Showing posts with label #சுஜாதா. Show all posts
Showing posts with label #சுஜாதா. Show all posts

Sunday, March 1, 2026

AI (செயற்கை நுண்ணறிவு) - எழுத்தாளர் சுஜாதா பார்வையில்

எழுத்தாளர் சுஜாதா பார்வையில் ஏஐ தொழில்நுட்பம். 

சமீபத்தில் சிலிக்கான் சில்லுகளுக்குள் ஒரு குட்டி மூளை குடியேறியிருக்கிறது;  ஆமாம் நண்பர்களே அதற்குப் பெயர் Artificial Intelligence இல்லை செயற்கை நுண்ணறிவு. நீங்கள் ஒரு கவிதை கேட்டால், கம்பனையும் ஷெல்லியையும் கலந்து ஒரு நொடியில் துப்பிவிட்டு அடுத்த வேலைக்குப் போகிறது.

"கணேஷ்,  ஏஐ-க்கு இதயம் இருக்கா?" என்று கேட்டால், "லாஜிக் தான் இதோட இதயம் வசந்த்" என்பான் கணேஷ். ஆமாம்,  தகவல்கள் தான் அதன் ரத்தம்; அல்காரிதம்கள் தான் அதன் நரம்பு மண்டலம்.

உங்கள் ரசனையை, உங்களை விட ஒரு மென்பொருள் துல்லியமாகத் தீர்மானிப்பதை நினைத்தால் கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது. ஆனால், இது மனிதனை விஞ்சுவதல்ல, மனிதனின் நீட்சி; ஒரு டிஜிட்டல் ஊன்றுகோல் என்பேன்.

நீண்ட அலகு நாரை

நீரை கொத்தினாலும் நீங்காத நிலா...” இது அமுத பாரதி எழுதிய ஹைக்கூ. இதுபோன்ற பல ஆயிரம் கவிதைகளை ஏஐ நொடியில் பிரசவிக்கும். ஆனாலும், மனிதர்கள் உணர்ந்து ரசனையாக எழுதியதை வாசிக்கையில் வரும் மென்புன்னகை அங்கே சுத்தமாக மிஸ்ஸிங்.

ஏஐ-யைப் பொறுத்தவரை கவிதை என்பது வெறும் நிகழ்தகவு-Probability. அதற்கு நிலா தெரியாது, நிலவின் அலைநீளம் (Wavelength) தான் தெரியும். நாரை தெரியாது, 'Bird' என்கிற டேக் (Tag) தான் தெரியும். அது வார்த்தைகளை மிக்ஸியில் போட்டு அரைத்து, இலக்கணத்தை ஐஸ் கட்டியாகத் தூவி தரும் ஜூஸில் சுவை இருக்குமா ?என்பதை வாசிக்கும் நீங்களே முடிவுசெய்து கொள்ளுங்கள்.



இதனுடன், துக்கடாவாக ஏஐ-யால் மேம்படுத்தப்பட்ட என்னுடைய வாலிப கால படத்தையும் இணைத்திருக்கிறேன், கண்டு இரசியுங்கள்.

நன்றி-கூகுள் ஜெமினி.

Wednesday, March 13, 2019

எத்தனை சுஜாதாக்கள் ?

பிப்ரவரி-27,2019 எழுத்தாளர் சுஜாதா நினைவு நாளன்று முகநூலில் பகிர்ந்தது.

இன்று தமிழில் கவிதை, சிறுகதை, புனைவு எழுதுபவர்களை ஒப்பிடுகையில் தொழில்நுட்பம், விஞ்ஞானம் குறித்து எழுதுபவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். நாம்  தமிழில் விஞ்ஞானம் என்றால் எழுத்தாளர் சுஜாதாவோடு நின்றுவிடுகிறோம். 


ஆனால், தொழில்நுட்பம் ராக்கெட் வேகத்தில் முன்னேறிக்கொண்டிருக்கிறது. இன்றோடு  சுஜாதாமறைந்து முழுதாக 11 ஆண்டுகளாகின்றன. இந்தப் பதினோரு ஆண்டுகளில் காலியான சுஜாதாவின் இடத்தை யாரும் முழுமையாக நிரப்பியதாக தெரியவில்லை. சொல்லப்போனால் இன்றைய தொழில்நுட்ப உலகில் நமக்கு பல சுஜாதாக்கள் தேவைப்படுகிறார்கள்.

