Friday, June 19, 2020

'க்ரியா' ராமகிருஷ்ணன்

தமிழ்ச்சரம் (tamilcharam.com) வலைத்திரட்டி வந்தபிறகு, தமிழில் சிறப்பாக எழுதும் பலருடைய புதிய தளங்களின் அறிமுகம் கிடைக்கிறது. 

அந்த வகையில் சமீபத்தில் கண்ணில் பட்டது. ஆசை அவர்களுடைய தளம் (http://writerasai.blogspot.com/).  'ஆசை' என்பது  அவருடைய இயற்பெயரா அல்லது புனைப்பெயரா எனத் தெரிந்து கொள்ளும் ஆசையில் அவருடைய தளத்தைக் கொஞ்சம் துழாவிய போது, ஆசை என்பது ஆசைத்தம்பி என்பதன் சுருக்கம் என்றும் மன்னார்குடிக்காரரான அவர் தற்போது ‘தி இந்து’ தமிழ் நாளிதழில் பணிபுரிகிறார் என்பதையும் தெரிந்துகொள்ள முடிந்தது.

ஆசை தனது தளத்தில் கடந்த சில நாட்களாக  'க்ரியா' ராமகிருஷ்ணன் பற்றிய ஒரு தொடர் எழுதி வருகிறார். க்ரியா ராமகிருஷ்ணன் அவர்களுடைய  75-வயது பிறந்த நாளைக் கொண்டாடும் விதமாக ஆசை அவருடனான தனது அனுபவங்களை மிகச் சிறப்பாக எழுதிவருகிறார். 

இதற்கு முன் பெரியவர் கிரியா ராமகிருஷ்ணன் குறித்த முன் அறிமுகம் எனக்கு எதுவும்  பெரிதாக இல்லை.  வாசித்த பின்பு, அவர் கிரியா பதிப்பகம் ஊடாக தற்கால தமிழ் அகராதி, புதிய தமிழ் எழுத்துருக்கள்,
 'க்ரியா' ராமகிருஷ்ணன்
குறிப்பிடத்தகுந்த ஆளுமைகளின் படைப்புகள்,  பல நேரடி மொழி பெயர்ப்பு நூல்கள்  எனத் தமிழ் பதிப்புத்துறையில் புது இரத்தம் பாய்ச்சியிருக்கிறார் என்பதைத் தெரிந்துகொள்ள முடிகிறது.

நவீனத் தமிழுக்குப் பெரும் பங்காற்றியவர்களுள் ஒருவரான க்ரியா ராமகிருஷ்ணன் குறித்து வாசிக்க  ஆர்வமிருப்பவர்களுக்கு - ஆசை அவர்களுடைய தளம் http://writerasai.blogspot.com/

Wednesday, June 10, 2020

அருகாமை என்றால் என்ன ?

"அருகாமை ஆளுமை" என்ற நிகழ்ச்சி ஒன்று சமீபத்தில் முகநூலில் கண்ணில்பட்டது. அருகாமை என்றால் என்ன ?

அவர்கள் என்ன நினைத்து "அருகாமை ஆளுமை" எனப் பெயர் வைத்தார்களோ தெரியவில்லை. ஆனால், அருகாமை எனும் சொல் பொதுவாக அருகில் அல்லது பக்கத்தில் எனும் பொருளில் தான் புரிந்து கொள்ளப்படுகிறது.

அது முற்றிலும் தவறானது. அருகு என்பது அண்மை எனப் பொருள்படும். அதனால் அருகாமை என்பது 'அருகு' என்ற சொல்லுக்கு எதிரான பொருளைத்தான் தரும். அதாவது, 'செய்யாமை' என்ற சொல், 'செய்' என்ற சொல் என்ன பொருள் தருமோ அதற்கு எதிரான பொருளைத் தருவது போல. 'கலங்காமை' என்பது 'கலங்கு' என்பதற்கு எதிரான பொருளைத்தான் தருவதுபோல.

அதனால் , இனி "இந்த வீட்டுமனை சென்னைக்கு அருகாமையில் உள்ளது : வாங்கிவிட்டீர்களா? " என்பது மாதிரியான விளம்பரங்களைப் பார்த்தால்
சட்டை செய்யாமை நன்று !!

