Sunday, January 14, 2024

கரைந்த நிழல்கள் - வாசிக்கும் போது

திரைப்பட தயாரிப்பு என்பது ஜனநாயகப்படுத்தப்பட்ட பின் சென்னையில்  இயங்கிய பெரிய ஸ்டுடியோக்கள் எப்படி நசிந்தன என்பதை மையப்படுத்தியே ஒரு சுவாரஸ்யமான படம் எடுக்கலாம் போல இருக்கிறது. திரைக் கதை அமைப்பதும் அவர்களுக்கு எளிதுதான். 

ஏனென்றால், இது அவர்களுடைய சொந்த கதை. தேவையில்லாமல், யாருடைய நாவலில் இருந்து எதை உருவலாம். மொழி புரியாத எந்தப் படத்தை  விடிய விடிய கண்விழித்து  பார்த்து அதில் எந்தக் காட்சியைச் சுடலாம் என பாயை பிராண்டி கொண்டிருக்க வேண்டியதில்லை. 

அது மட்டுமல்லாமல், அந்த நாட்களில் சென்னையில் 10-15 ஸ்டியோக்கள் இயங்கின. தென்னிந்திய மொழிகள் தாண்டி இந்தி படங்களும் இங்கே தயாரானது. அதனால், பல மாநில பார்வையாளர்களைக் குறி வைத்து  போட்ட பணத்தை எடுத்து விடலாம்.

இந்த யோசனையெல்லாம், அசோகமித்திரன் எழுதிய 'கரைந்த நிழல்கள்' வாசிக்கும் போது தோன்றியது.  1960-களில் ஜெமினி ஸ்டுடியாவில் வேலை செய்த அவர் இந்த நாவலின் வழியாக திரைத்துறையின் எதார்த்தத்தைச் சொல்லி இருக்கிறார்.

Thursday, January 11, 2024

வனநாயகன் குறித்து-30 (அன்பர்கள் தைரியமாக வாங்கலாம்)

நட்புவட்டத்தில் இருக்கும் மலேசிய முகநூல் அன்பர் மங்கள கெளரி அவர்களுடைய வாழ்த்து.

 


Saturday, January 6, 2024

கங்கைகொண்ட சோழபுரம்

கங்கைகொண்ட சோழபுரம் திருவாரூரிலிருந்து சுமார் இரண்டு மணி நேர பயணம்தான் என்றாலும் ஜனவரியில் (2023) தான் போகும் வாய்ப்பு கிடைத்தது. அது பொங்கல் விடுமுறை என்பதால் வழக்கமாக காத்தாடும் அந்தக் கோயிலில் அன்று எங்கும் மனித தலைகள் என்றார்கள்.



இந்தக் கோயில் முதலாம் இராஜராஜ சோழனின் மகனான இராஜேந்திர சோழனால் கட்டப்பட்டு கங்கைகொண்ட சோழபுரம் 250 ஆண்டுகள் சோழர்களின் தலைநகராகவும் இருந்திருக்கிறது.

இதுபோல கலையம்சத்தைக் கல்லிலும், மண்ணிலும், உலோகங்களிலும் கண்ட மனிதர்கள் மறைந்தாலும் அதற்கு பிறகு வரும் தலைமுறைகள் அதை வியந்து போற்றி பாதுகாப்பது சிறப்பு.

அந்த விதத்தில் காலம் கடந்து நிற்கும் அழகிய கங்கைகொண்ட சோழபுரம் தொல்லியல் துறையின் வசம் இருப்பதும் அதைக் கட்டுவித்த இராஜேந்திர சோழன் நினைவு கொள்ளப்படுவதும் சிறப்பு.

Sunday, December 17, 2023

மதுக்கோப்பை



முந்தாநாள்

என் மதுக்கோப்பையில்

ஒரு தூசி விழுந்து கிடந்தது

எடுத்துப் போட்டுவிட்டுக்
குடித்துவிட்டேன்.

