Showing posts with label #சோசியல்மீடியா_ இதுநம்மபேட்டை. Show all posts
Showing posts with label #சோசியல்மீடியா_ இதுநம்மபேட்டை. Show all posts

Saturday, February 26, 2022

சோஷியல் மீடியா - இது நம்ம பேட்டை– யூ-டியுபில் கனிஸ்கர்

சோஷியல் மீடியா - இது நம்ம பேட்டை புத்தகம் குறித்து யூடியூப் அன்பர் கனிஸ்கஸ்கரின் பார்வை..


இணைப்பு https://youtu.be/UUZ7MAnr6ao

சமயங்களில் நாம் யாருக்காக எழுதுகிறோம். ஏன் எழுதுகிறோம். எதற்காக இயங்குகிறோம் என்றெல்லாம் தோன்றும் சமயங்களில் இதுபோன்ற முன் அறிமுகமில்லாதவர்களிடம் இருந்து வரும் பாராட்டு நம்மைத் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கச் செய்கிறது. ஆர்வத்துடன் உள்பெட்டியில் இதைப் பகிர்ந்த கனிஸ்கருக்கு நன்றி !

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க இணைப்புசோஷியல் மீடியா

சோஷியல் மீடியா - இது நம்ம பேட்டை– ஒரு பார்வை: திருவாரூர் சரவணன்

சோஷியல் மீடியா - இது நம்ம பேட்டை குறித்து திருவாரூர் சரவணன்...

 //

மூளையின் திறனில் 1 சதவீதம்தான் பயன்படுத்துகிறோம். மற்றதெல்லாம் துருப்பிடித்துக் கொண்டிருக்கிறது என்று சொல்கிறார்கள். அது உண்மையா என்று எனக்கு தெரியாது.

ஆனால் இருக்கும் வாய்ப்புகளில் 1 சதவீதமாவது பயன்படுத்துகிறோமா என்ற சந்தேகம் எனக்கு. சமூக ஊடகங்களில் என்னென்ன வாய்ப்புகள் இருக்கின்றன என்பதை இந்த புத்தகம் சொல்லியிருக்கிறது.

ஆத்தி... எப்படி எல்லாம் யோசிச்சு ஏமாத்த கிளம்பியிருக்காங்கய்யா... என்ற வடிவேலுவின் வசனத்தை அறிந்திருக்கலாம். சமூக ஊடங்களில் எப்படி எல்லாம் ஏமாற்ற கிளம்பியிருக்கிறார்கள் என்பதை இந்த புத்தகம் சொல்லியிருக்கிறது.

வாழைமரம், அலங்கார மின்விளக்குகள், வழவழ தரை, பிரமிக்க வைக்கும் உள் அலங்காரம் என்று பளபளப்புடன் இருக்கும் வீட்டின் புதுமனை புகுவிழாவிற்கு சென்றிருப்போம். அந்த அழகைத் தவிர வேறு எதுவும் நம் கண்களுக்கு தெரியாது.

ஆனால் இடம் வாங்க அலைந்தது முதல், பூமிபூஜை, கடைக்கால், பேஸ்மெண்ட், லிண்டல், ரூஃப், ஃபர்னிஷிங், வயரிங், பெயிண்டிங், ஃபினிஷிங் என்று ஒவ்வொரு கட்டமும் பெரும்பாலும் வீட்டைக் கட்டியவருக்குதான் தெரியும்.

ஒரு 'கிளிக்'-கில் ஒளிப்படம், அடுத்த 'கிளிக்'-கில் ஒளிப்படம் தேர்வு, அதற்கடுத்த 'கிளிக்'-கில் உலகெங்கும் உள்ளவர்கள் பார்க்கும் வகையில் ஏதேனும் ஒரு தளத்தில் பகிர்வு.

இதை மட்டும் அறிந்தவர்களுக்கு இணையத்தின் தோற்றம், ஒவ்வொரு கட்டமாக வளர்ந்த விதம் அனைத்தையும் எளிமையாக, சுருக்கமாக, விளக்கமாக இந்த புத்தகம் சொல்லியிருக்கிறது.

நாயகன் படத்தில் வேலுநாயக்கர் முதன் முதலில் யாரை இல்லாமல் செய்தாரோ, அவரது முழு மன வளர்ச்சி இல்லாத மகன்தான் முடிவுரை எழுதுவான்.

அதைப் போல் நீங்கள் ஒரு பொருட்டாகவே நினைக்காமல் பதிவு செய்த எழுத்து அல்லது படம் பிற்காலத்தில் பெரிய சிக்கலில் கொண்டு போய் நிறுத்தக்கூடும் என்று இந்த புத்தகம் சொல்லியிருக்கிறது.