Tuesday, June 2, 2020

நீங்கள் கவிதை எழுதுபவரா !?

எழுத்தாளர் அரசன் ஊரில் இருந்து ஒரு கவிதை புத்தகத்தை கொடுத்தனுப்பி இருந்தார். "காதல் தின்றவன்" எனும் தலைப்பிட்ட அந்தக் கவிதைப் புத்தகத்தை சி.கருணாகரசு எனும் அன்பர் எழுதியிருந்தார்.

பூக்களை விற்பவள்,
கூடை நிறைய சுமந்து திரிகிறாள்
உன் வாசத்தை..

****
நம் பெயரை ஒருசேர
எழுதித் தந்தேன்
காதலுக்கு முகவரியாய் !

என்பது மாதிரியான விடலைக் கவிதைகளை அழகான வண்ணப்
படங்களுடன் அச்சிட்டிருந்தார்கள்.

இதுபோல கவிதைகளை வாசித்தேன், எழுதினேன் என பொதுவில் சொல்லவே பலர் கூச்சப்படுகிறார்கள் என்பதுதான் உண்மை.

ஏனென்றால், இன்றைய தேதியில் கவிதை எழுதுவது என்பது தேசதுரோகம் போன்றொரு பிம்பத்தை அறிவார்ந்த சமூகத்தில் கட்டமைத்திருக்கிறார்கள். அப்படியே யாராவது தப்பித் தவறி கவிதை எழுத நேர்ந்தாலும் அந்தக் கவிதையில் அது இல்லை இது இல்லை என கேலியோடு ஒதுக்கும் மனப்பான்மையே இன்று இருக்கிறது.  

பள்ளியில் இருக்கும் வரை நமது மொழிப்பாடத்தில் கவிதை குறித்தோ கவிதை எழுதுவது குறித்தோ முறையான அறிமுகங்களோ , பயிற்சிகளோ இருந்ததாக நினைவில்லை (மரபில் செய்யுள் எழுதுவது என்பது வேறு). அப்படி இருந்தும் கூட நம்மில் பல சிறந்த கவிஞர்களும், பாடலாசிரியர்களும் உருவாகி வந்திருப்பது கொஞ்சம் ஆச்சர்யப்படவேண்டிய விசயமே. 

உண்மையில் ஒரு குறிப்பிட்ட வயதில் கவிதை எழுவது என்பது மிகவும் இயற்கையானது. குறிப்பாக பள்ளி, கல்லூரிகளில் தங்கள் உணர்ச்சிகளை கவிதையாக எழுதுவது ஆரோக்கியமானதும் கூட.பல மேலை நாடுகளில் கவிதையின் ஆற்றலை உணர்ந்திருப்பதால் அவர்கள் மிகச்சிறு வயதிலேயே கவிதை எழுதுவதை உற்சாகப்படுத்துகிறார்கள். பிடித்த கவிதையை  மீண்டும் மீண்டும் வாசிப்பது இல்லை மனனம் செய்து இசையோடு வாய்விட்டு ஒப்புவிப்பது என கவிதையின் சுவையை ஊட்டுகிறார்கள். சிறுவயதில் கவிதையை எழுதுவது, எழுதியதைப் பிறரிடம் பகிர்வதையும் உற்சாகப்படுத்துகிறார்கள்.  அந்த வயதில் பலருக்கு தங்கள் சொந்த கவிதைகளை எங்கிருந்து தொடங்குவது என்றுகூட தெரியாது. அதற்கான பயிற்சியையும் சேர்த்தே மொழி வகுப்பில் சொல்லித் தருகிறார்கள்.