அந்தவகையில் சுஜாதா கையெடுத்த பணியை இன்று இடையறாது செய்து கொண்டிருப்பவர்களில் ஒருவரைச் சுட்டிக் காட்ட  வேண்டுமானால் கனடா நண்பர் ரவி நடராஜன் அவர்களைத் துணிந்து கைகாட்டலாம்.

தமிழில் தொழில்நுட்பம் ,விஞ்ஞானக் கட்டுரைகள் என இடைவிடாமல் தொடர்ந்து எழுதி வரும் ரவி நடராஜன்,  சென்னை ஐஐடியில் பொறியியல் பட்டம் பெற்றவர், தொழில்முறையில் கணினி மென்பொருள் துறையில் பல்லாண்டுகளாக பணிபுரிகிறார். கனடாவில் வசிக்கும் ரவி, ‘சொல்வனம்’ பத்திரிக்கையில் கடந்த ஒன்பது ஆண்டுகளாக தொடர்ந்து 
கட்டுரைகளை எழுதியிருக்கிறார். 

தற்போது இந்தத் தகவல்கள் மேலும் பரந்த வாசகர் வட்டத்தைச்  சென்றடைய வேண்டும் (தமிழ் தெரிந்த, ஆனால் படிக்க முடியாதவர்கள்)  எனும் சீரிய  எண்ணத்துடன்,  
புதிய முயற்சியாக சமீபத்தில் "தமிழ் நுட்பம்" எனும் யூடியூப் சேனல் தொடங்கியிருக்கிறார். வாழ்த்துகள் ரவி சார்!!.


செயற்கை நுண்ணறிவு தொடர்பாக அனைவருக்கும் எளிதில் புரியும் வரையில் அவர்  கடந்த 10 வாரங்களாக வழங்கிய காணொளிகளை நண்பர்கள் உடனடியாக பயன்படுத்திக் கொள்ளலாம். முடிந்தால் தெரிந்தவர்களுக்கும் இதைப் பகிரலாம்.

ரவி நடராஜன் அவர்களின் யூடியூப் சேனல் முகவரி:  https://www.youtube.com/channel/UC-2y8NFP6EdW9etOI6lmOlQ

அவருடைய முகநூல்: https://www.facebook.com/ravi.natarajan.50

Tuesday, March 7, 2017

எழுத்தாளர் சுஜாதாவும் திராவிடமும்

நமது அண்டை மாநிலங்கள் நமக்கு தண்ணீர் திறந்துவிடதான் மறுக்கிறார்களே தவிர, சங்ககால தமிழ் வார்த்தைகளை அல்ல எனச் சொல்லும் அளவுக்கு அவர்களிடம் நிறைய தமிழ்ச் சொற்கள் நிரம்பிக்கிடக்கின்றன எனக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

எழுத்தாளர் சுஜாதா  திராவிட மொழிகளில் தமிழின் தாக்கம் குறித்து "கற்றதும் பெற்றதும்" தொடரில் பதிவு செய்தது உங்களுக்காக.

//
தமிழின் பல சங்க கால வார்த்தைகள், மற்ற திராவிட மொழிகளில் அன்றாட வார்த்தைகளாக உள்ளன
என்பதை அம்மொழிகளின் திரைப்படங்களைப் பார்க்க நேரும்போதெல்லாம் யோசிப்பேன்.

"இல்லு" என்ற சொல் நம் இல்லத்திலிருந்து அனுப்பியது. அதே போல இன்றைய தெலுங்கில் "நச்சி" என்ற வார்த்தை, "விரும்புதல்" என்ற பொருளில் பயன்படுகிறது.  "நீர்க்கோல வாழ்வை நச்சி" என்ற கம்பராமயணப் பாடலில் உள்ள நச்சுதல் அது.

"மனை" நம்மிடம் அழைப்பிதழ்களில் மட்டுமே மிஞ்சியுள்ளது. அதைக் கன்னடத்துக்கு அனுப்பிவிட்டு, வீட்டைக் கட்டிக்கொண்டோம். அகமும் புறமும் மலையாளத்தில் இன்று அன்றாட வார்த்தைகளாகி, நம் உள்ளேயிருந்து வெளியே போய்விட்டன.
//

அனைத்து திராவிட மொழிகளுக்கும் தாய்மொழி  தமிழ்
என்பது ஆய்வு செய்து உறுதிப்படுத்தப்பட்டது தானே.

