட்டிருக்கும் சில நீளமான வாக்கியங்களைத் தமிழில் எழுதியிருந்திருக்கலாமோ?
தமிழில் இப்படிப்பட்ட கதைக்களங்கள் அரிது. நிச்சயம் வாசிக்க வேண்டிய நாவல்.

****************
நூலை வாங்க USA நண்பர்களுக்கு கிண்டில் முகவரி- 

Thursday, March 7, 2019

அந்த ஆறு நாட்கள் - டர்பனில் இருந்து

தென்ஆப்பிரிக்காவிலிருந்து  இன்று ஒரு வாசகர்  கடிதம் வந்திருக்கிறது. ஆமாம், டர்பனில் இருந்து.  படைப்புகளைக் கிண்டிலில் வெளியிடுவதால் உலகம் முழுவதுமுள்ள வாசகர்களை எளிதாக தொட்டு விட முடிகிறது.
"அந்த ஆறு நாட்கள்" -க்கு வந்த முதல் வாசகர் கடிதத்தை நண்பர்களுடன் பகிர்வது மகிழ்ச்சி. நன்றி பிரபு.

****************
அன்புள்ள ஆரூர் பாஸ்கர் அவர்களுக்கு வணக்கம். 
அந்த ஆறு நாட்கள் – கிண்டிலில் வாசித்து முடித்தப் பின் தங்களுக்கு எழுதுவது. நாவல் எனக்கு பெரிதும் பிடித்திருக்கிறது. மீண்டும் ஒரு
சிறப்பான, சுவராசியமான படைப்புக்கு எனது வாழ்த்துகள்  மற்றும் பாராட்டுக்கள்.

பேராபத்துக்கான பெரும்  அழிவைத் தரக்கூடிய ஹரிக்கேன் இர்மாவிடம்

இருந்து தொடங்கும் இந்த நாவலில் குடும்பத் தலைவனான பரணியின்
மனஓட்டத்தை, அமெரிக்கச் சூழலில்  மிக நேர்த்தியாக நல்ல மொழியில்
வாசகனுக்கு கடத்தியிருக்கிறீர்கள். 

சவால்களே ஒரு நல்ல தலைவனை மக்களுக்கு அடையாளம் காட்டும்

என்பது போல பேராபத்து நெருங்கிவரும்  நெருக்கடியான சமயத்தில்
பரணியின் குடும்பம் அவனை நெருக்கமான  குடும்பத்தலைவனாக
உணர்வது அருமை.  அதுபோல இந்த வாசிப்பின் வழியாக ஒரு குடும்பத் தலைவனாக  நானே என்னை கண்ணாடியில் சில நொடிகளேனும்
உற்றுப் பார்க்கவைத்த படைப்பு இது.

இதுவரை தமிழ் நாவல்கள் பேசாத பல நுட்பமான விஷயத்தைச் சொல்லியிருக்கும் வகையிலும் உங்கள் நாவல்  முக்கியமானதாக படுகிறது. வாழ்த்துகள் !



டர்பனில் இருந்து

பிரபு

****************

அமேசான் இணையதளத்தில்.

USA நண்பர்களுக்கு கிண்டில் முகவரி-
https://www.amazon.com/dp/B07NBDM78S/ref=sr_1_2?ie=UTF8...

இந்திய முகவரி -
https://www.amazon.in/dp/B07NBDM78S/ref=sr_1_1?ie=UTF8...







Tuesday, February 26, 2019

அந்த ஆறு நாட்கள் குறித்து - உணர்ச்சிப் போராட்டமான கதை

வாசக நண்பர் கோமகள் குமுதா முகநூலில் "அந்த ஆறு நாட்கள்" குறித்து எழுதிய கதை விமர்சனம். நன்றி குமுதா  !!

******************
சகோதரர் ஆரூர் பாஸ்கரின் "அந்த ஆறு நாட்கள்" நாவலை அமெசான் கிண்டிலில் நேற்று படித்தேன்.முதலில் கதையின் தலைப்பை பார்த்தால் என்ன அந்த ஆறு நாட்கள் பாக்யராஜ் படம் பெயர் மாதிரி இருக்கே அப்படின்னு எனக்கு மனதில் தோன்றியது. ஆனால் கதையை படித்து முடித்ததும் எவ்வளவு பொருத்தமான நாவலின் பெயர் என்று மனதில் எண்ணி வியந்தேன். 

சகோதரர் ஆரூர் பாஸ்கர் அவர்கள் இந்த கதையை எழுதியிருக்கும் விதம் எனக்கு பிரமிப்பூட்டுகிறது. கதை சொல்லும் லாவகத்தில் நானே அங்கே ஃபுளோரிடாவில் கதையின் நாயகன் பரணி அவன் மனைவி தாரிணி குழந்தைகள், அம்மு சிறியவள் கவி, அந்தக் கார், அவர்கள் வீடு இப்படி நான் அவர்களோடு கூடவே இருப்பதாக தோன்றியது. அவர்கள் முகங்களிலும் மனதிலும் ஏற்பட்ட அந்த மனநிலை படபடப்பு பயம் எல்லாவற்றையும் நானும் உடனிருந்து அனுபவிப்பதாக உணர்ந்தேன்.அதனால் அடுத்தடுத்து கதையைப் படிக்கும் போது ஐயோ பாவம் பரணி ஒரு குடும்பத் தலைவனாக தன் பயத்தை யாரிடமும் கூற முடியாமல் மெல்லவும் முடியாமல் துப்பவும் முடியாமல் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் உழல்வதை கண்ணால் காண்பது போலவே நான் உணர்ந்தது எனக்கு மிகவும் வியப்பாக இருந்தது.