இதுபோல் எழுதப்படும் கவிதைகளுக்கு என்ன மதிப்பு எனும் ஆராய்ச்சியில் 
நாம் இறங்காமல் அவற்றை அந்தந்த இடத்திலேயே நிறுத்தினால் பெரிய பிரச்சனை எதுவும் இல்லை. ஆனால், நம்மூரில் கவிதை எழுதுபவர்கள் அனைவரும் தங்கள் கவிதைகளுக்கு இலக்கிய உயரம் கேட்கும் போதுதான் சிக்கலே தொடங்குகிறது. ஒருமுறை பள்ளியில் கவிதை என்றால் என்ன என தமிழாசிரியர் கேட்டபோது, கட்டி உரைப்பது கவிதை, நெஞ்சில் இருப்பது கவிதை என அன்று வகுப்பில் இருந்த 40 பேரும் ஆளுக்கொன்றாக எழுதி வந்திருந்தார்கள் (இப்போதெல்லாம், அப்படிக் கேட்கிறார்களா என்ன ? ).

பொதுவாக கவிதை என்பது உணர்ச்சிகளின் வெளிப்பாடு.  உணர்ச்சிகளில் பேதம் எதுவுமில்லை.  ஆனால், அதைச் சரியான சொற்களால் 
கடத்துவதில் தான் கவிதையின் சூட்சுமம் இருக்கிறது.  அதில் எதுகை, மோனை, இசை இருக்கவேண்டிய பார்க்கவேண்டிய அவசியம் இல்லை.
அந்தப் புரிதல் அனைவருக்கும் ஏற்ப்பட்டால் நல்ல கவிதைகள் உருவாகும். 
பலர் பிட் நோட்டிஸ் அடிப்பது போல கவிதைப் புத்தகங்களை அடித்து தூக்கிச் சுமக்கவேண்டிய தேவையும் இருக்காது.

கவிதைகள் நம் வாழ்விற்கு முக்கியம்.  அதற்கு சிறந்த கவிஞர்களை
உருவாக்குவது மிக முக்கியம்.  அது தமிழுக்கும் தமிழர்களுக்கும் அவசியம்.
ஏன், அது இன்றைய அவசரமும் கூட.

Monday, May 25, 2020

தித்திக்கும் வாசிப்பனுபவம்

தமிழ் மரபு அறக்கட்டளையின் சார்பில் ஏப்ரல்-16 அன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முகநூல் நேரலை நிகழ்ச்சியில் பேசினேன்.
உரையின் தலைப்பு "தித்திக்கும் வாசிப்பனுபவம்".

இந்தத் தகவல் தொடர்பு காலத்திலும் வாசிப்பு நமக்கு ஏன் அவசியமாகிறது என்பதை மையக் கருத்தாக கொண்டு பேசினேன்.

பார்த்த அனைவரும்  பயனுள்ள 45 நிமிடங்கள் என்றே சொன்னார்கள். குறிப்பாக, பலர் கேள்வி-பதில் பகுதியைப் விரும்பியதாகவும் சுவாரஸ்யமாக இருந்ததாகவும் சொன்னார்கள். நிகழ்வுக்குப் பின் பலர் மின்னஞ்சலும், வாட்ஸ்-அப்-லும் தொடர்பு கொண்டார்கள். கூடவே பல நூறு புதிய நட்பு அழைப்புகள்.

தனிப்பட்ட முறையில் எனக்கும் நேரலை ஓரளவு திருப்திகரமாகவே இருந்தது. சில விடுபடல்கள் இருந்தாலும், நான் சொல்லவந்த விசயங்களைச் சொல்லிவிட்டதாக நினைக்கிறேன் . தொடக்கத்தில் சொன்னது போல கருத்துகளை, உணர்வுகளைப் பெரும்பாலும் தட்டச்சு செய்து பழகியவர்களுக்கு நேரலை என்பது சற்று புது அனுபவமாகவே இருக்கும். ஏன் மேடையில் பேசி பேசிப் பழகியவர்களுக்கே கூட நேரலை என்பது கண்டிப்பாக புதிய அனுபவமாக இருக்கும். ஆனால், அதற்காக அச்சப்படத் தேவையில்லை எனும் நம்பிக்கை இப்போது வந்திருக்கிறது.