Saturday, February 18, 2017

எழுத்தாளர் சுஜாதாவும் புலியும்

    நண்பர்களே எழுத்தாளர் சுஜாதாவுக்கும் புலிக்கும் என்ன தொடர்பு எனத் தெரிந்துக் கொள்ளும் ஆர்வமாயிருந்தால் தொடர்ந்து படியுங்கள்.

    ஒருமுறை  சுஜாதாவிடம் 'எந்த வட்டாரத்துப் பேச்சுத் தமிழ் உங்களைக் கவர்ந்திருக்கிறது ?' என்ற கேள்விக்கு 'என்னைக் கவர்ந்த பேச்சுத் தமிழ், திருநெல்வேலித் தமிழ்தான் என்றிருக்கிறார். அதோடு விடாமல்  'என்னடே' என்பதே மரியாதைச் சொல். 'புலிய அங்க வச்சுப் பாத்தேன்' போன்ற வசீகரமான  பிரயோகங்கள், எளிய ஜனங்களின் எளிய மனங்களின் வெளிப்பாடு' என சிலாகித்திருக்கிறார்.  இப்போ தொடர்பு புரிஞ்சுதா ? ;)

    நானும் சுஜாதாவின் பதிலோடு இணைந்துப்போவதில் மகிழ்ச்சி. 'சரி, அப்போ இரண்டாவது ? ' என  நீங்கள் கேட்டால் கோவையின் 'ஏனுங்க' வைச் சொல்வேன் என நினைக்கிறேன். இப்படிச் சொல்லுவதால் மற்ற வட்டார வழக்குகள் பிடிக்கவில்லை என நீங்கள் புரிந்துக்கொள்ளத் தேவையில்லை.

    ஆனாலும், திருநெல்வேலி தமிழை புரிந்துக்கொள்ள சில நுட்பங்கள் தேவை. "இந்தா இந்த வாரியலை  வச்சு, வாச தூத்துட்டு வா" என்றால் "என்னது துப்பணுமா ?" எனக் கேட்காமல் துடைப்பத்தால் வாசலை  சுத்தம் செய் எனப் புரிந்துக் கொள்ள வேண்டும். அப்புறம், "ஏன்ல இப்படி படப்பயம் போடுத?" என்றால்" ஏன் இப்படி கூப்பாடு/சத்தம் போடுகிறாய்" எனப் புரிந்துக் கொள்ள வேண்டும்.

    அதுபோல "எனக்கு காய்ச்சலடிக்கி" எனச் சொன்னால் "எனக்கு ஜூரம்" எனப் புரிந்துக் கொள்ளவேண்டும்.

    இப்படி வீட்டில் திருநெல்வேலி பாசை பேசிக்கொண்டிருந்த என் அம்மாவையும் கடந்த 40 வருடங்கள் மாற்றிதான் விட்டது. ஆமாம், அவள் பேச்சில் நெல்லை தமிழ் வாடை குறைந்து விட்டது. "வீட்டுல எல்லாரும் சும்மா (சுகமா) இருக்காளா?" எனக் கேட்காமல் "வீட்டுல எல்லாரும் நல்லா இருக்காங்களா ? " எனக் கேட்க பழகிவிட்டாள். ஆனாலும், இப்போதும் வீட்டில் அங்கொன்றும் இங்கொன்றுமாக சில நெல்லை வாட்டார வார்த்தைகள் காதில் விழத்தான் செய்கிறது.

    இங்கே சினிமா, தொலைக்காட்சி, நகர்மயமாதல் தாண்டி உலகமயமாக்கலும் தன் பங்கிற்கு எல்லா ஊர்மக்களையும் தங்களின் வட்டார மொழியை விட்டு வேறு ஏதோ மொழியை நோக்கி திருப்பியிருக்கிறது. "ஸ்கூல் முடிச்சு, காலேஜ்க்கு மெட்ராஸ் போனபோதே திருநெல்வேலி பாசைக்கு நோ சொல்லிட்டேன்" என்கிறான் கலிபோர்னியாவிலிருக்கும் என் உறவினன். இது தான் இன்றைய நிதர்சனம்.