ஒரு கதையை படிக்கும் போது சுவாரசியமாக கதையை அலுப்புத் தட்டாமல் கொண்டு போவதே ஒரு எழுத்தாளருக்கு மிகவும் சவாலான விஷயம். இதில் கதையின் கால அளவு ஆறு நாட்கள் என்று வரையறுத்து நொடிக்கு நொடி நிமிடத்திற்கு நிமிடம் மணிக்கு மணி இப்படி வாசிப்பவரை இருக்கையின் நுனியில் அமர்த்தி இந்தியா பாக்கிஸ்தான் கிரிக்கெட் விளையாட்டைப் பார்ப்பது போல த்ரில்லிங்கா செம ஸ்பீடா கதை எழுதுவது பெரிய வித்தை.

ஒரு பயங்கரமான சூறாவளி இர்மா தன் இருப்பிடத்தை தாக்கும் பொழுது ஒரு சாதாரணமான குடும்பத் தலைவன் தன் வேலையையும் குடும்பத்தையும் வீட்டையும் எப்படி காப்பாற்றுவது என்று யோசித்து யோசித்து பரணி எடுக்கும் முடிவுகள் என அற்புதமான கதையமைப்பு. உணர்ச்சிப் போராட்டமான கதை.
நான் இதுவரை எந்த நாவலைப் படித்து முடித்ததும் இப்படி உணர்ந்ததில்லை. ஆசிரியரின் எழுத்தின் நடை அந்த இர்மா புயலின் வேகத்தையும் விஞ்சி என்னைப் பெரும் வியப்பில் ஆழ்த்தியது.

சூறாவளியின் போது மக்களின் மனநிலை, அமெரிக்காவின் நில அமைப்பு, அரசியல், கொள்கை மாற்றங்கள் என கூர்மையாக ஒவ்வொரு விஷயத்தையும் ஆராய்ந்து செவ்வனே படிப்பவர்கள் ரசிக்கும் வண்ணம் எழுதி இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் நல்ல தொய்வில்லாத நடை. சொல்வளம்.தடுமாற்றமில்லாத கதை நகர்வு.பொருத்தமான பாத்திரப் படைப்பு இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். அற்புதமான படைப்பு. வாசித்த உடன் இப்பொழுதே ஃபுளோரிடாவைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் எழுகிறது. நண்பர்கள் அனைவரும் அமெஸான் கிண்டிலில் ஆன்லைன் ஆர்டர் செய்து வாங்கி தவறாமல் வாசித்து உங்கள் விமர்சனங்களை தெரிவிக்கவும்.

USA நண்பர்களுக்கு கிண்டில் முகவரி- 

https://www.amazon.com/dp/B07NBDM78S/ref=sr_1_2?ie=UTF8...

இந்திய முகவரி - https://www.amazon.in/dp/B07NBDM78S/ref=sr_1_1?ie=UTF8...

****************


Monday, February 4, 2019

அந்த ஆறு நாட்கள் (நாவல்) - வெளியீடு

ஒரு மகிழ்ச்சியான செய்தி-

ஹரிக்கேன் இர்மாவை மையப்படுத்திய படைப்புக்கு பொருத்தமான தலைப்பை யோசித்துக் கொண்டிருப்பதாக சொன்னது நினைவிருக்கலாம்.

கடந்த வாரம் தலைப்பை இறுதி செய்துவிட்டேன்.   ஆமாம், கதையை மறுவாசிப்பு செய்தபோது  "அந்த ஆறு நாட்கள்" எனத் தலைப்பிட்டால் பொருத்தமாக இருக்கும் எனத் தோன்றியது.

அந்தத் தலைப்போடு சென்னை புத்தகக் கண்காட்சி ஆராவாரம் ஓய்ந்த இந்தத் தருணத்தில் புதினத்தை (நாவலை) அமெசான் கிண்டிலில் வெளியிட்டிருக்கிறேன்.

எனது படைப்புகளைத் தொடர்ந்து வாசித்து உற்சாகபடுத்தி ஆதரவளிக்கும் நண்பர்கள் இருக்கும் துணிவில் இந்தமுறை  பதிப்பகமில்லாமல் நேரடியாக அமெசானில் களம் இறங்கி இருக்கிறேன்.

அதுமட்டுமில்லாமல் எழுதுவதன் ஆன்ம திருப்தியே படைப்பு பரவலாக வாசிக்கப்படுவதே.  அதனால் நண்பர்கள் நாவலை வாசித்து தங்களின் மேலான கருத்துகளைப் பகிரவும்.  நன்றி!

அமெசான் தளத்தின் முகவரி கீழே.

In USA
https://www.amazon.com/dp/B07NBDM78S/ref=sr_1_2?ie=UTF8&qid=1549047833&sr=8-2&keywords=%E0%AE%86%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D

In India
https://www.amazon.in/dp/B07NBDM78S/ref=sr_1_1?ie=UTF8&qid=1549047966&sr=8-1&keywords=%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

Title : Antha Aaru Natkal
Format: Kindle Edition
Language: Tamil
ASIN: B07NBDM78S
Price: Rs.99