மாலைமதி, குமுதம் போன்ற வெகுஜன ஊடகத்தில் 'யார் இவர்?' வித்தியாசமாய் இருக்கிறதே என திரும்பிப் பார்க்கச் செய்தவர். சமீபத்தில் அவருடைய 'கற்றதும் பெற்றதும்' வாசித்தேன்.
ஆனந்த விகடனில் அவர் தொடராக எழுதியதை தொகுத்து வெளியிட்டுள்ளனர். நான் பெரிய ஆ.வி. பிரியனாக இல்லாததால் அனைத்தும் புதிதாகவே இருந்தன. இப்பவும் ஆனந்த விகடன் "ஆ.வி." தானா இல்ல "AV" ஆயிட்டா? தமிழ்நாட்டில் இருந்து யாராவது சொல்லலாம். இதில் உள்ள கட்டுரைகளை நிறைய ஜானர்களில் எழுதியிருக்கிறார். அறிவியல், சிறுகதை, நாட்டு நடப்பு, அனுபவங்கள், கவிதை இப்படி பல.
சுஜாதாவின் கவிதை ஆர்வம் எனக்குத் தெரியாத ஓன்று. இந்த புத்தகத்தில் அவர் அறிமுகப்படுத்திய பல கவிதைகள் ரசிக்கும் படி இருந்தன. பல கட்டுரைகளில் புதிய கவிஞர்களையும், கவிதைகளையும் ஆதர்சனமாக கொண்டாடியிருக்கிறார். அவர் இருக்கும் போதே என் பங்குங்கு கொஞ்சம் கவிதைகளை எழுதி அவருக்கு அனுப்பிப் பயமுறுத்தி இருக்கலாமோ ? நல்லவேலை அவர் பிழைத்தார் ! :) அப்போதே வைரமுத்துவின் மகன் கபிலனின் கவிதை ஓன்றை விமர்சித்து அறிவுரைத் தந்துள்ளார் என்பது சிறப்பு.
அப்புறம் நான் படித்து வியந்த இன்னோரு விஷயம் அவரின் நகைச்சுவை உணர்வு. குறிப்பாக அவருடைய டகோடா ரக விமானங்களைச் செலுத்திய அனுபவங்கள் ரசிக்கும் படியாக இருந்தது. இவரைப் போல நகைச்சுவை என்ற நல்ல உணர்வு எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. கொடுத்து வைத்தவர்தான்.
அதே சமயத்தில், தமிழ் வாசகர்களுக்கு நகைச்சுவை உணர்வு கொஞ்சம் குறைவு என சில இடங்களில் பதிந்துள்ளார். உண்மை. நாம கொஞ்சம் சீரியஸ் டைப் தான். விளையாட்டுன்னு நினைச்சு சொல்றத சிலர் சீரியசா எடுத்துகிட்டு அருவாளோட வந்து நிப்பாங்க.
மற்றபடி பெரிதான புகார்கள் எதுவும் இல்லை, பத்து வருடங்களுக்கு முன்பு வெளியானதால் சில அறிவியல் விஷயங்கள் காலாவதியாகிவிட்டன. இது புத்தகத்தின் குறையே தவிர அவருடையதல்ல.
இந்தப் புத்தகத்தைத் தாண்டி சுஜாதா பற்றி என் மனதைக் கவர்ந்த சில விஷயங்கள் உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன்.
சுஜாதா தன்னுடைய வயதான காலத்திலும் மிக இளமையாக சிந்தித்திருக்கிறார், எழுதியிருக்கிறார். நாற்பது வருடங்கள் ஓருவரால் தமிழில் இளமைக் குறையாமல் எழுத முடிந்தது ஆச்சர்யம்தான். கவிஞர் வாலியை இங்கே கண்டிப்பாக நினைக்காமல் இருக்க முடியவில்லை.
அது போல தன்னுடைய விசுவல் எழுத்து அல்லது காட்சிப்படுத்தும் தன்மையை ஆங்கிலத்தில் இருந்து கற்று, தமிழில் (1960-70s) முயன்று வெற்றி பெற்றிருக்கிறார் என்பது என் தாழ்மையான கருத்து. உங்களுக்கு இதில் மறுப்பு இருந்தால் சொல்லுங்க.