நேற்று
என் மதுக்கோப்பையில்
ஒரு பூச்சி விழுந்து கிடந்தது
எடுத்துப்போட்டுவிட்டுக்
குடித்துவிட்டேன்.

இன்று
என் மதுக்கோப்பையை
எடுத்து வைக்கிறேன்...
என்னால்
ஒன்றுமே செய்ய முடியவில்லை.
ஏனென்றால் அதில்
நானே விழுந்து கிடக்கிறேன்.
- மலையாளப் பாடலாசிரியர் வயலார் ராமவர்மா

Thursday, December 14, 2023

தூங்காநகர நினைவுகள் - அ.முத்துக்கிருஷ்ணன் (ஆசிரியர்)

அவசரகதியில் ஓடிக் கொண்டிருக்கும் அன்றாடத்தில் நின்று நிதானமாக வரலாற்று சின்னங்களையோ ஆவணங்களையோ கூர்ந்து கவனித்து படிக்க பெரும்பாலனர்களுக்கு நேரமிருப்பதில்லை. 

அது சொந்த ஊராக இருந்தாலும் அதே நிலைதான். அந்த விதத்தில் சென்னை கொஞ்சம் முன்னேறி இருக்கிறது என்றுகூட சொல்லலாம். ஏனென்றால்,  தற்போது 'சென்னை தினம்'  கொண்டாடுகிறார்கள். ஶ்ரீராம் போன்ற சிலர் அதன் வராலாறு குறித்து  யூடியூபில் பேசுகிறார்கள். ஒரு  சில ஆங்கில புத்தகங்கள் கூட வாசிக்கப்படுகின்றன.

ஆனால், தமிழகத்தின் மற்ற சிறு, குறு நகரங்களின் வரலாறு அறிதல் என்பது பெரும்பாலும் கோயில்களின் தல வராற்றோடு நின்றுவிடுவது துரதிஷ்டம். அந்த வகையில் எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன் எழுதிய  மதுரையின் வரலாற்றைப் பேசும் 'தூங்காநகர நினைவுகள்'  கட்டுரை நூலை ஒரு நல்ல முன்னெடுப்பாக பார்க்கிறேன்.


நூலில் அன்றைய கல்வெட்டுகள் மீது பெயிண்ட் அடித்துவிடுவது, முதுமக்கள் தாழிகளை புல்டோசர் விட்டு அடித்து நிரவி அதன் மீது புதிய கான்கிரீட் வீடுகட்டுவது, சங்கம் வளர்த்த ஊரில் பிள்ளைகளுக்கு தமிழ் தெரியாது என பெருமை பேசுவது போன்ற பல அறியாமைகளைச் சாடுகிறார். அதே நேரத்தில் மதுரை குறித்த சங்க இலக்கிய சான்றுகள், படையெடுப்புகள், போர்கள், ஆங்கிலேயர் கால ஓவியங்கள்,ஆவணங்கள், வரைபடங்கள் போன்றவற்றை  தேடி படித்து அக்கறையோடு வாசிப்பவர்களுக்குச் சலிப்பூட்டுட்டாமல் அழகான நடையில் எழுதியிருக்கிறார்.  அதிலும் குறிப்பாக, மதுரா கோட்ஸ் (Madura Coats) ஆலையின் 100 ஆண்டு கால வரலாறு என்பது தமிழகத்தில் தொழிற்புரட்சி ஏற்படுத்திய தாக்கத்தின்  ஒரு துளி.

இது  ஆனந்தவிகடனில் எழுதிய தொடர்கட்டுரைகளின் தொகுப்பு என்பதால் தமிழகத்தின் ஒரு சில ஆயிரம் பேரின் கவனத்துக்குச் சென்றிருக்கும் என நம்புகிறேன். அதுமட்டுமல்லாமல், இந்தப் புத்தகம் வரலாற்றின் எச்சங்களாக மதுரையிலும் அதன் சுற்றுவட்டாரங்களிலும் நிற்கும் பல இடங்களின் இன்றைய வண்ணப் படங்களுடன் வந்திருப்பதாலோ என்னவே விலையை ரூபாய் 500 என விகடன் வைத்திருக்கிறது என நினைக்கிறேன்.