நிகழ்ச்சிக்கு எழுதி வைத்து வரிக்கு வரி வாசிப்பது போல இல்லாமல் முன் தயாரிப்பாக சில முக்கிய விசயங்களை மட்டும் குறிப்பாக எடுத்து வைத்திருந்தேன். அலுவலகத்தில் வேலை பளு சற்று அதிகமாக இருந்ததால் அதையும் முதல் நாள் இரவு மட்டுமே செய்ய முடிந்தது. முக்கியமாக இந்த சந்திப்பில் என்னைப் பற்றி அதிகம் பேசாமல் வாசிப்பைக் அறிமுகப்படுத்துவதாக இருக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். அதே சமயத்தில், தனிப்பேச்சு 30 நிமிடங்களைத் தாண்டாமல் முக்கியமாக பார்ப்பவர்களைத் தூங்கவைக்காமல் இருக்க வேண்டும் என்பதிலும் ஓரளவு வெற்றி கண்டிருக்கிறேன் என்றே நினைக்கிறேன்.

நிகழ்ச்சியை ஒரு குறிப்பிட்ட நேர அவகாசத்துக்குள் முடிக்கவேண்டும் என்ற கட்டுப்பாட்டை நானே விதித்துக் கொண்டதால் தான் தமிழ் நூல்கள் பற்றி விரிவாக பேச இயலவில்லை. மற்றபடி வேறொன்றும் இல்லை. அதனால் என்ன, இன்னொரு சந்தர்ப்பத்தில் தமிழ் புத்தக வாசிப்பு அனுபவத்தைப் பற்றி தனியாகவே பேசலாம். அதுபோல, என்னுடைய நட்பு வட்டத்திலும் பல மிகச் சிறந்த ஆளுமைகள் இருக்கிறார்கள். அவர்களைப் பற்றியெல்லாம் தனிதனியாக பதிவுகளோ இல்லை நேரலையோ செய்யவேண்டும். அப்படிச் செய்வதென்றால் நான் முதலில் தமிழ் அறிஞர் கவிக்கோ ஞானச்செல்வன் ஐயா அவர்களிடமிருந்துதான் தொடங்கவேண்டும். அவர் பல்லாண்டுகள் ம.பொ.சி அவர்களுடன் இணைந்து செயல்பட்டவர் போன்ற பல பெருமைகளுக்குரியவர்.

நேரலையில் ஓஷோ எழுதிய ஒரு புத்தகத்தின் பெயர் அப்போது சட்டென நினைவுக்கு வரவில்லை. நேரலை முடிந்தவுடன் சரியாக நினைவுக்கு வந்தது. அந்தப் புத்தகம் Emotional Wellness: Transforming Fear, Anger, and Jealousy into Creative Energy. அலைபாயும் மனத்தைப் பக்குவப்படுத்தும் அற்புதமான புத்தகம். ஒருவர் மட்டும் "நீங்கள் பேசும்போது சேரை மட்டும் கொஞ்சம் ஆட்டாமல் பேசுங்களேன்" என்ற ஆலோசனை சொன்னார். ஒரு தோழி இரண்டு மூன்று புத்தகங்கள் ஒருசேர வாசிப்பதன் சாதக பாதகங்களைப் பற்றி வாட்ஸ்-அப்பில் செய்தி அனுப்பி இருந்தார்.

இதைச் சிறப்பாக ஒருங்கிணைத்த தமிழ் மரபு அறக்கட்டளை நண்பர்களுக்கு நன்றியும் பாராட்டுதல்களும்.

முழுமையான உரை இங்கே


Tuesday, May 19, 2020

இர்மா- அந்த ஆறு நாட்கள் (அமெரிக்கா எனும் பெருந்தேசத்தின்...)

"இர்மா- (அந்த ஆறு நாட்கள்)நாவல் குறித்து வரும் வாசகர் கடிதங்களும் வாசக அனுபவங்களும் தொடர்கின்றன.
சமீபத்தில் அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் வசிக்கும் நண்பர் சீனிவாஸ் பாலகிருஷ்ணன் இர்மா குறித்து முகநூலில்  எழுதியது. நன்றி   சீனிவாஸ் !!