Tuesday, October 4, 2016

எழுத்தாளர் சுஜாதா - 14 வருட அதிசயம்

எழுத்தாளர் சுஜாதா மிகைப்படுத்தலின்றி அதீத உணர்ச்சிவசப்படாமல் எழுதக்கூடியவர். அதை உறுதி செய்வதுபோல் இருந்தது நான் சமீபத்தில் வாசித்த அவருடைய  ''நிலா நிழல்'' நாவலின் இரண்டாம் பதிப்பின் முன்னுரை.  அந்த 14 வருட அதிசயத்தை  நீங்களும் தெரிந்துக் கொள்ளுங்கள்.

சுஜாதா ''நிலா நிழல்'' யை   தினமணிக் கதிரில் தொடர்கதையாக 1988ல் எழுதுகிறார். அந்த சமயத்தில் ஏதோ காரணங்களுக்காக
அதில் ஓரு அத்தியாயம் வெளியாகாமல் விடுபட்டுபோகிறது. அதை சுஜாதா உட்பட யாரும் கவனிக்கவேயில்லை. அந்தக் கதையை கவிஞர் மனுஷ்யபுத்திரன் உயிர்மையில் இரண்டாம் பதிப்பாக வெளியிடும்போது கவனித்து சுஜாதாவிடம் சொல்ல. சுஜாதா 14 வருசங்கள் கழித்து அந்த விடுபட்ட அத்தியாயத்தை எழுதித் தருகிறார். நிலா நிழல் லின் இரண்டாம் பதிப்பில் இதை சிலாகித்து எழுதிய சுஜாதாவின் முன்னுரை இங்கே.

"உலகத்தில் ஒரு அத்தியாயத்தை மட்டும் பதினான்கு வருஷம் கழித்து எழுதப்பட்ட நாவல் இது என்று நினைக்கிறேன்.
எழுதும்போது மனதின் அடித்தளத்தில் தேங்கியிருந்த கதைக்கருவின் வடிவம் மறு உயிர் பெற்றது எழுத்து பிசினஸ்ஸில்
உள்ள விந்தைகளில் ஒன்று. "



இந்த நிகழ்வை கண்டிப்பாக வேறேந்த எழுத்தாளராக இருந்தாலும்
உணர்ச்சிப்பூர்வமாக பக்கம் பக்கமாக எழுதித் தள்ளியிருப்பார்கள் என்பது எனது அனுமானம்.

ஒரு அத்தியாயம் தொலைந்ததை யாரும் கவனிக்கவில்லை என்பது முதல் அதிசயம். அதைத் தாண்டி,  சுஜாதா கதை எழுதியது 1988, பின் 2002ல் அதாவது  14 வருடங்களுக்கு பின் விடுபட்ட அந்த அத்தியாயத்தை எழுதுகிறார். நான் 14 வருடங்களுக்கு பிறகு 2016ல் அதை கவனித்து எழுதுகிறேன்.  இந்த நிகழ்வு 14 வருட அதிசயம் தானே  ? ;)



புகைப்படங்கள் நன்றி:
www.google.com



Sunday, January 17, 2016

கற்றதும் பெற்றதும் - சுஜாதா

சந்தேகத்துக்கிடமின்றி சுஜாதா எனக்கு பள்ளி நாட்களில் இருந்து ஆதர்சன நாயகன்.

மாலைமதி, குமுதம் போன்ற வெகுஜன ஊடகத்தில் 'யார் இவர்?' வித்தியாசமாய் இருக்கிறதே என திரும்பிப் பார்க்கச் செய்தவர். சமீபத்தில் அவருடைய 'கற்றதும் பெற்றதும்' வாசித்தேன்.

ஆனந்த விகடனில் அவர் தொடராக எழுதியதை தொகுத்து வெளியிட்டுள்ளனர். நான் பெரிய ஆ.வி. பிரியனாக இல்லாததால் அனைத்தும் புதிதாகவே இருந்தன. இப்பவும் ஆனந்த விகடன் "ஆ.வி." தானா இல்ல "AV" ஆயிட்டா?  தமிழ்நாட்டில் இருந்து யாராவது சொல்லலாம். இதில் உள்ள கட்டுரைகளை நிறைய ஜானர்களில் எழுதியிருக்கிறார். அறிவியல், சிறுகதை, நாட்டு நடப்பு, அனுபவங்கள், கவிதை இப்படி பல.