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையின் வரலாற்றை 250 பக்கங்களில் சொல்லிவிட முடியாது என்றாலும் மதுரையின் தொன்மை குறித்த ஆர்வத்தை இந்த நூல் கண்டிப்பாக தூண்டும். வாய்ப்பிருந்தால் வாசியுங்கள்.

நூல்: தூங்காநகர நினைவுகள் 

ஆசிரியர்: அ. முத்துக்கிருஷ்ணன்

வகை: வரலாறு, தமிழர் வரலாறு, கட்டுரை 

வெளியீடு: விகடன் பிரசுரம் (2021,2022)

விலை : ரூ.500



Friday, November 10, 2023

உருப்படியாக வாழ

தமிழ் நாளிதழ்களைத் தொடர்ச்சியாக வாசிப்பவர்கள் நான் சொல்வதை ஏற்றுக்கொள்வார்கள் என நினைக்கிறேன்.

அதாவது புத்தக வாசிப்பு, திருக்குறள் முற்றோதல், தமிழ்மொழி வளர்ச்சி , சேவை தொடர்பான பல முன்னெடுப்புகள் அரசுப் பள்ளி மற்றும் கலைக் கல்லூரிகளில் மட்டும் நடப்பது போலவும்

100 சதவீத தேர்ச்சி, அறிவுசார் போட்டிகளில் பங்களிப்பு, முதல் மதிப்பெண், அறிவியல் கண்டுபிடிப்பு, காம்பஸ் இன்டர்வியூ (வளாகத் தேர்வு) , வேலைவாய்ப்பு போன்ற விசயங்களில் தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் முன்னிப்பது போல கட்டமைக்கப்படுகிறது.

இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் களையப்படவேண்டியது மிக அவசியம். அதாவது,  பயன்படாத விசயங்களுக்கு அரசுசார் நிறுவனங்கள்,  வெற்றி பெற்று உருப்படியாக வாழ தனியாரை அணுகுங்கள் என்பது மறைமுகமாக விதைக்கப்படுகிறது.  


கூடவே வெற்றி பெற தாய்மொழி கல்வியோ ஏன் அடிப்படை அறமும் கூட  இளம் வயதில் தேவையில்லை என்பதும் நுழைக்கப்படுகிறது.

இப்போது காட்சி ஊடகங்கள் போல எழுத்து ஊடகமும் முற்றிலும் பொழுதுபோக்கின் ஊற்றுக்கண்ணாகி விட்டதோ என்றுகூடத் தோன்றுகிறது.



Tuesday, October 10, 2023

சென்னையில் இரண்டாம் எலிசபெத் ராணி

சென்னையில் இருக்கும் மயிலாப்பூர் உட்லாண்ட்ஸ் ஓட்டலில் இந்தப் படத்தை வைத்திருக்கிறார்கள். 


அதில் காமராஜரின் வலதுபுறம் கேக் வெட்டும் சீமாட்டி இரண்டாம் எலிசபெத் ராணி. வலது கோடியில் இருப்பது அவருடைய கணவர் பிலிப். கூடவே, இந்தப் படம் ராஜாஜி அரங்கில்  1961-இல் எடுக்கப்பட்டது என்ற குறிப்பும் இருந்தது.

வருடா வருடம்  வரும் அம்மா தினம், அப்பா தினம் போல சென்னை தினம் கொண்டாடுகிறார்கள். ஆனால், சென்னையின் வரலாற்றுத்  தகவல்களின் சேகரமாக  எழும்பூரில் இருக்கும் அரசு அருங்காட்சியகம் (Government Museum) தவிர்த்து வேறேதும் உருப்படியாக இருக்கிறதா என்ன?