'ஆம்னிபஸ்'ஸில் சுஜாதாவின் 'சிறு சிறுகதைகள்' புத்தகம் பற்றிய எனது விமர்சனம்.
சமீபத்தில் சுஜாதாவின் 'சிறு சிறுகதைகள்' நூலை வாசித்தேன். சுஜாதா 2003வாக்கில்
குமுதத்தில் தொடராக எழுதியதன் தொகுப்பு இது. வெளியிட்டவர்கள் விசா பப்ளிகேஷன்ஸ். புத்தகம் கூட சிறியதுதான் 96 பக்கங்கள். எளிதான, விரைவான வாசிப்பனுபவம்.
சுஜாதா பல சந்தர்பங்களில் தனக்கும் சிறுகதைகளுக்கும் உள்ள நெருக்கத்தை ஊடகங்களில் பதிவுசெய்ததைப் படித்தும் பார்த்தும் இருக்கிறேன். இப்படி சிறுகதை சுஜாதாவின் 'ஹோம் பிட்ச்' என்றால் சும்மா விடுவாரா என்ன ?, அழகான கதைகள், அருமையான விளக்கங்கள். சும்மா வெளுத்திருக்கிறார்.
இந்தப் புத்தகத்தின் வாயிலாக சின்னஞ் சிறு கதைகளின் பல வடிவங்களை எளிமையாகவும் அதே சமயத்தில் விளக்கமாகவும் சொல்லியிருக்கிறார். சிறுகதைகளில் இவ்வளவு பரிமாணங்களா? என்று ஆச்சரியப்படும் வகையில் சுவாரஸ்யமாக இருக்கிறது.
இந்தச் சிறுகதைகளைக் குறைந்தது இரண்டு வார்த்தைகளில் தொடங்கிச் சில நூறு வார்த்தைகளில் முடித்திருக்கிறார். அப்படி வெவ்வேறு கட்டுமானங்களில் செல்லப்படும் கதைகளுக்கு வேறு வேறு பெயர்கள். இரண்டு வரியில் கதையா? ஆச்சர்யமாக இருக்கிறதில்லையா.? இதோ ஓரு கதையைப் பார்ப்போமே.
தலைப்பு: ஆபிஸில் எத்தனை ஆம்பிளைங்க?
கதை: முதலிரவில் கேள்வி
இங்கே சூட்சுமமே கதையின் தலைப்பு என்பதைப் படித்தால் அறிந்துக் கொள்ளலாம். அதுமட்டுமில்லாமல் முதல் மற்றும் இரவு சேர்ந்து முதலிரவு ஆனதும் தமிழின் சிறப்பு.
சி.சி.களின் (அதாங்க சிறு சிறுகதைகள்) வடிவத்தை அல்லது விதிகளை முதலில் சொல்லி அதை
ஓரிரு கதைகளில் தானே முயற்சி செய்து வாசகர்களுக்கு பகிர்ந்திருக்கிறார்.
பிறகு அதை வாசகர்களை எழுத ஊக்குவித்து ஓரு போட்டியாக அறிவித்துள்ளார்.
பின்பு அந்த போட்டியில் வென்றக் கதைகளை வெளியிட்டு பரிசுகளையும்
வழங்கியிருக்கிறார்.வாசகர்களும் தங்கள் பங்கிற்கு எழுதிக்
குவித்திருக்கின்றனர்.
இது போல Short Fiction, Sudden Fiction (உடனடிக் கதை),ஹைகா,ஹைபுன் என பலவற்றை அறிமுகம் செய்கிறார். 'ஹைகா' என்பது ஓரு படத்துக்கான ஹைக்கூ. 'ஹைபுன்' என்பது ஓரு காட்சியை விவரித்து இறுதியில் ஓரு ஹைக்கூ வைப்பது. அவர் அறிமுகம் செய்த 55 Fictionல் 55 வார்த்தைக்குள் கதை சொல்லவேண்டுமாம்.
55- வார்த்தைகளில் கதை? பார்ப்போமே.
'முட்டாள் கூமூட்டை' என்று டைரக்டர் அசிஸ்டண்டைத் திட்டினார். 'சாவுகிராக்கி ஓரு சின்ன கன்டியூனிட்டி ப்ராப் பார்க்கத் தெரியலை. இப்ப கலர்த் தண்ணிக்கு பதிலா நிஜ பியர் வெக்க வேண்டி வந்திருச்சி பாரு..'
அன்று ஷிட்டிங்கின் கடைசி நாள். நிஜமான பார் செட்டில். அரையிருட்டில் வயதான நடிகர் காத்திருந்தார். அடுத்த படம் எப்ப வருமோ? என்று கவலையில்.
'ரெடி வாங்க ராஜாராமன்.. ஓரு டேக் பாத்துரலாம்'
ஓரு டேக்கா ? இருபது டேக்காவது வாங்காமல் விடமாட்டேன் என்று மனத்துக்குள்
தீர்மானித்திருந்தார்.