ஆங்கிலத்தில் சொல்லக்கூடிய short & sweet என்பதை கட்சிதமாக மிகவும் அழகாக, சமயங்களில் கவித்துவமாகவும் பயன்படுத்தக்கூடியவர்.
நான் சமிபத்தில் படித்த அவருடைய ஓரு நாவலில் இருந்து. கதாநாயகனை அறிமுகம் செய்ய பக்கம் பக்கமாக வருணனை இல்லை. சுருக்கமாக நான்கு, ஐந்து வரிகள் தான். அதில் ஓரு வரி **கழுத்தில் கேமரா மாலை **. மற்றோரு இடத்தில் ** ரயில் 'ழே' என்று கூவிவிட்டு சென்றது...**. இப்படிப் பல.
தமிழைத் தாண்டி பல ஆங்கில நாவல்களையும், சிறுகதைகளையும் படித்து அதன் நுணுக்கங்களைத் தன் எழுத்தில் முயன்றிருக்கிறார். குறிப்பாக சுஜாதா பல சந்தர்பங்களில் தனக்கும் சிறுகதைகளுக்கும் உள்ள நெருக்கத்தை ஊடகங்களில் பதிவுசெய்ததைப் படித்தும் பார்த்தும் இருக்கிறேன். அவருடைய 'சிறு சிறுகதைகள்' புத்தகத்தை பற்றிய எனது விமர்சனம் இங்கே. சிறு சிறுகதைகள்
சுஜாதா பெரிதும் சிலாகிக்கப்படுவது அவரின் அறிவியல் எழுத்துக்காக. மேல் மட்டமான ஆங்கில அறிவியல் புத்தகங்களைத் தாண்டி விரிவான மற்றும் அடர்த்தியான பல புத்தங்களைப் படித்திருக்கிறார். அதே நேரத்தில், எழுதும் போது அனைவருக்கும் புரியும்படி எளிமைப்படுத்தி எழுதியிருக்கிறார். இதற்கு அவருடைய பொறியியல் பின்புலம் இதற்கு மிக உதவியாக இருந்திருக்கிறது. இது அவருடைய மற்ற எந்த சமகால எழுத்தாளர்களுக்கு இல்லாத ஓரு தனிச் சிறப்பு. தமிழ் எழுத்துலகில் சுஜாதா விட்டுச்சென்ற இடம் இன்றுவரை நிரப்படாமல் வெற்றிடமாகத்தான் இருக்கிறது. பார்ப்போம்.
அதுபோல சமீபத்தில் 'ஆழ்வார்கள் ஓரு எளிய அறிமுகம்' எனும் புத்தகத்தை வாசித்த போது அவருடைய சங்க இலக்கிய நாட்டம் புரிந்தது. சங்க இலக்கியத்தில் பசலை நோய், ஆண்டாள் கண்ணனிடம் உருகினாள் எனப் படித்தவர்தான், தன் நாவலில் வசந்த் சைட் அடித்தான் என மார்டனாக எழுதினார்.
எந்தவோரு விஷயத்தையும் ஓரு நடுத்தர குடும்பத்தின் கண்ணோட்டத்தில் அல்லது மன ஓட்டத்தில் பார்த்து எழுதியிருக்கிறார். இது போன்ற எழுத்துக்கள் எல்லா வகையான வாசகர்களையும் கவருமா?. அப்படிக் கேட்பதே தேவையில்லாதது. ஏனேன்றால், இப்போதுக்கூட புத்தக்க்கண்காட்சிகளில் சுஜாதாதான் பெஸ்ட் செல்லராம். ஜெயகாந்தன் எளிய மனிதர்களின் ஆதர்சன எழுத்தாளன் என்றால் சுஜாதா வேறு ரகம். அவ்வளவே.
சுஜாதாவைப் வாசிப்பது ஓரு சுகானுபவம். என்னைப் பொருத்தவரை அவர் 'ஆல் டைம் பெஸ்ட் எண்டர்டெயினர்'. வாய்ப்பிருந்தால் இந்த புத்தகத்தை வாசியுங்கள்.
நுால்: கற்றதும் பெற்றதும்
ஆசிரியர் சுஜாதா
பதிப்பகம் :விசா பப்ளிகேஷன்ஸ்
பக்கங்கள் : 296
பதிப்பகம்
No comments:
Post a Comment