சுஜாதாவின் கவிதை ஆர்வம் எனக்குத் தெரியாத ஓன்று. இந்த புத்தகத்தில் அவர் அறிமுகப்படுத்திய பல கவிதைகள்  ரசிக்கும் படி இருந்தன.  பல கட்டுரைகளில் புதிய கவிஞர்களையும், கவிதைகளையும் ஆதர்சனமாக கொண்டாடியிருக்கிறார். அவர் இருக்கும் போதே என் பங்குங்கு கொஞ்சம் கவிதைகளை எழுதி அவருக்கு அனுப்பிப் பயமுறுத்தி இருக்கலாமோ ? நல்லவேலை அவர் பிழைத்தார் !  :) அப்போதே வைரமுத்துவின் மகன் கபிலனின் கவிதை ஓன்றை விமர்சித்து அறிவுரைத் தந்துள்ளார் என்பது சிறப்பு.

அப்புறம் நான் படித்து வியந்த  இன்னோரு  விஷயம் அவரின் நகைச்சுவை உணர்வு. குறிப்பாக அவருடைய டகோடா ரக விமானங்களைச் செலுத்திய அனுபவங்கள் ரசிக்கும் படியாக இருந்தது. இவரைப் போல நகைச்சுவை என்ற நல்ல உணர்வு எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. கொடுத்து வைத்தவர்தான்.

அதே சமயத்தில்,  தமிழ் வாசகர்களுக்கு நகைச்சுவை உணர்வு கொஞ்சம் குறைவு என சில இடங்களில் பதிந்துள்ளார். உண்மை. நாம கொஞ்சம் சீரியஸ் டைப் தான். விளையாட்டுன்னு நினைச்சு சொல்றத சிலர் சீரியசா எடுத்துகிட்டு அருவாளோட வந்து நிப்பாங்க.

மற்றபடி பெரிதான புகார்கள் எதுவும் இல்லை, பத்து வருடங்களுக்கு முன்பு வெளியானதால் சில அறிவியல் விஷயங்கள் காலாவதியாகிவிட்டன. இது புத்தகத்தின் குறையே தவிர அவருடையதல்ல. 


இந்தப் புத்தகத்தைத் தாண்டி சுஜாதா பற்றி என் மனதைக் கவர்ந்த சில விஷயங்கள் உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன்.

சுஜாதா  தன்னுடைய வயதான காலத்திலும் மிக இளமையாக சிந்தித்திருக்கிறார், எழுதியிருக்கிறார். நாற்பது வருடங்கள் ஓருவரால் தமிழில் இளமைக் குறையாமல் எழுத முடிந்தது ஆச்சர்யம்தான். கவிஞர் வாலியை இங்கே கண்டிப்பாக நினைக்காமல் இருக்க முடியவில்லை.

அது போல தன்னுடைய விசுவல் எழுத்து அல்லது காட்சிப்படுத்தும் தன்மையை ஆங்கிலத்தில் இருந்து கற்று, தமிழில் (1960-70s) முயன்று வெற்றி பெற்றிருக்கிறார் என்பது என் தாழ்மையான கருத்து.  உங்களுக்கு இதில் மறுப்பு இருந்தால் சொல்லுங்க.

ஆங்கிலத்தில் சொல்லக்கூடிய short & sweet என்பதை கட்சிதமாக மிகவும் அழகாக, சமயங்களில் கவித்துவமாகவும் பயன்படுத்தக்கூடியவர். 

நான் சமிபத்தில் படித்த அவருடைய ஓரு நாவலில் இருந்து. கதாநாயகனை அறிமுகம் செய்ய பக்கம் பக்கமாக வருணனை இல்லை. சுருக்கமாக நான்கு, ஐந்து வரிகள் தான். அதில் ஓரு வரி  **கழுத்தில் கேமரா மாலை **. மற்றோரு இடத்தில் ** ரயில் 'ழே' என்று கூவிவிட்டு சென்றது...**. இப்படிப் பல.