************
...இர்மாவின் பொழுது ப்ளோரிடா மாகாண சுற்றுப்பயணத்தில் இருந்த என்னாலேயே இது குறித்து மிகப்பெரிய கதைகளை எழுத முடியும் என்றால் அங்கேயே பலவருடங்களாக வசித்துவரும் ஆரூர் பாஸ்கரைப் பற்றிக் கேட்கவா வேண்டும். மேலும் அங்கு வாழ்ந்துவரும் அத்தனை மக்களையும் இர்மா கரையைக் கடக்கும் முன்னரே மனதளவில் அசைத்துப் பார்த்திருக்கிறது. ஆரூர் பாஸ்கர் குறிப்பிடும் இந்தத் தகவலின் மூலம் இர்மாவின் வலுவை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. இதைக் கூறுவதன் காரணம் –சூறாவளி என்பது அந்த நிலத்தில் அவர்கள் ஆரஞ்சு ஜூஸ் குடிப்பதைப் போல. பழகிய ஒன்றைக் கண்டு யாரேனும் மிரள்வார்களா? ஒருவேளை பழகிய ஒன்று முன்னெப்போதையும் விட வெறிபிடித்துப் பேய்வேகத்தில் வந்தால்?
இந்த நாவலை அவர் மிகச் சிறப்பாக எழுதுவதற்கான மற்றுமொரு காரணம் அவர் சார்ந்த பணிச்சூழல். ஒட்டுமொத்த ப்ளோரிடா மாகாணத்தின் மின்பகிர்மான நிறுவனத்தில் பணிபுரியும் அவர், தன் நாவலின் ஒரு பகுதியாக மனிதனின் மிக அத்தியாவசியத் தேவையான மின்கட்டுமானம் – இது போன்ற இடர் காலங்களில் எவ்வாறு மறுசீரமைக்கப்படுகிறது என்பதையும் சேர்த்தே குறிப்பிடுகிறார்.

அந்த ஆறா நாட்கள் என்று குறிப்பிடுவது, தன் வாழ்வில் மிக நேரடியாக நுழைந்து மனதளவில் மிகவும் நிலைகுலையச் செய்த இர்மா என்ற பெரும் சூறாவளியையும் அதனை எவ்வாறு எதிர்கொண்டார்கள் என்ற நம்பிக்கைக் கதையையும்தான்.
தமிழ் எழுத்தாளர் எழுதிய அமெரிக்கக் கதை என்றளவிலும் இந்த நாவல் முக்கியத்துவம் பெறுகிறது. காரணம் இந்த வகைமையில் நான் வாசிக்கும் இரண்டாவது நாவல் இது. அ.மி எழுதிய ஒற்றன் வாசித்திருக்கிறேன் அதில் தன்னை ஒரு பயணியாகப் பொறுத்தியிருப்பார் அ.மி. இதில் ஆரூர் பாஸ்கர் தன்னை ஒரு பேரழிவின் நேரடி சாட்சியாகப் பொருத்தி இருக்கிறார்.
பரணி என்கிற மைய கதாபாத்திரம் தன் மனைவியிடம் ஹரிகேன் இர்மா குறித்து பேசுவதைப் போல் ஒரு பகுதி வரும் “பொண்ணுங்க பேர் வச்சா ஹரிகேன் இன்னும் பயங்கரமா நாசம் செய்யுமாம்”. மனிதர்களிடம் சிக்கிக்கொண்ட இந்த ஹரிகேனை நினைத்து அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. 

