Showing posts with label #whyiwrite. Show all posts
Showing posts with label #whyiwrite. Show all posts

Wednesday, June 1, 2016

எதற்காக எழுதுகிறேன் ?

எதற்காக எழுதுகிறேன்? என்ற தலைப்பில் நண்பர் நட்.பாஸ்கர் அவர்களுக்காக பதாகை இணைய இதழுக்காக எழுதியது. உங்களுக்காக.

'எதற்காக எழுதுகிறேன் ?' என்ற கேள்வியை நான் எனக்குள் கேட்டுக் கொள்கிறேன்.

அதற்கான பதில் எந்தவோரு படைப்பாளிக்கும் எளிதாய் இருக்கும் எனத் தோன்றவில்லை.

இதுபோல ஏன், எதற்கு, எப்படி எனத்தொடங்கும் கேள்விகளை ஆங்கிலத்தில் ஓபன் என்டட் (Open Questions) கேள்விகள் என்பார்கள். நல்ல ஓபன் என்டட் கேள்விகளை கேட்பது ஓரு கலை என்ற வடிவில் பார்க்கப்படுகிறது. மேலாண்மை துறையில் இருப்பவர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சிகளில் இதுவும் ஓன்று.

எளிதாகச் சொல்வதேன்றால் - உங்கள் வீட்டிற்கு நண்பர் ஓருவர் வருகிறார். அவரை வரவேற்று 'டீ இல்ல காப்பி குடிக்கிறீங்களா ?' எனக் கேட்டால் நீங்கள் உங்கள் நண்பருக்கு தேர்வு செய்ய டீ அல்லது காபி எனும் இரண்டு மட்டுமே தருகிறீரகள். அதே சமயத்தில் 'என்ன குடிக்கிறீங்க? ' எனப் பொதுப்படையாகக் கேட்கும் பட்சத்தில். அதற்கான பதில் என்னவாக வேண்டுமானாலும் இருக்கக்கூடும். நான் சொல்ல வந்த விஷயம் இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும்.

ஓபன் என்டட் கேள்விகள் எதிராளிகளைச் சிந்திக்கத் தூண்டும், அவர்களின் உள்உணர்வுகளையும் அதுனூடான அவர்களின் பார்வையும் நாம் அறிந்துகொள்ள இயலும். இப்படி ஓரு விஷயத்தை அணுகுவது அவர்களுள் பல திறப்புகளை ஏற்படுத்தி உண்மையான 'அவனை அல்லது அவளை' தரிசிக்க இயலும்.

அதுபோல 'நான் ஏன் பிறந்தேன் ? ' என்ற கேள்வியைக்கூட அசட்டுத்தனமாக பார்ப்பது இல்லை அதை உள்ளார்ந்தமாக பார்ப்பது என்பது அவரவர் மனநிலையைப் பொறுத்ததே.

இதுமாதிரியான ஓபன் என்டட் கேள்விகளுக்கு பொறுமையான, நீண்ட பதிலை நாம் எதிர்பார்க்கலாம். அந்த பதில்களிருந்து பல கிளைக்கேள்விகள் முளைத்து அந்த உரையாடல் மேலும் தொடரவும் வாய்ப்பிருக்கிறது. 'எதற்காக எழுதுகிறேன் ? ' என்பதும் அதுபோன்றதே.

எழுத்து ஓரு அழகிய கலைவடிவம். அந்த விதை பொதிந்த மனம் நடைமுறை சிக்கல்களையும், தடைகளையும் தாண்டி முட்டி மோதி வேர்பிடித்து, துளிர்விட்டு மேன்மேலும் எழுதி எழுதி தன்னை தானே வளர்த்துக்கொண்டு கிளை பரப்பி பிரமாண்ட விருட்சமாகிறது.


பெய்யும் மழை போல ,அடிக்கின்ற அலை போல, அசையும் காற்று போல. எங்கேனும், என்றேனும் யாரேனும் வாசிப்பார்கள், ரசிப்பார்கள் எனும் நம்பிக்கையில் ஓரு படைப்பாளி தன் தளத்தில் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறான்.

அது பாடும் பறவைகளை , ஓடும் நதிகளை, குளிரும் நிலவை, சுடும் சூரியனை வெற்றுக்கண்ணுக்கு புலப்படாத ஏதோ ஓன்று தொடர்ந்து இயக்கிக் கொண்டிருப்பதைப் போன்றது.

அப்படி அன்றாட வாழ்வின் நெருக்கடிகளையும் பிடுங்கல்களையும் தாண்டி ஏதோ ஓன்று என்னை எழுத உந்தித்தள்ளுகிறது. தொடர்ந்து எழுத, எழுத எதை எழுத வேண்டும்- எதை எழுத வேண்டாம் எனப்பிடிபடுகிறது. எழுத்து என்னுள் பல திறப்புகளைத் திறந்துவிட்டுச் செல்கிறது.

துக்கம், வலி, மகிழ்ச்சி, கோபம்,பதற்றம் என மனத்தில் தோன்றிய ஏதோ ஓன்றை எழுதி முடித்தபின் எனக்குள் ஓரு பெரிய நிம்மதி. ஆசுவாசம், ஆனந்தம். அதையும் தாண்டி அகமனத்தின் எல்லா அடுக்குகளிலும் போராட்டம் அடங்கிய, அமைதியான ஓரு ஆழ்ந்த ஜென் மனநிலை. அது வெயில் புழுங்கும் வீட்டின் ஜன்னல்களை திறந்தால் வீசும் குளிர்ந்த வெளிக்காற்றின் சுகம் போல.

சிலர் சொல்வதுபோல பணத்துக்காக, புகழுக்காக எழுதலாம்தான். ஆனால் அது பசியில்லாமல் உண்ணும் விருந்துபோல -ருசியிருப்பதில்லை.

அதே சமயத்தில் ஓரு படைப்பாளி தன் படைப்புகளை இந்தச் சமூகத்தின் முன் வைத்து அதற்கான நியாயமான அங்கீகாரத்தை, விமர்சனத்தை எதிர்பார்த்தே காத்திருக்கிறான். நானும் அதற்கு விதிவிலக்கல்ல.

இதன் திருத்தியவடிவம் பதாகை இதழில் வெளியாகியுள்ளது. இணைப்பு கீழே

https://padhaakai.com/2016/06/01/ww-arur-baskar/

படங்கள்:

நன்றி: http://www.mkanokova.com/