தமிழைத் தாண்டி பல ஆங்கில நாவல்களையும், சிறுகதைகளையும் படித்து அதன் நுணுக்கங்களைத் தன் எழுத்தில் முயன்றிருக்கிறார்.  குறிப்பாக சுஜாதா பல சந்தர்பங்களில் தனக்கும் சிறுகதைகளுக்கும் உள்ள நெருக்கத்தை ஊடகங்களில் பதிவுசெய்ததைப் படித்தும் பார்த்தும் இருக்கிறேன்.  அவருடைய 'சிறு சிறுகதைகள்' புத்தகத்தை பற்றிய எனது விமர்சனம் இங்கே. சிறு சிறுகதைகள்

சுஜாதா பெரிதும் சிலாகிக்கப்படுவது அவரின் அறிவியல் எழுத்துக்காக. மேல் மட்டமான ஆங்கில அறிவியல் புத்தகங்களைத் தாண்டி விரிவான மற்றும் அடர்த்தியான பல புத்தங்களைப் படித்திருக்கிறார். அதே நேரத்தில், எழுதும் போது அனைவருக்கும் புரியும்படி எளிமைப்படுத்தி எழுதியிருக்கிறார். இதற்கு அவருடைய பொறியியல் பின்புலம் இதற்கு மிக உதவியாக இருந்திருக்கிறது. இது அவருடைய மற்ற எந்த சமகால எழுத்தாளர்களுக்கு இல்லாத ஓரு தனிச் சிறப்பு. தமிழ் எழுத்துலகில் சுஜாதா விட்டுச்சென்ற இடம் இன்றுவரை நிரப்படாமல் வெற்றிடமாகத்தான் இருக்கிறது. பார்ப்போம்.

அதுபோல சமீபத்தில் 'ஆழ்வார்கள் ஓரு எளிய அறிமுகம்' எனும் புத்தகத்தை வாசித்த போது அவருடைய சங்க இலக்கிய நாட்டம் புரிந்தது. சங்க இலக்கியத்தில் பசலை நோய், ஆண்டாள் கண்ணனிடம் உருகினாள் எனப் படித்தவர்தான், தன் நாவலில் வசந்த் சைட் அடித்தான் என மார்டனாக எழுதினார்.


எந்தவோரு விஷயத்தையும் ஓரு நடுத்தர குடும்பத்தின் கண்ணோட்டத்தில் அல்லது மன ஓட்டத்தில் பார்த்து எழுதியிருக்கிறார். இது போன்ற எழுத்துக்கள் எல்லா வகையான வாசகர்களையும் கவருமா?. அப்படிக் கேட்பதே தேவையில்லாதது. ஏனேன்றால், இப்போதுக்கூட புத்தக்க்கண்காட்சிகளில் சுஜாதாதான் பெஸ்ட் செல்லராம். ஜெயகாந்தன் எளிய மனிதர்களின் ஆதர்சன எழுத்தாளன் என்றால் சுஜாதா வேறு ரகம். அவ்வளவே.

சுஜாதாவைப் வாசிப்பது ஓரு சுகானுபவம்.  என்னைப் பொருத்தவரை அவர் 'ஆல் டைம் பெஸ்ட் எண்டர்டெயினர்'. வாய்ப்பிருந்தால் இந்த புத்தகத்தை வாசியுங்கள்.


நுால்: கற்றதும் பெற்றதும்
ஆசிரியர்  சுஜாதா
பதிப்பகம் :விசா பப்ளிகேஷன்ஸ்
பக்கங்கள் : 296

பதிப்பகம்

Monday, January 4, 2016

சிறு சிறுகதைகள் - சுஜாதா

'ஆம்னிபஸ்'ஸில் சுஜாதாவின் 'சிறு சிறுகதைகள்'  புத்தகம் பற்றிய எனது விமர்சனம்.
 
சமீபத்தில் சுஜாதாவின் 'சிறு சிறுகதைகள்'  நூலை வாசித்தேன். சுஜாதா 2003வாக்கில்
குமுதத்தில் தொடராக எழுதியதன் தொகுப்பு இது.  வெளியிட்டவர்கள் விசா பப்ளிகேஷன்ஸ். புத்தகம் கூட சிறியதுதான் 96 பக்கங்கள். எளிதான, விரைவான வாசிப்பனுபவம்.

சுஜாதா பல சந்தர்பங்களில் தனக்கும் சிறுகதைகளுக்கும் உள்ள நெருக்கத்தை ஊடகங்களில் பதிவுசெய்ததைப் படித்தும் பார்த்தும் இருக்கிறேன். இப்படி சிறுகதை  சுஜாதாவின் 'ஹோம் பிட்ச்'  என்றால் சும்மா விடுவாரா என்ன ?, அழகான கதைகள், அருமையான விளக்கங்கள். சும்மா வெளுத்திருக்கிறார்.