நாவலின் ஊடாக அமெரிக்க வாழ்க்கையும் பதிவு செய்துகொண்டே வருகிறார் ஆரூர் பாஸ்கர். அவற்றை இன்னும் கொஞ்சம் விரிவாகப் பேசி இருக்கலாமோ என்று தோன்றினாலும், ஒருவேளை நான் அமெரிக்கா வராமல் இருந்திருந்தால் அப்படி ஒரு எண்ணம் ஏற்பட்டிருக்குமா என்பது சந்தேகமே.
நாவலின் இடையே அவர் சந்தித்த மற்றுமொரு ஹரிஹேன் பற்றிக் குறிப்பிடும் இடம் அட்டகாசமாக அமைந்துள்ளது. நாவலின் பெருங்குறை முன்பாதி என்றால் பெரும்பலம் பின்பாதி. நாவலைக் கட்டமைக்கும் ஆரம்ப இடங்களில் சொதப்பிவிட்டாற்போல் தோன்றுகிறது. அதற்குக் காரணம் வாக்கியக் கட்டமைப்பு. அதில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.
நாவலின் ஒவ்வொரு அத்தியாத்தின் ஆரம்பத்திலும் சூறாவளி குறித்த முன்குறிப்புகளை சேர்த்தது நல்ல யுக்தி. மேலும் எத்தியோப்பிய உணவகம் ஒன்றில் அவர் சந்திக்கும் ஆப்பிரிக்க அமெரிக்கர் ஒருவர் உடனான உரையாடலும், அந்த மனிதர் கூறும் கறுப்பர்கள் கதையும் அமெரிக்க வரலாற்றின் துன்பப் பக்கங்களை நினைவு கூற்பவை.
எழுத்து பிரச்சுரத்தின் புத்தக வடிவமைப்பு அட்டகாசமாக இருக்கிறது. லைட் வெயிட். கையில் காற்றைச் சுமப்பதைப் போல் இருக்கிறது. பாண்ட் சைஸ் சிறியதாக இருப்பது ஒரு குறை என்றாலும் அதுவும் வாசிக்க வாசிக்கப் பழகிவிட்டது.
அந்த ஆறா நாட்கள் – அமெரிக்கா எனும் பெருந்தேசத்தின் வேறொரு பக்கத்தினை நம்மோடு உரையாடுகிறது. நம்முடைய மொழியில்.



புத்தகத்தை இணையத்தில் (எழுத்து பிரசுரம்) வாங்க:

https://zerodegreepublishing.com/product-category/authors/aroor-bhaskar/

Thursday, May 14, 2020

கவிஞர் வைரமுத்து ஒரு சந்திப்பு

கவிஞர் வைரமுத்து அறிமுகம் தேவையில்லாதவர். தமிழ் இலக்கியத்திலும், திரையுலகிலும்  மிகமுக்கிய ஆளுமைகளில் ஒருவர். சிறந்த பாடலாசிரியருக்கான இந்திய அரசின் விருதை ஏழு முறை பெற்றவர.
தனது தமிழால் திரைப்பாடல்களுக்கு புது இரத்தம் பாய்ச்சியவர்.

என்னை எழுதத் தூண்டிய படைப்புகளைத் தந்த அவரை 15 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சென்னையில் 2018-இல் சந்தித்து உரையாடும் ஒரு வாய்ப்பு கிடைத்தது.  அதற்கு முன்பு  2003ல் மலேசியாவின் கோலாலம்பூரில் அவரைச் சந்தித்திருக்கிறேன்.


கவிஞருக்காக காத்திருக்கையில்


அவரைச் சந்திக்க ஒரு மாலை பொழுதில் எனது மனைவியுடன் அவரது இல்லத்திற்குச் சென்றிருந்தேன். சந்திப்பின் போது அமெரிக்க வாழ்க்கைப் பற்றியும், என் குடும்பம் பற்றியும் பொதுவாக பேசிக்கொண்டிருந்தோம். பேச்சுனுடே அவருடைய ஒரு கவிதையை("துறக்கமுடியாத துறவு"-  "பெய்யெனப் பெய்யும் மழை")  நான் மேற்கோள் காட்டியபோது அந்தக் கவிதையை எழுதிய தருணங்களை உணர்வுப்பூர்மாக பகிர்ந்துக் கொண்டார்.  கூடவே மணிரத்னம், ஏஆர் ரகுமான் கூட்டணியில் அப்போது வெளிவரத் தயாராக இருந்த "செக்கச் சிவந்த வானம்" படத்தில் பாடலாகும் தனது கவிதை ஒன்றையும் குறிப்பிட்டார்.

விடைபெறும் போது எனது மற்ற புத்தகங்ளோடு வனநாயகன் புதினத்தையும் (நாவல்) பரிசளித்தேன். பதிலுக்கு அவர் கையெழுத்திட்டு தனது இரண்டு புத்தகங்களை எங்களுக்குப் பரிசளித்தார். 
அவர் பரிசளித்த பெய்யெனப் பெய்யும் மழை கவிதைத் தொகுப்பும் இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள் கட்டுரைத் தொகுப்பும் எனது வாழ்நாள் சேகரங்கள் என்பதில் துளியும் ஐயமில்லை.