நீங்கள் தினமும் சென்று வரும் சாலைதான். ஏதோ குருட்டு அதிர்ஷ்டத்தில் வழியில் உள்ள வேகத்தடைகள், பள்ளங்கள் உங்களை கவிழ்க்காமல் விட்டிருக்கும். என்றாவது ஒருநாள் அதில் சிக்கி பெரிய பாதிப்பில் சிக்கிய பிறகுதான் அடடா... இதை கவனிக்காமல் விட்டுவிட்டோமே என்று வருந்துவோம்.

நீங்கள் தினமும் பலமணி நேரம் சோஷியல் மீடியாவில் செயல்படுபவராக இருக்கலாம். ஆனால் நீங்கள் கவனிக்காத ஏகப்பட்ட ஏரியாக்களைப் பற்றி இந்த புத்தகம் சொல்லியிருக்கிறது.

முழுவதும் நமக்குத் தெரியாத ஒரு விஷயத்தைப் பற்றி படிப்பது ஆர்வத்தை தூண்டும். ஆனால் நாம் புழங்கும் இடத்தில் நாம் கவனிக்காத அதாவது நம் வீட்டிலேயே இன்னென்ன இருக்கிறது என்று மூன்றாம் நபர் சுட்டிக் காட்டுவதைப் போல் சோஷியல் மீடியா பற்றி பல தகவல்களை இந்த புத்தகம் சொல்லியிருக்கிறது.

ஆரூர் பாஸ்கர் எழுதிய 'சோஷியல் மீடியா - இது நம்ம பேட்டை' புத்தகத்தை நான் படித்த பிறகு எனக்கு தோன்றிய விஷயங்களைத்தான் மேலே குறிப்பிட்டிருக்கிறேன்.

//

ஜீரோடிகிரி பப்ளிஷிங் நிறுவனத்தின் எழுத்து பிரசுர வெளியீடாக வந்துள்ளது. சென்னை புத்தக காட்சியில் கிடைக்கும்.

Tuesday, October 19, 2021

சோசியல் மீடியா- இது நம்ம பேட்டை

கடந்த ஒராண்டுகளுக்கு மேலாக  சுமந்து திரிந்த  ஒரு சுமையை இறக்கி வைத்திருக்கிறேன். ஆமாம், சமூக ஊடகங்கள் குறித்து எழுதிக் கொண்டிருந்த புத்தக வேலை  இன்றோடு நிறைவு பெற்றது.  

ஆரம்பத்தில் ஒரு புத்தகம் எனத் தொடங்கிய வேலை, எடிட்டரின் கைகளுக்குப் போனபோது இரட்டிப்பானது. முழுமையாகப் படித்த எடிட்டர் அதில் இரண்டு புத்தகங்களுக்கான உள்ளடக்கம் இருப்பதைக் கண்டு கொண்டதால், புத்தகத்தை இரண்டாக பிரித்து எழுதிவிட்டேன். இரட்டைப் பிள்ளைகள் !  :)

முதல் புத்தகத்தின் இறுதி பிழைத்திருத்தம் முடித்து பின்னட்டைக் குறிப்பையும் சேர்த்து பதிப்பகத்துக்கு அனுப்பி விட்டேன். 

பதிப்பகம் ? கடந்த முறை இர்மா(அந்த ஆறு நாட்கள்) நாவல்-ஐ வெளியிட்ட "ஜிரோ டிகிரி" தான் இந்த முறையும் வெளியிடுகிறது.

இது என்னுடைய முதல் புனைவில்லாத நூல் (non fiction) என்பதால்  ஆரம்பத்தில் சற்று தயக்கம் இருந்தது என்னவோ உண்மை. ஆனால், அந்தச் சுவடே இல்லாமல் நூல் மிகச் சிறப்பாக வந்திருப்பதாக அந்த மூத்த எழுத்தாளர் சொன்ன போது கூடுதல் நம்பிக்கை வந்திருக்கிறது.


முதல் புத்தகம் சமூக ஊடகங்களைப் புரிந்துகொள்ளவும் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவும் உதவுகின்ற மிகச் சிறந்த கையேடாக இருக்கும்.

புத்தகத் தலைப்பு ? "சோசியல் மீடியா- இது நம்ம பேட்டை".  தலைப்பே  நல்ல ரகளையான வந்திருப்பதாக நினைக்கிறேன். இரண்டாவது புத்தகம் பற்றி வரும் நாட்களில் சொல்வேன்.

புத்தக விழா-வுக்குப் போகும் நண்பர்கள் ஒவ்வொரு முறையும் தங்களுக்குப் பிடித்தமானவர்களின் புதிய புத்தகங்களை வாங்கி வர வேண்டும் என எதிர்பார்ப்பார்கள். இந்த முறை நான் கண்டிப்பாக  நண்பர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்வேன்.

தொடர்ந்து உற்சாகப்படுத்தி துணை நிற்கும் அனைத்து நண்பர்களுக்கும் நன்றி !