இந்தப் புத்தகத்தின் வாயிலாக சின்னஞ் சிறு கதைகளின் பல வடிவங்களை எளிமையாகவும் அதே சமயத்தில் விளக்கமாகவும் சொல்லியிருக்கிறார். சிறுகதைகளில் இவ்வளவு பரிமாணங்களா? என்று ஆச்சரியப்படும் வகையில் சுவாரஸ்யமாக இருக்கிறது.

இந்தச் சிறுகதைகளைக் குறைந்தது இரண்டு வார்த்தைகளில் தொடங்கிச் சில நூறு வார்த்தைகளில் முடித்திருக்கிறார். அப்படி வெவ்வேறு கட்டுமானங்களில் செல்லப்படும் கதைகளுக்கு வேறு வேறு பெயர்கள். இரண்டு வரியில் கதையா? ஆச்சர்யமாக இருக்கிறதில்லையா.? இதோ ஓரு கதையைப் பார்ப்போமே.

தலைப்பு:  ஆபிஸில் எத்தனை ஆம்பிளைங்க?
கதை: முதலிரவில் கேள்வி

இங்கே சூட்சுமமே கதையின் தலைப்பு என்பதைப் படித்தால் அறிந்துக் கொள்ளலாம். அதுமட்டுமில்லாமல் முதல் மற்றும் இரவு சேர்ந்து முதலிரவு ஆனதும் தமிழின் சிறப்பு.

சி.சி.களின் (அதாங்க சிறு சிறுகதைகள்)  வடிவத்தை அல்லது விதிகளை முதலில் சொல்லி அதை ஓரிரு கதைகளில் தானே முயற்சி செய்து வாசகர்களுக்கு பகிர்ந்திருக்கிறார். பிறகு அதை வாசகர்களை எழுத ஊக்குவித்து ஓரு போட்டியாக அறிவித்துள்ளார்.  பின்பு அந்த போட்டியில் வென்றக் கதைகளை வெளியிட்டு பரிசுகளையும் வழங்கியிருக்கிறார்.வாசகர்களும் தங்கள் பங்கிற்கு எழுதிக் குவித்திருக்கின்றனர்.


இது போல Short Fiction, Sudden Fiction (உடனடிக் கதை),ஹைகா,ஹைபுன்  என பலவற்றை அறிமுகம் செய்கிறார். 'ஹைகா' என்பது ஓரு படத்துக்கான ஹைக்கூ. 'ஹைபுன்' என்பது ஓரு காட்சியை விவரித்து இறுதியில் ஓரு ஹைக்கூ வைப்பது. அவர் அறிமுகம் செய்த 55 Fictionல் 55 வார்த்தைக்குள் கதை சொல்லவேண்டுமாம்.

55- வார்த்தைகளில் கதை? பார்ப்போமே.

'முட்டாள் கூமூட்டை' என்று டைரக்டர்  அசிஸ்டண்டைத் திட்டினார். 'சாவுகிராக்கி ஓரு சின்ன கன்டியூனிட்டி ப்ராப் பார்க்கத் தெரியலை. இப்ப கலர்த் தண்ணிக்கு பதிலா நிஜ பியர் வெக்க வேண்டி வந்திருச்சி பாரு..'
 

அன்று ஷிட்டிங்கின் கடைசி நாள். நிஜமான பார் செட்டில். அரையிருட்டில் வயதான நடிகர் காத்திருந்தார். அடுத்த படம் எப்ப வருமோ? என்று கவலையில்.

'ரெடி வாங்க ராஜாராமன்.. ஓரு டேக் பாத்துரலாம்'

ஓரு டேக்கா ? இருபது டேக்காவது வாங்காமல் விடமாட்டேன் என்று மனத்துக்குள்
தீர்மானித்திருந்தார்.


கடிதங்களின் வாயிலாககூட கதைகளை நகர்த்தி சிறுகதை எழுத இயலும் என்பது சுவாரஸ்யமாகவே இருந்தது.  இது போன்றதோருக் ('துமாரி அம்ருதா') கதையை இந்தியில் ஷபனா ஆஸ்மியும், நஸ்ருதீன் ஷாவும் கடிதமாக மேடையில் தோன்றிப் படித்திருக்கிறார்களாம். ரிகர்சலே தேவையில்லை. மாற்றி மாற்றி ஓரிவருக்கொருவர் எழுதும் கடிதங்களைப் படித்துக்கொண்டிருக்க வேண்டும். கதை மெல்ல மெல்ல மேடையில் உருவாகிறது. அவர்களுக்கு மேடையில் இரண்டு நாற்காலிகள் எதிரெதிராகவோ அருகிலோ போடப்பட்டிருக்கும். கடைசியில் ஓருமுறை நிமிர்ந்துப் பார்த்துக் கொள்வார்களாம்.