கவிஞரின் அனைத்து படைப்புகளையும் விடாமல் வாசித்த எனக்கு அவரை நெருக்கத்தில் சந்தித்தது உரையாடியது மகிழ்ச்சியான தருணமாக இருந்தது.

Sunday, May 3, 2020

கலாதீபம் லொட்ஜ் -வாசு முருகவேல்

ஈழவிடுதலைப் போர் ? - சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக பல கட்டங்களில் நடந்த அந்த ஆயுதப்போரில் பல இலட்சம் பேர் மாண்டார்கள். அதன் காரணமாக பல தமிழர்கள் இந்தியா, ஐரோப்பா, கனடா போன்ற இடங்களுக்கு புலம் பெயர்ந்தார்கள்.  இப்படித்தான் உலகம் அந்த வரலாற்றை இரு வரிகளில் சுருக்கமாக பதிவுசெய்துவிட்டு நகர்ந்து செல்லும்.

ஆனால், அதற்கு பின்னால் இருக்கும்  அவலங்களை, இரத்தமும் சதையுமாக வாழ்ந்த, வாழும் மனிதர்களை அவர்களுடைய உணர்வுகளை இலக்கியப்படைப்புகள் தான் சுமந்து நிற்க்கப் போகின்றன. அந்தப் படைப்புகள் மட்டுமே காலம் கடந்து மனிதர்களின் வலிகளைச் சுமந்து நிற்க்கும் கடைசி ஆவணமாக இருக்கப்போகின்றன.

அந்த வகையில் போரில் மடிந்த ,  வலியோடு புலம் பெயர்ந்த பல இலட்சம் மனிதர்களின் வாழ்வை ஈழ எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகளில்
தொடர்ந்து ஆவணப்படுத்தி வருகிறார்கள். அந்தப் படைப்புகளைத் தொடர்ச்சியாக வாசித்துவரும் நான் சமீபத்தில்  வாசு முருகவேல்
எழுதிய "கலாதீபம் லொட்ஜ்" வாசித்தேன். வாசு முருகவேல் ஈழத்தின்
யாழ்ப்பாணத்தின் நயினா தீவில் பிறந்து தற்போது தமிழகத்தில் வாழ்ந்து வருகிறார்.

கலாதீபம் லொட்ஜ் - தமிழர்களின் தாயகமான வடக்கு-கிழக்குப் பகுதிகளில் இருந்து வேலைக்காக இடம்பெயர்ந்து சென்று கொழும்பு-வில் உதிரியாக வாழும் தமிழர்களின் வாழ்வை ஒரு காலகட்டத்தில் நிறுத்திப் பார்க்கும் ஒரு படைப்பு.

ஈழத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்வேறு பின்புலத்தோடு பிழைப்புக்காக கொழும்பு வந்திருந்தாலும் தமிழர்கள் எனும் ஒற்றைப்
புள்ளியில் இணையும் அவர்களின் வாழ்வை
நாவலில் அழகாக பதிவுசெய்திருக்கிறார் வாசு.  கொஞ்சம் ஆழ்ந்து யோசித்தால் லொட்ஜ் என்பதே கதையில் பயன்படுத்தப்பட்டிருக்கும் ஒருவித குறியீடு என்பது புரிய வரும்.

நாவல் பல்வேறு உதிரி மனிதர்களின் வாழ்வைப் பதிவுசெய்வதாக இருந்தாலும் சந்திரன் எனும் சிறுவனின் கதை முன்னிலைப் படுத்தப்பட்டிருக்கிறது. அல்லது எனது வாசிப்பனுவபத்தில் மிகச் சிறப்பாக எழுதப்பட்டிருக்கிறது. புலம் பெயர் நோக்கில் சொந்த மண்ணை விட்டுப் பிரிந்து கொழும்புவுக்கு தற்காலிகமாக அப்பா, அக்காவுடன் கலாதீபம் லாட்ஜ்க்கு வந்துசேரும் சந்திரனின் பார்வையில் விரியும் கதை வாசிப்பவர்களின் மனத்தைத் தொடும் வகையில் இருக்கிறது. அது எழுத்தாளரின் சொந்த அனுபவமாகக் கூட இருக்க வாய்ப்பிருக்கிறது.