கடிதங்களின் வாயிலாககூட கதைகளை நகர்த்தி சிறுகதை எழுத இயலும் என்பது சுவாரஸ்யமாகவே இருந்தது. இது போன்றதோருக் ('துமாரி அம்ருதா') கதையை இந்தியில் ஷபனா ஆஸ்மியும், நஸ்ருதீன் ஷாவும் கடிதமாக மேடையில் தோன்றிப் படித்திருக்கிறார்களாம். ரிகர்சலே தேவையில்லை. மாற்றி மாற்றி ஓரிவருக்கொருவர் எழுதும் கடிதங்களைப் படித்துக்கொண்டிருக்க வேண்டும். கதை மெல்ல மெல்ல மேடையில் உருவாகிறது. அவர்களுக்கு மேடையில் இரண்டு நாற்காலிகள் எதிரெதிராகவோ அருகிலோ போடப்பட்டிருக்கும். கடைசியில் ஓருமுறை நிமிர்ந்துப் பார்த்துக் கொள்வார்களாம்.
தமிழில் வெகுஜன ஊடகத்தில் சிறுகதைகளில் பல புதிய உத்திகளைக் குமுதம் கையாண்டு வெற்றி பெற்றிருப்பதாக ஓரிடத்தில் சிலாகித்திருக்கிறார். சிறுகதையின் இன்னபிற வடிவங்களை சுஜாதாவின் எழுத்தில் வாசிப்பது அருமையாகவே
இருக்கிறது. படிப்பவர்களுக்கு அலுப்பூட்டாமல் வாசிக்த்தூண்டும் 'சுஜாதா
மந்திரம்' நன்றாகவே வேலைச் செய்துள்ளது.
சி.சி. கள் நீதிக் கதைகளோ அல்லது உபதேசக் கதைகளோ இல்லை. கவனமாக் கட்டமைக்கப்பட்ட இவை படிப்போரையும் கேட்போரையும் கதைக்குள் ஒன்றிப் போகச் செய்ய வேண்டும் என்கிறார். சி.சி. கதைகளை எழுத சொற்சிக்கனம் அதிமுக்கியம். சிக்கனமாக எழுத முயலுபவர்கள் பயிற்சிக்காக போஸ்ட் கார்டுக்கு கதை எழதி பழகச் சொல்கிறார். நிறைவாக சி.சி கதைகள் ஹைக்கூ அளவுக்கு வந்துவிட்டன. ஹைக்கூ என்பது பளிச்சென்று ஓரு காட்சியை எடுத்த போட்டோ போல. சி.சி. கதை என்பது குறும்படம் போல. போட்டோவும் திறமையான கலைஞர்கள் எடுத்தால் அழகான கதை சொல்லும். குறும்படமும் அப்படியே என்கிறார்.
சிறுகதை என்பது கடந்தகாலங்களில் பல மாற்றங்களைச் சந்தித்து வந்திருக்கிறது.
அன்று பத்துப் பக்க சிறுகதைகளில் தொடங்கி இன்று நாம் நாலு செகண்ட் கதை தாண்டி
இரண்டு வார்த்தை கதைகளில் வந்து நிற்கிறோம். சி.சி.க்கள் பரவலான வரவேற்பையும் பெற்றுள்ளது. இது ஓருவிதத்தில் காலத்தின்
கட்டாயம் கூட. இந்த சூழல் ஆரோக்கியமானதா, மொழி தன் வளத்தை இழக்கிறதா, கதையில் ஆசிரியர் சொல்லமுனைந்த கருத்து சரியாகப் புரிந்துக் கொள்ளப்பட்டதா இல்லை பூடகமாக இருக்கிறதா
என்கிற விவாதத்துக்குள் இப்போது நாம் செல்ல வேண்டாம். குறுகச் செய் என்பது
சி.சி.ன் தாரக மந்திரமாய் இருக்கிறது அவ்வளவே.
குறையாகச் சொல்ல பெரிதாக ஓன்றும் இல்லை. புத்தகத்தில் அவர் எடுத்தாண்டுள்ள கதைகள் பெரும்பாலும் ஆங்கில புத்தகங்களைத் தழுவி எழுதியவை. மிகச் சிக்கனமாக ஓரிரு இடங்களில் இந்திய எழுத்தாளர்களையும் ( Folk tales from India) எடுத்தாண்டிருக்கிறார்.
'ஹைகா'வுக்கு வாசகர்கள் அனுப்பிய ஹைக்கூவை மட்டும் பதிப்பித்துவிட்டுப் படத்தைக் கோட்டை விட்டுவிட்டனர். அதனால் புத்தகத்தைப் படிப்பவர்கள் குழம்பிவிடுவார்கள். 'ஹைகா' என்பது ஓரு படத்துக்கான ஹைக்கூ என்பதை இங்கே நினைவில் கொள்க. இது பதிப்பக தவறே, ஆசிரியரின் தவறல்ல.
ஆம்னிபஸ் பதிவு:
http://omnibus.sasariri.com/2015/12/blog-post.html
No comments:
Post a Comment