தமிழில் வெகுஜன ஊடகத்தில் சிறுகதைகளில் பல புதிய உத்திகளைக் குமுதம் கையாண்டு வெற்றி பெற்றிருப்பதாக ஓரிடத்தில் சிலாகித்திருக்கிறார். சிறுகதையின் இன்னபிற வடிவங்களை சுஜாதாவின் எழுத்தில் வாசிப்பது அருமையாகவே இருக்கிறது. படிப்பவர்களுக்கு அலுப்பூட்டாமல் வாசிக்த்தூண்டும் 'சுஜாதா மந்திரம்' நன்றாகவே வேலைச் செய்துள்ளது.

சி.சி. கள் நீதிக் கதைகளோ அல்லது உபதேசக் கதைகளோ இல்லை. கவனமாக் கட்டமைக்கப்பட்ட இவை படிப்போரையும் கேட்போரையும் கதைக்குள் ஒன்றிப் போகச் செய்ய வேண்டும் என்கிறார். சி.சி. கதைகளை எழுத சொற்சிக்கனம் அதிமுக்கியம். சிக்கனமாக எழுத முயலுபவர்கள் பயிற்சிக்காக போஸ்ட் கார்டுக்கு கதை எழதி பழகச் சொல்கிறார். நிறைவாக சி.சி கதைகள் ஹைக்கூ அளவுக்கு வந்துவிட்டன. ஹைக்கூ  என்பது பளிச்சென்று ஓரு காட்சியை எடுத்த போட்டோ போல. சி.சி. கதை என்பது  குறும்படம் போல. போட்டோவும் திறமையான கலைஞர்கள் எடுத்தால் அழகான கதை சொல்லும். குறும்படமும் அப்படியே என்கிறார்.

சிறுகதை என்பது கடந்தகாலங்களில்  பல மாற்றங்களைச் சந்தித்து வந்திருக்கிறது.  அன்று பத்துப் பக்க சிறுகதைகளில் தொடங்கி இன்று நாம் நாலு செகண்ட் கதை தாண்டி இரண்டு வார்த்தை கதைகளில் வந்து நிற்கிறோம். சி.சி.க்கள் பரவலான வரவேற்பையும் பெற்றுள்ளது. இது ஓருவிதத்தில் காலத்தின் கட்டாயம் கூட.  இந்த சூழல் ஆரோக்கியமானதா, மொழி தன் வளத்தை இழக்கிறதா, கதையில் ஆசிரியர் சொல்லமுனைந்த கருத்து சரியாகப் புரிந்துக் கொள்ளப்பட்டதா இல்லை பூடகமாக இருக்கிறதா என்கிற விவாதத்துக்குள் இப்போது நாம் செல்ல வேண்டாம். குறுகச் செய் என்பது சி.சி.ன் தாரக மந்திரமாய் இருக்கிறது அவ்வளவே.

குறையாகச் சொல்ல பெரிதாக ஓன்றும் இல்லை. புத்தகத்தில் அவர் எடுத்தாண்டுள்ள கதைகள் பெரும்பாலும்  ஆங்கில புத்தகங்களைத் தழுவி எழுதியவை. மிகச் சிக்கனமாக ஓரிரு இடங்களில் இந்திய எழுத்தாளர்களையும் ( Folk tales from India) எடுத்தாண்டிருக்கிறார்.

'ஹைகா'வுக்கு வாசகர்கள் அனுப்பிய ஹைக்கூவை மட்டும் பதிப்பித்துவிட்டுப் படத்தைக் கோட்டை விட்டுவிட்டனர். அதனால் புத்தகத்தைப் படிப்பவர்கள் குழம்பிவிடுவார்கள். 'ஹைகா' என்பது ஓரு படத்துக்கான ஹைக்கூ என்பதை இங்கே நினைவில் கொள்க. இது பதிப்பக தவறே, ஆசிரியரின் தவறல்ல.

ஆம்னிபஸ் பதிவு:
http://omnibus.sasariri.com/2015/12/blog-post.html