குறிப்பாக, சொந்த மண்னை விட்டுப் பிரியும் வாதையை சந்திரனின் அப்பா விசாகர் எனும் பெரியவரின் யதார்த்த பார்வையில் அழுத்தமாக பதிவாகியிருக்கிறது. இதுவரை நான் வாசித்த ஈழப் படைப்புகளில் அந்த வலி நுணுக்கமாக இதில் எழுதப்பட்டிருப்பதாக நினைக்கிறேன். அதுபோல, படைப்பில் அங்கங்கே தென்படும் மெல்லிய நகைச்சுவையோடு ஈழ-தமிழ் மக்களின் வாழ்வியல் எதார்த்தங்களும் இயல்பாக பதிவாகியிருக்கிறது.

"ஓரிடத்தில் பிரச்சனை வந்தால் நாம் போக வேண்டிய இடத்துக்கான சமிக்ஞை அது. அதன் தேவைக்கு நகர்வது என்பதுதான் இயல்பான வாழ்வு. தைரியம் மட்டுமே கடைசிவரைச் சுமக்க வேண்டியது. கவலைகள் சுமக்க வேண்டியவை அல்ல" எனும் வரிகள் கொழும்பன்ரியின் வாயிலாக சொல்லும் இடத்தில் படைப்பு அதன் உச்சத்தை அடைவதாக நினைக்கிறேன்.

இந்தப் படைப்பின் ஊடாக வரும் ஞானப்பழம்,  ஏ.ஆர் ரகுமானின் இந்தியன் எனும் திரைப்படச் சொல்லாடல்களின் வழியாக இதன் காலகட்டத்தை (90-களின் பிற்பகுதி) நம்மால் எளிதாக புரிந்துகொள்ள முடிகிறது. அதுபோல, படைப்பில் வரும் ஈழத் தமிழ் சொற்களையும், வட்டார வழக்குகளையும் தனியே குறிப்பிட்டு விளக்கியிருப்பது சிறப்பு. அது வாசிப்பவர்களுக்கு உதவிகரமானது.  அதுபோல, கதையோட்டத்தில் வரும் சில முக்கிய இடங்கள், அமைப்புகளின் பெயர்களை ஆங்கிலத்தில் குறிப்பிட்டிருந்தால் கூகுளில் தேட உதவியாக இருந்திருக்கும்.


பொதுவாக நான் படைப்பை வாசித்தபின்பே முன்னுரையை வாசிக்கும் பழக்கம் உடையவன் அந்த வகையில் "என் ஒரு சொல்லுக்கும் அச்சம் கிடையாது" என்ற வாசுவின் முன்னுரையை வாசித்தபோது  தமிழ்
எழுத்துலகில் தனக்கென ஓரிடத்தை நிலைநிறுத்திக் கொள்வார் எனும் நம்பிக்கையைத் தருகிறார்.

நூலின் பின்னட்டையில் எழுத்தாளர் அகரமுதல்வன் குறிப்பிட்டிருப்பது போல  ஈழஇலக்கியத்தில் புதிய வருகையாகத் தன்னை இந்த நாவலின் மூலம்  வாசு நிலை நிறுத்தியிருக்கிறார். அவருக்கு வாழ்த்துகள்.

ஈழப்படைப்புகளை விரும்பி வாசிப்பவர்கள்
தவறவிடக்கூடாத ஒரு படைப்பு கலாதீபம் லொட்ஜ்.


நூல்: கலாதீபம் லொட்ஜ் (2019)
ஆசிரியர்: வாசு முருகவேல்
வெளியீடு: கிழக்கு பதிப்பகம்
விலை: ₹180
ISBN: 9788184939477

ஆன்லைனில் வாங்க: http://www.nhm.in/shop/9788184939835.html