Showing posts with label #வைரமுத்து. Show all posts
Showing posts with label #வைரமுத்து. Show all posts

Monday, November 16, 2020

கேந்திரிய வித்யாலயா பள்ளியில் தமிழ் - கவிஞர் வைரமுத்து

"...தமிழில் நம்பிக்கை இல்லாத, தமிழை எழுதவோ படிக்கவோ தெரியாத, ஏன் தமிழை பேச மறுக்கிற ஒரு தலைமுறை எங்கள் கண் முன்னால் நிற்பது கண்டு இதயம் நடுங்குகிறது.." என  கேந்திரிய வித்யாலயா பள்ளியில் தமிழ் குறித்து தனது ஆதங்கத்தையும் அதிர்ச்சியையும் கவிஞர் வைரமுத்து வெளியிட்டிருக்கிறார்.

உண்மையில், நமது தாய்மொழி நம் கண் முன்னால் இன்று அழிவுப் பாதையில் சென்று கொண்டிருப்பதைப் பார்த்து  நாம் ஒவ்வொரும் அச்சப்படத்தான் வேண்டும்.


அதே செவ்வியில் கவிஞர் ,  “இனி எந்த மொழி தொழில்நுட்பத்தின் தோள்களில் ஏறி தொண்டு செய்கிறதோ அந்த மொழிதான் நிலைக்கும். துருப்பிடித்த பழம்பெருமைகள் மட்டும் இனி ஒரு மொழியைத் தூக்கி நிறுத்த முடியாது. இன்று சர்வதேச சமூகம் 3 மொழிகளை முன்னிலைப்படுத்துகிறது. ஆங்கிலம் - சீனம் - ஜப்பான். இந்த 3 இனங்களுமே தொழில்நுட்பத்துக்கு தங்கள் மொழியைக் கொம்பு சீவுகின்றன. தமிழுக்கும் அந்த தகுதி இருக்கிறது. தமிழர்களுக்குத்தான் நம்பிக்கை வேண்டும்”. என்றும் சொல்லி இருக்கிறார். 

இதை நாம் தொடர்ந்து பல ஆண்டுகளாகப் பேசிக் கொண்டு தான் இருக்கிறோம்.  ஆனால், அறிவுசார் புலத்தில் இதுபற்றிய தீவிர உரையாடல்களோ ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளோ இல்லை. காரணம் பலர் இங்கே மொழியை தங்களை அதிகார மையத்தை நோக்கி நகர்த்தும் ஒரு கருவியாக மட்டுமே பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதே உண்மை. 

பலருக்கு மத்திய அரசின் ஆசி இல்லாமல் பிராந்திய மொழியால் என்ன பெரிதாக சாதித்துவிட முடியும் எனும் எண்ணம் கூட காரணமாக இருக்கலாம். வையத் தலைமை கொள்! என்பதைத் தவிர வேறென்ன சொல்ல முடியும். 

இது தொடர்பாக தமிழ்ச்சரம்.காம்- வுடன் இணைந்து செயல்பட விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளுங்கள்.

கவிஞரின் செவ்வி இணைப்பு.

https://youtu.be/ue0zc1fgdVA

Thursday, May 14, 2020

கவிஞர் வைரமுத்து ஒரு சந்திப்பு

கவிஞர் வைரமுத்து அறிமுகம் தேவையில்லாதவர். தமிழ் இலக்கியத்திலும், திரையுலகிலும்  மிகமுக்கிய ஆளுமைகளில் ஒருவர். சிறந்த பாடலாசிரியருக்கான இந்திய அரசின் விருதை ஏழு முறை பெற்றவர.
தனது தமிழால் திரைப்பாடல்களுக்கு புது இரத்தம் பாய்ச்சியவர்.

என்னை எழுதத் தூண்டிய படைப்புகளைத் தந்த அவரை 15 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சென்னையில் 2018-இல் சந்தித்து உரையாடும் ஒரு வாய்ப்பு கிடைத்தது.  அதற்கு முன்பு  2003ல் மலேசியாவின் கோலாலம்பூரில் அவரைச் சந்தித்திருக்கிறேன்.


கவிஞருக்காக காத்திருக்கையில்


அவரைச் சந்திக்க ஒரு மாலை பொழுதில் எனது மனைவியுடன் அவரது இல்லத்திற்குச் சென்றிருந்தேன். சந்திப்பின் போது அமெரிக்க வாழ்க்கைப் பற்றியும், என் குடும்பம் பற்றியும் பொதுவாக பேசிக்கொண்டிருந்தோம். பேச்சுனுடே அவருடைய ஒரு கவிதையை("துறக்கமுடியாத துறவு"-  "பெய்யெனப் பெய்யும் மழை")  நான் மேற்கோள் காட்டியபோது அந்தக் கவிதையை எழுதிய தருணங்களை உணர்வுப்பூர்மாக பகிர்ந்துக் கொண்டார்.  கூடவே மணிரத்னம், ஏஆர் ரகுமான் கூட்டணியில் அப்போது வெளிவரத் தயாராக இருந்த "செக்கச் சிவந்த வானம்" படத்தில் பாடலாகும் தனது கவிதை ஒன்றையும் குறிப்பிட்டார்.

விடைபெறும் போது எனது மற்ற புத்தகங்ளோடு வனநாயகன் புதினத்தையும் (நாவல்) பரிசளித்தேன். பதிலுக்கு அவர் கையெழுத்திட்டு தனது இரண்டு புத்தகங்களை எங்களுக்குப் பரிசளித்தார். 
அவர் பரிசளித்த பெய்யெனப் பெய்யும் மழை கவிதைத் தொகுப்பும் இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள் கட்டுரைத் தொகுப்பும் எனது வாழ்நாள் சேகரங்கள் என்பதில் துளியும் ஐயமில்லை.




கவிஞரின் அனைத்து படைப்புகளையும் விடாமல் வாசித்த எனக்கு அவரை நெருக்கத்தில் சந்தித்தது உரையாடியது மகிழ்ச்சியான தருணமாக இருந்தது.